23/02/2020

யுகபாரதி

எடை போட்டு விற்கப்படுகிற
சந்தையில்,
தனிப்பூவின் அழகு
செல்லுபடியாவதில்லை

-யுகபாரதி

உருது கவிதை

ஓ அறிவிலிகான்
சோம்பேறிகளே புறப்படுங்கள்
பரந்த உலகம் முழுவதும்
சுற்றி வாருங்கள்
இதற்காக உங்களுக்கு இன்னொரு
வாழ்வு கிடைக்கப்போவதில்லை
நீங்கள் நெடுநாள்
வாழ்ந்தாலும் கூட
இந்த இளமை உங்களுக்கு
மீண்டும் வரப்போவதில்லை

-ராகுல் சாங்கிருத்யாயனின் மனம் கவர்ந்த உருது கவிதை

கவலை

மூங்கிலை விட வேகமாக வளர்வது?

மனிதனின் கவலைகள்

-யட்சனின் கேள்விக்கு தருமரின் பதில்

வ.ஐ.ச ஜெயபாலன்

உனக்கு எத்தனை வயசு?

எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு

-வ.ஐ.ச ஜெயபாலன்

நகுலன்

வெளிமட்டத்தில் மிதப்பதைவிட
அடிமட்டத்தில் ஆழ்ந்து கிடப்பது
அது ஒரு தனி அனுபவம்..!!

~நகுலன்

மனுஷ்ய புத்திரன்

காய்ச்சல் எவ்வளவு இருக்கிறது என்று எனக்கே தெரியும்..
ஆனாலும் காண்கிற ஒவ்வொருவரிடமும் எனக்கு காய்ச்சல் இருக்கிறதா பாருங்கள் என நெற்றியை தொட்டுப் பார்க்க நீட்டுகிறேன்..
ஆயிரம் கரங்களில் ஆற்றும் கரமொன்று மறைந்திருக்கக் கூடும் என இன்னும் நம்புகிற அவ்வளவு பழைய ஆள் நான்..

மனுஷ்ய புத்திரன்..

மகுடேசுவரன்

உன்னை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எங்கோ பார்ப்பதுபோல்
இருக்கும் நீ
அப்படியே இரு
திரும்பாதே.
களவுப் பார்வைகள்
அனுமதிக்கப்படும் வரைதான்
உளவுகாணமுடியும்
உள்ளத்தை!

-மகுடேசுவரன்

மனுஷ்யபுத்திரன்

பரிதவிப்போடு பற்றும் கரங்களை நாசூக்காக விளக்குவது எளிது..

கனவுகளோடு தரும் பரிசை இப்போது எனக்குப் பயன்படாது என மறுதலிப்பது எளிது..

நாளெல்லாம் காத்திருந்த ஒரு சந்திப்பை சிறிய காரணங்களுக்காக தவிர்ப்பது எளிது..

மனம் தளும்பி சொல்லும் ஒரு சொல்லை காதில் விழாதது போல் இருப்பது எளிது..

எத்தனை முறை அழைத்தாலும் ஒரு அழைப்பை ஏற்காது இருப்பது எளிது..

கடைசியில் மனம் தளர்ந்து ஒருவர் மெல்ல விலகிச் செல்கிறார் 
ஒரு சிறு புள்ளியாய் எங்கோ மறைகிறார்..

அது எளிதல்ல ஒரு மனிதர் இல்லாமல் போவதை புரிந்து கொள்வது..

ஒருவர் போகும் போது நம் துரதிர்ஷ்டம் நீங்கியது என்றுதான் நினைக்கிறோம் நம் அதிர்ஷ்டத்தின் வைரம் ஒன்றையும் தன்னோடு அவர் கொண்டு செல்லக்கூடும..

நான் இல்லாமல் போகும்போது விட்டுச்செல்லும் வெற்றிடத்தில் எதிர்பாராத ஒரு பள்ளம் உருவாகலாம் கவனமாக கடந்து செல்..

மனுஷ்யபுத்திரன்.‌

வளர்மதி

பெண்ணுக்கு நல்ல
எதிர்காலம் உள்ள ஓர் ஆண்
தேவைப்படுகிறான்..!

 ஆணுக்கு நல்ல கடந்த காலம்
 உள்ள ஓர் பெண்
 தேவைப்படுகிறாள்..! 
  
 - வளர்மதி.

நேசமித்திரன்

அதற்குமேல் ஒன்றும்
இல்லை
என்கிறவர்களுக்குத்
தெரியாது
ஈமத்தின் கடைசிக்
கங்குவரை
காத்திருப்பவன்
எத்தனைமுறை
ஆகாசம் 
பார்க்கிறான் என்பது

-நேசமித்ரன்

நா.முத்துக்குமார்

அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்.தீயை படித்து தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும்.
#Na.Muthukumar

கு.விநாயகமூர்த்தி.

அறைக் கைதியாய் 
படுக்கையில் கிடக்க 
விதிக்கப்பட்ட ஒருவரின் 
டியூப்பிலிருந்து வழிந்த 
மூத்திரப் பீங்கானை கழுவி வைத்து
பீத்துணி மாற்றி 
ஈரத்துணியால் உடல் துடைத்து
மாற்றுத் துணி உடுத்தி விட்டு 
அவர் கக்க கக்க 
துடைத்து துடைத்து
கரைத்த கஞ்சி ஊட்டுபவளின்
சேலை தெரியாமல் நழுவ
வைத்த கண் வாங்காமல் 
அவள் மார் பார்க்கிற வியாதிக்காரரன்
கண்களைப் பார்க்காமல் தவிர்த்து 
சேலை நழுவியது தெரியாதது போல் 
நடித்து 
முழுதாக ஊட்டி முடித்து 
இலேசாய் சிரித்து விட்டு 
கதவோரம் வந்து 
ஒதுங்கி நின்று 
சேலையை சரிசெய்து திரும்புகிறாள்.
சொல்லுங்கள் 
இவளை எப்படி 
காதலிக்காமல் இருப்பது?

நூலாம்படை.
கு.விநாயகமூர்த்தி.

எஸ்.ரா

வார்த்தைகளால் ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் ஒரு எழுத்தாளனால்...... 
       எஸ். ரா.

வண்ணதாசன்

" ஞாபகங்களை
திறக்கிற சாவிகளை
மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் "


 -வண்ணதாசன்

வைக்கம் முகம்மது பஷீர்

இந்த வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சுகமாக இருக்கணும்னா சொந்தமான கருத்து எதுவும் நமக்கு இருக்கக்கூடாது

-வைக்கம் முகம்மது பஷீர்

கவிஜி

மொத்த உடலையும் விற்றவள் 
முகத்துக்கு மட்டும் தள்ளுபடி 
தருகிறாள் 

-கவிஜி

ராஜா சந்திரசேகர்

ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்

-ராஜா சந்திரசேகர்

தர்மராஜ் பெரியசாமி-

இது 
சிங்கத்தின் தடம்,
புலியின் தடம்,
நரியின் தடம்
இப்படியாக விரிகிறது
மானின் எச்சரிக்கையான பதில்கள்
குட்டி மானின் கேள்விக்கு.
இறுதியாக கேட்டது
ஒத்தையடிபாதையைக் காட்டி.
பதறிய மான் சொன்னது.
" இது புல் கூட முளைக்காத
மனிதனின் தடம்" என்று...

- தர்மராஜ் பெரியசாமி-

ஜார்ஜ் ஆர்வெல்

பொய்யை மற்றவர்கள் எல்லோரும் அங்கீகரிக்கும்போது, சரித்திரம் கூட அந்த பொய்யையே உண்மை என்று வற்புறுத்தும் போது. பொய்யே சரித்திரம் ஆகி விடுகிறது, பொய் உண்மையாகி விடுகிறது.

-ஜார்ஜ் ஆர்வெல்

மனுஷ்ய புத்திரன்..

காற்றடித்தால் விளக்கு அணைந்து விடுமே என்று மட்டும் நினைத்து அதை பாதுகாப்பதில்லேயே நாள் முழுக்க கவனம் கொண்டுவிட்டேன்..

எண்ணெய் தீர்ந்ததும் விளக்கு அணையும் என்று நான் யோசிக்கவில்லை அன்பே..

மனுஷ்ய புத்திரன்..

மனுஷ்ய புத்திரன்...

ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள்..
நன்றாக தூங்கவேண்டும்..
துணி துவைக்க வேண்டும்..
நாயை குளிக்க வைக்க வேண்டும்..
இறைச்சி எடுக்க வேண்டும்..
டிவி பார்க்க வேண்டும்..
மேலும் உன்னிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்க வேண்டும்..

மனுஷ்ய புத்திரன்...

ருத்ரன்

அவசரம் வேறு,வேகம் வேறு. வேகம் நமக்குள்ள அனுபவத்தினால் பயிற்சியால் ஏற்படும் திறன். அவசரம் நம் உள்ளே இருக்கும் அச்சத்தின் அடையாளம்.

-ருத்ரன்

கட்டளை ஜெயா

கல்லூரிப் படிப்பை
முடித்தபிறகு
தொலைநிலைக் கல்வியாகத்
தொடர்கிறோம் 
நம் நட்பை

-கட்டளை ஜெயா

குட்டி ரேவதி

சிறுபொழுதும் சுடுமணலில்
நடைபொறுக்காமல்
நிழலுக்குள் ஓடி நிதானிக்கும்
வெற்றுக்கால்களின் தவிப்பு நீ

-குட்டி ரேவதி

இளந்தென்றல் திரவியம்

நீ இன்னுமாடா தூங்கல
எனும் போதும் 
அம்மா தூங்க வில்லை...

ஏன்டா இன்னமும் தூங்கற
எனும் போதும்
அவள் தூங்கிக்கொண்டிருக்கவில்லை.

இளந்தென்றல் திரவியம்