30/05/2020

வைரமுத்து

கிராமத்து இரவு ஆழமானது. நிஜமான நிசப்தம் நலவுவது. பகலெல்லாம் தேய்ந்தவர்கள், பன்னிரண்டு மணி நேரம் உழைத்தவர்கள், பகல் தூக்கத்தைத் தரித்திரமென்று சபிப்பவர்கள், இரவில் முற்றும் மறந்து தூங்குவார்கள் மூச்சுவிடும் பிணங்களாய். எங்கோ ஊளையிடும் நாயோசை - பாம்பு மாதிரியான பிராணிகள் பஞ்சாரத்துக்குள் புகுந்தால் அடிவயிற்றில் சிறகடித்துக் கிளம்பும் கோழியோசை - கிளைகளோடு காரசாரமாக விவாதிக்கும் காற்றின் பேரோசை - ஈயோ கொசுவோ கடித்தால் தலையாட்டும் மாட்டின் மணியோசை போன்ற அஃறிணை ஓசைகளும் - நோயாளிகளின் இருமல் முனகல் ஓசைகளும் தவிர மற்றபடி மௌனத்தின் கர்ப்பப்பைதான் ஒரு கிராமத்தின் இரவு.

-கள்ளிக்காட்டு இதிகாசம்