30/12/2020

திருமூலர்

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

 அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

   அறிவுற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
   அறிவிக்க தம் அறிவார் அறிவோரே

அறிவார்ந்த தத்துவ ஞானங்களை அறிவில்லாதவர்களிடத்தில் தெரியப் படுத்த வேண்டாம்.அறிவுடைய அறிஞர்பெருமக்களுக்கும்  அதை அறிவிக்க வேண்டியது  அவசியம் இல்லை..அறிவு இருந்தும் அறியாமையினால்  தெளிவுக்காக அணுகுபவர்களுக்கு மட்டுமே அறிவிக்கத்  தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள்

- திருமூலர்.

05/12/2020

வண்ணதாசன்

அந்த நாற்காலியைப் பார்க்கும் போது 
மரத்தை நினைக்காதீர்கள்.
அப்புறம் உங்களால் 
அதில் உட்கார முடியாது.

மரத்தின் கீழ் பழம் பொறுக்கும் போது
நாற்காலியை யோசிக்க வேண்டாம்.

அப்புறம்  உங்களால்
அந்தக் கனியைப் புசிக்க முடியாது.

~ வண்ணதாசன் ~

கலாப்ரியா

" நாவில் 
எச்சில் ஊறவைப்பதில்லை ..
வண்ண மீன்கள் ."

- கலாப்ரியா

ரமேஷ்

நடந்தே வந்துவிட்டேன் கால் வலி இல்லை...,வரும் வழியில் லிப்ட் வேண்டி நீட்டிய கையில் மட்டும் கடுமையான வலி....!!!!

-ரமேஷ்

ஓஷோ

🌹 நான்  சாதாரணமானவன்

கேள்வி : 

 நீங்கள் , "நான் மிகவும் சாதாரணமானவன் ' என்று கூறுகிறீர்களே இதற்கு என்ன அர்த்தம் ? எங்களுக்குச் சற்று விளக்கவும்

பதில் : 

உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை .

 நான் மிகச் சாதாரண நிலையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் நானாகவே இருக்கிறேன் . 

உண்மை மிகவும் சாதாரணமானது .

 ரோஜாப்பூ , ரோஜா பூவாகவும் , ஆறு ஆறாகவும் , பாறை பாறையாகவும் இருக்கிறது . 

நான் அவற்றைப் போல ஒரு சாதாரணமானவன் . 

பிறகு உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? 

அந்த வித்தியாசம் , நான் என்னுடைய சாதாரணத் தன்மையைக் கொண்டாடுகிறேன் .

 ஆனால் நீங்களோ அதைக் கொண்டாடுவது இல்லை . 

நான் அதில் நிறைவாக இருக்கிறேன் .

 பேரானந்தத்தில் இருக்கிறேன் .

 நான் ஒரு உயிர்த்தன்மையாக இருக்கிறேன் .

 நீங்களோ எதிர்காலத்தில் இருக்கிறீர்கள் 

 என்னிடம் எந்த எதிர்பார்ப்போ , எந்தப் புகாரோ , வேறு யாரையும் போல நான் ஆகவேண்டும் என்று முயன்றதோ இல்லை .

நான் என்னுடைய படைப்பில் நிறைவாக இருக்கிறேன் .

 🌿நான் ஒரு சின்ன விஷயத்தைக்கூட மாற்ற விரும்பியது இல்லை . 💐

இந்தப் பரிபூரண ஓய்வுத்தன்மையில் அந்தத் தெய்வீகக் கொண்டாட்டம் தானே கிளம்புகிறது .

இந்தப் பிரபஞ்ச உயிர்த்தன்மையில் கடவுள் மிகவும் சாதாரணமாக இருக்கிறார் . 

அது அப்படித்தான் இருக்கவேண்டும் .

நீங்கள் வித்தியாசமாகவும் , தனித்தன்மையுடையவராகவும் இருக்கும் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் விட்டுவிடுவது தான் என்னுடைய முழுப் போதனையாகும் .

 உண்மையை அப்படியே அனுபவியுங்கள் .

 நீங்கள் யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் நீங்கள் உங்களையே கொண்டாடுங்கள் .

 இதைத்தான் நான் பிரார்த்தனை என்கிறேன் . 

நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ , அப்படி இருப்பதே மிகப்பெரிய அற்புதம் ! .....

கேள்வி : 

 நாங்கள் உங்களோடு எவ்வளவு காலம் இருக்க வேண்டும் ?

பதில் : 

" அது உங்களைப் பொறுத்தது ; என்னைப் பொறுத்தது அல்ல .

 எந்த மாஸ்டரும் , யாரையும் ஞானமடைய வற்புறுத்த முடியாது .

 எந்த மாஸ்டரும் ' என்னோடு இரு ' என்று கட்டளையிட முடியாது .

 ஒரு சீடனின் இதயம்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் .

அந்த அன்புப் பிணைப்பு சீடனின் இதயத்திலிருந்து வரவேண்டும் .

 இது ஒரு கல்லூரி இல்லை . 

நீங்களும் ஒரு மாணவர் இல்லை .

 என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் முழு சுதந்திரத்தில் இருக்கிறீர்கள் .

இங்கே யாரும் வரவில்லையென்றாலும் , நான் ஒவ்வொரு நாள் மாலையும் இங்கு வந்து இந்த மூங்கிலுக்குப் பிரசங்கம் பண்ணுவேன் ! 

நீங்கள் இங்கு இருப்பதா , வேண்டாமா என்பது உங்களுடையது முடிவு ; என்னுடையது அல்ல . " .......... 🌹

 *ஓஷோ*

மார்க் ட்வைன்

தைரியம் என்பது பயமற்ற தன்மையல்ல, பயம் இருந்தும் துணிச்சல் கொள்வது"!
-மார்க் ட்வைன்

மார்க் ட்வெயின்

உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் உங்களைப் பிரச்சனைக்கு உள்ளாக்குவதில்லை. உண்மை என்று நீங்கள் நம்புகின்ற விஷயங்களே உங்களுக்குப் பிரச்சனையை உருவாக்குகின்றன

-மார்க் ட்வெயின்

மரியவால்டோர்டா

நன்மையாயிருப்பது எவ்வளவு இனிமையானது.!
பகையில்லாமல் ,பொறாமையில்லாமல் , கர்வமில்லாமல் இருப்பது,
அன்பை மாத்திரம் பார்க்கின்ற கண்களைக் கொண்டிருப்பது எவ்வளவு இனிமையானது.!
அன்பின் செயல்களுக்காக மட்டும் நீட்டப்படுகிற கைகளும் அன்பின் வார்த்தைகளை மட்டுமே பேசும் உதடுகளும் எவ்வளவு இனிமையானவை.!
எல்லாவற்றிக்கும் மேலாக அன்பினால் மட்டும் நிரம்பி, கண்களையும்,கைகளையும்,உதடுகளையும் அன்பின் செயல்களுக்காக மாத்திரம் தூண்டக்கூடிய  இருதயம் எவ்வளவு இனிமையானது.!

-மரியவால்டோர்ட்டா

மனுஷ்ய புத்திரன்

அன்பின் நிமித்தம்
யாரையும் இப்போது நான்
பின் தொடர்ந்து செல்வதில்லை

என்னால்
முன்னைப்போல நடக்க முடியவில்லை
என்பதால் அல்ல

சற்று தொலைவுபோனதும்
அவர்களே ஒரு பனித்துளிபோல
ஆவியாகிவிடுகிறார்கள்

அவர்கள்
அந்தப் புல்லில்
அதற்கு முன் இருக்கவேயில்லை
என்பதுபோல

~ மனுஷ்ய புத்திரன்

டி.டி.ராம் மோகன்

"இரண்டு நாய்கள் ஒன்று சேர்ந்தால் புலி ஆகிவிடுவதில்லை" 

-வங்கி இணைப்பு குறித்து முன்பு ஆமதாபாத் ஐ.ஐ.எம் பேராசிரியர் டி.டி.ராம் மோகன் கூறியது

சு.வெங்குட்டவன்

கொரங்காட்டு இட்டேறி
நெடுஞ்சாலையைத்தாண்டும்
இவ்விடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம்
நினைவுக்கு வந்துவிடுகிறது
தங்கம் பஸ் சர்வீஸில் அடிபட்டுச்செத்த
வெள்ளாட்டுக்குட்டியின் பொருட்டு
அழுதுபுரண்டு அப்பத்தா கதறியது
கூடவே அப்பத்தா போனநாளில்
எங்களில் யாரும் அவ்விதம்
கதறாததும்

- சு. வெங்குட்டுவன்

ஜெயகாந்தன்

எவ்வளவு அதிக உணர்வுப் பூர்வமானவர்களாக நீங்கள் இருக்கிறீர்களோ அவ்வளவு கடுமையான குற்ற உணர்வு உங்களிடம் இருக்கும். 

மேலும் நீங்கள் அதிகமாக 
பொறுப்புணர்வு கொண்டால் அதிக குற்ற உணர்வுடன் இருப்பீர்கள்..!

-ஜெயகாந்தன்

மிதார்த்

💥"எந்த வாளாலும் காயப்படுத்தமுடியாத காற்றைப்போல் திகழுங்கள்"

-மிதார்த்
- தமிழில் கவிஞர் புவியரசு.

ராஜா சந்திரசேகர்

தாண்டிக் கொண்டேயிரு
தாண்டிக் கொண்டேயிரு
உயரங்களையும்
கூடவே உன்னையும்

-ராஜா சந்திரசேகர்

அண்டன்பிரகாஷ்

மூளையில் சுரக்கும் மெலட்டோனின் எனும் ஹார்மோன் தான் நம்மை தூங்குவதற்கு உந்துகிறது.
கண்களால் கிரகிக்கும் ஒளியை லக்ஸ் எனும் யூனிட்டால் அளக்கிறார்கள்.
மெழுகுதிரி 3லக்ஸ், இரவு பல்பு 100லக்ஸ்.இது அதிகமாகும் போது மெலட்டோனின் சுரப்பு குறையும்.

9000.லக்ஸ் உள்ள வெளிச்சத்தைக் கண்கள் பார்த்தால் அந்த இரவில் சுரக்காமலே போகும். கண்கள் வழியே திரையிலிருந்து வரும் நீல வெளிச்சத்தால் இயலாது.

நீண்டநேரம் டி.வி,செல்போன் பார்த்தால் மெலட்டோனின் சுரக்காமல் தூக்க சுழற்சி பாதிக்கும்

-அண்டன் பிரகாஷ்

25/11/2020

எம் சி ராஜா

எப்பொழுதும் எனக்குத் தோல்வி இல்லை.ஏனெனில் என்றும் நான் முயற்சியை இழக்கப்போவதில்லை

-எம்.சி.ராஜா

ஓஷோ

முயற்சி எப்போதும் உங்களிடமிருந்து வரும்.அந்த முயற்சியைத் தடுக்கும் சோம்பேறித்தனம் உங்கள் மனதிலிருந்தே வரும்

-ஓஷோ

பாஷோ

எப்போதும் ஆட்டத்தில்
உங்களுக்குத் தெரிந்தவர்கள்தான்
எதிரிகளாக இருப்பவர்கள்

-பாஷோ

ஜெமோ

ஒரு ஊரை நடந்து பார்ப்பது மட்டுமே நீண்டகால அளவில் மனதில் நிற்கிறது. வாகனங்களில் பயணம் செய்து பார்க்கும் அனுபவம் மிக விரைவில் நினைவிலிருந்து அழிந்துவிடுகிறது.நடப்பது அந்த மண்ணுடன் ஓர் உறவை உருவாக்குகிறது.நம் கண்ணும் காதும் காட்சிகளை உள்வாங்கிக் கொள்ள கால அவகாசத்தை அளிக்கிறது

-ஜெமோ

மகுடேசுவரன்

எண்ணெய்

எண்ணை என்று எழுதாமல் எண்ணெய் என்று எழுத வேண்டும்.'எள்ளிலிருந்து பிழியப்படும் நெய்' என்பது பொருள்.எண்ணெய் என்பதே எல்லா விதைப் பிழிவுகளுக்கும் பொதுப்பெயராயிற்று.

-மகுடேசுவரன்

நெப்போலியன்

ஆயிரம் துப்பாக்கி முனைகளை விட நான்கு செய்திப் பத்திரிக்கைகளிடம் அதிக அளவில் பயப்பட வேண்டும்

-நெப்போலியன்

வைகறை

சாவிலிருந்து

ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள் !

– வைகறை

ஓஷோ

ஓர் உணர்வின் அடிமட்டத்தைத் தொட்டுவிட்டால் அதன்பின் அதனைத் தாண்டி சென்றுவிடுவீர்கள்

-ஓஷோ

லஷ்மி சரவணகுமார்

ஒருவனோடு நண்பனாகும் போது அவனுக்கு மட்டுமே நண்பனாகிறோம்; எதிரியாகும்போது அவன் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமான எதிரியாகிறோம்

-லஷ்மி சரவணகுமார்

மனுஷ்ய புத்திரன்

நான் உன்னை இன்று
பார்க்க வரலாம் என்றிருந்தேன்
மழை வந்துவிட்டது
அதனால் வரவில்லை

இன்று ஒரு பயணத்தை
திட்டமிட்டிருந்தேன்
மழை வந்துவிட்டது
அதனால் பயணத்தை
ரத்து செய்து விட்டேன்

இன்று ஒரு முக்கியமான
வேலை இருந்தது
மழை வந்துவிட்டது
அதனால் அந்த வேலையை
நிறுத்தி விட்டேன்

இன்று ஒரு ஒப்பந்தத்தில்
கட்டாயமாக கையெழுத்திட வேண்டியிருந்தது
மழை வந்து விட்டது
அதனால் அது நடக்கவில்லை

இன்று சில முக்கியமான பொருள்களை
வாங்கப் போகலாம் என்றிருந்தேன்
மழை வந்து விட்டது
அதனால் ஒன்றையும் வாங்கவில்லை

நலமற்றிருந்த ஒருவரைக் காண வேண்டியிருந்தது
ஒரு திருமணத்திற்குப் போக வேண்டியிருந்தது
ஒரு துக்கம் கேட்க வேண்டியிருந்தது
ஒரு பிறந்த நாள் பூங்கொத்து வாங்க வேண்டியிருந்தது
மழை வந்து விட்டது
எங்கும் போக முடியவில்லை

மழை எல்லாவற்றிற்கும்
ஒரு சமாதானத்தைத் தருகிறது
எல்லா குற்றவுணர்விலிருந்தும் விடுவிக்கிறது

வாழ்வோடு இருக்கும்
மிகப் பெரிய சமரச ஏற்பாடே
இந்த மழைதான் என்று தோன்றும்படி
எல்லாவற்றிற்கும் பதிலியாய்
மழை பெய்து கொண்டேயிருக்கிறது

இந்த மழை மட்டும் இப்படியே 
பெய்து கொண்டிருந்தால் 
எல்லா பொறுப்புகளிலிருந்தும்
விடுபட்டு விடுவேன்

16.11.2020
மாலை 6.13
மனுஷ்ய புத்திரன்

பெட்ரண்ட் ரசல்

Education is not the imparting of a settled body of knowledge; but the inculcation of a spirit of enquiry"

மனிதனைத் தேடவைப்பது தான் கல்வி. தேடிக்கொண்டே இருப்பது கல்வி. தேடல்தான் கல்வி

-பெட்ரண்ட் ரசல்

அறிவுமதி

அறிவுமதி பிறந்ததின பகிர்வு
*மணி

*இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது சந்தித்துக் கொள்ளட்டுமே"

-அறிவுமதி

#"காதல்வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை..
நாணக்குடை நீ பிடித்தும்
வேர்வரைக்கும் சாரல்மழை...!
-அறிவுமதி

#ஊருக்குள் உலவுகிறான்
மார்வாடி
ஒதுக்குப் புறத்தில் ஆதிதிராவிடன்
-அறிவுமதி

#நிகழ்கையில் சாரல்..
நினைக்க நினைக்கத்தான்
மழை.! 

-அறிவுமதி.

#போகிற இடத்தில்
என்னைவிட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை

-அறிவுமதி

#கொசு வலைக்குள் ஒரு
கொசு...அடடே
மனசாட்சி"!
-அறிவுமதி

#நூல் அறுத்த 
பட்டம்
அனிதா.
- அறிவுமதி.

#இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள் 
வள்ளுவனிடம்.

-அறிவுமதி

#பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்.

-அறிவுமதி.

#எங்கள் தமிழர்கள் தொடர்ந்து திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் !
அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக !

-அறிவுமதி.

#கண்களை வாங்கிக் கொள்ள மறுக்கிறவள் காதலியாகிறாள்,
கண்களை வாங்கிக் கொண்டு உன்னை போல் கண்கள் தருகிறவள் தான் தோழியாகிறாள்
-அறிவுமதி

#அந்த நேரத்துக்கு மட்டும்
அவசியமாய் தேவைப்படுகின்றன
சில கெட்ட வார்த்தைகள்
-அறிவுமதி

#என் பலகீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே
-அறிவுமதி

-மணிகண்டபிரபு

ஓஷோ

பயத்தோடு போராடாதே. அப்படிப் போராடினால் மேலும் மேலும் பயப்படத்தான் செய்வாய்.அவ்வாறு பயப்படுவது பயத்தைப் பற்றிய பயம்.

தைரியம் என்பது பயமின்றி இருப்பதல்ல.பயத்தைப் பத்திரமாக வைத்திருப்பதுதான் தைரியம்.

-ஓஷோ

யுகபாரதி

இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது

-யுகபாரதி

இன்குலாப்

ஏதோ ஒரு மூலையில்
நானும் பூக்கிறேன்
பார்வையில் படவும்
படாமல் உதிரவும்

-இன்குலாப்

பிக்காசோ

என்னால் செய்யமுடியாததையே நான் எப்போதும் செய்கிறேன், அதை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.. 

-பிக்காசோ.

கோ.வசந்தகுமாரன்

அரிவாள் மீதேறி,
ஆடு குடித்து,
சந்நதம் கொண்டு ஆடிய
சாமியாடிக்கு,
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியை கண்டதும்.....
மலையேறியது சாமி.

-கோ வசந்தகுமாரன்

போகன்

உறக்கமா சோகமா
என்று 
கணிக்க முடியாத 
பள்ளிக்குழந்தைகளின் முகங்களை
ஏந்திச் செல்லும்
பேருந்துகள்
வரத் துவங்கும் முன்பு
நாம் நடையை முடித்துக்கொள்ள வேண்டும்.

-போகன்

மகுடேசுவரன்

விடைபெற்றுச் செல்கையில் 
தெருவினின்று 
கண்மறையும் 
கடைசித் திருப்பம்வரை 
என் முதுகைத் தொற்றியபடி 
உடன்வருபவை 
உன்னிரு கண்கள்தாம் என்று 
உறுதியாய் 
அறிவேன் கண்ணே..

மகுடேஸ்வரன்..

வண்ணநிலவன்

எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்து கொண்டேதான் இருக்கிறது.

-வண்ணநிலவன்

23/11/2020

பிரமிள்

சிறகு பறந்து செல்லும் திசையெல்லாம் 
சுதந்திரம்

-பிரமிள்

ஓஷோ

மனத்தின் முரண்பாடுகளில் ஒன்று
எது கிடைத்தாலும் நீ சலிப்படைவாய்,
எது கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவாய்
-ஓஷோ

ஸ்டீபன் ஹாக்கிங்

நாத்திகவாதம் ஒரு குற்றம் போல அணுகப்படுவது வேடிக்கையாக உள்ளது. சொர்க்கம் போன்றவை மிக அழகான பொய்களாக நிருபிக்கிறார்கள்.அப்படியான அழகான பொய்களை விட என் போன்றவர்க்கு அவலட்சமான உண்மைகளே அதிக ஈர்ப்புடையது

-ஸ்டீபன் ஹாக்கிங்

08/11/2020

ஓஷோ

மனத்தின் முரண்பாடுகளில் ஒன்று
எது கிடைத்தாலும் நீ சலிப்படைவாய்,
எது கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவாய்
-ஓஷோ

ஸ்டீபன் ஹாக்கிங்

நாத்திகவாதம் ஒரு குற்றம் போல அணுகப்படுவது வேடிக்கையாக உள்ளது. சொர்க்கம் போன்றவை மிக அழகான பொய்களாக நிருபிக்கிறார்கள்.அப்படியான அழகான பொய்களை விட என் போன்றவர்க்கு அவலட்சமான உண்மைகளே அதிக ஈர்ப்புடையது

-ஸ்டீபன் ஹாக்கிங்

07/11/2020

ஆன்டன் செக்காவ்

ஒரு துப்பாக்கி சுவரின் மீது மாட்டப்பட்டிருப்பதாகக் கதை துவக்கத்தில் நீ வர்ணிப்பாயானால் கதையின் முடிவில் அது கட்டாயம் வெடித்தாக வேண்டும்.அது வெடிக்கவில்லையெனில் நீ கதையின் முற்பகுதியில் குறிப்பிட்டிருக்கவே கூடாது

-ஆன்டன் செக்காவ்

RT @ivivasai 22

வயசுக்கு மேல ஒருத்தன் ..
எனக்கு பணத்தாசை இல்லைனு சொல்லி சுத்துனானா....
அவன் உழைக்க பயப்படுறானு அர்த்தம்..

RT @erode_kathir

விபரீதமான கற்பனைகளில் இருக்கும் மிக முக்கியமான பயம் 
அதிலிருக்கும் துல்லியம் தான்!

RT @expertsathya

 எல்லாம் தெரிந்தவனிடம் கர்வம் இருந்தால், எதுவும் தெரியாதவனிடம் சுதந்திரம் இருக்கிறது.

RT @Vinuthaas

பெண் பிள்ளை இல்லாத வீடுகளில் அவர்கள் இழப்பது ஒன்றுமில்லை. ஏனெனில் இழப்பதற்கு அங்கு எதுவுமில்லை.

நிர்மலா

நேரத்தோடு உறங்கிப் போகும்
குழந்தைக்காக
மரங்கள்
சேமித்து வைக்கின்றன
நடுநிசி மழையை!

-நிர்மலா

யாத்திரி

நேர்நின்று எதிர்கொள்ளத் துணிவின்றி எங்கோ ஓரமாய் தூரமாய் உனக்கெதிராய் வாள் சுழற்றுபவர்களை அப்படியே விடு, 
அவர்கள் ஏற்கனவே உன்னிடம் தோற்றாயிற்று.

-யாத்திரி

நர்சிம்

ஒரு நிறப்பிரிகை போலத்தான் நீ விலகிப்போனாய் என் எல்லா வண்ணங்களையும் எடுத்துக்கொண்டு

- நர்சிம்

கலீல் ஜிப்ரான்

உன் 
வலியின் 
பெரும்பகுதி 
உன்னால் சுயமாகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டவையே.!!

~ கலீல்ஜிப்ரான் ~

ராபர்ட் ஃ ப்ராஸ்ட்

உலகில் பாதிப்பேருக்கு சொல்வதற்கு ஏதோ இருக்கிறது.ஆனால் அவர்களுக்கு அதை சொல்லத் தெரியவில்லை.மீதிப்பேருக்குச்
சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனாலும் வாய் ஓயாமல் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

-ராபர்ட் ஃப்ராஸ்ட்

அப்துல் ரகுமான்

Naked truth வெளிப்படையான, நிர்வாண உண்மை

ஒருநாள் பொய்யும்,உண்மையும் குளிக்கச் சென்றன.பொய் குளித்துவிட்டு கரையிலிருந்த உண்மையின் ஆடையை அணிந்து சென்றது.கரைக்கு வந்த உண்மை ஆடையின்றி நிர்வாணமாகவே புறப்பட்டுச் சென்றது.உண்மையிடம் மறைக்க வேண்டியது எதுவும் இல்லை

-அப்துல்ரகுமான்

கலீல் ஜிப்ரான்

உன் 
வலியின் 
பெரும்பகுதி 
உன்னால் சுயமாகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டவையே.!!

~ கலீல்ஜிப்ரான் ~

யாத்திரி

எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து 
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின் 
ஒவ்வோர் தாயின் 
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.

-யாத்திரி

சுகுமாரன்

எவ்வளவு முயன்றாலும்
காமிரா முன்
புன்னகை செயற்கையாகிறது
எப்படித் தவிர்த்தாலும்
கண்ணாடி முன்
புன்னகைக்கத் தோன்றுகிறது

-சுகுமாரன்

யாத்திரி

எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து 
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின் 
ஒவ்வோர் தாயின் 
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.

-யாத்திரி

ஓஷோ

சமூகம் முட்டாள்களை விரும்புகிறது, முட்டாள்களை எளிதாய் நிர்வகிக்க முடியும். அவர்களுக்கு உத்தரவிடுவதும், அவர்களை கையாள்வதும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதும் எளிது. முட்டாள்கள் கீழ்படிகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

கீழ்படிவது குற்றம் என்றால்கூட அவர்களால் கீழ்படியாமல் இருக்க முடியாது. அவர்களை கட்டாயப்படுத்தி எந்திரமாக்கிவிட முடியும்.

சமூகத்துக்கு தேவை எந்திரங்களேயன்றி மனிதர்களல்லர். மனிதனை மேலும் மேலும் முட்டாளாக்கினால் அவன் எந்திரமாகிவிடுவான். பணியாளாக,அதிகாரியாக,நிர்வாகியாக இருப்பான்- ஆனால் அறிவற்றவனாக.

-ஓஷோ

கலீல் ஜிப்ரான்

கடவுள் என்னிடம் உன் எதிரியை நேசி என்றார்
நான் அவரின் சொல்லுக்கு கீழ்படிந்து என்னை நானே நேசித்தேன்

-கலீல் ஜிப்ரான்

27/10/2020

மீரா

இலக்கிய கூட்டம்
பரவசமூட்டும்
பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
"காது மட்டும் கேட்காது"

-மீரா

சுபி நாகராஜன்

சுண்டுவிரல் பிடித்து
நடைபழகும் குழந்தையின்
வினோத கேள்வியொன்றிற்கு
விடைதேடும் தகப்பனைப்போல
உன் உதட்டுச் சுழிப்பிற்கு
அர்த்தம் தேடுகிறேன்.
_சுபிநாகராஜன்..

புதன்

பாதம் படுவதற்ககாவே
பதிந்திருக்கிறது உன் வீட்டு படியில் பனித்துளி
கொஞ்சம் பார்த்துச்செல்.
பாத உஷ்ணத்தில் கரைந்து விடப்போகிறது.
உனக்காக காத்திருக்கும்
ஒன்றை சிதைக்க வேண்டாம்
என்னை செய்தது போல்...
_புதன்...

கவிஜி

விடிய விடிய தரிசனம் தந்த
சாமி தூங்கிவிட்டது
திரும்பி வருகையில் விபத்து

-கவிஜி

மணிகண்டபிரபு

காட்டுப்பன்றி ஒன்று தன் கொம்புகளைத் தீட்டிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்த நரி நீ ஏன் கொம்புகளைத் தீட்டுகிறாய்?

அதற்கு பன்றி எதிரி நம் முன் திடீரென வந்துவிட்டால் எப்படித் தீட்ட முடியும் என்றது

"யுத்த காலத்தில் செய்ய வேண்டியதை சமாதான காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்"!

கவிஜி

மணமேடையில் மடியூறும் எறும்பை 
தட்டி விடாதே 
வாழ்த்தரிசி ஒன்றை கவ்விக் கொண்டு 
நகர்ந்து விடும் 

-கவிஜி

மகுடேசுவரன்

பழங்காலத்தில் 
சொல்லத் தெரியாதவன் பாமரன்.

பிற்காலத்தில் 
படிக்கத் தெரியாதவன் பாமரன்.

முற்காலத்தில் 
தாய்மொழி தெரிந்திருந்தாலும் 
ஆங்கிலம் தெரியாதவன் பாமரன்.

தற்காலத்தில் 
ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் 
கணினி தெரியாதவன் பாமரன்.

காலம் 
புதுப்புதுப் பாமரர்களை 
உருவாக்கிக்கொண்டே இருக்கிறது !

நம்மைப் பாமரனாக்கும் உலகைத்தான் 
நாமும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் !

 

-மகுடேசுவரன்

ஆபிரஹாம் லிங்கன்

தவறுகள் செய்யபடி சூழல் தூண்டும்போது, வடக்கேயும் தெற்கேயும் பார்க்காதீர்கள். மேலேயும் கீழேயும் பார்க்காதீர்கள்.உங்கள் உள்ளுக்குள் பாருங்கள்.அங்கே ஒரு தராசு இருக்கிறது.அதன் பெயர் மனசாட்சி

-ஆபிரகாம் லிங்கன்

யாத்திரி

ஊர்த்திருவிழாவிற்கு
அக்காள் வந்திருந்தாள்
பிள்ளைகளுக்கு விடுமுறை கிடைக்கவில்லை
என்று வருந்தினாள்,
அவள் ஊர்திரும்பும் போது
நினைவாக
நான்கு பலூன்கள் வாங்கித்தந்து
"பிள்ளைகளிடம் சென்று கொடு” என்றேன்.

அக்கா சிரித்துக்கொண்டாள்,
"உன் மருமகப்பிள்ளைக என்ன இன்னும்
விரல் சூப்பிட்டு இருக்குன்னா நெனைச்ச,
குத்தவைக்கப் போற வயசு வந்துட்டுடா அவளுக்கு "..

எனக்குத் தெரியவில்லை
வளர்ந்த பெண்ணுக்கு
திருவிழாவில்
என்ன வாங்கித் தருவதென!

ஆண்டுகளாக நான்
வாங்கித் தந்துகொண்டிருக்கும் பலூனை
எப்படி தடை செய்வதென!

ப்ரியங்களின்
தொடர் செய்கைகளை
திடீரென்று மாற்றிக்கொள்ள
எத்தனை தடுமாறுகிறது
இந்த மனம்!

அக்காள்
கலர்கலராய்
நான்கு பலூன்களுடன்
ஊர் போய்க் கொண்டிருக்கிறாள்..

யாத்திரி..

ஜோசப் பிராட்ஸ்கி

நல்லதிற்கும் கெட்டதிற்கும் நடக்கும் யுத்தம்தான் வாழ்க்கை என்கிறார்கள்.அது நிஜமில்லை.மோசத்திற்கும் படுமோசத்திற்குமான போராட்டமே நம் கால வாழ்க்கை

-ஜோசப் பிராட்ஸ்கி

இவோ ஆண்டிரிச்

எது காயப்படுத்தவில்லையோ, அது வாழ்க்கை அல்ல.
எது கடந்துபோகவில்லையோ, அது மகிழ்ச்சியல்ல.

-இவோ ஆண்ட்ரிச்

ஓஷோ

இரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்.முதலாவது
"நீ எப்பொழுது பிறருக்கு எப்போது வாக்குறுதி கொடுத்தாலும் அதை நேர்மையாக இருந்து நிறைவேற்று.இரண்டாவது யாருக்கும் எந்த வாக்குறுதியையும் கொடுக்காதே

-ஓஷோ

யாத்திரி

சாப்பிடமாட்டேன் என்று எங்கு கோபித்துக்கொள்ள முடிகிறதோ அதுதான் வீடு..
எந்த வகையிலாவது நமக்காக நம் நலனுக்காக 
ஒருவர் கவலைப்பட வேண்டுமென்று விரும்புகிறோம் அதற்காகத்தான் அன்பு..

யாத்திரி..

வைரமுத்து

சுவாசிக்கும் வரை இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
வாசிக்கும் வரை மனிதன்
சுத்திகரிக்கப்படுகிறான்

-வைரமுத்து

மகுடேசுவரன்

சாலையோரத்தில் 
கரும்புச் சாற்றுக் கடை 
போட்டிருக்கிறார் 
பள்ளி ஆசிரியர். 

பத்து ஏக்கர் 
புன்செய் இருந்தும் பயனின்றி 
மண்வெட்டியாளாகக் 
கட்டுமானப் பணிக்குச் 
செல்கிறார் 
புளியம்பட்டிக்காரர். 

சொந்த வீட்டை 
விற்றுவிட்டு 
ஒற்றிக்கு 
வீடு பார்க்கிறார் 
நண்பர்.

தொடர்ந்து 
வேலை கிடைக்காததால் 
கறிக்கடைக்குப் போகும் அவர் 
நல்ல தையற்காரர். 

தவணைக்கு வாங்கிய 
நிலைப்பேழையைத் 
திருப்பி எடுத்துக்கொள்ளச்  
சொல்கிறார் 
அண்டைவீட்டார். 

“எல்லாவற்றையும் 
பரப்பி வைத்திருக்கிறேன். 
எப்படி எப்போது மீளுமென்று  
தெரியவில்லை” என்கிறார் 
தொழில்வல்லார். 

பலரும் தத்தம் 
வாழ்க்கைத் தகுதிகளிலிருந்து 
பல படிகள் 
இறங்கி நிற்கிறார்கள். 

இப்போதைக்கு 
மூச்சு விட்டுக்கொண்டிருந்தாலாவது 
பின்னொருநாள் 
மீண்டுவிடலாம் என்ற 
நம்பிக்கையைத் தவிர 
அவர்களிடம் வேறில்லை..

மகுடேஸ்வரன்..

சுந்தர ராமசாமி

மெளனம்  உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது.கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக் கொள்கிறது.பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகிறது.

-சுந்தர ராமசாமி

சுப்ரமணிய ராஜூ

கிழம்

நேற்றைய கவலையில்
இன்றைய காலையும்
இன்றைய மாலைக்கு
பிற்பகல் நினைவும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்

எண்ணிப்பார்த்தால்
எழுவத்தி நாலு.

-சுப்ரமணிய ராஜூ

முத்துவேல்

முத்துவேல் கவிதைகள்..

>பழுத்த இலை ஒன்று மரத்திலிருந்து அவிழ்வதும்
பனம்பழம் அதுவாய் கனிந்து வீழ்வதும்
அடை மழைக்கால ஏரி மடை உடைவதும்
சிறு காற்றில்
செவ்வரளி உதிர்வதும் போலத்தான்
அன்பின் நிலையதும்..


>ஞாபகம்
ஒரு பொல்லாத மிருகம்
நிகழ்காலத்தை காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு
இறந்த காலத்திற்கு எடுத்து தருகிறது இதயத்தை..


>என் பெயர்
எவ்வளவு சுமையானதாக இருக்கும் உனக்கு
வேண்டாம்
அதை கழட்டி உருவி கள்ளிப் புதருக்குள் வீசிவிட்டுப் போ..


>புறக்கணிக்கப்பட்ட அன்பு
தாய் இறந்த 
கண் திறவா நாய்க்குட்டியாக சாலையோரம் நடுங்குகிறது
மழையில்..

Godfather இயக்குநர்

நீங்கள் அதிக வெற்றிப்படங்களை தருகிறீர். வெற்றியின் ரகசியம் என்ன?

நீங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் மணமுடித்திருப்பது அவசியம். (சிரிப்பு) மணமுடித்தவர் மனது வெகு சீக்கிரம் சமநிலை அடைகிறது. ஆழமான சிந்தனைகளையும் தூண்டும்.

The Godfather பட இயக்குநர் Francis Ford Coppola

சுப.வீ

ஒருவன் செய்த பிழையை அவன் முகத்துக்கு நேரே பரிவாய் இதமாய் எடுத்துச் சொல்லுதல் அறங்கூறுதல்.

ஒருவன் செய்த அல்லது செய்யாத பிழையை அவன் இல்லாத இடத்தில் கூறுவது புறங்கூறுதல்

-சுப.வீ

மனுஷ்ய புத்திரன்

அன்பின் துயர நிலங்களைக் கடக்க பொது வழிகள் ஏதும் இல்லை! 

- மனுஷ்யபுத்திரன்

லீனா மணிமேகலை

ரத்தம் பேசும், ரத்தம் மணக்கும், ரத்தம் பரப்பி வைத்திருக்கும்
காட்சியாய் நகரம்..

ஆட்கொல்லி நோயின்
ஓருடலிலிருந்து
ரத்தம், 
கருக்கலைப்பின்
ரத்தம்,
பாவ மன்னிப்பின் ரத்தம், கருணையின் ரத்தம், 
காவின் ரத்தம்,
ஒரு உடலிலிருந்து மற்றதற்கு பீய்ச்சப்படும் ரத்தம்,
பருகும் ரத்தம், 
புராண நாயகர்களின் ரத்தம், கிறிஸ்துவின் ரத்தம்,
கருணைக் கொலையின் ரத்தம், தண்ணீரை விட அடர்ந்த குடும்ப
ரத்தம், 
சொந்த ரத்தம்.
விபத்தில், காயத்தில், காமத்தில், கல்வெட்டுகளில் காய்ந்த
ரத்தம்..

தொலைக்காட்சியில், சினிமாவில், கொலையின்,
தியாகத்தின், பழிதீர்ப்பின், துரோகத்தின், பலியின்,
எச்சரிக்கையின், அச்சுறுத்தலின், அபாயத்தின் புனைவு ரத்தம்..

பெயரில் உள்ள ரத்தம், பொது வெளிப்பாட்டின் ரத்தம், செம்மறி
ஆட்டின் ரத்தம், மூதாதையின் ரத்தம். சேவல் குரல் வளையின்,
ரத்த சகோதரர்களின், ரோஜா முட்களின், நிலவின், காட்டேறிப்
பற்களின், கண்ணகியின், பேய்க்கதைகளின் உறைந்த ரத்தம்..

கண்ணீர், வியர்வை என வெளியேறும் ரத்தம், சனிக்கிழமை
இரவின் ரத்தம், சுடப்பட்ட, சுட்டு மூடப்பட்ட, சிறு கோடென
பிளக்கப்பட்ட,
வெட்டப்பட்ட,
குரல்வளை கிழிந்த,
ஊறிய , விஷக்
மூக்குடைந்த, வயிற்றுப்
கொடுக்குகளின் வழிந்த ரத்தம்..

புலனாய்வு
வெண்ணங்கியில்,
புண்களில்
நிபுணனின்
கைகளில்,
மருத்துவனின்
கசாப்பு
கடைக்காரனின் போர்த்தலில்,
பிச்சைக்காரனின் ஏந்தலில், சாமியாடியின் சலங்கையில் தெறித்த
ரத்தம்..

பெரும் யுத்தங்களில், கூட்டுக் கொலைகளில், இன அழிப்புகளில்,
வாய்க்கால்களில், ஆறுகளில், மணல் மேடுகளில், உயர்ந்த
கட்டடங்களில், நாட்டின் எல்லைகளில் ஊறும் ரத்தம்..

குழந்தைகளின் அறைந்த காதுகளில், மனைவியின் கிழிந்த
உதடுகளில், அவ்விள வயதுக்காரனின் பெயர்ந்த தாடையில்,
அவசர சிகிச்சைப் பிரிவுகளில், கார்களின் பின்புற இருக்கைகளில்,
தார்ச்சாலைகளில், காவல் நிலைய கண்காணிப்பு கொட்டடிகளில்,
தெருவில் பொருதி சரியும் உடல்களில்,
துப்பாக்கி
சல்லடையாக்கப்பட்ட மனித உடல் துவாரங்களில், செய்தித்
தாள்களில்,
கைக்
குட்டைகளில்
இன்னும் உடைகளில்
ஒட்டிக்கொண்டும் வீடு வந்து சேர்ந்துவிடும் ரத்தம்..

விந்தை, புனிதம், மாந்த்ரீகம், மதம், அதிகாரம், வரலாறு கோரும்
ரத்தம்..

எங்கெங்கும் ரத்தம்..

எங்கெங்கும் ரத்தம்..

ஆனால் ரத்தத்தின் ரத்தம், கத்தி கீறாத, அழிவை நிகழ்த்தாத வனமுறை இல்லாத மாதவிடாய் இரத்தம்.. 
மறைவிடம் ஒடி
அறையில் அடைத்து, பொருத்துகளை மாற்றும் வேளையிலும், உறிஞ்சும் துணியில் உலர்ந்து விறைத்து கெட்டித்த, பெண்கள் தவிர யாரும் காண முடியாத, ஊற்றி அலசி தடயங்கள் துடைத்து அருவருக்கப்பட்ட கருவறையின் தூய இரத்தம்..

நூற்றாண்டு விம்மல், புராதன ஊற்று, நிராயுதபாணி, மெளன நீர்வீழ்ச்சி, ஒவ்வொரு பிறப்பும் அருந்தும் ரகசிய ரத்தம் ரத்தத்தின் மூலம் தூமை.. ரத்தத்தின் அந்தம் தூமை...

லீனா மணிமேகலை..

வாலி

கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது, இதை அறிந்து மது வருந்தியது
#வாலி

வைரமுத்து

பொணம் காக்கும் ராத்திரிதான் இருப்பதிலேயே இறுக்கமான ராத்திரி.சோகத்தையும் கண்ணீரையும் நீட்டிக்க முடியாமல் வேளாவேளைக்கு ஆக்கிக்கொண்டு அந்த சோற்றை மனசு ஒப்பித் தின்னவும் முடியாமல், கண்ணீர் வேர்வை என்ற பிசக்குகளோடு தூங்காமல் தூக்கத்தை துரத்தவும் முடியாமல் விடியும் வரைக்கும் கொட்டக்கொட்ட விழித்திருப்பது பிணத்தின் சொந்தக்காரங்களுக்கே கூட மரண அவஸ்தை

-வைரமுத்து

பேயோன்

இன்றைக்காக வாழ்வேன்
நாளையும்
இதே கதைதான்

-பேயோன்

யாத்திரி

உன்னை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன்.. மன்னித்துவிடு..
இனி மாட்டேன்..
நிரந்தரமாகப் போய்விடுகிறேன்.. என்றெல்லாம் சொல்லிவிட்டு வந்த மறு நிமிடத்திலேயே அப்படியெல்லாம் இல்லை” என்று
நீ சொல்லும் சொல்லுக்கு
தவம் கிடக்கும்
பரிதவிப்பை
என்ன செய்வது.. கொன்றழித்துப் போ..

யாத்திரி..

யாத்திரி

ஆண்குணத்தோடு
முட்டிமோதி
முரண்பட்டு
சமரசம் செய்து அயர்ந்து
தனக்குப் பிடித்த ஆணை மட்டுமாவது தன்னைப்போலவே பெண்ணாக மாற்றி விட துடிக்கிறாள்..

யாத்திரி..

ஜெஃப்ரி கிரீஃப் தமிழில் இறையன்பு

நண்பர்கள் நான்கு விதம் 
அவசிய நண்பர்கள், ஆத்மார்த்த நண்பர்கள், நெடுங்கால நண்பர்கள், பேருக்கு நண்பர்கள்.

அவசிய நண்பர்கள் நம் உள் வட்டத்தில் இருக்கும் உன்னத மானவர்கள். கொடி மரம் போல எல்லா தருணங்களிலும் இருப்பார்கள். நமக்கு எது ஏற்பட்டாலும் முதலில் அவர்களுக்கு தான் சொல்லத் தோன்றும். இவர்களின் பெருந்தன்மையே முக்கிய காரணம்.

ஆத்மார்த்த நண்பர்கள் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் நெஞ்சுக்கு உகந்தவர்கள். எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதையும் அவர்களிடம் மனம் விட்டு பேச முடியும்.இவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிப்போம். நெருங்கிய நண்பரிடம் சொல்ல முடியாததை கூட இவர்களிடம் சொல்லுவோம்.அவர்களுக்கு நம்மைத் தெரியும் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது.அவரிடம் இறக்கி வைத்தால் அத்தனை பாரமும் குறையும்

நெடுங்கால நண்பர்கள் எல்லாருக்கும் உண்டு. சின்ன வயதிலிருந்து பழகுவார்கள். உடன் இருப்பார்கள். ஒரே தெருவில் இருப்பார்கள். சிலர் அவசிய நண்பர்கள் ஆவதும் உண்டு, இது அணுகு முறையை பொறுத்து அமையும்.

பேருக்கு நண்பர்கள் நம்மை பாதித்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம். ரகசியமாய் வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் நமக்குள் இருக்கும். ஒரே மைதானத்தில் விளையாடுவது அவ்வப்போது பார்ப்பது என்று இருக்கும் அந்த உறவு முறையில் எந்தவித பொறுப்பும் இருப்பதில்லை

-ஜெஃப்ரி கிரீஃப்
தமிழில் இறையன்பு

மர்லின்

கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே..
அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும்..
ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்..
கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.. 
உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து கீழே விழுந்து விடும்..
உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்..

மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள்..
நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..  
#மர்லின்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

மானிட இனத்திற்குப் பெரிய அச்சுறுத்தல்
தீயவர்கள் இழைக்கும் தீங்கு அல்ல.மாறாக, நல்லவர்கள் செயலற்றியிருப்பது தான்

-மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

வழிப்போக்கன்

நான் மட்டும் இங்கு
பிழைத்திருப்பது குறித்தும்
மரிப்பது குறித்தும்
மகிழ்ந்து கொள்ளவோ
வருத்தம் கொள்ளவோ
இங்கே தனியாய் என்ன இருக்கிறது

விதிக்கப்பட்ட ஆயுளை
ஆர்பாட்டமின்றி அன்பைப் பகிர்ந்து
வாழ்ந்து கடப்பதைத் தவிர..

வழிப்போக்கன்..

கே.என்.சிவராமன்

எந்த நாற்பதாவது அத்தியாயத்தில், ‘கர்ணனின் கவசம்’ முடிந்ததோ, அந்த நாற்பதாவது அத்தியாயம் தாண்டியும் பயணிக்கிறது ‘சகுனியின் தாயம்’. :)  

கே. என். சிவராமன்

வழிப்போக்கன்

நான் செத்த பின்பும்
யாராலோ நீரூற்றப்பட்டு
எனது தோட்டத்து மல்லிகை
வாசத்துடன் பூக்கப் போகிறது
எனது வீட்டில் உள்ளவர்கள்
உண்ணப் போகிறார்கள்
கவலை மறந்து
உறங்கப் போகிறார்கள்
காலையில் கிழக்கே பொதுவாய்
கதிரவன் உதிக்கப் போகிறது
மாலையில் மேற்கே பொதுவாய்
கதிரவன் மறையப் போகிறது
சுழலும் பூமி சுழன்று கொண்டு தான்
இருக்கப் போகிறது

பின் நான் மட்டும் இங்கு
பிழைத்திருப்பது குறித்தும்
மரிப்பது குறித்தும்
மகிழ்ந்து கொள்ளவோ
வருத்தம் கொள்ளவோ
இங்கே தனியாய் என்ன இருக்கிறது

விதிக்கப்பட்ட ஆயுளை
ஆர்பாட்டமின்றி அன்பைப் பகிர்ந்து
வாழ்ந்து கடப்பதைத் தவிர..

வழிப்போக்கன்..

அப்துல்கலாம்

யாரையும் தோற்கடிப்பது எளிது
எவரையும் வெற்றிகொள்வது கடினம்.

It is very easy to defeat someone but
It is very hard to win anyone

#அப்துல்கலாம் 
#APJABDULKALAMBIRTHDAY

சுந்தரராமசாமி

ஆயிரம்பக்கங்களில் புத்தகம் எழுதுவோர் பற்றி..

"அவர்களை மே தினத்தில் கெளரவிக்க வேண்டும்"
-சுந்தரராமசாமி.

ஓஷோ

நினைத்தல் என்பது அறிந்ததை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை நினைக்கிறோம்.அவ்வாறு நினைக்கும்போது அறிந்த ஒன்று நேர்த்தியாகிக் கொண்டே செல்லும்.ஆனால் அறியாத ஒன்றினை அறிந்து கொள்ள முடியாது

-ஓஷோ

சா.கா.பாரதிராஜா

சிகிச்சையின்றி பலநாட்களாய்
மருத்துவமனையில்
நோயாளிப் படுக்கைகள்

-சா.கா.பாரதிராஜா

ஜென்

புத்தா என்பது அறிவு.அதைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.எப்போது நான் அறிவாளியாகிவிட்டேன் என நினைக்கிறாயோ அப்போதே முட்டாளிவிடுவாய்.அறிவுத் தேடலில் திருப்தி என்பதே கிடையாது.

-ஜென்

பேயோன்

நேற்று பெய்த கனமழையில்
பிரசவித்த அழுக்குக் குளத்தில்
ஒரு ஆட்டோ புகுந்து எழுப்பிய
அலையில் நனைகின்றன என் கால்கள்
நடுத்தெருவில் பாக்கெட் கடல்

-பேயோன்

கலீல் ஜிப்ரான்

அதிகம் விலகிச் செல்லாதே
திரும்புவது கடினமாகிவிடும்

-கலீல் ஜிப்ரான்

வழிப்போக்கன்

உன்னையே நான் கண்ணிமைக்காமல்
உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை கவனிக்காமல்
அந்த ஆடித் திருவிழாவில் நீ
சிறுபிள்ளையாய் மாறி
சோப்பு நீர்க் குமிழிகளை
உடைத்து உடைத்து உன்னையே மறந்து
விளையாடிக்கொண்டிருந்தாய்...

இந்தப் பக்கமாய் எனது உலகம்
உடைந்து நொறுங்கியதையும்
உனக்கான எனது இதயம்
அந்தக் குமிழிகளைப் போலவே
வெடித்துச் சிதறியதையும் அறியாமலே..

நீ பிரிந்து போய்
இத்தனையாண்டுகள்
கடந்த போதும்
இப்போதும் கூட
குமிழிகளை உடைத்து விளையாடும்
குமரிகளைப் பார்த்தால்
பதைக்கிறது மனம்
நடுங்குகிறது விரல்
யாரோ ஒருவனின் உலகம்
அந்த பக்கம்
உடைந்து கொண்டிருப்பதையெண்ணி..

வழிப்போக்கன்..

யுகபாரதி

பரஸ்பர அறிமுகங்கள்
நலமா என்பதிலிருந்தே தொடங்குவதால்
நலமில்லாமல்தான் இருக்க முடியும் என எல்லோரும் நம்புகிறார்கள்

- யுகபாரதி

13/10/2020

ஜென்

புத்தா என்பது அறிவு.அதைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.எப்போது நான் அறிவாளியாகிவிட்டேன் என நினைக்கிறாயோ அப்போதே முட்டாளிவிடுவாய்.அறிவுத் தேடலில் திருப்தி என்பதே கிடையாது.

-ஜென்

காந்தி

பலம் நிறைந்தவர்கள் பெறும் வாய்ப்பை பலவீனமானவர்களும் பெறும் நிலையே மக்களாட்சி

-காந்தி

ராஜநாயஹம்

The brain is wider than the sky

செஸ் விளையாட்டை வேடிக்கை பார்ப்பவனுக்கு காயின் மூவ் குறித்த ஐடியா வரும்.லைவ் கிரிக்கெட்டில் எல்லா பேட்ஸ்மேனுக்கும் அறிவுரை சொல்வான்

-ராஜநாயஹம்

ஓஷோ

உலகில் இருவகை மனம் உண்டு.அதிகாரம் செய்யக்கூடிய மனம்-
ஆண்மனம்;அதிகாரம் செய்யக்கூடியதை விரும்பும் மனம்-பெண்மனம்.

ஆண்மனம் கொண்ட பெண்களும்,பெண்மனம் கொண்ட ஆண்களுமாக இருக்கிறார்கள்.

-ஓஷோ

ஷான்

தொடுவாரில்லை
கொள்வாரில்லை
சலனமற்றுக் கிடக்கிறது
ஒற்றைச் செருப்பைப்
போன்றதொரு வாழ்க்கை.

-ஷான்

சேயோன் யாழ்வேந்தன்

ஓர் அரிசியில் பெயர் எழுத

ஓர் அரிசியில் என் பெயர் எழுத
இருபது ரூபாய் கட்டணம் என்பது
ரொம்ப அநியாயமாகப் பட்டது.
ஒவ்வொரு அரிசியிலும்
உண்பவன் பெயர் எழுதியிருக்குமென்று
அம்மா அடிக்கடி சொல்வாள் -
ஊறவைக்கையில் பார்த்திருக்கலாம்.
வேக வைத்ததில் அழிந்திருக்கலாம்.
மட்டமான அரிசியில்
ஏழைகளின் பெயர்களையும்
பாசுமதி அரிசியில்
பணக்காரன் பெயரையும்
ஆண்டவனே எழுதும்போது
நாமென்ன செய்யமுடியும் நடுவே?
அரசுக் கிடங்குகளில்
வீணாகும் அரிசிகளில்
புழுக்களின் பெயரை
எழுதியவன் 
காருண்யமூர்த்தி

-சேயோன் யாழ்வேந்தன்

விக்ரமாதித்யன்

சாமான்யனுக்கு 
திதி
பிரமுகனுக்கு
நினைவு நாள்

-விக்ரமாதித்யன்

வழிப்போக்கன்

வாழ்வதில் எனக்கொன்றும் வருத்தங்களோ சிக்கல்களோ எப்போதும் இருந்ததில்லை..
இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற உங்கள் நியதிகளிலும் நிபந்தனைகளிலும் நிரம்பியிருக்கிறது
எப்போதும் எனக்கான சிக்கல்..

வழிப்போக்கன்..🐅

முருகன். சுந்தரபாண்டியன்

நீ திரும்பக் கேட்காத ஏதோ ஒன்றுதான்
இன்னும் என்னுள் நம்மை
நிறைத்துக் கொண்டேயிருக்கிறது
என் உயிராக...

- முருகன். சுந்தரபாண்டியன்

ப.உமா மகேஸ்வரி

சின்ன புறக்கணிப்புதான்
மனதை எவ்வளவு வருத்துகிறது

சின்ன நெளிவுதான்
எவ்வளவு மரியாதை தருகிறது

சின்ன புன்னகைதான்
எவ்வளவு பகையை உடைக்கிறது

சின்னச் சின்னதுதான்
எவ்வளவு பெரிதாக இருக்கிறது?

-ப.உமா மகேஸ்வரி

காந்தி

அதிகாரம் ஒரு முள்கிரீடம். அதிகாரத்தில் நீங்கள் போய் அமர்ந்ததும் அதிகாரம் நீங்கள் விரும்பியபடி செய்ய அனுமதிக்காது.அது ஒரு சுமையாகத்தான் இருக்கும்

-காந்தி

அப்துற் றஹீம்

பணத்தின் முக்கிய ஆற்றல் என்னவென்றால் அது நம்முடைய தேவைகளை நிறைவு செய்வதுடன்..
99 சதவீத தேவைகளை உற்பத்தியும் செய்துவிடுகிறது

-அப்துற் றஹீம்

நறுமுகை தேவி

நண்பர்கள் என்றாலும்
சில விளையாட்டுகளை
எதிர் எதிர் இருந்து ஆட வேண்டியதாய்
சூழல் வாய்த்து விடுகின்றது..

சிரித்துக் கொண்டே காய்களை நகர்த்துகிறோம்,
சேனைகளைப் பறிகொடுத்த போதும்
சிரிப்பு ஒட்டிக் கொண்டு தான் இருந்தது..

எந்த நகர்த்தலின் போது
நம்மிடையே வன்மம் சூல் கொண்டது
என்பதை இருவருமே உணரவில்லை..

உன் கடைசி நகர்த்தலில்
என்னிடமிருந்த பாதுகாப்புக்கவசம்
உடைபட்டது..

தாளவியலா அவமானத்தில்
நான் நகர்த்திய காய்
உன் ராஜாவைக் குறி வைத்து விட
யோசிக்க அவகாசமில்லாதொரு நொடியில்
மறைக்கப்பட்ட உன் குறுங்கத்தியை
என் குரல்வளைக்கு நகர்த்தியிருந்தாய்
இப்போதும் ஒரு கோடு போன்ற
குறுஞ்சிரிப்பு மீதமிருக்கிறது என்னிடம்..

நறுமுகைதேவி..

13/09/2020

சுகுமாரன்

அளவு
*******
‘மல்லீப்பூ மொளம் பத்து ருவா’
சிறுகையால் சரமளந்து
கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த
பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:
‘இந்த முழத்துக்கா பத்து ரூபாய்?’
சரத்தை வாங்கி
நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி
முறித்து வாங்கினார்,
நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்
இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்
மல்லிகைகள்
வாடியிருந்தன சோகம் தாளாமல்.

- சுகுமாரன்

தமிழன்பன்

தொட்டி மீன் குளத்தில் விட்டதும்
நீந்தியது
தொட்டி அளவில்.!

-தமிழன்பன்

புத்தர்

எங்கே ஆசை இருக்கிறதோ
அங்கே மெளனித்து விடு

-புத்தர்

பாரதிதாசன்

அருவியின் வீழ்ச்சி போல நெஞ்சிலிருந்து கவிதை சலசலவென்று பெருகி உருவாக வேண்டும். கவிதையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வலிந்து சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்க கூடாது..

#பாரதியிடம் கற்றுக் கொண்டதாக பாரதிதாசன்

10/09/2020

பாங்கேய்

ஒருவன் அடுத்தவரது வெற்றியை வாழ்த்திப் பேசினால் அதில் பொறாமை ரகசியமாய் மறைந்திருக்கும்.

அடுத்தவரின் இழப்பிற்கு வருந்தினால் அதில் மகிழ்ச்சி ரகசியமாய் மறைந்திருக்கும்.

-பாங்கேய்

மகுடேசுவரன்

தமிழில் 'ழ'கரத்தைப் போல மேன்மையான மற்றொன்று 'ற்' கரமாகும்.ழகரத்தை உச்சரிக்கும் போதுள்ள தனிச்சிறப்பு றகரத்துக்கும் பொருந்தும்.வல்லினத்தில் ற கரமே தலையானது.'ஒன்று', 'கன்று' எனும்போது வல்லொலி குன்றாமல் ஒலிக்கும்

-மகுடேசுவரன்

எஸ்.ரா

சாப்பிடத் தெரியாத குழந்தை விருந்தில் கிடைத்த அனைத்தையும் அள்ளி வாயில் இட்டுக் கொள்வது போல் உள்ளது வாழ்க்கை..

எஸ்.ரா..

யுகபாரதி

ஆற்றுப்படுக்கைகளில்
அடுக்ககங்கள் வந்தபின்பே கிடைத்தது
சிவனாண்டி சித்தப்பாவுக்கு
செக்யூரிட்டி வேலை

-யுகபாரதி

யாத்திரி

பேசவே கூடாதெனும் வைராக்கியமெல்லாம் பிரியங்களின் குரல் கேட்கும் வரைதான்.

-யாத்திரி

பவா செல்லத்துரை

எனது ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு வெளியே இருக்கிறார்கள்..
அவர்கள்தான் என் வாழ்க்கையை பல்வேறு திசைகளில் வழிவகுக்கிறார்கள்.. அந்த பேரன்புகொண்ட மனிதர்கள்தான்       என் மேய்ப்பர்கள் !!
 
- பவா செல்லதுரை

நகுலன்

அவர் பல உண்மைகளைச் சொல்கிறார் 
ஒரு உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்கு

-நகுலன்

எஸ் ரா

💥ஒரு மரத்தில் எந்த இலை பழுத்து எப்போது உதிரப்போகிறது என
மரம்யோசிப்பதுமில்லை வருந்துவதுமில்லை. அதன் வேலை புதிய
இலைகளைத் துளிர்க்கவிடுவது
மட்டுமே.

-இடக்கை..
-எஸ்.ராமகிருஷ்ணன்.

ஜான்சிராணி

குறையொன்றுமில்லை 
துளைகளிட்டுப் போனாலும் புல்லாங்குழல் என
உருமாற்றிக்கொள்வேன் நான்..

ஜான்சிராணி..

ச.மாடசாமி

சின்னச் சின்ன வெளிச்சத்தையும் பார்க்கிற கண்கள் உங்களுடையது

அது எழுப்பும் மெல்லிய சத்தத்தை கேட்கிற காதுகள் உங்களுடையது.

அது அணைந்து விடாமல் பாதுகாக்கும் கைகளும் உங்களுடையது.
(ஆசிரியர்கள்)

-ச.மாடசாமி

மிர்தாத்

வாழ்வு இரு வகை

1.நாம் நிலைநிறுத்தும் வாழ்க்கை
2.நம்மை நிலைநிறுத்தும் வாழ்க்கை

-மிர்தாத்

காந்தி

சின்ன மறதி தான்
பெரிய மறதிகளை உருவாக்குகிறது

-காந்தி

தெ.சு.கவுதமன்

கீழே விழுமோ
என்பதைவிட
மேலே விழுமோவென்ற
பயம்தான்
உத்திரத்துப் பல்லியை
பார்க்கும் போதெல்லாம்!

-தெ.சு.கவுதமன்

யுகபாரதி

கூண்டுக் கிளிக்கு
பரிதாபப்படுகிறார்கள்
அறுப்பதற்கென்றே
கோழி வளர்ப்பவர்கள்

-யுகபாரதி

சார்லி சாப்ளின்

`உங்களைத் தனியாக விட்டாலே போதும்... வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்!’ 

- சார்லி சாப்ளின்

கலாப்ரியா

படித்துக் களைத்து
கழற்றி வைத்த கண்ணாடியில்
இரண்டு மின்விசிறிகள்
களைப்பில்லாமல் சுற்றிக்
கொண்டிருக்கிறது..!

#கலாப்பிரியா

ராஜா சந்திரசேகர்

உன் தனிமையை
துணை தேடாமல் 
பார்த்துக்கொள்

-ராஜா சந்திரசேகர்

முருகன். சுந்தரபாண்டியன்

அடகு நகையை திருப்பும் போதெல்லாம்
பெருமையின் முகத்தோடு
ஒரு நாளும் அவள் நகை போட
ஆசைப்பட்டதில்லை என அப்பா
தெரியப் படுத்துகையில்
சிறு இடைவெளி விளிம்புச் சிரிப்பில்
அம்மா காட்டுகிற முகம்
சிரிப்போடு சேராமலிருந்தது...

- முருகன். சுந்தரபாண்டியன்

ஜி.நாகராஜன்

குடத்தில் நீர் நிரம்புவது போல 
மவுனத்தில் கவலைகள் நிரம்புகின்றன

-ஜி.நாகராஜன்

ஆல்பிரட் ஹிட்ச்காக்

வெற்றி என்பது ஓர் அற்புத நிகழ்வல்ல.எவன் ஒருவன் தனது ஆர்வத்தை மிகச்சரியான நேரத்தில் கண்டுபிடித்துக் கொள்கிறானோ அவன் வெற்றிக்கான முதல் படியில் காலடி வைத்தவனாகிறான்

-ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்

முத்துவேல்

எந்த ஊருக்குப் போனாலும் அளவெடுத்துக் கொண்டேயிருக்கிறது மனம்
வந்த ஊரையும்.. சொந்த ஊரையும்..

முத்துவேல்..

முத்துவேல்

சாமிக்கு நேர்ந்துவிட்ட கிடா மகிழ்ந்து கிடக்கிறது மந்தை ஆடுகளுடன்..

முத்துவேல்..

பரிதி

நாயைக்கட்டிப்போடாமல் வளர்ப்பதற்கும், மாட்டை கட்டிப்போட்டு வளர்ப்பதற்கும் ஒரே காரணம்தான் உள்ளது. அது "தேவை". மனிதர்களுக்கும் அப்படியே.

- *பரிதி* 

❤️

ஆதவன்

எல்லோருக்கும் ஆசையாத்தான் இருக்கிறது. படிப்பைத் தவிர்ப்பதற்கு, படிக்காமலேயே புத்திசாலிகளாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள்

-ஆதவன்

30/08/2020

ராஜா சந்திரசேகர்

மழையில் நனைந்து
தூறலில் தலைதுவட்டிக் கொள்வான்

-ராஜா சந்திரசேகர்

பழனித்துரை

*பொருளாதார வளர்ச்சிக்கு அரசு தேடுவது சந்தையைத்தான். சமுதாயத்தை அல்ல.*

-டாக்டர்.க.பழனித்துரை

முகுந்த் நாகராஜன்

விடாமல் விழும் அருவியை
ஆச்சர்யமாகப் பார்க்கிறாள்
ஒருநாள் விட்டு ஒருநாள்
குழாயில் தண்ணீர் வரும்
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி

-முகுந்த் நாகராஜன்

நறுமுகைதேவி

இருட்டில் தனியே
அமர்ந்திருந்த
கடவுளுக்குக்
கொஞ்சம் பயமாய்த் தான் இருந்தது.. நல்லவேளையாகத்
தீபம் ஏற்ற ஒரு பெண் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள்..

நறுமுகை தேவி...

குற்றப்பரம்பறை

குற்றப்பரம்பரை..🐅

எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய நூல்..

1957 முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்னால் கள்ளர் இனத்திற்கும் தலித் சாதியினருக்குப் நிலவிய இரண்டு பக்கங்களுக்கு இடையேயான அன்பு பாசம் அவர்களுக்கிடையே உள்ள இணக்கம் இது எல்லாவற்றையும் பற்றி நாவல் விரிவாகப் பேசுகிறது..

வேல ராமமூர்த்தி அவர்கள் தனது நாவல் முன்னுரையிலேயே நெருப்பாக வெடிக்கிறார் அதன் ஒரு சிறு பகுதி..

இந்த' இரண்டு சாதிக்காரன்களின் அரைஞாண் கயிறுகளை அறுத்து எறிந்து விட்டு, அம்மணமாய் நிறுத்தினால், 'எவன் எந்தச் சாதிக்காரன்? என அடையாளம் காண முடியாது. இருவருக்கும்
அப்படி ஓர் உருவ ஒற்றுமை இவர்களுக்குள் இப்போதிருக்கும் 'சாதிப் பகை', எப்போதும் இருந்ததா? இருந்ததில்லை..

ஒருவனுக்காக ஒருவன், உயிர் கொடுத்திருக்கிறான்; உணவளித்து இருக்கிறான்; ரத்தம் சிந்தி இருக்கிறான். இந்தப் பெண்ணின் மானத்தை, அவன் காப்பாற்றி இருக்கிறான்; அந்த தாயின் முலைப் பாலுண்டு இவன் வளர்ந்திருக்கிறார்.

தலைமுறைகளைச் சாகடிக்கும் இன்றைய பகையை, எப்படி எவன் மூட்டியது..
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது எவன் கை,
வழியும் ரத்தத்தை நக்கிக் குடிப்பவர், இங்கு எவர் வரலாற்றைக் கறையாக்கி, வாக்குச் சேகரித்துக் கொழுப்பவன் எந்த அரசியல்வாதி..

பூர்வீகக் குடி இரண்டின் சாவுக் கணக்கு இங்கு சில சாதிக்காரர்களின் உண்டியலையும் சில சாதிக்காரர்களின் மனசையும் 
நிரப்புகிறது...

 பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு' என்றும், இந்த இரு சாதியினர் மோதினால், இனப்பெயரையும் குறித்து, சாதிக் கலவரம் என்றும் அக்னி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா..  இவ்வாறு இன்னும் விரிவாக அந்த முன்னுரையில் கொந்தளிக்கிறார்..

நாவலில் முக்கியமான கட்டத்தில் வருகின்ற உரையாடல் ஒன்று🐅 மனுசனுக்கு மனுசன் என்னடா தீட்டு? உங்க புஞ்சையை .. அவன் மிதிக்கிறான்.. உங்க கலப்பையைப் புடிச்சு அவன் உழுகுறான். அவன் காலாலே மிதிச்சு கசக்குற கதிரிலே தான், நீங்க வாயாலே திங்கிற நெல்லும் தவசமும் ஒட்டி இருக்கு ? அதிலே எல்லாம் தீட்டு இல்லே.. தரையிலே ஊறும் தண்ணிக்கு மட்டும் எங்கிருந்து வந்தது தீடடு..

நாவலில் புதிதாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது அவற்றுள் சில..🐅

>அய்யாமார், முதலாளிமார் வீடுகள் நெறஞ்ச ஊர், வீட்டுக்கொரு “பாடுகாப்பான்" உண்டு. பாடுகாப்பானெல்லாம் சேரிக்காரர்கள் தான். காட்டு வேலை, களத்து வேலை கல்யாணம் சடங்கு வேலையிலிருந்து இழவு சொல்லிப் போய், எரியூட்டி திரும்புவது வரை எடுபிடி வேலையெல்லாம் 'பாடுகாப்பான்' பொறுப்பு..

>கள்ளர்கள் திருடச் செல்லும் பொழுது ஆட்காட்டி குருவி என்ற ஒருவகை குருவியே பயன்படுத்துவார்கள்..
சின்ன துளையிட்டு அதில் குருவியை அனுப்பி உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா என்று அறிவார்கள்.. உள்ளே ஆட்கள் இருந்தால் குருவி கீச் கீச் என்ற சத்தம் கொடுக்கும் அதை வைத்து கண்டு கொள்வார்கள்..

>கல்லிலே மாவு ஊத்தி, மாவுக்கு மேலே முட்டை ஊத்தி, முட்டைக்கு மேலே மாவு ஊத்தி, வேக வேக புரட்டிப்போட்டு சுடுகிற அங்காடித் தோசை..

>அந்தகாலத்தில் ஒவ்வொரு சமஸ்தானத்திலேயும் கட்டுப்பாடு உண்டு.. எட்டயபுரம் விசேஷமான ஒரு சமஸ்தானத்திலே ஒரு தடை இருந்தது. சமஸ்தானத்துக்குட்பட்ட குடியான சனங்கள், ஒன்னு.. ரெண்டு.. மூனுன்னு எண்ணுகிற போது 'எட்டு' என்கிற எண்ணை மட்டும் உச்சரிக்கக் கூடாது.. ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, ராசா ஒன்பது, பத்துனு தான் எண்ணிப் போகணும் என்ன காரணம்னா... ராசா பேரு எட்டப்பராசா. எட்டுன்னு குடியான சனங்க வாயால சொல்றது ராசாவுக்கு அவமரியாதை..

>அந்த காலத்துல நல்ல தண்ணி கிடைக்கிற இடத்தில் தலித் சாதியினரை குடியேற விடல..
இதுபோல அங்கங்கு இன்னும் பல புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்..

கள்ளர்களை பற்றி கூறும் பொழுது 

>அவர்கள் நம்பியவர்களுக்கு உயிரை கொடுக்கிறார்கள், நம்பிக்கை துரோகியை கொலை செய்கிறார்கள், வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இவர்கள்..

>ஒரு வீரன் கையில் வெட்டுப்பட்டு சாகலாம் ஆனா ஒரு சதிகாரன் பறிக்கிற குழியிலே சறுக்கி கூட விழக்கூடாது..

>சோற்றைக் கூட நுனி விரலில் நாம் இப்போது சாப்பிடும் முறையை (அவர்கள் கை முழுவதும் அள்ளி சாப்பிடுபவர்கள்)அதிசயமாகப் பார்க்கிறார்கள்.. 

நாவலில் வரும் சில உவமைகள்..🐅

>பொறுமை இல்லாதவன் தவமும், பொலி காளையின் அவசரமும் ஒன்று..

>பரிக்கும் கைகள் இன்றி, சூடும் தலையின்றி, கானகத்தில் தானே முளைத்து மொட்டு விட்டு மலர்ந்து உதிரப் போகும் காட்டுப் பூ போல் இருந்தாள்..

>தான் விரும்பியவனையே கைபிடித்த குமரியின் உற்சாகத்தோடு மலை அடிவார மேடு பள்ளங்களில் குதிரை காற்றாய் பறந்து போனது..

>வீணையின் வடிவழகு, மலர்ந்து படுத்திருக்கும் ஒரு பேரழகி போல் இருந்தது..

>தோல் உரித்த நுங்கு நேரத்தில் பொழுது விடிந்து கொண்டிருந்தது..

>மண் சட்டியில் கவன் கல்லாய் உறைந்து போயிருக்கும் ஆட்டு ரத்தம்..

>நிறைந்த குமரி போல இந்த வருஷத்து முளைப்பாரி நல்ல வளர்த்தி..

>சூரியனுக்கு காட்டிக் கொடுக்கும் புத்தி உண்டு.. இருட்டுதான் பாதுகாப்பு..

ரெண்டு சாதிகளையும் மோத விட நடக்கிற சதிக்கு யாரும் எப்போதும் பலியாகக் கூடாது என்ற கருத்தோடு கதை நிறைவடைகிறது..

பிரகாஷ் செல்வராஜ்...🐅

வண்ணதாசன்

முன்னைப் போல யாரிடமாவது எதையாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே, கால்களைச் செருப்புக்குள் நுழைத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு உறுப்புக்கும் வயதாகிறது. குனிந்து செருப்பை வலதா இடதா என்று பார்க்க வேண்டும். சுவரில் கைகளை ஊன்றிக்கொள்ளாமல் அதைச் செய்ய முடிகிறதில்லை.

-வண்ணதாசன்

அம்பை

தன் மகிழ்ச்சியை அடைய பொங்கி எழாமல். தன்னையே பொசுக்கிக் கொள்ளும், தன்னைப் பெரிய தியாகியாக பாவித்துக் கொண்டு தன்னையே ஏய்த்துக்கொள்ளும் ஆத்ம துரோகம்தான் எல்லோர் கண்களுக்கும் பெண்மையின் பெருமையாகப் படுகிறது.

-அம்பை

முத்துவேல்

விட்டுப்போனவளை எழுத 
எந்தச் சொல்லை எடுத்தாலும் உப்புக்கரிக்கிறது...

முத்துவேல்..🐅

ஜான்சிராணி

வலியின் 
மகுடிக்கு
ஆடும்
வார்த்தை 
சர்ப்பத்தின்
நடனம் 
கவிதை..

ஜான்சிராணி..

ஆதவன்

எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
எல்லாவற்றையும் அல்ல, பூரணமாக அல்ல

-ஆதவன்

முத்துவேல்

இன்றேனும்
ஒரு குழந்தை வந்து
கூட்டிப் போய்விடாதா- என நினைத்தபடியே நின்றிருக்கிறது
சாலையோரக் கடையொன்றில் சாயம் போய்கொண்டிருக்கும் பொம்மையொன்று..

முத்துவேல்..🐅

பாதசாரி

தீக் கங்கு புகைகிறது..
பனிக்கட்டி புகைகிறது..
இரண்டின் புகை நடனமும் 
ஒரே மாதிரித் தான்  
காற்றில்..

-பாதசாரி

பாலகுமாரன்

ஜெயித்தலோடு எந்தயுத்தமும் முடிவதே இல்லை
வெற்றிக்குப்பிறகே யுத்தம் கடுமையாகிறது
எதிரி மூர்க்கமாகிறான்
கூர்மையாகிறான்
யுத்தம் முடிந்துபோய் பழிவாங்குதல் வந்துவிடுகிறது
வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது
தோல்வியைவிட வெற்றிதான் பெரியவேதனை என்பது பலருக்கு புரியவில்லை...

-பாலகுமாரன்

ஆதவன்

ஆண்களின் பொறுமையை சோதிப்பவர்கள் இல்லை பெண்கள்.ஆனாலும் சகித்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள்

-ஆதவன்

இளந்தென்றல் திரவியம்

நெருக்கமாய் வந்து 
அனிச்சையாய் தொடுவது போல் 
தொட்டுக்கொள்ளும் 
கள்ளக் காமம் தான்
கள்ளக்காதலை விட
விஷமமானது!!

கோடிட்ட இடங்களை 
நிரப்பி விட்டு,
கோடிடாத பல இடங்களை 
வெறுமையாக்கி,  விட்டுப் போகிறது 
காமம்!!

இளந்தென்றல் திரவியம்

தேவதச்சன்

~ ஒரு கூழாங்கல் ~

மனம் 
நீராய் ஓட 
கீழே, 
சூரியனைப் பார்த்துக் கொண்டு 
ஒரு கூழாங்கல்.

- தேவதச்சன்

சௌம்யா

வாட்ச் கட்ற இடத்துக்கு 'மணி'க்கட்டுனு பேர் வச்சவன் தீர்க்கதரசி

-செளம்யா

ஆதவன்

காலேஜ் முடித்துவிட்டு இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்?

உங்களுடைய விளம்பரத்துக்கு காத்துக் கொண்டிருந்தேன்

-ஆதவன்
(இண்டர்வியூ)

மனுஷ்ய புத்திரன்

இப்படியும் யோசிப்பவர்கள்
இருக்கக் கூடும்
அடுத்த பண்டிகைக்கு இருப்போமா என்று
அடுத்த திருவிழாவிற்கு இருப்போமா என்று
அடுத்த புத்தாண்டிற்கு இருப்போமா என்று
அடுத்த தேர்தலுக்கு இருப்போமா என்று
அடுத்த மழைக்காலத்திற்கு இருப்போமா என்று

நான் ஒரு காதலர் தினத்தன்று நினைத்ததுண்டு
அடுத்த காதலர் தினத்தில்
இந்தக் காதல் இருக்குமா என்று

மனிதர்கள் காலத்தைக்கண்டு
அவ்வளவு அஞ்சுகிறோம்
எந்த ஒன்றையும் பிரிகிறபோது
மறுபடி காண்போமா என்பதில்
எவ்வளவோ சஞ்சலங்கள் வந்துவிடுகின்றன

ஒவ்வொன்றையும்
கடைசியாகக் காண்பதற்குத்தானே
இந்தக் கண்கள் இருக்கின்றன
இந்தக் கண்ணீர் இருக்கிறது

-மனுஷ்ய புத்திரன்

23/08/2020

ராஜா சந்திரசேகர்

நான் நிராயுதபானிதான் ஆனாலும் யுத்தங்களுடன்...

-ராஜா சந்திரசேகர்

இளந்தென்றல் திரவியம்

பொம்மைக்கு
விலையை நிரணயிக்கிறார்
கடைக்காரர்.

அதற்கு ஓர் உறவை தீர்மானிக்கிறது
குழந்தை.

_இளந்தென்றல் திரவியம்.

மனுஷ்ய புத்திரன்

நான் அன்பின் புல்வெளிகளில் இளம் வெயிலில் ஒரு ஆட்டினைப்போல நிதானமாக ஒரு புல்லைக் கடித்துக்கொண்டிருக்க விரும்புபவன். ஆனால், வாழ்க்கை ஒரு நாள் நம்மை வேட்டை மிருகமாகவோ வேட்டையாடப்படும் மிருகமாகவோ மாற்றிவிடுகிறது.

-மனுஷ்யபுத்திரன்

நம் பிரியங்கள் நம்மை அவ்வளவு எளிதாகச் சாகவிடுவதில்லை.

-மனுஷ்யபுத்திரன்

ராஜா சந்திரசேகர்

நான் நிராயுதபானிதான் ஆனாலும் யுத்தங்களுடன்...

-ராஜா சந்திரசேகர்

கல்யாண்ஜி

யாருங்க என்று
வீட்டிற்குள் இருந்து கேட்கும் குரலின் கனிவு
பேறுகாலத் தொட்டில் துணி
போன்று இருந்தது

-கல்யாண்ஜி

கல்யாண்ஜி

எதையும் சொல்லவில்லை
எதையும் கேட்கவில்லை
சும்மாதான் வந்தேன்
என்றுவிட்டுப் போனான்
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு

-கல்யாண்ஜி

கல்யாண்ஜி

கைப்பிள்ளையுடன் பேசிக் கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்

-கல்யாண்ஜி

யாழிசை மணிவண்ணன்

கொம்பில் 
வண்ணம் பூசிய பிறகும் 
வண்டி இழுக்கத்தான் போகும் மாடுகள்
வந்து போகும்
நம் தேர்தலைப்போல..

-யாழிசை மணிவண்ணன்

ஜீவா

நமக்குள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவது போல் இருக்கவேண்டும். பூனை எலியைக் கடித்துக் குதறுகிற மாதிரி இருக்கக்கூடாது

-ஜீவா

மீரா

ஊமை இருட்டின்  
மௌன அழகை 
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறேன். 

#மீரா

தபூ.சங்கர்

நீ நரகத்துக்குச் செல்ல வேண்டும்
உன்னை விட்டால் வேறு யாரால் முடியும்
அதை சொர்க்கமாக்க

-தபூசங்கர்

மு.முருகேஷ்

எல்லா மூங்கில்களும்
புல்லாங்குழல் விற்பவன்
கைகளில் சங்கீதமாகிறது

பல புல்லாங்குழல்
வாங்கிப் போகிறவர்களின்
கைகளில் மூங்கிலாகின்றன

-மு.முருகேஷ்

மு.முருகேஷ்

டிக்கெட்டுக்காய்
கொடுத்த சில்லறையில்
இருப்பதைஞ்சு காசு
குறைகிறதென
அந்த கிழவியைத் திட்டிக்கொண்டே
நகர்கின்ற கண்டக்டர்

இன்னமும் தரவேயில்லை
எனக்கான எழுபத்தைந்து காசு
சில்லரைப் பாக்கியை

-மு.முருகேஷ்

தங்கம் மூர்த்தி

பட்டாம்பூச்சி பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது
மகளுக்கு

-தங்கம் மூர்த்தி

வைரமுத்து

தூக்கம் என்பது தூக்கணாங்குருவிக் கூடு போல,
கட்டுவது கடினம்
கலைப்பது எளிது
_கவிப்பேரரசு வைரமுத்து

கந்தர்வன்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை நிறத்தையே பார்க்க முடியல.ஜனம் எதைத்தின்று வாழ்கிறது என நினைத்துப்பார்த்தா அதிசயமா இருக்கு
-கந்தர்வன்

ஆத்மார்த்தி

அந்தப் பிரிதல்
அத்தனை அழகு.
அத்தனை புரிதல்
அதைவிட அழகு.

-ஆத்மார்த்தி

பெஞ்சமின் பிராங்களின்

அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து காத்திருப்பவனை அதிர்ஷ்டம் நெருங்குவதில்லை.
  - பெஞ்சமின் பிராங்கிளின்

15/08/2020

நா.முத்துக்குமார்

மரணம் என்பது
ஒரு *கறுப்பு ஆடு...*
சில சமயங்களில்
அது நமக்கு
பிடித்தமான
*ரோஜாக்களை*🌹
தின்றுவிடுகிறது.

- *நா. முத்துக்குமார்* -

நா முத்துக்குமார்

கணக்குப் புத்தகத்தில்
வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை
முட்டை போட்டது.

-நா.முத்துக்குமார்.

மார்ட்டின் லூதர் கிங்ஜூனியர்

மாற்றம், தவிர்க்க இயலாமையின் சக்கரங்களின் மீதேறி வந்துசேரும் வண்டியல்ல; தொடர்ச்சியான போராட்டத்தினூடாக வந்து நிற்பது. 
-மார்ட்டின்லூதர்கிங் ஜூனியர்

கலாப்ரியா

ஒரு பிணம் 
எரிகையில்
உயிர் வருகிறது
சுடுகாட்டுக்கு..!

#கலாப்பிரியா

ஜார்ஜ் ஆர்வெல்

அதிகாரம் என்பது மனித மனங்களை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப்போட்டுவிட்டு, நமக்கு ஏற்ற வடிவத்தில் அதை மீண்டும் ஒட்டவைத்துக் கொள்வதுதான்
-ஜார்ஜ் ஆர்வெல்

மகுடேசுவரன்

முட்டாள்

முட்டாள்- முட்டுகின்ற ஆள். முட்டு என்றால் மோதுவது. முட்டிக்கொள்வது.தெளிவான பார்வையில்லாமல் தனக்குத் தெரிந்ததை நம்பி மேற்சென்று
முட்டி நிற்கும் ஆள்களை முட்டாள்கள் என்கிறோம். மடத்தனமாக முட்டி நிற்பது. முட்டுகிற ஆள் முட்டாள்.

-மகுடேசுவரன்

13/08/2020

மு.சுயம்புலிங்கம்

எங்கள் ஊர் யானைகள்
பத்து பைசாவுக்காக
எவரெவர் காலிலோ விழுகின்றன

- மு. சுயம்புலிங்கம்

நா முத்துக்குமார்

*இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம்*

எல்லா பள்ளிக்கூட வாசலிலும்
கைகள் நடுங்கும் ஒரு பாட்டி
வேர்கடலை விற்கிறாள்.

எல்லா தாலுகாபீஸ்
ஆலமரத்தடியிலும்
நாற்பது வயது கடந்த ஒருத்தர்
யாரிடமோ கையெழுத்து வாங்க
மஞ்சள் பையுடன் நிற்கிறார்.

எல்லா அடகுக் கடைக்
கம்மலிலும்
உலர்ந்துகொண்டிருக்கிறது
ப்ரியமில்லாமல் கழட்டிக்
கொடுத்த
ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி.

எல்லா மெல்லிசைக் கச்சேரியிலும்
வெள்ளை பேண்ட் 
வெள்ளை சட்டை அணிந்து
நெற்றி முழுக்க
விபூதி பூசிய ஒருவர்
'பச்சைக்கிளி... முத்துச்சரம்' என்று
டி.எம்.எஸ். குரலில் பாடுகிறார்.

எல்லா ரயில் நிலையத்திலும்
பறவை எச்சம் படிந்தபடி
வரவேற்கிறது
பூவரச மரத்தடியில்
ஒரு சிமெண்ட் பெஞ்ச்.

எல்லா மருத்துவர்களுக்கும்
வாய்த்துவிடுகிறது
புரியாத கையெழுத்து.

எல்லா வீடுகளிலும்
செல்லமாய் திட்டுகிறார்கள்
சாப்பிடும்போது
புத்தகம் படிக்காதே
ருசி தெரியாதென்று.

எனவேதான் பெரும்பாலும்
சாப்பிடும்போது
புத்தகம் படிக்கிறா்கள்
ருசி தெரியாதென்று.

எல்லா பொது நூலகத்திலும்
கடைசிப் பக்கம் கிழிந்த
பழைய புத்தகங்கள் 
பெரும் படைப்புகளுக்கு 
முடிவில்லை என்று
சவால் விடுகின்றன.

எல்லா மரண வீட்டிலும்
யாரோ ஒருவர்
யாருக்கும் சொல்லாமல்
சாப்பாட்டுக் கடை நோக்கி
மெல்ல நழுவுகிறார்.

எல்லா பேருந்து
நிலையத்திலும்
அகாலத்தில்
கணவனிடம்
கோபித்துக்கொண்டு
கைக்குழந்தையுடன்
கடைசிப் பேருந்திற்காய்
காத்திருக்கிறாள்
ஒரு இளம் தாய்.

-நா.முத்துக்குமார்

ஆதவன் தீட்சன்யா

இங்கு பலவந்தமாக தத்தெடுக்கும் வேலை நடைபெறுகிறது; 
பாதுகாப்பாக சாமிகள் மாற்றுப்பாதையில் செல்லவும்.
_ஆதவன் தீட்சன்யா

மகுடேசுவரன்

நாம் காணும் மலர்கள்
மலர்ந்துகொண்டிருப்பவையல்ல
வாடிக்கொண்டிருப்பவை.

-மகுடேசுவரன்

சுப.உதயகுமாரன்

அதிகமாகப் பாருங்கள், அளவோடு பேசுங்கள், ஆர்வத்தோடு  கேட்பீர்கள்' என்பதுதான் அந்தக் கவிதை சொல்லும் செய்தி.

சரி, எப்படித்தான் செவிமடுக்கும் திறனை உயர்த்திக் கொள்வது?

உங்களைச் சமநிலையில் வைத்திருப்பது முதற்படி. அதாவது, உங்கள் மனக்கோப்பை காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு இருங்கள். உங்களிடம் பேசுகிறவரை நீதித்தராசில் வைத்து நிறுக்கவோ அல்லது உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவரை எடை போடவோ செய்யாதீர்கள்.

கவனச் சிதறலின்றி  கேளுங்கள். பேசுபவரின் நடை, உடை, பாவனைகளில் கவனம் செலுத்தாது, அவர் பேசும் வார்த்தைகளின் உள்ளடக்கத்தில் மனதைச் செலுத்துங்கள். பேசப்படும் பொருள், பேசுபவரின் எண்ணவோட்டம் மற்றும் உணர்வுகளில் மனதைக் குவித்துக் கேளுங்கள்.

நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள் என்பதைப் பேசுகிறவர் புரிந்துகொள்ளும் வகையில், அவரது கண்களைப் பாருங்கள்; தலையை அசையுங்கள், முக பாவனையை, குரலைப் பயன்படுத்துங்கள்.

உங்களை அவருடைய இடத்தில் நிறுத்தி, அவருடைய வாழ்வுலகுக்குள் நுழைந்து, அவருடைய விழுமியங்கள், பார்வைகள், அனுமானங்களைப் புரிந்து, கவனமாகக் கேளுங்கள்.

பேசுகிறவர் விவரிப்பது போன்ற உங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர வேண்டாம். அவர் கொட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு, பிரச்னைக்கு விடையோ, தீர்வோ சொல்ல வேண்டாம். வெறுமனே  கேளுங்கள். மனம்திறந்து கேளுங்கள்.

பேசுகிறவர் நிறுத்தினால், தயங்கினால், அமைதி காத்தால், குழம்பினால், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தையை, சொற்றொடரை அல்லது பகிர்ந்துகொண்டிருந்த உணர்வை அவருக்கு நினைவூட்டி அவர் தொடர்ந்து பேசுவதற்கு உதவுங்கள். பேசுபவரை ஊக்குவித்து இன்னும் தெளிவாக, விளக்கமாகப் பேசவைக்க சில குறிப்பிட்ட உத்திகளைக் கையாளலாம்.

ஊக்குவித்தல்: பேசுபவரோடு உடன்படவோ அல்லது மாறுபடவோ  செய்யாமல், நடுநிலைமையான வார்த்தைகளுடன், உங்கள் ஈடுபாட்டைத் தெரிவிக்கலாம். "இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்?' எனக் கேட்டு, தொடர்ந்து பேச உதவலாம். 

தெளிவுபடுத்துதல்: கேள்விகள் கேட்டு, பேசுபவர் கூடுதல் விவரங்கள், விளக்கங்கள் அளிக்க உதவி செய்யலாம். "இது எப்போது நடந்தது?' "அப்படி யார் சொன்னது?' போன்ற கேள்விகளைக் கேட்டு இன்னும் தெளிவாகப் பேச வழிகோலலாம். 

திரும்பச் சொல்லுதல்: பேசுபவர் சொல்கிற அடிப்படைத் தகவல்களை, கருத்துகளை மீண்டும் ஒருமுறை உங்கள் வார்த்தைகளில் திரும்பச் சொல்லி, பேசுகிறவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள், புரிந்திருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரிவிக்கலாம். உங்களுடைய  புரிதல் சரிதானா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளலாம். "உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பவேண்டும் என்று விரும்புகிறீர்கள், அப்படித்தானே?' என்பன போன்ற கேள்விகள் மிகவும் உதவும். 

பிரதிபலித்தல்: பேசுபவரின் அடிப்படை உணர்வுகளைச் சுட்டிக்காட்டி, அவர் எப்படி உணர்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதை எடுத்துரைக்கவும். அவர் தனது உணர்வுகளை மதிப்பீடு செய்வதற்கும் உதவலாம். "அந்த வார்த்தைகள் உங்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கின்றனவா, இல்லையா?' போன்ற கேள்விகள் பயனளிக்கும். 

சுருக்கிக் கூறுதல்: பேச்சில் முன்னேற்றத்தைப் பரிசீலிக்கவும், முக்கியமான கருத்துகள், தகவல்கள், உணர்வுகளை ஒருங்கிணைக்கவும், தொடர் கருத்துப்பரிமாற்றத்துக்கு வழிகோலவும், அவர் பேசுவதைச் சுருக்கிக் கூறுவது மிகவும் உதவும். 

உறுதி செய்தல்: பேசுபவரின் பிரச்னைகள், உணர்வுகளை ஆமோதிக்கவும், அவரது முயற்சியைப் பாராட்டி அங்கீகரிக்கவும், அவரது நன்மதிப்பை எடுத்துரைக்கவும் இது உதவும். 

கூர்மையாகக் கேட்க வேண்டுமென்றால், நீங்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் பேசும்போது கேட்க முடியாது. அதே போல, ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்கள் மனதில் அவருக்கு எதிராக வாதிடுவதை நிறுத்திவிட்டு, பொறுமையாக, நிதானமாக இருங்கள். அவர் பேசும் வார்த்தைகள், கருத்துகள், உணர்வுகளின்மீது கவனம் செலுத்துங்கள்.

பேசுபவரோடு வாதிடாதீர்கள்; விமர்சனம் செய்யாதீர்கள்; அவரைப் பகைமையோடு நடத்தாதீர்கள். பேசுகிறவரின் கலாசாரப் பின்புலத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் அவரைப் புரிந்துகொள்ளுங்கள். பேசுகிறவரை வகைப்படுத்திப் புறக்கணிக்காதீர்கள். பேசுகிறவர், பேசப்படும் பொருள், இடம், பொருள், ஏவல் போன்றவை பற்றிய உங்களின் பாரபட்ச உணர்வுகளை இனம்கண்டு, அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

காது பற்றியும், கேட்பது குறித்தும், கேட்கும் தகவல்களை ரகசியமாகப் பாதுகாப்பது தொடர்பாகவும், நமது தமிழ்ச் சமூகத்தில் புழங்கும் கதை ஒன்று மிக முக்கியமானது.

ஒரு ராஜாவுக்கு ஒட்டுக் கேட்பதில் அலாதிப் பிரியம் ஏற்படவே, தன் காதுகளைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருந்தைக் குடிப்பார். அவரது காது கழுதைக் காது போல வளர்ந்துவிடும். இந்த ரகசியம் ஊருக்குத் தெரியாமலிருக்க ராஜா தலைப்பாகை அணிந்துகொண்டார். ஒரு முறை ராஜாவுக்கு முடிவெட்ட வந்தவர் இந்த ரகசியத்தை அறிந்துவிட்டார். இதை வெளியே  சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அவரை மிரட்டி அனுப்பி வைத்தார் ராஜா. 

மேற்படியாருக்கு இந்த ரகசியத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால், தலை வெடித்துவிடும் போல இருந்தது. எனவே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று ஒரு குழி தோண்டி, அதற்குள் "ராஜா காது கழுதைக் காது' என்று மூன்று முறை உரக்கச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அந்த ராஜ ரகசியம் எப்படி ஊர்முழுக்கப் பரவியது, பின்னர் என்னென்ன விடயங்கள் நடந்தேறின என்று பல்வேறு வடிவங்களில் அந்தக் கதை சொல்லப்படுகிறது.

கதையின் மையக் கருத்துகள் இவைதான்: கூர்மையாகக் கேட்பதற்கு காதுகள் பெரிதாக இருக்க வேண்டிய  தேவையில்லை. பிறர் உங்களிடம் சொல்ல விரும்பாத விடயங்களைத் தெரிந்துகொள்ள, ஒட்டுக் கேட்காதீர்கள். அதேபோல, நீங்கள் கேட்டவற்றைப் பிறரிடம் பகிர்ந்தே ஆகவேண்டும் என்கிற அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். இவற்றை நீங்கள் செய்தால், கேவலப்படுவீர்கள் என்பதுதான் கதையின் பாடம். 

கேட்பதிலுள்ள சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள ஓரிரு செய்முறைப் பயிற்சிகள் உங்களுக்கு உதவலாம்:

(1)  நான்கைந்து நண்பர்களை அமர்த்திக்கொண்டு, பத்து வார்த்தைகளை வேகமாகச் சொல்லிவிட்டு, எத்தனை வார்த்தைகளை அவர்கள் உள்வாங்கி, நினைவில் நிறுத்தி, திருப்பிச் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். பெரும்பாலானவர்களால் மூன்று முதல் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் சொல்ல முடியாது.

(2) நண்பர்கள் பத்து பேர் ஒரு வட்டமாக அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு வாக்கியத்தை உங்களுக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லுங்கள். அவரும் இதேபோல தனக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை அதைச் சொல்லட்டும். இப்படியே அந்த வாக்கியம் அந்த வட்டத்தைச் சுற்றி உங்களிடம் வந்து சேரும்போது, எப்படி உருமாற்றம் பெற்றிருக்கிறது என்று பாருங்கள். நமது கேட்கும் திறன் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புரியும்.

-சுப.உதயகுமாரன்

கலீல் ஜிப்ரான்

என் கதவில் எழுதி வைத்தேன்

"நயவஞ்சக குணத்தை வெளியே விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்"

யாரும் என்னை சந்திக்கவேயில்லை

-கலீல்ஜிப்ரான்

சுய ஒழுக்கம்

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் *மற்றவர்களுக்கும்* பயன்தரும் என்றால் நன்றி

#Self #Discipline

பாப்லோ நெரூடா

பூமி நமக்குக் கற்பிக்கக் கூடும் 
எல்லாமே மரித்து விட்டதாய்த் தோன்றுகையில்
துளிர்த்தலும் உயிர்த்தலுமான வாழ்வை.

-பாப்லோ நெரூடா

கலைஞர்

கோழி முதலா, முட்டை முதலா?_
*கலைஞர் :* _முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல் (capital)

-கலைஞர்

அப்துல் ரகுமான்

நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது
-அப்துல் ரகுமான்

கலைஞர்

ஒரு நிருபரின் கேள்வி...

"பார் வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்காவிட்டால் மதுபானக் கடைகளை மூடிவிடப் போவதாக மதுக்கடை உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்களே...?

கலைஞரின் பதில்: நல்லதுதானே. அவர்கள் கடைகளை மூடிவிட்டால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தானாகவே வந்துவிடும்தானே...

-கலைஞர்

ராஜா சந்திரசேகர்

தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் கிடைப்பதே இல்லை. தொடர்பு எல்லைக்கு  உள்ளே இருப்பவர்கள் பேசுவதே இல்லை.

   - ராஜா சந்திரசேகர்

ஜென் கதை

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை ஒன்றின் மேல் சவாரி செய்பவனை பார்த்து சாலை ஓரமாக நிற்பவன் கேட்கிறான்..
எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்? குதிரை ஓட்டியோ எனக்குத் தெரியாது. 'குதிரையைக் கேள்' என்கிறான்.நம் நிலையும் அதுதான்.

-ஜென் கதை

கவிஞர் கண்ணதாசன்

வாழ்க்கையில் ஒருவனுக்குத் திட்டமில்லாமல் போனால், 
அவனது எல்லா அனுபவங்களும் கசப்பாக இருக்கும் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

- கவிஞர் கண்ணதாசன்

ஈரோடு தமிழன்பன்

கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம் 

-ஈரோடுதமிழன்பன்

நா.முத்துக்குமார்

நீ அலை
நான் கரை
இணைந்தால் கடற்கரை

-நா.முத்துக்குமார்

லிங்கன்

No man has a good enough memory to be a successful lier

"யார் ஒருவரும் வெற்றிகரமாகப் பொய் சொல்லுகிற அளவுக்கு மிகத் தேர்ந்த நினைவாற்றல் உடையவராக இருக்க முடியாது

-லிங்கன்

தொ.பரமசிவன்

ஆண் தெய்வங்கள் கோயில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியும், பெண் தெய்வங்கள் கோயில்கள் வடக்கு நோக்கியும் இருக்கும்.

*பெண்களே அக்காலத்தில் போருக்கு தலைமை தாங்கியதால் வடக்கு நோக்கி ஆயுதமேந்தியபடி நிற்கின்றன.மூன்று திசையில் கடல் இருப்பதால் வடக்கில் இருந்துதான் பகை வந்திருக்கக்கூடும்.
அதனால் வடக்கு நோக்கி நிற்கின்றன.
காளி போன்ற தெய்வங்கள் ஆவேசமுடன் நிற்பதை காண முடிகிறது.

-தொ.பரமசிவன்

04/08/2020

புலமைப்பித்தன்

தேவைகளை விரிவுபடுத்திக்கொள்ளாமல் இருந்திருந்தால், அந்தத் தேவைகளுக்காகத் தேவையில்லாமல் பாடுபடுகிற வாழ்க்கை முறை வந்திருக்காது. கோட்டையைப் பிடிக்கப் போவதாக நினைத்துக்கொண்டு வந்து, வாழ்க்கையையே கோட்டை விட்டிருக்கிறேன்” 

-புலமைப்பித்தன்

ஜெயகாந்தன்

கம்பீரம் என்பது காட்டப்டுவதல்ல, காணப்படுவது 

- ஜெயகாந்தன்.

யியற்கை

இன்னுமிருக்கும் தொலைவு
வாகனங்கள் கடக்கும்போதெல்லாம்
நசுங்கிய உடலிலிருந்து எம்பிப் பார்க்கிறது
றெக்கை

-யியற்கை

நா.முத்துக்குமார்

நானறிந்த எம்ஜிஆர்கள்
 சீக்கிரம் 
செல்வந்தர்களாகிவிடும் 
சினிமா கதைகள் 
போலல்லாமல்
 சென்ற முறை பார்த்த போதும்
 அவர் ரிக்சாதான் 
ஓட்டிக் கொண்டிருந்தார் 

-நா.முத்துக்குமார்

சரவண கார்த்திகேயன்

நம் இயல்பில் தான் மற்றவர் பொறாமைப்பட வேண்டும்; மெனக்கெடலில் அல்ல.

-சரவண கார்த்திகேயன்

கல்யாண்ஜி

எல்லோருக்கும் சொல்லே வேண்டுமெனில்
யாரிடம் தருவேன் என் கண்ணீரை?

-கல்யாண்ஜி

எஸ்.ரா

காகிதம் இரண்டு இடங்களில் புகழடைகிறது. ஒன்று பணமாகும்போது,மற்றொன்று புத்தகமாகும்போது
-எஸ்.ரா
(இன்று காகித தினம்)

காந்தி

என் ஆதிக்கத்துக்கு எதிராக என் மனைவி செயல்படும் வழிமுறையிலிருந்தே சத்தியாகிரகத்தை நான் கற்றுக்கொண்டேன்

-காந்தி

லா.ச.ரா

நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு, இல்லையேல் சந்தேகம் உங்களுடையது, உண்மை என்னுடையது,அவ்வளவுதான். 
  - லாசரா,

செல்வராஜ் ஜெகதீசன்

அழைத்துப் போய் வந்த
   ஆசிரியரின் அத்தனை
   கெடுபிடிகளுக்குப் பின்னும்
   இன்னமும் நினைவில்
   அந்த ஸ்கூல் பயணம்
   இன்பச் சுற்றுலா என்றே..!”

 -செல்வராஜ் ஜெகதீசன்.

24/07/2020

தாருண்யன் ரவி

விவசாயி ஒருவன் உருக்கமாக வேண்டியதற்கு மதிப்பளித்துக் கடவுள் அவன் முன் தோன்றினார்.
“எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே... ஏன் அவளை இவ்வளவு கருணை பொழியும் உள்ளத்தோடு படைத்தாய்?” என்று கேட்டான்.
கடவுள் சொன்னார்: “அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்.”
“ஏன் அவளை இவ்வளவு நல்ல சமையல்கலை நிபுணராகப் படைத்தாய்?”
“அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்.”
கடைசியாக அவன் கேட்டான்: “எல்லாம் சரி கடவுளே... ஆனால் அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்?”
கடவுள் சொன்னார்:
“அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.”

-தாருண்யன் ரவி

வேள்பாரி

24.07.2020
*நூல்வழிச்சாலை*

*மைல்கல் - 157* 

வீரயுக நாயகன் வேள்பாரி*-2

எழுதியவர்-
சு. வெங்கடேசன்

*நீங்கள் யார்*?

*கபிலர்*

*அது உங்கள் பெயர்*
*நீங்கள் யார்*?

*நான் புலவன்*

*பாடல்கள் பாடும் பாணரா*?

*இல்லை. நான் கவிதைகள் எழுதும் புலவன்*

*கவிதை என்றால்*?

*ஓவியம் பார்த்திருக்கியா*?

*ஆம்! பார்த்திருக்கிறேன்*

*ஒலியை ஓவியமாக வரைவது கவிதை*

*நன்றி கபிலரே! புரிந்தது*

இப்படி கபிலரோடு நீலன் என்ற குலத்தலைவன் செய்யும் உரையாடலோடு பறம்பு மலையின் ஒரு நுழைவான "வேட்டுவன் பாறை" என்ற இடத்தில் இருந்து நம்மையும் மலை நோக்கி காட்டில் அழைத்துச் செல்வதாக இந்த அற்புதமான வரலாற்றுப் புதினம் தொடங்குகிறது. 

இந்த உரையாடல் போல நாவல் முழுவதும் ஒருவருக்கொருவர் பேசும் மொழி, கருத்துக்கள் தமிழின் சுவையை கூட்டி உணரத்தக்கதாக அமைந்துள்ளது இந்த நாவலின் தனிப்பெரும் சிறப்பு. 

சென்ற பதிவில் கண்டவாறு உண்மைக் கதைக்கு சற்றும் பங்கம் வராதவாறு பல கிளைக்கதைகள், முருகன்-வள்ளி காதல், காடுகளில் பொதிந்துள்ள ரகசியங்கள், வித்தியாசமான விலங்கினங்கள், விதவிதமான பறவைகள், அவற்றின் சிறப்புகளை கதையில் உபயோகப்படுத்திய திறமை, போர் குறித்த வழிமுறைகள், காடுகளில் வசித்த மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கை, கொற்றவை வழிபாடு என பல விடயங்கள் நம்மை கனவிலும் துரத்தும் சாகசங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கதையை மீண்டும் ஒருமுறை பதிவு செய்வதை விட சிறப்பம்சங்களை மேற்கோளிட்டு உங்கள் முன் கொண்டு நிறுத்துவது உங்களுக்கு விருந்தாக அமையும் என்பது நமது கருத்து. 
உடனே, புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

*வித்தியாசமான பார்வை*

1. ஐவகை நிலங்களில் இயற்கையோடு இயைந்த வாழ்வு, தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பும் விளைச்சலும் பொதுச்சொத்து.
 எல்லா மனிதனும் சரிநிகர்! ஆண் பெண் இரு பாலின பிரிவு மட்டுமே. கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பின் பிரதிபலிப்பு. 
வேள்பாரி காலத்தில் வாழ்ந்த ஐவகை நில மக்களின் வாழ்க்கை முறையை இப்படி முறைப்படுத்துகிறார், ஆசிரியர்.

2. மக்களுக்கு பெருஞ்செல்வம் கால்நடைகளே! என்ற வரி உண்மையை உரைக்கிறது!

3. இயல்பு தான் ஒன்றின் குணத்தை தீர்மானிக்கின்றது, எந்த உயிரினத்துக்கும் இது பொருந்துகிறது! - என்பது உளவியல் கோட்பாடாக உணர்த்துகிறது.

4.  *வணிகமே வரலாற்றின் போக்கை தீர்மானிக்கிறது* என்ற வரிகள் உண்மையை உரக்க கூறுகிறது.

5. அறியாமை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அறிந்தவன் புத்திசாலி ஆகிறான்.

6. ஒரு மனிதனின் முகத்தை மற்றும் சொல்லைக் கண்டு கணிக்க முடியாதது எதுவுமில்லை!
(Face reading ?!)

7. நாடு என்பது அரசும் அரச நியதியும் தான் என்பதை மாற்றி, நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதி நிலம் என்பதை பாரி நிலை நிறுத்தினான் என்று ஆசிரியர் தன் பார்வையை நிலை நிறுத்துகிறார்.

8. *எது ஒன்றையும் தேவையாக மாற்றுவதுதான் வணிகம்*. *வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது அதை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை*!

9. *ஆறாத் துயரை கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணை கூற சொல்லில்லை*! (தங்கள் குல மக்கள் அழிக்கப்பட்ட பின்னணியை பாடலாக்கி *கொற்றவை* விழாவில் குலமகன் ஒருவன் நடத்தும் கூத்தின் பின்புலமாக பதிவிட்ட வரிகள் மேற்கண்டவை!

10. போர் தெய்வம் *கொற்றவையாக* வணங்கப்பட்டது பழந்தமிழர் வாழ்வில்!

11. மூவேந்தர்கள் அழித்த குலங்களின் எண்ணிக்கை16.

12. *வலியையும் வேதனைகளையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒரு விதமான கலை தான்*.

13. பாண்டிய பேரரசின் 10 பெரிய அடையாளங்கள்.
மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, முரசு, கொடி, ஆணை.

14. எட்டு வகையான இன்பங்கள் இருப்பதாக ஓரிடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார் அவை
ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம்.

15. *ஆசையின் வழியே பயணப்பட கூடாது*. *அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும்*! இயற்கை ஆசைக்கான பொருளன்று!

16. ஆபத்து வரும்போது அதனை எதிர்கொள்ளும் இடத்தில் ஒருவன் இருப்பதுதான், வீரம் அவனுக்கு வழங்கும் வாய்ப்பு! அதனை வெற்றியாக முடிக்கவே ஒவ்வொருவனும் ஆசைப்படுகிறான்.

17. போர் ஒன்று நடக்கும் சமயத்தில் பாரி இயற்கையாக கிடைக்கும் முட்களை கொண்டும், விஷம் மிகுந்த பாம்பையும் கொண்டு ஆயுதம் தயாரிக்கும் ஒரு நிகழ்வு மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது.
பாரி ஒரு மிகச்சிறந்த மேனேஜ்மென்ட் குரு என கூறும் அளவிற்கான செயல்களை அந்நேரத்தில் செய்வான்.

*முள் ஒடித்து வருவதற்குள் கொம்பேறிமூக்கன் பாம்பை பிடித்து வா என்று ஆணை பிறப்பின் மூலம் இரு குழுவினரையும் துரிதப்படுத்தும் செயல் நிர்வாக பாடமாகும்*
நூலை படிக்கும் போது இந்த நிகழ்வுகள் மிகுந்த விறுவிறுப்புடன் சுவையுடன் அமைக்கப் பெற்றிருக்கும்.

18. *பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும்*. *பகை மட்டுமே மூட்டியவனால் கூட அணைக்க முடியாத பெருநெருப்பு*.

19. வலிமையை விட நுட்பமே ஆற்றல் வாய்ந்தது என்பதை காலம் மீண்டும் மீண்டும் சொல்லித்தருகிறது இன்றளவும்!

20. உயிரினங்களில் அதிக நினைவாற்றலுடன் இருப்பது யானை

21. *விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது*. 
மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அறிவுரையாக நான் இதை கருதுகிறேன்.

22. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது.

23. *இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்*.

24. *வளைய மறுக்கும் கிளை ஒடிந்து விடும்*. *வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தளைப்பதுதான்  இயற்கையின் அமைப்பு*!

25. தேவாங்கு எனும் விலங்கு வேளிர் பழங்குடியினரின் தெய்வ வாக்கு விலங்கு! கொற்றவையின் குழந்தையாக கருதப்படும் முக்கியமான உயிரினம்.

26. இந்த தேவாங்கு எனும் விலங்கு நான்கு திசைகளிலும் மெல்ல நடக்கும். ஆனால் உட்காரும்போது வடதிசை நோக்கி மட்டுமே உட்காரும் என்பது இதன் சிறப்பு. 

27. *வீரமும் வலிமையும் சிந்தனையில் தான் உள்ளது*.

28. யானை தாக்குதலில் 14 வகை இருக்கிறதாம். போரில் இவை பயன்படுத்தப்படுகிறது.

29. போரில் 20 வகை வாள்கள், எட்டு வகை வேல்கள், மூன்று வகை குறுவாள், மூன்று வகைத் தண்டங்கள், மூன்றுவகை கேடயங்கள் சங்ககாலத்தில் உபயோகப்படுத்தப்பட்டன.

30. *புதிய ஒன்று கிடைக்கிறது என்ற மகிழ்வு ஆற்றலை பல மடங்கு பெருக்கும்*.

31. குதிரைகளின் குளம்புகள் லாடம் கட்டுவது என்பது தொன்றுதொட்டு இருந்து வருவது. ஆனால் பாரி தன் காடுகளில் வளர்க்கும் குதிரைகளுக்கு அதன் குழம்புகளில் செம்பு களிமண் பூச்சு பூசி உபயோகப்படுத்தினார். இதனால் குதிரைகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் அதேசமயம் குளம்புகளுக்கு மிகுந்த ஆற்றலையும் அளிக்க வல்லது இந்த பூச்சு!

32. பறம்பு மலையின் தனித்துவமான ஆயுதம் மூவிலைவேல்.

33. போரில் ஈடுபடும் ஆண் குதிரை சிறுநீர் வரும்போது அதை கழிக்க உடனே நின்று விடும்! இது போர்க்களத்திலும் கூட நடக்குமாம். 

34. பாரி பெண் குதிரைகளை அதிகம் போரில் உபயோகிப்பார்.

35. *வீசிச் சென்ற வாள் காற்றில் தனது தடத்தை விட்டுவைப்பதில்லை*! அதேபோலத்தான் வீரனின் நினைவுகள் போர்க்களத்தில் தங்கக்கூடாது.

36. எரிந்து மறைதலும் ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு! இருளை விலக்கத்தான் முடியும், அழிக்க முடியாது.
 ஒளி கண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்!

மிகவும் பிடித்த வரிகளை வரிசைப் படுத்தினேன்.

காடுகளின் ரகசியங்களை அடுத்த பதிவில் அறிய முற்படுவோம்.

அன்புடன்
நாகா
24.07.2020

Facebook: Nagachandran

கலீல் ஜிப்ரான்

கண் ஒரு சாதாரண உறுப்பு ஆனால் பார்வையோ
ஒரு மிகப்பெரிய கலை

-கலீல் ஜிப்ரான்

வைதீஸ்வரன்

எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிர்ப்பலி கேட்குதா….விரல்?

மீறிக் கடித்தாலும்
சாவு உனக்கிலையெனத் தெரிந்தும்
ஊறும் எறும்பை
நசுக்குவதேன் சகிக்காமல்?

சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கும் மனத்தைக்
குற்றமில்லை என்கிறதா?

உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தானென்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?

-வைத்தீஸ்வரன்

எஸ் ரா

எத்தனை ஆயிரம் வருடங்கள், எத்தனை கோடி மனிதர்கள் கண்ட காட்சி என்றாலும், இன்றும் அலுக்காத அதிசயம் சூரியோதயம்!

எஸ்.ரா

தேவதேவன்

காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென
உணர்ந்தார், துயர்குழப்பமிக்க
இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப் 
பின்,கடவுள்"

-தேவதேவன்

ரவி உதயன்

கூண்டுக்கிளிகள்
உங்களிடம்
என்ன பேசிவிடப் போகிறது?
திறந்துவிடுங்கள்
என்பதைத் தவிர்த்து!

-ரவி உதயன்

சிக்மண்ட் ஃபிராய்டு

மனிதன் அவன் நினைப்பதைக் காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன். ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங்கெட்டவன்

-சிக்மண்ட் ஃப்ராய்டு

எஸ் ரா

எந்த மரமும் எவ்வளவு கடுமைான தண்ணீர் பஞ்சத்திலும் தன் இருப்பிடம் விட்டு வேறு ஊர்களுக்கு ஓடிப்போவது இல்லை. தனது வேதனைகளைச் சொல்லிச் சொல்லிப் புலம்புவதில்லை. எல்லா மரங்களும் வாழ்வின் கடினத்தை மௌனமாக எதிர்கொண்டு ஜெயிக்கின்றன. உதிர்ப்பதையும் துளிர்ப்பதையும் ஒன்று போலவே கருதுகின்றன. உயர் தத்துவங்கள் சொல்வதும் இதைத்தானே?

எஸ்.ரா

அ.வெண்ணிலா

துண்டொன்றைக்
கட்டிக்கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்

குழந்தையாக முடியாமல்
தவித்துக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்

-அ.வெண்ணிலா

படித்தது

விழிகளை விட்டு அகன்றால் மனத்தை விட்டு அகன்றுவிடுவோம்.

-படித்தது

சாவி

இந்த நாட்டில் யார் அதிகமாகக் கடன் வாங்கிறார்களோ,
அவர்களுக்குத் தான் மதிப்பு அதிகம்

-சாவி

யுகபாரதி

அதென்ன
அஞ்சலிக் கூட்டம்
ஓங்கிக் குரலெடுத்து
ஒருவர்கூட அழாமல்?

-யுகபாரதி

சதீஸ்பிரபு

அன்பை வெளிக்காட்டத் தெரியாதவர்கள் செல்கிறார்கள்
'கிஃப்ட் சென்டருக்கு"

-சதீஸ்பிரபு

யுகபாரதி

கையேந்தி பவனிலிருந்து
காஸ்ட்லி உணவகம்வரை
நல்லதைத் தீர்மானிப்பது
நாக்குதான்
வாக்கு மாறினாலும்
நாக்கு மாறுவதில்லை
நாக்கை வைத்துத்தான்
நடக்கின்றன
உணவகமும் அரசியலும்

-யுகபாரதி

எஸ் ரா

நாம் எதையெல்லாம் முக்கியம் எனத் தெரியாமல் தூக்கி எறிகிறோமோ, அதையெல்லாம் பின்னாளில் அடைவதற்குப் பெரிய விலை கொடுத்து வருகிறோம் என்பதையே காலம் திரும்பத்திரும்ப நிரூபித்து வருகிறது!

எஸ்.ரா

கதே

அதிகம் உற்று நோக்க வேண்டும்.கொஞ்சமாவது துன்பப்பட வேண்டும். ஏராளமாக வாசிக்க வேண்டும்

-கதே

லா.ச.ரா

மெளனம்.இது பெரும் அழகு. இதன் அழகு கலையாமல் பேணுக.சிந்தனையின் ஓட்டத்தில் தானே படரும் மோனத்துடன் தானே இழையும் தியானத்தின் அடையாளம் கண்டுகொள்ள முடியும். கண்டுகொள்ள பழகிக்கொள்

-லா.ச.ரா

எஸ் ரா

வேகத்திலும் பரபரப்பிலும் நாம் கை தவறவிட்டது நமது சரித்திர பிரக்ஞையை மட்டுமில்லை இயல்பான அன்பையும், அக்கறைகளையும்தான்.

எஸ்.ரா

அ.முத்துலிங்கம்

அவளிடம் எனக்குப் பிடித்தது சிரிப்புதான்.சிரிப்பு என்றால் அது வெளியே வராத சிரிப்பு. எந்நேரமும் சிரிப்பின் தொடக்கம் அவள் உதடுகளில் இருந்து கொண்டே இருக்கும்

-அ.முத்துலிங்கம்

எஸ் ரா

பௌர்ணமி இரவுதானே என்று பின்னிரவில் கடற்கரைக்குப் போய் உலவ முடியாது. வானவில் தெரிகிறதே என்று பெயர் தெரியாத ரயில் நிலையத்தில் இறங்கி நடமாட முடியாது. கோயில்தானே என்று பிரகாரங்களில் படுத்து உறங்க முடியாது. சந்தேகத்தின் நிழல் விழாத இடங்கள் இன்று இந்தியாவில் எங்கும் இல்லை.

எஸ்.ரா

லா.ச.ரா

கேட்காத புத்திமதியை நீயே வழங்காதே.உன்னை நீயே மலிவுபடுத்திக் கொள்ளாதே

-லா.ச.ரா

பழனி பாரதி

கவிஞர் பழனிபாரதி பிறந்தநாள் பகிர்வு
*மணி

*தேடல் இன்பம்...,
தேடுவது துன்பம்..!
# பழனிபாரதி

*முதுமையும் ஒரு குழந்தைதான், தாலாட்ட வேண்டாம்., தள்ளாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
-பழனிபாரதி

*விலைக்கு வாங்கி வந்த கிளி, தமிழ் மொழியை பேசுவது இனிமையாக இருந்தாலும் வருத்தம் தான் தாய்மொழியை மறந்தது...
#பழனிபாரதி

*ஆள் நடமாட்டம் இல்லா இடத்தில்
என்னோடு நீ,
உன்னோடு நான்,
நம்மோடு இளையராஜா
-பழனிபாரதி

*வண்ணத்துப் பூச்சியை விடவும் அழகாய் பறக்கிறது அதன் நிழல்
-பழனிபாரதி

*ஊளையும் குரைப்பும் 
கேட்கின்றன...
உறுமலும் பிளிறலும் 
காணவில்லை
எச்சில் தின்று பழகிவிட்டோம்
கரைதல் போதும் நமக்கெல்லாம்
- பழனிபாரதி

*பூஜையறை

ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்

டப்பர்வேர் டப்பாவிலிருந்து ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்

ஒலிநாடா ஒப்புவிக்கும்
கந்தர் சஷ்டிக் கவசம்

கடவுள் ஏன் கல்லானான்
கேட்டான் கண்ணதாசன் 
கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

-பழனிபாரதி

*போகிறாய் என்பதையே
மறக்கடித்து விடுகிறது
நீ திரும்பிப் போகிற அழகு
-பழனிபாரதி

*குழந்தைபோல் வளரும்
இந்த இரவுக்கு
ஒரு பெயர் சூட்ட நினைத்து
அதன் காதில்
மூன்றுமுறை சொல்கிறேன்
உன் பெயரை

-பழனிபாரதி

*இருள் என்ன செய்துவிடும்
உடலே விளக்காய் எரியும்  
இந்த மின்மினிகளை...

- பழனிபாரதி

*நாற்காலிகளெல்லாம்
பாடைகளாக
கூட்டணி சேர்கின்றன 
ஊர்வலம் போக
- பழனிபாரதி

*உருகிய தார்ச்சாலையில்
பதிந்து கிடக்கிறது
தலைச்சுமையை தாங்கமுடியாமல்
நடந்த யாரோ ஒருத்தியின் பாதச்சுவடு
-பழனிபாரதி

*குடத்திற்கும் குழந்தைக்கும்
வித்தியாசம் தெரியாமல் சுமக்கிறார்கள்
அம்மாக்கள்
-பழனிபாரதி

*இளைப்பாற வருகிறவர்களின் நிழலில்
இளைப்பாற முடியாமல்
தவிக்கிறது நிழல்
-பழனிபாரதி

தோழமையுடன் மணிகண்டபிரபு

13/07/2020

மார்டின் லூதர் கிங்

'எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என்னுடைய நான்கு குழந்தைகளும் அவர்களுடைய தோலின் நிறத்தால் மதிப்பிடப்படாமல்,அவர்கள் குணநலன்களால் மதிப்பீடு செய்யப்படும் நாட்டில் ஒருநாள் வாழ்வார்கள்'

-மார்ட்டின் லூதர் கிங்

எஸ்.ரா

நாம் தேடுவது யாவும் விந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம் என்றே புரியவில்லை.

எஸ்.ரா

பரமேஸ்வரி

“காலையில் எழுகையிலே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையை
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கும்
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து

டிவி காம்பியருக்கு
பாவமாய் பதில் சொல்வாள் 
"ஹவுஸ் வொய்ப்தான்"

-பரமேஸ்வரி

எஸ்.ரா

வாழ்வின் சரடுகள் எங்கெங்கோ புதைந்து கிடக்கின்றன. நாம் காண்பது அதன் வெளித்தோற்றத்தைத்தான்.

எஸ்.ரா

மீரா

நாளை பெருநாள்..
அறிந்தோ என்னவோ
தங்களுக்காக
அனுதாப ஊர்வலம்
போகும் ஆடுகள்
முன்னதாக ஒருநாள்.

-மீரா

ஷேக்ஸ்பியர்

எந்த மனிதன் தனது ரகசிய ஆசைக்காகத் தன்னை பலிகொடுக்க நினைக்கிறானோ அவன் வீழ்ச்சி அடைந்தே தீருவான்.

-ஷேக்ஸ்பியர்
(மேக்பெத்)

எஸ்.ரா

கற்றுக்கொள்வதற்கு ஆசானை விடவும் மனம் தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது

-எஸ்.ரா

வண்ணதாசன்

எல்லோரையும் ஏற்றுக் 
கொள்கிறேன்.அவரவர் 
பலங்களோடும் அவரவர் 
பலவீனங்களோடும்

-வண்ணதாசன்

கு.சிவராமன்

ப.சதீஷ் பிரபு

மு.மேத்தா

என்னுடைய சம்பள நாளில்
எண்ணி வாங்குகிற
பளபளக்கும் நோட்டுகளில்
எவரெவர் முகமோ
தெரியும்-
என் முகத்தைத்
தவிர!

-மு.மேத்தா

சு.வெங்குட்டவன்

இழவு வீட்டில்
எதேச்சையாக சந்தித்துக் கொண்ட
நம் கண்களில் ஊற்றெடுத்த துயரம்
செத்துப் போனவருக்கானதல்ல

-சு.வெங்குட்டுவன்

ப.பி

நிஜங்கள் பொய்த்துப் போகும்போது கனவுகள் தற்கொலை செய்து கொள்கின்றன

-படித்தது

ச.மாடசாமி

ஒளிவு மறைவற்றுப் பேசுபவர்களைக் காணுதல் அபூர்வம்.ஒளிவு மறைவற்ற பேச்சுகளைத் தாங்குகிற இதயம் அதைவிட அபூர்வம்

-ச.மாடசாமி

எஸ் ரா

ஒவ்வொரு நகரமும் மற்றவர்களுக்குத் தான் மிக அழகாக இருக்கிறது. அங்கேயே வாழ்பவர்களுக்கு அது ஒரு வாழ்விடம்.

எஸ்.ரா

புதுமைப்பித்தன்

கொள்கை என்பது தூரத்தில் தூக்கிப்பிடித்த தீப்பந்தம் போல் எட்ட இருப்பதாலேயே வெளிச்சம் விழுகிறது.அது எட்ட இருப்பது அவசியம்

-புதுமைப்பித்தன்

எஸ்.ரா

உப்பு சூரியனுக்கும் கடலுக்கும் பிறந்த குழந்தை.

உப்பு சில நேரம் அன்பின் வெளிப்பாடு. சில நேரம் பிறர் காணாமல் துடைக்கும் கண்ணீரின் சுவை.

எஸ்.ரா

லோரிஸ்

குழந்தைகள் பேச நூறு மொழிகள் இருக்கின்றன. குழந்தைகள் கண்டுபிடிக்க நூறு உலகங்கள் இருக்கின்றன.99 மொழிகளை தடைசெய்துவிட்டு ஒரு மொழியை மட்டும் கேட்க வைப்பதும், 99 உலகங்களை மறைத்துவிட்டு ஓருலகை காட்டுவதும் வருத்தத்திற்குரியது

-லோரிஸ்

புதுமைப்பித்தன்

முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக்கேட்டு, வழக்கம்போல் இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக  அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலைபார்க்கும் ஸ்தாபனத்தின் வன்முறை

-முன்பணம் கேட்கும் தொழிலாளி குறித்து

#புதுமைப்பித்தன்

ராஜன்

மனித மனம் மிக மிகக் கோழையானது. அதன் முனகலை மறுதலிப்பதில் இருக்கிறது மூளையின் வலு."

-ராஜன்

ஈரோடு கதிர்

ரொம்ப பிசியா இருக்கிற ஆஸ்பத்திரில ஒருபொழுது இருந்துபார்த்தா தெரியும், உடல் ஆரோக்கியத்தோட வாழறது எத்தனை பெரிய வரம்னு!"

-ஈரோடு கதிர்

க.சீ.சிவக்குமார்

நிழல்களுக்கு வேறு போக்கிடமில்லை,
வெய்யிலைத்தவிர

-க.சீ.சிவகுமார்

மிர்தாத்

மேலே ஏறுகிற அளவிற்கு இறங்கி வாருங்கள். இல்லாவிடில் சமநிலையை இழக்க நேரிடும்.

-மிர்தாத்

05/07/2020

புத்தர்

இங்கே எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி நியாயங்கள் கற்பிக்கப்படும் . ஆனால் தர்மம் ஒன்று தான்.

- புத்தர்

எஸ் ரா

ஒவ்வொரு எழுத்தாளனும் நன்றி தெரிவிக்கவேண்டிய விருட்சம் பனைமரம்.

பனை ஓலையைச் சீவிப் பதப்படுத்தி, எழுத்தாணியால் கீறி எழுதுவது எளிமையானதல்ல. அதற்கு தேர்ந்த பயிற்சியும் வலுவும் தேவை. ஒரு பனை நறுக்கில் அதிகபட்சம் ஆறேழு வரிகள் எழுதலாம். எழுத்தாணி பிடித்துப் பிடித்து விரல் ரேகை அழிந்துவிடும். எனில், சிலப்பதிகாரமும் கம்பராமயாணமும் எழுதிய கைகள் எவ்வளவு தேய்மானம் அடைந்திருக்கும்!

எஸ்.ரா

அலைஸ் வாக்கர்

”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”

– அலைஸ் வாக்கர் –ஆப்ரோ - அமெரிக்க எழுத்தாளர்

பழ.புகழேந்தி

கேள்வித்தாளின் பின்புறம்
வரையப்பட்ட ஓவியத்தில்
பூர்த்தியாகி இருந்தது
அவன்
தேர்வு முடித்த
மிச்ச நேரம்

-பழ.புகழேந்தி

ஆ.இரா.வேங்கடாஜலபதி

கள்,காமம்,காதல் இவற்றைவிடவும் போதை தருவது கருத்து. கருத்துக்கள் தரும் போதை அலாதியானது; முடிவற்றது.

-ஆ.இரா.வேங்கடாசலபதி

வண்ணதாசன்

தோன்றியதெல்லாம் நிகழ்ந்தால்தான் வாழ்க்கையின் மீது மரியாதை போய் விடுமே.

-வண்ணதாசன்

ஈரோடு கதிர்

ஆறுதல் மொழியென்பது அழகியதோர் பொய்!

- ஈரோடு கதிர்

கல்யாண்ஜி

முக்கால்வாசிப் பேர்
ஞாபகமாய்
மூடியை கழற்றிய
பேனாவைக் கொடுத்துதான்
கையெழுத்துக் கேட்கிறார்கள்
கவிதைப் புத்தகத்தில்.
இதற்குக் கூட
நம்பாது போன
இவர்களை நம்பியே
இத்தனை வரிகளும்

-கல்யாண்ஜி

ப.பி

ஒருவன் மனதில் முதன்முதலில் சுயநலம் பிறப்பது எப்போது?

"முதல் லாபம் கிடைக்கும்போது"

-படித்தது

கார்த்திக்

1.  ego satisfaction 

தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள், நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தகத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். 
ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் அவள் கண்ணுக்குப் பிடித்த பெண் அவ்வளவுதான். கண்ணுக்குப்பிடித்த பெண்ணை மனதுக்கு பிடிக்கவைக்கும் முயற்சிகளையும் காதல் என்பான்.  கண்ணுக்குப்பிடித்த பெண்ணை பின்தொடர்ந்து அவளை கவரும் முயற்சிகளின் ஆபத்து என்னவென்றால்,  எப்படியாவது அவளுக்கு பிடித்தமானவனாக ஆகிவிடவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு நிலையில் உருமாறி அவளுக்கு என்னை  பிடிக்காமல் போகவே கூடாது என்று ஆணின் உள்ளுக்குள் ஒரு அகங்காரமாக(ego ) மாறும். 
இது மேலும் தீவிரமடைந்து தன்னுடைய ego satisfactionற்காக அளப்பரிய அன்பையே தரும் நிலைக்கு போகும், அவள் இதுவரைக்கும் கண்டிராத அன்பு. உயிரை கூட பணயம் வைக்கும். இதையெல்லாம் பார்த்து என்னவொரு ஆத்மார்த்த காதலென்று அப்பெண் அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டதும் அவன் இயல்புக்குத் திரும்பிடுகிறான். அவளைப்பொறுத்தவரை அவன் வேறு ஒரு ஆணாக மாறிவிடுகிறான். 

தன்னை விரட்டி விரட்டி காதலித்தவன், தனக்கு பிடித்தமானவை எல்லாம் தெரிந்து வைத்து நிறைவேற்றியவன் இவன் இல்லையே என்று பெண் குழம்புகிறாள். காதலை ஒரு இலக்காக நிர்ணயித்து பெண்ணிடமிருந்து அதனை அடைந்ததும் அதற்கு பின் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனே யோசிக்கிறான் நான் அன்பாகத்தானே இருந்தேன், இப்போது இவள்மீது ஏன் நாட்டமின்றி போகிறது? 
அவன் செலுத்திய அன்பு அவனுடைய  ego satisfactionனுடைய விளைவுதானே தவிர தாமாக விளைந்த உணர்வெழுச்சியின் வெளிப்பாடல்ல. (ego satisfaction love இதைத்தான் காரணமே இல்லாத அன்பு என்று புரிந்து கொண்டிருக்கின்றிர்கள்.) இவ்வுண்மையை அவன்தன் வாழ்நாள் முழுக்கவே உணர்ந்துகொள்ள முடியாது. அவன் ego அதற்கு விடாது. தன்னைக் குற்றம் சொல்லக்கூடிய எந்தவொன்றையும் அது உள்ளிருந்து எதிர்த்துக்கொண்டே இருக்கும். 

பெண்ணின் ego satisfaction வேறு மாதிரி, காதலிக்கப்படுதலை விரும்புபவள் அவள். ஆணின் முக அசைவுகள் வைத்தே அவன் மனதை வாசித்திடும் திறன் அவளுக்கு உண்டு. அம்மாக்கள் பிள்ளைகளின் முகம்பார்த்து நிலை அறிந்து கொள்வது போல அப்பாக்கள் செய்வதில்லை. எதுக்கு அண்ணா டல்லா இருக்கற? என்று தங்கைகள் கண்டுகொள்வது போல தம்பிகளால் முடிவதில்லை. இப்படியிருக்க, பெண்ணோடு பழகும் ஒருவன் அவளைக் காதலிக்கிறான் என்றால் அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? நிச்சயம் கண்டுபிடித்து விடுவாள். ஆனால் வெளிச்சொல்ல மாட்டாள். ரசிப்பாள். காதல் சொல்லத் தூண்டுவாள். அவனே வந்து காதலைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். அவளுக்கு காதலிக்கப்பட மட்டுமே வேண்டும், ஆணை கவர்கின்ற பெண்ணாக இருக்கிறேன் என்று அவளுக்கு அவளே அவளை நிரூபித்தாக வேண்டும். ego satisfaction.
தன்னை விட புத்திசாலி என்று அவள் நினைக்கின்ற ஆணோடு விரும்பிப் போய் பேசுவாள். அவர்களோடு மிக எளிதில் நட்பாகிவிடுவாள். அவனுக்குள் இருக்கும் மிகச் சாதாரண ஆண் பிம்பத்தை கண்டுகொள்வாள். வெற்றிபெற்றதாகச் சிரித்துக் கொள்வாள். ego satisfaction.

2. love 

இத்தனை சிக்கலான ஆண், இத்தனை சிக்கலான பெண் காதல் கொள்வது அதைவிடச் சிக்கல். 

காதலை ஏதாவது ஒரு வகையில் எக்ஸ்பிரஸ் செய்துகொண்டே இருப்பார்கள். இங்கு அடிக்கொருமுறை காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காதலை உணர்த்த முடியவில்லை என்றேதான் அர்த்தம். உணர்த்த முடியவில்லை என்றால் காதலும் இல்லை. அங்கிருப்பதெல்லாம் எனக்கொரு தேவை இருக்கிறது அதற்காக நீ வேண்டும். நான் உன்னை முன்பதிவு செய்து வைக்கிறேன் என்னும் ஒப்பந்தம் மட்டுமே. இங்கு தேவை என்பது வெறும் உடல்ரீதியான பார்வை மட்டுமல்ல- என்னோடு பேச, பழக, நேரம்போக்க, என்வெளியில் நான் அறிமுகம் செய்து மகிழ எனக்கொரு எதிர்பாலின இணைவேண்டும் என்பதும் சேர்த்தி. இதுதான் இவர்கள் காதலென்று நினைத்திருக்கும் ஒன்றின் சிக்கல். 

எந்தளவிற்கு உருகி உருகி ஒரு காதல் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறதோ அதேயளவு அதில் போலித்தனமும் சேர்ந்திருக்கும். 
நான் உனக்காகவே வாழ்கிறேன் உனக்காகவே சாகிறேன், -என்றால் நீயும் எனக்காகவே வாழ்/சாவு 
உன்னைத்தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க மாட்டேன் -என்றால் நீயும் பார்க்கக்கூடாது. 
ஒவ்வொரு காதல் வெளிப்பாட்டிலும் இப்படி மறைமுக கட்டளை ஒளிந்திருக்கும். 
மறைமுக கட்டளைகளுக்குள் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் என்பதே பெண்ணுக்கு மிகத் தாமதமாகத்தான் தெரியவரும். 

இந்த உறவில் எங்கு இடறினோம் என்ன பிரச்சினை என்று அவள் உணரும் போது, உன்னை விரும்புகிறேன் விரும்புகிறேன் என்று சொல்லிச் சொல்லியே அவளுக்கான அழகிய கூண்டை ஆண் வடிவமைத்து முடித்திருப்பான்.

பெண்ணை,பெண்ணின் உடலை உரிமை கொண்டாட ஆசைப்படும் மனச் சிறையிலிருந்து விடுபடத் தெரியாமல்  அவளையே கூண்டில் வைத்து விடுகிறான். 
அவள் விடுவிக்கச் சொல்லிக் கோரும் போது, நான் உன் மீது செலுத்தும் அன்பை நீ உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாய் என்று அவளையே சாடவும் செய்வான்.  இதற்கு பெயர் அன்பல்ல டார்ச்சர் என்று அவளுக்கு தொண்டை கிழிய கத்த வேண்டும் போலிருக்கும். 

அன்பை வழங்கும் போது அதனை சாதகமாகப் பயன்படுத்தும் உரிமையும் சேர்த்தேதான் கொடுக்கப்படுகிறது. சாதக உரிமைக்கு அனுமதி இல்லையென்றால் நீங்கள் செலுத்துவது அன்பல்ல, ஆளுமை!
கிட்டத்தட்ட உனக்கு சுதந்திரம் தருகிறேன் அதனை நீ மிஸ்யூஸ் செய்யக்கூடாது என்பதைப்போல. - சுதந்திரம் என்பதே மிஸ்யூஸ் செய்யத்தான். அதில் சந்தேகமில்லை. அவளுக்கு சுதந்திரம் கொடுக்க நீ யார் என்பது தான் முதல் கேள்வி. இதற்கு விடை தேடினாலே விடியல் கிடைத்திடும். 

நிஜமாய் காதல் என்பது தன்முனைப்புகள் ஏதுமின்றி நிகழ்தல்,
நாம் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியில் மகிழ்தல்,
அம்மகிழ்ச்சிக்கு நான் மட்டுமே காரணமாக இருந்திடவேண்டும் என்னும் சுயநலத்திலிருந்து விலகுதல்,
அவர்கள் மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்கின்றார்களோ அவையனைத்தையும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளல், 
அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லையா? வேறு ஒருவரை பிடித்திருக்கிறதா? அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியா? 
ஆம் எனில் 
இவ்வளவு நாள் நீ உடனிருந்தது பொய்யா? உன் காதல் போலியா? உன் அன்பு நடிப்பா? நான் எந்த வகையில் குறைந்துபோய்விட்டேன்? என்ற கேள்விகளுக்கு இடம்தராமல், அவர்கள் மகிழ்ச்சியை அவர்கள் தேடிக்கொள்வதற்கு இடையூறாக இல்லாதிருத்தல்.

இவ்வளவு நாள் நீ உடனிருந்தது நிஜம்! 
உன் காதல் நிஜம்!
உன் அன்பு நிஜம்!
இப்போது நீ இல்லாதிருப்பதும் நிஜம்!
நிஜங்களை நிபந்தனையின்றி
ஏற்றுக்கொள்ளப் பழகுதல் காதல்.

-கார்த்திக்