நண்பர்கள் என்றாலும்
சில விளையாட்டுகளை
எதிர் எதிர் இருந்து ஆட வேண்டியதாய்
சூழல் வாய்த்து விடுகின்றது..
சிரித்துக் கொண்டே காய்களை நகர்த்துகிறோம்,
சேனைகளைப் பறிகொடுத்த போதும்
சிரிப்பு ஒட்டிக் கொண்டு தான் இருந்தது..
எந்த நகர்த்தலின் போது
நம்மிடையே வன்மம் சூல் கொண்டது
என்பதை இருவருமே உணரவில்லை..
உன் கடைசி நகர்த்தலில்
என்னிடமிருந்த பாதுகாப்புக்கவசம்
உடைபட்டது..
தாளவியலா அவமானத்தில்
நான் நகர்த்திய காய்
உன் ராஜாவைக் குறி வைத்து விட
யோசிக்க அவகாசமில்லாதொரு நொடியில்
மறைக்கப்பட்ட உன் குறுங்கத்தியை
என் குரல்வளைக்கு நகர்த்தியிருந்தாய்
இப்போதும் ஒரு கோடு போன்ற
குறுஞ்சிரிப்பு மீதமிருக்கிறது என்னிடம்..
நறுமுகைதேவி..