28/04/2019

ஜெயமோகன்

கேளாக்குரலைக் கேட்போம்
கட்டுரையிலிருந்து...

மக்களுக்கு பிடித்தானவை வளர வேண்டுமென்றால் இங்கே சினிமாவும் சாப்பாடும் அன்றி வேறெந்த விஷயமும் பேசப்பட முடியாது.சிலசமயம், மக்களுக்கு தேவையானவை அதே மக்களால் வெறுக்கப்படுவதாகவும் இருக்கக்கூடும்.ஜனநாயகத்தில் அவற்றை பேசுபவர்களை முக்கியமானவர்களாக கருத வேண்டும்.

   எப்போதுமே வெல்லும் தரப்பில் அல்ல,தோற்கும் தரப்பில் தான் அதிகமான நியாயங்கள் இருக்கும் என்பதை கருத்தில் கொள்வோம்.நாளைக்குரிய  விஷயங்கள், மிக்குறைவானவர்களாலயே பேசப்படும்.நாம் சற்றேனும் சிந்திப்பவர்கள் என்றால், பெரும்பான்மையினர் பேசுவதை அல்ல,குறைவானவர்களால் கவனிக்கப்பட்டதையே நாம் எடுத்துப் பேசுவோம்

-ஜெயமோகன்

மனுஷ்யபுத்திரன்

துடைத்துக்கொள்
கசந்த உன் கண்ணீரை
இனிநாம் அடையப்போகும் துயரங்களிலேயே
இதுதான் சின்னஞ்சிறு துயரமென ஆகிவிடலாம்

-மனுஷ்யபுத்திரன்

புக்கர் டி.வாஷிங்டன்

வாதாட பலருக்கு தெரியும்

உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.

-புக்கர் டி.வாஷிங்டன்

செருப்பு

செருப்பு

குழந்தைகள்
செருப்பு தொலையுமேயன்றி
திருடு போவதில்லை.

முன்னும் பின்னுமாய் பயணித்தாலும்
இதுவும் இணை தான்.

வீட்டின் விசேசத்தின் அடையாளமாய் வாசலில் கூடியும்
கலவரம் ஓய்ந்த
இடத்தில் கலைந்தும்
பகிர்ந்து கொள்கின்றன நம் உணர்வை.

இறுதி வரை சுமந்த செருப்பை சுமக்கும் பயணம் வாய்க்கிறது மனிதனுக்கு
இறுதி ஊர்வலத்தில் ...

ஈரோடு கதிர்

துரோகங்களில் தோற்பது மனிதர்கள் அல்ல. மனிதர்களை நம்பிய நம்பிக்கைதான்!

-ஈரோடு கதிர்

வெற்றி

ஆகச்சிறந்த
துயரம் என்பது
புறக்கணிப்பிற்கான
காரணத்தை
தேடி அலையும்
மனதின் துயரமே...
_வெற்றி.

27/04/2019

ஜெயமோகன்

அம்மா சாப்பிட்டாளா இல்லையா என எவருமே கவனித்ததில்லை. நிலத்தின் மீது நிற்கும் எவரும் நிலத்தை கவனிப்பதில்லை என்பதுபோல.

-ஜெயமோகன்

ராஜா சந்திரசேகர்

வரிசையில்
காத்திருக்கிறேன்
வரிசையும்
காத்திருக்கிறது
-ராஜா சந்திரசேகர்

ராஜா சந்திரசேகர்

அலைகளோடு

கடலருகே அமர்ந்து
எழுதிக்கொண்டிருந்தேன்
ஒரு கதாபாத்திரம்
ஓடிப்போய்
அலைகளோடு
விளையாடி விட்டு
கதைக்குத் திரும்பி விட்டது

- ராஜா சந்திரசேகர்

அரசு

வீட்டுச் சாப்பாடு தரும் நிம்மதிக்கு சற்றும் குறைவில்லாதது, வீட்டு தூக்கம் தரும் நிம்மதி ."

-அரசு

பிரபஞ்சன்

விடுமுறை காலங்களில் மட்டும் குழந்தைகள் ஆரோக்யமாக வளர்கிறார்கள்
-பிரபஞ்சன்

கலீல் ஜிப்ரான்

கனவுகள் கூடிவரும்போது
விழிப்பு அதனை
கலைத்துப் போடுகிறது

-கலீல் ஜிப்ரான்

லதா

உதிர்த்த வார்த்தைகளுக்காக வருத்தப் பட்டிருக்கிறேன்..ஆனால்,கடைப்பிடித்த மௌனத்தை நினைத்து என்றும் வருந்தியதில்லை..

-லதா

ஷேக்ஸ்பியர்

உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஊராருக்கு சொல்வதென்பது இதயத்தை எடுத்து காக்கைகளுக்கு காட்டுவது போல!

- ஷேக்ஸ்பியர்

அரவிந்தன்

ஊர் திரும்பும்
ஒவ்வொரு முறையும்
ஒரு புனைக்குட்டியோ
நாய்க்குட்டியோ
புதிதாய் இருக்கிறது வீட்டில்
பாவம் தனிமையில்
என்ன செய்வாள்
வளர்த்து பழக்கப்பட்ட அம்மா

அரவிந்தன்.

ராதாமோகன்

குழந்தைகளுக்கு வாழ்க்கைல நாம நிறைய சொல்லி தர்றோம்..
ஆனா குழந்தைங்க தான் நமக்கு வாழ்க்கையை சொல்லித் தர்றாங்க..

-ராதாமோகன்

கலீல் ஜிப்ரான்

கடந்து போனது பற்றி
கவலைப்படாதே
அதில் நன்மை இருந்திருந்தால்
நீடித்திருக்கும்
-கலீல் ஜிப்ரான்

24/04/2019

வெற்றி

கடவுள்களின் மீது ப்ரியங்கள் அதிகமாக
இருப்பது இல்லை...
எப்பவாவது
ப்ரியங்கள்
வரும்போது
அனிச்சையாக
உனக்கும்
சேர்த்து
வேண்டிவிடுகிறேன்..
_வெற்றி.

23/04/2019

சல்மா

விலகிப்போகும் வாழ்க்கை
*******
இன்றும்
ஒருவரை
என்னை விட்டு
வழியனுப்ப நேர்கிறது
நேற்றும்
அதற்கு முன்பும் கூட

நீங்கள்
நினைப்பது போல
இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல

ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தைக் கனக்க வைக்கிறது

இப்படியே
நம் நண்பர்களை
நினைவுகளை
சிந்தனைகளை
தினமும்
ஏதேனும் ஒன்றை
வழியனுப்பிக்கொண்டிருப்பதை
நீங்கள் யாரும்
ஆழமாய் அறிவதில்லை
அதனாலேயே
உங்களால்
சிரித்த முகத்துடன் இருக்கவும்
பத்திரிக்கை படிக்கவும் முடிகிறது

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்
இந்த வாசலில்
மிகவும் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்

ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்செண்டுகளாய்
அனுப்பப்படுகின்றன.

- சல்மா

சிற்பி

மனம் ஒரு பாத்திரம்

மனம் ஒரு பாத்திரம்
ஆனால் விசித்திர பாத்திரம்

ஆசைகளை அதில் போட்டால்
அடிப்புறம் கழன்று கொள்ளும்
ஒரு நாளும் நிறையாது

துயரங்களைப் போட்டால்
பாத்திரம் தாங்காமல்
உடைந்து போகும்

காதலைப் போட்டால்
பாத்திரம் சிறகு முளைத்துப்
பறக்கத் தொடங்கும்

பொறாமையைப் போட்டால்
பாத்திரம் ஆத்திரமாகி
மேல் மூடி காணாமல் போகும்

...
அது நிறைவாய் இருக்க...
காலியாய் வைத்திடு

-சிற்பி

வண்ணதாசன்

(செருப்ப மறந்ததுக்குக் கூட எப்படி சாமி இம்புட்டு ஆழ அகலமா உறைய வைக்கிற கவித எழுதுறீங்க )

அணிய மறந்த செருப்புக்காக
ஐந்தாம் தளத்திற்கு யார் மீள்வார்கள்?
கால்களில் ஏது வெற்றுக் கால்கள்?
காலத்தில் உண்டா வெற்றுக் காலம்?
தன்னைத் தழுவி நடக்கும் பாதம்
தரைக்குப் பிடிக்காது எப்படிப் போகும்?
பாதம் புழுதியில் பதியப் பதிய,
மேலே வந்து வேர்கள் தொட்டன.
நீர் மோதிற்று, தீ ஓதிற்று.
நெடிது உறங்கிய தொன்ம விதைகள்
பார் பார் என்று நிலத்தைக் கீறி
பசிய முதலிலை இரண்டையும் விரித்தன.
மண் புழு எல்லாம் துளைத்துச் சாடி
மழை மழை என்று பாடி வந்தன.
புதைக்கப்பட்டவர், அழிக்கப்பட்டவர்,
பூவைப் போலத் தானாய் உதிர்ந்தவர்
எலும்புகள் எல்லாம் தன் வரலாற்றை
எழுந்துவந்து சொல்லத் தொடங்கின.
செப்படி வித்தை போல் நிகழும் இவற்றின்
சிலிர்ப்பை உணர்ந்த செருப்பறு கால்கள்
முப்பது நிமிட நடையை எப்படி
முடிப்பது என்று தெரியா நின்றன.

-வண்ணதாசன்

காந்தி

கடலில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் கடலின் பெருமை உண்டு. ஆயினும் அது தனியாக வாழ ஆரம்பிக்குமானால் அந்த நிமிஷமே அது கடல் என்ற பெயரை இழந்து விடும்.

-காந்தி

வைரமுத்து

நேர்ந்த அனுபவத்தை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும் அல்லது நேராத அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அதுவே நல்ல புத்தகம்
-வைரமுத்து
#WorldBookDay

படித்தது

அந்த
மரண ஊர்வலத்தின்
முன் பகுதியில்
பறையடித்து சென்றவர்களில்
ஒருவன் என்னிடம் தந்தான்
அக்குழுவின் விசிட்டிங் கார்டை
பரிந்துரைக்கச் சொல்கிறானா..
பயன்படுத்தச் சொல்கிறானா..

-படித்தது

21/04/2019

மு.சுயம்புலிங்கம்

ஜோசியக்கிளிகள்
சீட்டு எடுக்க மறுக்கின்றன
பங்களா நாய்கள்
காவல்காக்க மறுக்கின்றன

பட்டினிபோட்டால்
மிருகங்கள்
வேலை செய்ய மறுக்கின்றன

காளைமாடுகள்
வண்டியிழுக்க மறுக்கின்றன

நாம்
பட்டினி கிடக்கிறோம்
பாடுபடுகிறோம்

-மு.சுயம்புலிங்கம்

படித்தது

தனிமையில் யாரை நினைத்து கொண்டு இருக்கிறோமோ அவர்கள் தான் நம் தனிமைக்கு காரணம்"

முகுந்த் நாகராஜன்

அம்மாவின் தோழி
*******
நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில்
எங்கள் அம்மாவின் பழைய தோழி விசாரித்து
வந்தாள் அம்மாவின் பழைய தோழி ஒருத்தி,
அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து.

உட்காரச் சொன்னதைக் கேட்காமல்
வீட்டை சுற்றிச் சுற்றி வந்து பார்த்தாள்.
‘இங்கே ஒரு ரூம் இருந்ததே’ என்று கேட்டால்
என்ன சொல்லமுடியும்?
வீடு மட்டுமா?ஊரே மாறிப்போயிற்றாம்.
ஸ்டேஷனில் இருந்து பார்த்தாலே
வீடு தெரியுமாம் அப்போது.
ஒரே கடைகளாய் இருக்கிறதாம் இப்போது.
‘ நீதான் பெரியவனா, நீ சின்னவனா?’
என்று கேட்டாள்.
அப்போதெல்லாம் நாங்கள்
சின்னச் சின்ந்தாக இருப்போமாம்.
‘ஒரு விதத்தில் உங்களுக்கு உறவுகூட’
என்று சொல்லி
நிறைய உறவுகளின் வழியாக அதை நிறுவினாள்.
அந்த மாதிரி எங்கள் அம்மாவின் பெயரை
சுருக்கிக் கூப்பிட்டது அவள் மட்டும்தானாம்.
அதேமாதிரி, அம்மாவும் அவள் பெயரை
ஒரு தனி மாதிரியாகக் கூப்பிடுவாளாம்.
அது என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
நல்லவேளையாக அம்மாவே வந்துவிட்டாள்.
தோழியை அடையாளம் கண்டுகொண்டு
கூப்பிட்டாள் ஒரு பெயர் சொல்லி.
அதை எங்களால் யூகித்திருக்கவே முடியாது.

- முகுந்த் நாகராஜன்

லா.ச.ரா

சூல்கொண்ட நேரம் ஒருவரியிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடு ஒருவர் போராடுகையிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்டபின் சேர்ந்திருக்க இயற்கையில்லை, பிரிந்துதான் போவோம். கருவுற்றதைப் பெற்றுதான் ஆகவேண்டும். பெற்றது பிரிந்துதான் போகவேண்டும்.
-லா.ச.ரா

பாரதிதாசன்

பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர்,இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர் என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே

-பாரதிதாசன்

பாதசாரி

ஆறாவது நாள்
கடவுள்
மண்ணால்
மனிதனைப் படைத்தான்
ஏழாவது நாள்
மனிதன்
கடவுளைத் திரும்பப்
படைத்தான்.

- பாதசாரி (தமிழாக்கம் செய்த குஞ்ஞுண்ணிக் கவிதை)

19/04/2019

யாத்திரி

உபயோகிக்கப்படுகிறோம் என்று தெரிந்தபின்னும் நகரத்தெரியாமல் நிற்பது அன்பின் நிலைகளிலொன்று.

-யாத்திரி

நர்சிம்

காலம் முழுக்க யாருடைய அன்பையாவது எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறோம், எவருடைய அன்பையாவது நிராகரித்துக் கொண்டே !

-நர்சிம்

16/04/2019

ஆதிஷா

தன் உரிமைக்காக எதிர்த்துக்கேள்வி கேட்டு சண்டை போடுகிறவனைக் காட்டுமிராண்டியாகவும்,
நம் மீது திணிக்கப்படும் அடக்கு முறைகளை அமைதியாக ஏற்றுக்கொள்வதை நாகரிக மனிதனின் அடையாளமாகவும் கருத ஆரம்பித்துவிட்டோம்...
_ஆதிஷா

ஆதிஷா

எதையுமே எதிர்த்துக்கேள்வி கேட்காத எதற்குமே கோபப்படாத ஒரு சமூகம் நிச்சயம் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கித்தான் பயணிக்கும்.
நிமிர்ந்த முதுகெலும்புகள் மீண்டும் வளைந்து குனியத்தொடங்கும்.
விழிப்புடன் இருப்பவரால் தான் தனக்கு நிகழும் அநீதியை அறிந்துகொள்ள முடியும்.தனக்கு நிகழ்வது அநீதி என்பதை  அறிந்தவரால் தான் அதை எதிர்த்து கேள்வி கேட்கமுடியும்.போராட முடியும்.
_ஆதிஷா.

ஆதிஷா

மெய்யான போராட்டங்கள் தன்னளவில் மகிழ்ச்சியைத்தருவது.
_ஆதிஷா

மகுடேசுவரன்

என்னெய அடீங்கோ...
கொல்லுங்கோ...
கண்டதுண்டமா வெட்டிப்போடுங்கோ...
காவலுக்கு ஆள் போடுங்கோ....

நீங்கொ பார்த்து வெச்சுருக்கிற
மாப்புள்ளைக்கே என்னெக் கட்டடிவெய்யுங்கொ...
கட்டிக்கெறென்.

அவனுக்கு புள்ளெபெத்துதரச் சொல்லுக்கோ
பெத்துக்கெறென்.

ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து வா போயர்றலாம் னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கோ....

என்ற அப்பன் மேல சத்தியமாச் சொல்றேன்.
போட்டது போட்டப்படி கெடக்கெ
அப்படியே அவருகூடப்போயிர்ருவேன்...ஆமா !
_மகுடேசுவரன்.

சமஸ்

இரு வழிகள்; நாம் எந்த வழி?
இரு வழிகள்; நாம் எந்த வழி?

குலனின் அமரத்துவமான கவிதை வரிகளில் இது ஒன்று: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம்; இல்லாமல் போகிறோம்.”

விக்கிரமாதித்யன் எழுதிய ஒரு கவிதையும் அடிக்கடி முன் நின்று கேள்வி கேட்கும்:

“எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்;

எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்;

எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?”

நமக்கு இரு வழிகள் உள்ளன.

ஒன்று,

எல்லா அநியாயங்களையும் பார்த்துப் புழுங்கிப் புழுங்கி, நம்மை மட்டும் விடுவித்துக்கொள்ளும் போராட்டத்தில் பிழைப்பது.

மற்றொன்று,

எதிர்க் கேள்வியோடு களத்தில் இறங்கி ஒட்டுமொத்த சமூக மாற்றதுக்கான போராட்டத்தில் வாழ்வது.

இன்றைக்கு அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.

இன்றைக்கு அரசு மருத்துவமனைகளின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.

இன்றைக்குப் பொதுப்போக்குவரத்தின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.

இன்றைக்குப் பிழைப்புக்காக உயிரைக் கொடுக்கும் நிலையில் நிற்க நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.

ஓர் ஊர் மரங்களை இழக்கும்போது அதற்கு எதிராகப் போராடிச் சூழலை மாற்றலாம் அல்லது புழுக்கத்தை நாம் மட்டும் எதிர்கொள்ள மின்விசிறி போட்டுக்கொள்ளலாம்.
ஓர் ஊரின் நிலத்தடிநீர் நச்சுநீராகும்போது அதற்கு எதிராகப் போராடிச் சூழலை மாற்றலாம் அல்லது தாகம் தீர்த்துக்கொள்ள நாம் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம்.

ஒரு ஊரின் காற்றே நஞ்சாகும்போதுகூட நாம் நம் அறையில் மட்டும் காற்றுச் சுத்திகரிப்பான்களை வாங்கி வைத்துச் சமாளித்துவிடலாம் என்று நினைப்பது அபத்தம்!

- சமஸ்,

எஸ்தர். வண்ணநிலவன்

மனசைக் கஷ்டப்பட வைப்பது அவளுக்கு ஒரு விதமான சந்தோஷத்தை தந்தது

- எஸ்தர், வண்ணநிலவன்

ஜெயகாந்தன்

உணர்ச்சியின் எல்லைகளை மீறியவர்கள் விரும்பினால் கூட பின்வாங்கிவிட முடிவதில்லை. அவர்கள் நின்று நின்று அதற்காக வருந்தி, மேலும் மேலும் அந்த எல்லைகளை மீறுவதையே இயல்பாகக் கொள்வார்கள்.

- ஜெயகாந்தன்

பிரபஞ்சன்

பிழையான வாழ்க்கை முறைக்குத்தான் பிழைப்பு என்று பெயர்!
-பிரபஞ்சன்

ப.பி

மணப்புரம்  எதிரிலிருக்கும் வேப்பமரம் தினம் கம்மலை அடகுவைத்து செல்லும் எதோஒரு பெண்ணுக்கு சிறுகுச்சியை காதணியாய் அணிவிக்கிறது.!

-படித்தது

சௌவி

நிராகரிக்கப்பட்டவர்களால்தான்
உலகம் இயல்பாக
இயங்கிக்கொண்டிருக்கிறது
ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் அல்ல

-சௌவி

வண்ணநிலவன்

எதையேனும் சார்ந்திரு

கவித்துவம், தத்துவம்

காதல், சங்கீதம்,

இங்கிதம்... இப்படி

எதன் மீதேனும் சாய்ந்திரு

இல்லையேல்

உலகம் காணாமல் போய்விடும்.

-வண்ணநிலவன்.

மகுடேசுவரன்

நதி மீது பாலம் கட்டப்படாதபோது
இக்கரையில் ஊர் இருந்தது.
அக்கரையில் அடர்ந்த காடு இருந்தது.

- மகுடேசுவரன்

மனுஷ்ய புத்திரன்

கடைசி அற்புதம்

வயதாக வயதாக

அற்புதங்கள் நிகழ்வது

குறைந்துகொண்டே வருகிறது.

பிறகு நாம்

நீண்ட நேரமாக

பொறுமையிழந்து

காத்துக்கொண்டிருக்கிறோம்

அந்தக் கடைசி அற்புதத்திற்காக.

-மனுஷ்யபுத்திரன்

12/04/2019

சுந்தர புத்தன்

காட்டில் குயில்கள் மட்டுமே
பாட வேண்டுமென்றால்...
காடு நிசப்தமாகிவிடும்.

-சுந்தரபுத்தன்

ராஜா சந்திரசேகர்

புன்னகைக்கச் சொல்லி
எடுத்தவரின் புன்னகையும்
இருக்கிறது புகைப்படத்தில்

-ராஜா சந்திரசேகர்

ராஜா சந்திரசேகர்

அதுவாகப்
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்
       - ராஜா சந்திரசேகர்
(அனுபவ சித்தனின்குறிப்புகள்)

ராஜூ முருகன்

பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடைபிடித்துக் கொண்டு செல்லும் கயவர்கள் நாம்

-ராஜூ முருகன்

04/04/2019

தமிழ் துணை எழுத்துகள்

தமிழ் துணை எழுத்துகள்
-மகுடேசுவரன்

துணைக்கால் – கா சா தா

கொம்புக்கால் – ஊ, கௌ, சௌ

மடக்கு ஏறுகீற்றுக் கால் – ணூ, தூ, நூ

ஒற்றைக்கொம்பு – கெ, நெ, செ

இரட்டைக்கொம்பு – கே, நே, சே

இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு – கை, சை, நை

சாய்வுக்கீற்று – ஏ

இறங்கு கீற்று – பு, சு, வு

மடக்கு ஏறு கீற்று – ணு, து, நு

பின்வளைகீற்று – கூ

மேல்விலங்கு – கி, தி, பி

கீழ்விலங்கு – மு, ரு, கு

இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி – சூ, பூ

மேல்விலங்குச் சுழி – கீ, தீ, ரீ

கீழ்விலங்குச் சுழி – மூ ரூ

பிறைச்சுழி – ஆ

பொன்னீலன்

போட்டியும் பொறாமையும் பேராசையும் நிறைந்த அந்த ஊர் மக்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட சிறிய மாதிரியாகவே வகுப்பறை தோன்றியது.
        -பொன்னீலன்

ஜெயகாந்தன்

பொய் சொல்லுவதில் உள்ள மாபெரும் சள்ளையே இதுதான்.அதுமேலும் மேலும் புதிய களங்களில் தன்னை தொடர்ந்து அங்கீகரிக்கும்படி வந்து நிற்கும்

-ஜெயகாந்தன்

யவனிகா ஶ்ரீராம்

தன்னைச் சொல்லிக்கொள்ள முடியாத இடத்தில் வெகுநேரம் நிற்பது சுலபமில்லை

-யவனிகா ஸ்ரீ ராம்