30/05/2020

ஜார்ஜ் பெரோஸ்

மெளனமென்பது
வார்த்தைகளால் கரையும்
பனிக்கட்டி

-ஜார்ஜ் பெரோஸ்

முகுந்த் நாகராஜன்

தோசை தெய்வம்

தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்.

-முகுந்த் நாகராஜன்

ரா.பி.சேதுபிள்ளை

சுந்தர் பிச்சை

*அதிகம் உணர்ச்சிவசப்படாது இருக்க என்ன செய்வது??*
கரப்பான் பூச்சி கோட்பாடு

இது கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட கதை.

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்த பெண் பயத்தால் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அது வரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் பற்றிக்கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விளக்கி விட்டார்.

ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்த பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.

இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான் பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

நான் என் காபியை பருகி கொண்டே இதை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான் பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்த பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதியிழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாக கையாண்டார்.

எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான் ஏற்படுத்தும் தொந்தரவை கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்கு காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்க செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னை தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது.

சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் அந்த நெரிசல்களை கையாள முடியாத என் இயலாமை தான் என்னை தொந்தரவு செய்கிறது.

என் வாழ்வில் குழப்பத்தை சிக்கல்கள் உருவாக்குவதில்லை, அதற்கு நான் செய்யும் எதிர்வினை தான் உருவாக்குகிறது.

இதன் மூலம் நான் கற்றது

வாழ்வில் நான் எதிர்வினை ஆற்ற கூடாது, பதிலளிக்க வேண்டும்(I should not react in life, I should always respond).

நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக்கூடும் ஒன்றை தவிர, அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்.

*வாழ்வில் நமக்கு நடக்கும் விடயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.*

புதுமைப்பித்தன்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் வாழ்கிறோமா?
-புதுமைப்பித்தன்.

வைரமுத்து

வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும் மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும் கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரியதுதான். துன்பத்தில் 'சிறுசு - பெருசு' என்பதெல்லாம் இடம் பொருள் ஏவல் குறித்த ஒப்பீடுகள்.

-கள்ளிக்காட்டு இதிகாசம்

முகுந்த் நாகராஜன்

விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை

                                -முகுந்த் நாகராஜன்

கபிலன்

எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ?

  -கபிலன்.

வைரமுத்து

கிராமத்து இரவு ஆழமானது. நிஜமான நிசப்தம் நலவுவது. பகலெல்லாம் தேய்ந்தவர்கள், பன்னிரண்டு மணி நேரம் உழைத்தவர்கள், பகல் தூக்கத்தைத் தரித்திரமென்று சபிப்பவர்கள், இரவில் முற்றும் மறந்து தூங்குவார்கள் மூச்சுவிடும் பிணங்களாய். எங்கோ ஊளையிடும் நாயோசை - பாம்பு மாதிரியான பிராணிகள் பஞ்சாரத்துக்குள் புகுந்தால் அடிவயிற்றில் சிறகடித்துக் கிளம்பும் கோழியோசை - கிளைகளோடு காரசாரமாக விவாதிக்கும் காற்றின் பேரோசை - ஈயோ கொசுவோ கடித்தால் தலையாட்டும் மாட்டின் மணியோசை போன்ற அஃறிணை ஓசைகளும் - நோயாளிகளின் இருமல் முனகல் ஓசைகளும் தவிர மற்றபடி மௌனத்தின் கர்ப்பப்பைதான் ஒரு கிராமத்தின் இரவு.

-கள்ளிக்காட்டு இதிகாசம்

உதயச்சந்திரன்

முதல் வெற்றி மகிழ்ச்சி தரும்.அடுத்த வெற்றி பெருமிதம் தரும்.அடுத்தடுத்த வெற்றி அதை தக்க வைத்துக்கொள்ள போராடும் வெறி தரும்..

-உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

ச.தமிழ்செல்வன்

கால்களை மடக்கி உட்கார்ந்து பார்த்தான்..
ஒரு காலை நீட்டி 
ஒரு காலை மடக்கி 
கொஞ்சம் பின்னால் சாய்ந்து பார்த்தான் ..
ஒரு பக்கம் சாய்ந்து உட்கார்ந்து 
ஒரு கையை தரையில் ஊன்றி 
படுத்து பார்த்தான்..

எப்படி உட்கார்ந்து பார்த்தாலும் பசித்தது ..

ச.தமிழ்ச்செல்வன் 
பிறந்ததினம்

மகுடேசுவரன்

பிழைப்பு தேடி பிறப்பூர் பிரிந்து
பிறவூர் நாடி வண்டியேறியவன் அருகில்
இன்பச் சுற்றுலா செல்வோர் வந்தமர்ந்து
இடைவிடாது சிரித்துக் கொண்டிருக்கின்றனர்..

மகுடேசுவரன்..🐅

நா.பார்த்தசாரதி

சிந்திக்காத ஒருவன் மற்றவர்களும் சிந்தனை மனமற்றவர்களாக இருப்பதையே சுயநலத்துக்காக விரும்புவான்.சுயநலத்துக்காக அதை வளர்க்கவே விரும்புவான்

-நா.பார்த்தசாரதி

W.H.Auden

நட்சத்திரங்கள் இப்பொழுது தேவையில்லை ; அவை எல்லாவற்றையும் வெளியே அள்ளி வீசுங்கள்
நிலவை மூட்டை கட்டி அனுப்புங்கள் ; சூரியனை சுக்குநூறாக்குங்கள்
பெருங்கடலை ஊற்றி விடுங்கள்,காடுகளை கழித்து விடுங்கள்
ஏனெனில், இவை எதுவும் இக்கணத்தின் பெருந்துயரை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. 

– W. H. Auden

Anne Sexton

சொற்களில் கவனமாயிருங்கள்

சொற்களில் கவனமாயிருங்கள்,
அதிசய சொற்களிலும் கூட,
ஆச்சரிய சொற்களுக்காக நம்மால் இயன்றதையெல்லாம் புரிகிறோம்,
அவை பூச்சிகள் போல மொய்க்கின்றன,
ஆனால், கொட்டாமல் முத்தமொன்றை ஈந்துவிட்டு அகல்கின்றன.
அவை விரல்கள் அளவுக்கு நல்லவையாகவும் இருக்கக் கூடும்.
நீங்கள் நம்பிக்கையோடு அமரக்கூடிய பாறையாகவும் சொற்கள் திகழலாம்.
அவை மலர்களாகவும், காயங்களாகவும் இருக்கலாம்.
எனினும், நான் சொற்களைக் காதலிக்கிறேன்.
அவை மேற்கூரையிலிருந்து தரை சேரும் புறாக்களாக இருக்கலாம்.
அவை என் மடியில் வீற்றிருக்கும் ஆறு புனித ஆரஞ்சு கனிகள்.
அவை மரங்கள், வேனலின் கால்கள்,
வெய்யோன், அவனின் ஒளிரும் முகம்.
இருந்தாலும், அவை அடிக்கடி என்னைக் கைவிடுகின்றன.
நான் சொல்ல விரும்புபவை தீராமல் என்னுள்ளே இருக்கின்றன,
அத்தனை கதைகள், உருவங்கள், சொலவடைகள்,
ஆனால், சொற்கள் போதுமானதாக இருப்பதேயில்லை,
பிழையானவை என்னை முத்தமிடுகின்றன,
சமயங்களில் கழுகைப் போல வான் ஏகுகிறேன்,
சிறுகுருவியின் சிறகுகளுடன்,
ஆனால், சொற்களின் மீது அக்கறையோடு கனிவாய் இருக்கிறேன்.
சொற்களையும், முட்டைகளையும் கவனமாகக் கையாளவேண்டும்.
அவை உடைந்தால் மீண்டும் உயிர்த்தெழுப்பவே முடியாதவை.

-Anne sexton

மகுடேசுவரன்

நாற்கர பெருவழியில்
சக்கரம் ஏறிச் 
செத்த நாயுடல் 
அப்படியே கிடக்கிறது..

அகற்றப்படுவதே இல்லை..

மேலும் மேலும் ஏறி 
நொறுக்கி 
எலும்பைக் குழம்பாக்கிக் கடக்கின்றன வாகனங்கள்..

நன்றியைத் தவிர 
வேறுணர்வற்ற
வால்குழைவைத் 
தவிர செயலறியாத
ஒரு ஜீவனுக்கு 
என்னே நம் கைம்மாறு..

மகுடேசுவரன்..

21/05/2020

அண்ணா

ஒட்டகம் சுமக்கும் பல மூட்டைகளிலே, மேலே ஒரே ஒரு முட்டையை எடுத்ததும், பாரம் குறைந்து விட்டது என்று எண்ணி, படுத்திருக்கும் நிலை விட்டு எழுந்து நடக்குமாம்! பாவம்! அது அறியாது, மூட்டைகள் பல முதுகிலே இருப்பதை!

-அண்ணா

சுந்தர ராமசாமி

தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட சிலருக்கு ஒரு மானசீக எதிரி தேவையாக இருக்கிறது. 

-சுந்தர ராமசாமி

12/05/2020

மகுடேசுவரன்

எல்லாரும் 
நிலா காணமாட்டார் !

யாருமில்லாத வெறுமை
ஏதுமில்லாத மனம் 
முன்னிரவுத் தனிமை 
முகிலற்ற வானம்  
முள்குத்திய நெஞ்சம் 
அடக்க வேண்டிய அழுகை
உதிர்க்க வேண்டிய நினைவு
கழிக்க வேண்டிய காதல் என 
என்னென்னவோ 
வாய்க்க வேண்டும்
அதற்கு.

-மகுடேசுவரன்

09/05/2020

இளந்தென்றல் திரவியம்

ஆகச்சிறந்த  "பேராசை" என்பது நம்
குழந்தைகள் நம்மை பிற்காலத்தில்
மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள் என்பது தான்....

ஏனெனில், குழந்தைகள் 
நம்மை சந்தோசமாக வைத்துக்கொள்ளும் 
அந்த  பெரிய   வேலையை
தாங்கள்   சிந்திக்க  தொடங்கும்  முன்பே
போதுமான அளவுக்கு  
செய்து  முடித்துவிடுகிறார்கள்

இளந்தென்றல் திரவியம்

பாவண்ணன்

ஞாபகத்தின் முடிவற்ற வெளியில்
ஒளிர்ந்திருக்கும் ஒற்றைச் சொல்லை
கண்டுப்பிடிக்க இயலாமல்
களைத்துத் திரும்பியது மனப்பறவை

-பாவண்ணன்

ப.பி மணிகண்டபிரபு

வயிறு
இருக்கும்வரை
எல்லா  மனிதர்களும்
யாருக்கோ கைக்கூலிகள் தான்

-படித்தது

03/05/2020

சங்கப்பாடலில்

ஊடலில் பிடிவாதம் கூடாது.ஊடல் ஊறுகாயை போல் இருக்க வேண்டும்.அவ்வப்போது தொட்டுக் கொள்ளலாம்.உணவு போல் உட்கொண்டால் வெறுப்புதான் மீதமாகும்.

-சங்கப்பாடலில்

எஸ் ரா

"நாங்கள் படிக்கவில்லை,
 ஆனால் எல்லாவற்றையும் நம்புகிறோம்.
நீங்கள் படித்தவர்கள், ஆனால் எதையும் நம்புவதில்லை.
 எங்களை காப்பாற்றுவது படிப்பறிவு அல்ல 
இந்த மலைதான்.
 உங்களுக்கு மலை பொழுதுபோக்கும் இடம். எங்களுக்கு பிறப்பிடம்.
 நீங்கள் மலையை புரிந்து கொள்வதற்கு இன்னும் நூறு வருடங்கள் ஆகும்."

 கன்னியாகுமரி மாவட்டத்தில்,கீரிப்பாறை மலைப்பகுதியில் காணிக்காரர்கள் என்னும் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள்.
மலைவாழ்மக்கள் மக்களில் வயது முதிர்ந்த ஒரு காணி சொன்னது.

_தேசாந்திரியில் எஸ்.ரா..

பேயோன்

யார் குரலையும்
கேட்க விரும்பாததுபோல்
கூச்சலாக பெய்கிறது மழை

-பேயோன்

புவியரசு

தேடாதே
தேடினால் காணாமற் போவாய்
வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. 

-புவியரசு

பேயோன்

அஞ்சலி

பிறந்திருக்கவே கூடாதவன்
தாமதமாக செத்துப்போனதற்கு
வருத்தங்கள்

-பேயோன்

குமரகுருபரன்

மரங்களடர்ந்த சாலையின் தனிமையை
வண்ணம் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தன
பூக்கள்.

-குமரகுருபரன்

ப.பி மணிகண்டபிரபு

அவர்களாக விரும்பி, 
உச்சியில் வைத்துக் கொண்டாடி, 
சில்லாக உடைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.. 

சமயத்தில் நீங்களும் ஓர் உயிருள்ளக் காட்சிப்பொருளே..

-படித்தது

சுஜாதா

கால மாறுதலுக்கேற்ப வேஷம் மாறவில்லை என்றால்,நன்று போகும் பத்திரிக்கைகளும் நின்றுபோகும்

-சுஜாதா

சுஜாதா

வாழ்க்கை சுருக்கமானது. இன்று வாழ்வோம்.நாளை வீட்டுக்காரர் வாடகை கேட்டு வந்திவிடுவார்

-சுஜாதா

01/05/2020

சாவி

இந்த நாட்டில் யார் அதிகமாகக் கடன் வாங்கிறார்களோ,
அவர்களுக்குத் தான் மதிப்பு அதிகம்

-சாவி

நா.பார்த்தசாரதி

"மனித வாழ்க்கையின்
மிகப்பெரிய ஆச்சர்யம்
அன்புக்கு உரியவர்களை
எந்த இடத்தில்
எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதும்
எங்கே
எப்போது
எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்
முன்கூட்டியே
தெரியாமல் இருப்பதுதான்""

-நா.பார்த்தசாரதி

ராஜேஷ்வர்

இழக்க அதிகமில்லாதவனுக்கு அதிக பயமி்ல்லை; இழக்க அதிகமுள்ளவனுக்கு பயத்தைத் தவிர வேறேதும் அதிகமில்லை 

-ராஜேஷ்வர்

அரூபி

உண்மையில் உங்களின் பயம் அவமானத்தை பற்றியல்ல..உங்களின் பயமெல்லாம் அவமானத்திற்கு பிறகான வாழ்க்கையை பற்றித்தான்.

-அரூபி