30/09/2018

ஜெயமோகன்

பொதுவாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உறவுகள் என்பவை எங்கோ ஏதோ ஒரு புள்ளியில் முறிய வேண்டியவை, முறியாமல் தடுக்க முடியாதவை. இது குரூரமானதாக இருக்கலாம். ஆனால் உண்மை. எண்பது தொண்ணூறுக்கு மேல் வயதானவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் உறவுகளை விட்டு விலகிக்கொண்டே இருந்திருப்பதைச் சொல்வார்கள். பின்னுக்கு சென்று கொண்டே இருப்ப்வையே உறவுகள் நட்புகள்.ஒரு  தவிர்க்க முடியாத தன்மையை கடைசியில் சென்றடைகிறோம்.

உறவுகள் பல வகையில் முறிகின்றன. பலவகைகளில் தேய்ந்தழிகின்றன. பலவகைகளில் காணாமல் போகின்றன. உறவுகள் முறிவதற்கான காரணங்களை நாம் பலவகைகளில் கற்பனைசெய்து கொள்கிறோம். நம் தவறு, பிறர் தவறு, சூழல், என்றெல்லாம். உண்மையில் அப்படி அல்ல. உறவுகள் காலத்தில் ஓடும் நீரில் மிதக்கும் சருகுகள் போலச் செல்கின்றன. சருகுகள் விலகுவதும் நெருங்குவதும் அவற்றின் கையில் இல்லை.

காலத்தில் இருப்பதை உள்ளூர உணர்ந்திருந்தாலே போதும்.

(ஜெயமோகன்)

29/09/2018

ஆதிஷா

எதிர்பாராத
அவமானங்கள்
தான் ஆபத்தானவை.
அவை நம்மை
நிலைகுலையச்செய்து
வீழ்த்திவிடக்கூடியவை.
_ஆதிஷா.

சாக்கரடீஸ்

அறிவாளிகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சராசரியானவர்கள் ஊர் உலக நடப்புகளை விவாதிக்கிறார்கள். முட்டாள்கள் அடுத்தவர்களைப் பற்றிப் பேசியே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.
#சாக்ரடீஸ்

ஆதிஷா

குழப்பங்கள்
எச்சரிக்கை உணர்வாக மாறுகின்றன.
எச்சரிக்கை உணர்வுகள் எதிலிருந்தும்
தப்பியோடத்
தூண்டுபவைகளாக
இருக்கின்றன.
_ஆதிஷா.

ஞானக்கூத்தன்

*நாய்*

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

*ஞானக்கூத்தன்*

அழகிய பெரியவன்

குருவிகளையும்
கூடுகளையும்
பார்க்கக் கூடவில்லை
முன்பென்றால் ஊரில்
அடைமழைக்காலம்
ஆற்றில் நீர்புரளும்
கரையெல்லாம் நெடுமரங்கள்
கரைகின்ற பறவைக் குரல்கள்
போகும் வழியெல்லாம்
தூக்கணாங்குருவி கூடுகள்
காற்றிலாடும் புல் வீடுகள்
மூங்கில் கிளையமர்ந்து
சுழித்தோடும் நீருடன்
பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்
மண்ணின் மார்பு
சுரந்த காலமது
வெட்டுண்டன மரங்கள்
வான் பொய்த்தது
மறுகியது மண்
ஏதிலியாய்க் குருவிகள்
எங்கோ போயின.

*அழகிய பெரியவன்*

மகுடேசுவரன்

ஊர்வீதி எல்லாம் அத்துபடி
சந்துபொந்து குண்டுகுழி
சாக்கடைத் தேங்கலும் கூட.

நாய்களோடு நல்ல பரிச்சயம்
இது யார்வீட்டுப் பூனை என்பதும் தெரியும்.

எந்த மரநிழல் நிற்க ஏற்றது
எது பூத்துதிர்கிறது
எல்லாம் அறிவான்.

யார் இட்ட கோலம் அழகு
அவனுக்குத் தெரியும்.

முச்சந்தியில் இஸ்திரி போடுபவனிடம்
தினந்தோறும்
பீடிக்கு நெருப்பு வாங்கி
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டான்.

சித்தர் பாடல்களை
அப்படியே ஒப்பிக்கிறான்.

யாரோ தந்திருக்கிறார்கள்
பீட்டர் இங்கிலாந்து சட்டை அணிந்திருக்கிறான்.

மளிகைக்கடைக்காரருக்குச்
சில்லறை தருகிறான்.

‘ஏந்தாயி கண்ணு கலங்கியிருக்கு ?’
விசாரிக்கவும் தெரிகிறது.

கிரிக்கெட் பந்து அவன்மீது பட்டது
சிரித்தபடி எடுத்து வீசுகிறான்.

அவனுக்கு யார்மீதும் புகார் இல்லை
புகழ்ச்சி இல்லை
கேள்வி இல்லை
விமர்சனம் இல்லை.

நேற்றை மறக்க
நாளையைத் துறக்கத்
தெரிந்திருக்கிறது.

அவனைப்
பிச்சைக்காரன் என்று
எப்படிச் சொல்ல முடியும் ?

*~மகுடேசுவரன்*

25/09/2018

மகுடேசுவரன்

மாமிசக் கொட்டாவி விட்டபடி

களைத்துப் படுத்திருந்தது புலி.

பதுங்கிப் பம்மி

அதனருகில் சென்றேன்.

ஏறிட்டு உறுமிய புலி

எங்கே வந்தாய் என்றது.

என் பசிக்கு உன்னுடல் கரும்புதான்

மிகையூண் கொள்வதில்லை நான்...

தப்பித்தாய்...’ என்றது.

எதிரி நம்மிடம் பேசினாலே

பாதி வெற்றி.

எனக்கு

ஓர் உதவி வேண்டும்’ என்றேன்.

என்ன உதவி’ என்றது.

புலிநகம் கோத்த

பொற்சரம் அணிய விருப்பம்...

உன் விரலொன்றை நீட்டு

வெடுக்கென்று பிடுங்கிக்கொள்கிறேன்’ என்றேன்.

வேட்டை மனம் மறந்து

கர்ண மனத்திலிருந்த

காட்டுப் புலி

வேண்டியதைப் பிடுங்கிக்கொள்’ என்று

விட்டுக்கொடுத்தது.

இருபது நகங்களையும்

வகிர்ந்துகொண்டேன்.

புவியில் நீயே

போற்றத் தகுந்த புலி’ என்று

புகழ்ந்தடுக்கினேன்.

என் புகழ்ச்சியில்

புலிக்குத் தூக்கம் வந்துவிட்டது.

கிறங்கிய விழிகளோடு

‘இன்னும் என்ன வேண்டும்...’ என்றது.

புலிப்பல் வேண்டுமென்றேன்.

ஆடும் ஒரு பல்லைப் பிடுங்கிக்கொள்’ என்று

வாயைத் திறந்தபடி தூங்கியது.

குறடுகொண்டு

எல்லாப் பற்களையும் பிடுங்கிக்கொண்டேன்.

போகாமல்

அருகேயே நின்றேன்.

இன்னும் என்ன...?’ என்றது.

அதை உச்சரிக்கும்போதுதான்

தன்வாய் அதிகம் ஒடுங்குவதை

உணர்ந்திருக்க வேண்டும்.

அச்சம் நீங்கியிருந்தது எனக்கு.

அது கீறினால்

மெத்தென்றிருக்கும்

கடித்தால்

பிடித்துவிடுவதுபோல் இருக்கும்.

‘புலித்தோல் வேண்டும்’ என்றேன்.

- கவிஞர் மகுடேசுவரன்

மகுடேசுவரன்

பால் வேண்டிக்
கால்சுற்றும் பூனை
என்னை ஒருகணம்
தாயாக்குகிறது

-மகுடேசுவரன்

யாத்திரி

காதலை விட நட்பின் திறந்தவெளி சௌகர்யம், பராமரிக்க அவசியமேயில்லை, எப்போது வேண்டுமானாலும் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம். திரும்பும்போது விட்ட இடத்திலிருந்து வழமையாய் தொடரலாம்.

-யாத்திரி

லதா

உன் இருத்தலை உணர்த்த
இவ்வளவு இல்லாதிருத்தல் தேவையா?

-லதா

நஸ்புள்ளாஹ்

டயறியிலிருந்து...

வாசித்த சொற்கள் சிலவற்றை
எனது டயறியின் மய்யப் பகுதியில்
மூடிவைக்கிறேன்

நான் டயறியைத் திறந்து பார்க்கும்
மற்றொரு நாளில்
அவை வளர்ந்து
ஒரு பூனைக்குட்டியாகவோ
ஓர் அணில்பிள்ளையாகவோ
என்னைச் சந்திக்க வேண்டும் என்பது
எனது மனதின் இயங்குதல்

அதை
ஒருநாள் திறந்து பார்க்க
டயறியிலிருந்து
வினோத மிருகம் ஒன்று வெளியேறியது

பிறகு
அந்த மிருகம்
எனக்குள் வளர்ந்த
பூனைக்குட்டியையும்
அணில்பிள்ளையையும்
தின்னத் தொடங்கியது.

வழமைபோல் வாசித்துவிட்டு
இக்கவிதையையும் மறந்துவிடுங்கள்.

- ஏ.நஸ்புள்ளாஹ்

குகன்

அந்த

மரம் கொத்தி

பார்த்தால் ...

நீ

என் மனம் கொத்திய

ஞாபகம் ..

இந்த

மீன் கொத்தி

பார்த்தால் ..

நீ

என் உயிர் கொத்திய

ஞாபகம் ..

எப்போதாவது

மரக்கிளையில்

குருவிக் கூடு

பார்த்தால் ..

உனக்காய்

நான் கட்டிய

மனக் கூடு

ஞாபகம்...

நீர் மீது

அழகாய்

வட்ட வட்ட

வளையல் பார்த்தால் ...

என் மனதிற்குள்

நீ விதைத்த

சலனங்கள் ஞாபகம் ...



ஏதேச்சையாய்

தத்திக் தவழும்

குழந்தை பார்த்தால் ..

என்

வாலிப வயதுகளிலும்

உனக்காக நான்

தவழ்ந்த ஞாபகம் ...

மழைக்காலத்தில்

கருமேகங்கள்

திரண்டு வந்து

பொய்த்துப் போனால் ..

நீ

என்னை விட்டு

விலகிய ஞாபகம் ..

எங்கேயாவது

தேங்கி நிற்கும்

தண்ணீர் பார்த்தால் ...

உனக்காக

நான்

தேக்கி வைத்திருக்கும்

என் கண்ணீர் ஞாபகம் ...

-      குகன்

ச.ரவிச்சந்திரன்

அவள் இமை தடங்களில்
நான் இளைப்பாறிய காலங்கள் சுகமானவை
அவள் கரங்களில் நான் தஞ்சம் அடைந்த கணங்களோ
என் வாழ்வின் வசந்த காலம்
அவளோடு இணைந்து நடந்த பாதையை
அசைபோட்டு பார்க்கிறேன்
நடக்கமுடியாமல் முட்டிகளில்
வலிசுமந்த போதும் இந்த தருணத்தில்
நினைவு தடங்களில் அவள்
நின்று ஒளிரும் தூங்கா விளக்கு
அவளோடு கல்லூரி நூலகத்தில்
அமைதிமொழி பேசிய அந்த தருணங்கள்
அழிக்க முடியாத காவியமாக
அந்த காவியத்தின் பக்கங்களை
அமைதியின் துணையோடு படிக்கிறேன் மவுனமாக
என் நினைவுகளை குறுக்கிடாதீர்கள்
அவளோடு பயணிக்கட்டும்
என் எஞ்சிய காலங்களை
இது ஐம்பதை கடந்தவனின் காதல்
இந்த நினைவுகளின் எச்சமாக கண்களில்
இரண்டு துளி கண்ணீர்
என் கண்களின் ஈரப்பசை காயாமல்
என்னோடு வரும் என் இறுதி வரை

கவிஞர் ச .ரவிச்சந்திரன்

23/09/2018

அ வெண்ணிலா

நானும் அந்த நாயும்
குழந்தைக்குச் சோறூட்டும்
மையப் புள்ளியில் சந்தித்துக் கொள்கிறோம்

கையிலெடுக்கும் ஒவ்வொரு கவளமும் உள்ளிறங்க வேண்டும் என நானும்
கீழே விழ வேண்டும் என நாயும் அவரவர் எதிர்பார்ப்பில்

-அ.வெண்ணிலா

21/09/2018

கலீல் ஜிப்ரான்

நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
"எப்படி இருக்கிறான் என் மகன்..??"

அவள் சொன்னாள்..
"ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை.."

எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
"அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!"

ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..

இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.."
என்றார்..
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,
"அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..

ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,
"உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்..
நான் கோபத்துடன்,
"தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்..
ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..

இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்.."
என்றான்..

நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..

கலில் ஜிப்ரான்...

க.வை.பழனிச்சாமி

வாழ்ந்த உலகம்
நெற்றியில்
பொட்டாக
அதிர்வின்றி
நிழற்படத்தில்

-க.வை.பழனிசாமி

க.வை.பழனிச்சாமி

பழகிக்கொண்டது மனம்
உன்னைத் தழுவவும்
உன்னோடு மூழ்கிக் கரையவும்
நீ எறியும் இடத்தில்
எறிந்தபடி கிடக்கவும்

-க.வை.பழனிசாமி

ஆத்மநாம்

இது இப்படித்தான்
----------------------------
- ஆத்மாநாம்
---------------------

விரியும் ஒளி நடுவே
நானிருக்கிறேன்
என் கைகள் ஒரு அழகான உலகைச்
சமைக்கின்றன
மரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க
முடியவில்லை
அவை எவ்வளவு பசுமையாக
நம்பிக்கையுடன் உள்ளன!
பிரகாசமான ஒரு பாதை
மல்பெரி மரங்களுக்கு அப்பால்
ஓடுகிறது.
சிறை ஆஸ்பத்திரி ஜன்னலின் முன்
நான் நிற்கிறேன்
மருந்தின் நெடியை
சுவாசிக்க முடியவில்லை.
எங்கோ
வண்ண மலர்கள் பூத்திருக்கும்
இது இப்படித்தான், என் நண்பனே
சிறைப்படுதல் அல்ல
பிரச்னை சரணடையாமல் இருப்பதுதான்

எஸ் ரா

அலுமினியப் பறவை  போல விமானம் தொலைவில் தரை இறங்கிக் கொண்டு இருந்தது.

-எஸ்.ரா

குகன்

இப்போதெல்லாம் ...
தனிமை
பிடிக்கிறது ...

கூட்டம்
வெறுக்கிறது ...

தரையை விட்டு
அரை அடி
மேலே நடப்பதாய்
ஒரு அர்த்தமில்லாத
ஆணவம் வருகிறது ...
எல்லாப் பொருளும்
அழகாய்த் தெரிகிறது
என்னைத் தவிற ....

“ நடை மாற்று ...
எடை கூட்டு ...
அழகாய்த் தலைசீவு ...
வாரம் இருமுறை
தவறாது
முகச் சவரம் செய் “ ...
போர்க்கால
உத்தரவு பிறப்பிக்கிறது
என் மூளை ...

“ இப்படிப் பேசினால்
அவளுக்குப் பிடிக்காதோ “
பலத்த
யோசனைக்குப் பின்
பேச்சுக் குறைகிறது ....

“ ஒரு வேளை
நம்மை அவளுக்கு
பிடிக்காது போய்விடுமே “ ...
கடவுள் நம்பிக்கை
அதிகமாகிறது .....

பார்ப்பதற்கல்ல
கண்கள்
பேசுவதற்கு ....
புதுச் சித்தாந்தம்
உதயமாகிறது ...

பேசிய நேரங்களைவிட
பேசாத நேரங்களில் தான்
அதிகப் பேச்சு வருகிறது
எனக்குள் ...

படம் பார்க்க
திரையரங்கு போனால் ...
அளவுக்கு மீறிய
கற்பனை வந்து
ஆள் மாறாட்டம்
செய்கிறது ...

காற்று வாங்க
கடலுக்குப் போனால் ...
அலைச் சப்தம் கேட்பதால் ....

நாலு மணிக்கெல்லாம்
விடிந்து விட்டதா
எழுந்து விட்டதா
சூரியனைச்
சண்டைகிழுக்கிறது
எனக்குமுன்னே
எழுந்து கொள்கிற
என் மனது ....

மறதி
அதிகமாகிறது ...
வயது
குறைகிறது ....

ஒரு வகைத்
தூக்கமில்லா தூக்கம்
வருகிறது ....

ஒரு வேளை
எல்லோருக்கும்
இப்படித்தான் இருக்குமோ ...

இந்த மனபோதை
மிகுந்த
அழகான நாட்கள் ....
-      குகன்

படித்தது

நேற்றைய பிரச்சனை போலவே இன்றைய பிரச்சனையையும் சாதுர்யமாகச் சமாளித்த சந்தோஷத்துடன் தொடர்கிறது அன்றாட வாழ்க்கை!

படித்தது

படித்தது

ஞாபகம்

கரண்டியில்
கிளறக் கிளற.. குழம்புக்குள்
நீந்தியது
இறந்த பின்பும்
மீன்!

-படித்தது

ஷோபனா நாரயணன்

அம்மாக்களுக்கென
பல வரையறைகள் உண்டு...

கோலம் போடலாம்..
ஓவியம் வரையக் கூடாது..

கனவுகள் காணலாம்..
தூங்கக் கூடாது..

கண்களைக் கசக்கலாம்..
கவிதை எழுதக் கூடாது..

பறவைகளுக்கு சோறிடலாம்
சுதந்திரத்தைப் பற்றி பேசக்கூடாது..

வெறுப்பிற்குள் திணறலாம்
உறவுகளை முறிக்கக் கூடாது..

உதாசீனங்களுக்குள் உழலலாம்
உப்பிட்டு உண்ணக் கூடாது..

ஊமையாய் கண்ணீர் விடலாம்..
உயிர்த்துவிடக் கூடாது...

அவள் விடுதலையின் சம்மத எழுத்தான
'ம்'
அ- விற்கும் மா - விற்கும் இடையே
சிறை பட்டுக் கிடக்கிறது..

தன் இறகுகள்
ஒவ்வொன்றாகப் பிய்த்து
நெஞ்சக் கனலுக்கு விறகாக்குகிறாள்..

மொத்தக் குடும்பமும்
அக்கனலில்
குளிர்காய்கிறது..

அம்மாக்கள்
வாழ்வதாய்
நம்பிக்கொண்டிருக்கும்
வரையறை தாங்கிகள்!!

Shobana Narayanan

ஜின்னா அஸ்மி

உனக்கும் எனக்கும்
பிறக்கவில்லையென்றால் என்ன
வா
தத்தெடுத்து கொள்ளலாம் காதலை
-ஜின்னா அஸ்மி

படித்தது

அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்
கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது.
என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே
சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப
அழகாகத்தானிருக்க வேண்டும்.

-படித்தது

மனுஷ்ய புத்திரன்

பெரும் கூட்டத்தின் நடுவே
அயர்ந்து தூங்கும்
மனிதர்களை எனக்குப் பிடிக்கும்

பெரும் இரைச்சலுக்கு நடுவே
அமைதியாய்த் துயிலும்
நாய்களை எனக்குப் பிடிக்கும்

இந்த உலகத்தின்
வன்முறையை
நாம் வேறெப்படியும்
கையாள முடியாது

-மனுஷ்யபுத்திரன்

கலீல் ஜிப்ரான்

கடவுளின் படைப்பு :

கடவுள் தன்னிடமிருந்து ஆன்மாவைப் பிரித்து அதை ஓர் அழகிய தேவதையாக ஆக்கினார். அவளுக்கு ஆசீர்வாதமாய்க் கனிவையும், கவர்ச்சியையும் அருளினார். இன்பக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்து “இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் நீ மறக்க நேர்ந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து நீ எதையும் அருந்தாதே” என்று கூறினார். “ஏனென்றால் மகிழ்ச்சி என்பது தற்போதைய தருணத்தைத் தவிர வேறு சமயத்தில் வருவதில்லை.” மேலும் துன்பக் கிண்ணத்தையும் அவளுக்குக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தில் உள்ளதைக் குடி. அப்போதுதான் வாழ்க்கையின் இன்பவேளை விரைந்து நழுவும் தருணத்தை நீ அறிவாய். ஏனெனில் சோகமே எப்போதும் நம்மிடம் மேலோங்கி நிற்பது.”

கலில் ஜிப்ரான்...

பேயோன்

காசு தீரும்போது மாதம் மிச்சமிருக்கிறது. மாதம் தீரும் போது கடன் மிச்சமிருக்கிறது."

-பேயோன்

மகுடேஸ்வரன்

இந்தக் காலம்

நன்றாக இல்லை.

மாலை நாளிதழ்களை

யாரும் படிப்பதில்லை.

பேருந்துகளில் எப்போதும்

உட்கார இடமில்லை.

மிதிவண்டி வைத்திருந்தால்

பஞ்சர் ஒட்ட ஆளில்லை.

எம்ஜிஆர் படங்களை

அரங்கில் பார்க்க முடியாது.

கலைஞர் பேசும் கூட்டங்கள்

குறைந்துவிட்டன.

படம்பார்க்க வந்த பெண்டிர் கூட்டம்

என்ன ஆனதென்றே தெரியவில்லை.

முதல் மரியாதையை

இன்று வெளியிட்டால்

முதல் மூன்று நாள்தான் மரியாதை.

தொலைக்காட்சித் தொடர் பாதிப்பால்

பெண்டாட்டிகள் சண்டைக்கு வருகிறார்கள்.

சிறு பத்திரிகைகள்

வருவதாய்த் தெரியவில்லை.

முதலமைச்சர் எழுதுவதால்தான்

கடிதம் என்ற ஒன்று

இருப்பதே தெரிகிறது.

இலக்கிய வித்தாரங்களை

எல்லாரும் பேசுகிறார்கள்.

திருவிழாவுக்குப் பாட்டு வைத்தால்

கேட்பதை விடுத்துக் கடுப்பாகிறார்கள்.

அரிசி மண்ணில் விளைவதைப்

பிள்ளைகள் அறியாதிருக்கிறார்கள்.

நல்ல மழை பார்த்து

நாளாயிற்று.

குடி மக்களைக்

‘குடியுங்கள் மக்களே’ என்னும்

அரச நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை.

கல்விக் கூடங்களில்

சாலைப் பயணங்களில்

வண்டி நிறுத்தங்களில்

பன்மாடக் கொட்டகைகளில்

எங்கும் எங்கும் கட்டணக் கொள்ளை.

கட்டுப்பாடில்லை... கணக்கு வழக்கில்லை.

ஆசிரியர் பயிற்சிக்கு

ஆள் சேர்வதில்லை.

தமிழ் படிப்போர்

தமிழறிந்தோர்

தட்டுப்படவில்லை.

வாகனப் பெருக்கம்

சாலைகளைத் தின்றுவிட்டன.

பதிப்பகத்தார் பஞ்சப்பாட்டு

இன்னும் ஓயவில்லை.

பொறியாளர்க்கு எட்டாயிரமாம்

புரோட்டா பிசைய பதினெட்டாயிரமாம்.

தோனி அடிக்கடி வென்று

கிரிக்கெட்டை மறக்கடித்துவிட்டார்.

எல்லாப் பெண்களும்

எக்கச்சக்கமாகப் படித்திருக்கிறார்கள்.

எப்படிப் பெண் கேட்பதென்றே

தெரியவில்லை.

வெஸ்ட் இண்டீசா

அப்படியென்றால் என்ன என்று

பாப்பா கேட்கிறாள்.

காய்கறி வாங்குவதற்குக்

கட்டுப் பணத்தை

உடைக்க வேண்டியிருக்கிறது.

முடிவெட்டும் கட்டணத்தைவிட

பக்கத்தூர் முருகனுக்கு

முடியிறக்கிவிட்டு வருவது

செலவு குறைவு.

ஆளில்லாத கண்ணாடி அறை

குழல் விளக்கொளி

குளிர்பதன வசதி

அதற்குக் குருதியும் சதையுமாய்

மனிதக் காவல்

தானியங்கு பணமெடுப்பு நிலையங்களாம்.

நகர் மையத்திலிருந்து

நகர மைந்தன் வெளியேற்றப்பட்டவாறே

இருக்கிறான்.

கடைத்தெருக் கடைகளில்

யார்க்கும் தேவையில்லாதது

எப்போதும் விற்கிறது.

யார்யாரோ நாயகர்கள்.

எல்லாரும் இயக்குநர்கள்.

காக்கைக்கு முன்பெழுந்து

ஓடுவோர் தொகை பெருகிவிட்டது.

பல்குச்சியைத் தவிர

எல்லாமே செல்பேசியில் இருக்கிறதாம்.

ஐபோனாம் அறுபதாயிரமாம்

நமக்குப் பால் சுரந்தூட்டிய பசுவினம்

அழிந்துகொண்டிருப்பதை

யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.

உண்மையாகவே

இந்தக் காலம் நன்றாக இல்லை !

- கவிஞர் மகுடேசுவரன்

15/09/2018

வெற்றி

*கற்பித்தல் என்பது அறம்...*
கற்பித்தலை வெறும் பதிவேடுகளை மட்டும் பராமரிக்க வேண்டும் என்றும்
தேர்வுகளுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதும் என்று சுருக்கி கொள்பவர்கள் ஆசிரியர் மாதிரி இருந்துவிட்டு போயிடலாம்... ஆனால் ஆசிரியராக மாற முடியாது...
ஒரு மிகச்சிறந்த ஆசிரியர் என்பவர் ஓவியர். ம.செ.அவர்களைப்போன்று அறத்துடன் இருக்க வேண்டும்... இயங்க வேண்டும்...

*ஓவியர். ஐயா. ம.செ.வைப்பற்றி சு.வெ..*

என் சக பயணியாக வந்துகொண்டிருக்கும் ஓவியர் மா.செ ஐயாவுக்கு நன்றி.

ஒருநாள் அவர் எனக்கு போன் செய்து

*``நான் இதைக் கேட்கக் கூடாது. இருந்தாலும் கேட்கிறேன். `நூறு நரம்புகளைக் கொண்ட யாழை அவள் மீட்டிக்கொண்டிருந்தாள்'னு எழுதியிருக்கிங்க. என்னால நூறு கோடு போட முடியாது. அதனால, எண்ணற்ற நரம்புகளைக் கொண்ட யாழைனு மாத்தலாமா?'' னு கேட்டார்*.

*எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. யாரும் அதை எண்ணிப் பார்க்கப் போவதில்லை. இருந்தாலும் இது கலை.இது கலை. அதற்கு நான் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறாரே. அது பெரிய விஷயம்.*

அவர் எவ்வளவு பெரிய மனுஷன். இப்படி மெனக்கிடுகிறாரே. அவரோடு இணைந்த இந்தப் பயணம் எனக்குப் பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்கிறது...
_சு.வெங்கடேசன்.
வேள்பாரி 100 வது அத்தியாய விழாவில்...

நாம் ஆசிரியர் மாதிரி இருக்க வேண்டுமா...?.
ஆசிரியராக இருக்க வேண்டுமா...?.
சிந்தியுங்கள் தோழமைகளே...
_வெற்றி.