28/09/2019

செல்வராஜ் ஜெகதீசன்

அழைத்துப் போய் வந்த
   ஆசிரியரின் அத்தனை
   கெடுபிடிகளுக்குப் பின்னும்
   இன்னமும் நினைவில்
   அந்த ஸ்கூல் பயணம்
   இன்பச் சுற்றுலா என்றே..!”

-செல்வராஜ் ஜெகதீசன்.

-சுற்றுலா தினம்

பேயோன்

காசு தீரும்போது மாதம் மிச்சமிருக்கிறது. மாதம் தீரும் போது கடன் மிச்சமிருக்கிறது."

-பேயோன்

உஷா

குழந்தை வளர்ப்பும் பூத்தொடுப்பது போன்றதொரு கலை தான்.... அழுத்தம் அதிகமானால் நசுங்கி விடும்... இறுக்கி பிடித்தால் அறுந்துவிடும்...

உஷா

புதுசா ஒரு பொருள் வாங்கிட்டு நண்பர்களிடத்தில் நல்லா இருக்கா இல்லையான்னு ஒபினியன் கேட்கிறது.... சுகப்பிரசவத்தில் ஆணா பெண்ணானு கேட்டு  ஆசுவாசப்படற மாதிரி.....

எஸ்.ரா

சென்ற நூற்றாண்டில் ஒரு மனிதன் நடந்த தூரத்தில் 10%கூட இன்று நாம் நடப்பதில்லை.நடை சுருங்கிவிட்டது. கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி.நீண்டதூரம் நடத்தலைக் கால்களால் சிந்திப்பது என்கிறார்கள்...

-எஸ்.ரா

பேயோன்

காசு தீரும்போது மாதம் மிச்சமிருக்கிறது. மாதம் தீரும் போது கடன் மிச்சமிருக்கிறது."

-பேயோன்

இந்திரன்

கவிதை என்பது கப்பல் அல்ல.அது மீன். மொழிக்குள் இருக்கும் பிராணவாயுவை அது எந்த அளவுக்குச் சுவாசிக்கிறதோ அந்த அளவுக்கு அது உயிர்த் துடிப்புள்ளதாகிறது

-இந்திரன்

சுப.வீ

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்! தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா..என்று கேட்டார் அண்ணா. கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா.

சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.

ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா...

இவான் துர்கனேவ்

‘காதல் வயது தொடர்புடையதல்ல; ஆன்மாவுடன் தொடர்புடையது. காதலின் முன் வாழ்வின் வரையறைகள் அர்த்தமற்றவை. வேறெந்த உணர்ச்சிகளுக்கும் பொருளில்லை. காதல், வாழ்வின் ஓர் அங்கமல்ல; காதலே வாழ்வின் முழுமை. நிராகரிப்பின் உச்சத்திலும் அவமானத்தின் கீழ்மையிலும்கூட காதலின் புனிதத்தைக் காக்க முடியும்!.

இவான் துர்கனேவ்

சிற்பி

இடதுபக்கம் போ என்பது
சாலையின் விதி!
இரண்டு பக்கமும்
பிச்சைக்குப்போ என்பது
ஏழையின் விதி!

அவன் குடியிருக்க இடமில்லை
நல்ல வேளை
பசி குடியிருக்க
அவன் வயிறுண்டு

-சிற்பி

மகுடேசுவரன்

இரயில் பயணத்தில்
ஜன்னலில் கண்படும்
தோட்டத்து வீடுகளை
ஏக்கத்தோடு
பார்த்துச் செல்லும்
பயணி நான்

-மகுடேசுவரன்

பெரியார்

மனித தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தை என்மீது சுமத்திவிடாதீர்கள், பின் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்

-பெரியார்

மணிகண்டபிரபு

தேர்வு முடிந்தவுடன் புத்தகங்கள்
எடையற்றதாகி விடுகிறது.!

சுந்தர ராமசாமி

உண்மையின் நெருப்பில் சரிந்த உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல.அதே மாதிரி தியாகத்தில் வெந்த உயிர்கள். மண் அன்றும் கருப்பு.இன்றும் கருப்பு.காரணங்கள் சரியில்லை,அறிந்து கொள்ளத் தவறிக் கொண்டிருக்கிறோம்.உண்மையை பற்றும் போதும் கூட ,அது மூளையில் உட்கார்ந்து கொண்டு பல்லைக் காட்டுகிறது. ரத்தத்தில் கரைய மறுக்கிறது. ஏதேதோ தடுப்ப்ச் சுவர்கள். சுயநலங்கள். அகந்தை. ஏதேதோ.

ஜே.ஜே சில குறிப்புகள்
(சுந்தர ராமசாமி)

எஸ்.ரா

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை நாவலிலிருந்து சில வரிகள்...

1.வெற்றிகளும், சந்தோஷங்களும், துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்சி இருக்கின்றன என்பது எவ்வளவு வேதனையானது.. இவ்வளவுதானா மனித வாழ்க்கை..

2.மனிதர்களில் பெரும்பான்மையினர் பலவீனமானவர்கள், அவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் போவதற்க்கு அவர்களின் தேவையற்ற குற்ற உணர்ச்சியும் தைரியமற்ற மனமுமே காரணம்... ஒருவன் துணிந்து செயல்பட ஆரம்பித்தால் எதையும் அடைந்துவிடலாம்... குடும்பமும் உறவுகளும் நட்பும் வறுமையும் தான் தடையாக இருக்கின்றன... அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்பவன் அதிகாரத்தின் உச்ச நிலையை அடைகிறான்..

3. அச்சத்தை உருவாக்குவதுதான் ஆள்பவனின் முதல் பணி...
சட்டங்கள் அதற்கு துணை செய்கின்றன... எவன் நீதியைத் தனதாக்கிக் கொண்டு அதைத் தன் விருப்பத்தின் படியே செயல்பட வைக்கிறானோ அவன் அரசனாக முடிகிறது... நீதி என்பது எவ்வளவு எளிதான வழி முறை... ஒரு நபரை காரணமில்லாமல் கொலை செய்வதை விடவும் சட்டத்தின் வழியே குற்றவாளியாக்கி கொள்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது...

4. ஒன்றை அடக்கி ஆள முடியாத போது அதை பலி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.. இதுவே அரசு நீதி..

5. அதிகாரத்தை கைப்பற்ற முயலும் போது உறவுகள் எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை...

6. நீ உதறித்தள்ளிய பொருளை யார் எடுத்துக்கொண்டால் உனக்கென்ன....

7. ஆயிரம் வெற்றிகள் கற்றுத்தராத, ஆயிரம் தோல்விகள் கற்றுத்தராத வாழ்க்கை குறித்த புரிதலை நோய்மை கற்றுக் கொடுக்கும்..

8. அப்பாவிகள் மீது குற்றங்களை ஏற்றிவிடுவது ஒன்றும் புதிதல்ல.. வரலாறு அதையே நமக்கு சொல்கிறது...

9. ஒருவன் விதியை நம்பத்துவங்கிய மறுநிமிஷம் பலவீனமானவன் ஆகிவிடுகின்றான்...

10. எனது தலையில் உள்ள கிரீடம் என்னை அழுத்தும் போது நான் விரும்பாத விஷயங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது...

11. குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பது ஒன்றுதான் ஆறுதலானது..

12. நிழல்கள் ஒரு போதும் பேசுவதில்லை...

13. உலகமே கடந்த காலத்தின் மீதுதான் சாய்மானம் கொண்டிருக்கிறது... நிகழ்காலத்தை  எதிர்கொள்ள கடந்த காலம் தான் துணை நிற்கிறது..

14. நீதி என்றால் என்ன...
அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே  நீதி...

15. ஒருவன் மீது குற்றம் சுமத்த ஒரு காரணமும் தேவையில்லை.. நிரூபணம் செய்யத்தான் சாட்சிகள் தேவை..

16. நீதி, அநீதி என்பது யாருக்கு வழங்குகிறோம் என்பதைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்..

17. ஒருவனை குடும்பத்திலிருந்து பிரிந்து விடுவது தான் உண்மையான தண்டனை.. மனிதர்கள் தனிமையில் வாழ பயப்படுவர்..

18. உலகில் இதுவரை கவிதைகளும், புத்தகங்களும் தான் தடை செய்யப்பட்டுள்ளன.. ஆயுதங்கள் எதுவும் தடை செய்யப்படவில்லை...

19. இந்த தேசத்தில் மூன்று விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள்..
ஒரு விதம் உண்மையை ஒருபோதும் அறிந்து கொள்ள விரும்பாதவர்கள்..
இரண்டாம் விதம் உண்மையை அறிந்து கொண்டு செல்ல முடியாமலும், ஏற்றுக்கொள்ள முடியாமலும் தவிப்பவர்கள்...
மூன்றாம் விதம் உண்மையைத் தேடி அறிந்து கொள்வதுடன் அதை உரத்துச் சொல்பவர்கள்...🐅

வண்ணதாசன்

என்ன செய்ய முடியும் உங்களால்?
ஒதுக்கித் தள்ளுவீர்கள்..
என்ன செய்ய முடியும் என்னால்?
ஒதுங்கிக் கொள்வேன்.

                 - வண்ணதாசன்

சேயோன் யாழ்வேந்தன்

விபத்து

ஏன் இந்த வேகம்?
எதற்கிந்த அவசரம்?
தலைக் கவசம் ஏன் போடவில்லை?
எந்தக் குற்றமும்
கண்டுபிடிக்க முடியாது அதனிடம்

கவசம் நொறுங்கி
செத்துக் கிடக்கிறது
ஒரு நத்தை
நட்டநடுச் சாலையில்.

மித வேகம்
மிக நன்று
யார் சொன்னது?

-சேயோன் யாழ்வேந்தன்

விக்கிரமாதித்யன்

அன்று மறதியில் , இன்று போதையில் செருப்பு தொலைவது மட்டும் மாறவேயில்லை
#விக்ரமாதித்யன்"

படித்தது

நம்பிக்கை துரோகம் என்பது, தகுதியற்ற ஒருவரை நம்பியதற்காக உங்களுக்கு தரப்படும் குறைந்தப்பட்ச தண்டனை....

-படித்தது

புத்தர்

காலத்திடம் எல்லாவற்றையும் குணப்படுத்துகிற ஆற்றல் இல்லை. இது இப்படித்தான், இவ்வளவுதான் என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற பக்குவமே அனைத்தையும் ஆற்றுப்படுத்துகிறது.

புத்தர்

சக்திவேல்

உங்களை விட்டு விலகிச் செல்பவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டால் உங்களை நோக்கி வருபவர்களின் கைகளைப் பற்றிக்கொள்ள முடியாமல் போய்விடும்.

-சக்திவேல்

விக்கிரமாதித்யன்

எட்டு மணி நேரம்  வேலை செய்ய வேண்டும்
எட்டு மணிநேரம் தூங்க வேண்டும்
எத்தனை மணி நேரம்
வாழ  வேண்டும்

-விக்கிரமாதித்யன்.

ரூமி

குறையில்லா நண்பனைத் தேடினால் ,
நண்பனில்லா மனிதனாகத் தனித்துத் தான்
நிற்க வேண்டும் !

-ரூமி

லாசரா

நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு, இல்லையேல் சந்தேகம் உங்களுடையது, உண்மை என்னுடையது,அவ்வளவுதான்.
  - லாசரா

படித்தது

பழகியதில் புரிந்துகொள்ளாதவர்களா விளக்கத்தில் தெளியப்போகிறார்கள்..

-படித்தது

சுப்பிரமணிய ராஜூ

அரசியல்

வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன்
கொப்பளிக்க
கொப்பளிக்க
வாயும்
ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்க்கிறேன்-
நீரே அழுக்கு

-சுப்ரமணிய ராஜூ

சுப.வீ

பாகற்காய் என்பதற்கு பாகு அல்லாத காய் அதாவது இனிப்பு அல்லாத காய். மதியம் என்பதற்கு முழுநிலவு எனப்பொருள்.எனவே நண்பகல் என்பதே சரி.

-சுப.வீ

காந்தி

தான் கடைபிடிக்கும் கருத்தை மட்டுமே அடுத்தவருக்கு போதிக்க வேண்டும். அடுத்தவரிடம் எதை போதிக்கிறோமோ அதை முதலில் நாம் பின்பற்ற வேண்டும்

-காந்தி

20/09/2019

மு.மனோன்மணி

ஒத்திகை

ஏறும் போதும்
இறங்கும் போதும்
நூறுமுறை திரும்ப வைக்கும்
மாடிப்படிச் சுவரில்
மாட்டப்பட்ட கண்ணாடி.

அடிக்கடி முகம் கழுவி
மஞ்சள் பூசி மையிட்ட
முக அழகை
கொஞசமும்
அதியமாய்க் காட்டத் தெரியாத
குணம் அதற்கு.

பழித்துக் காட்டினால்
என்னைப் பழிக்கும்.
எது எப்படியாயினும்
நிதம், நிதம்
ஒத்திகை பார்த்துக் கொள்ள
உதவும் தோழியது
யாருக்கு எந்த முகம்
காட்ட வேண்டுமென.

மு.மனோன்மணி.

Chitran Raghu

என்கிறேன்களும், என்கிறாய்களும்
*********************
நான் ஒரு
கவிதை
எழுதப்போகிறேன்
என்கிறேன்.
என்னைப் பற்றியா
என்கிறாய்.
ஆமாம்
என்கிறேன்.
என்னைப் பற்றி
எழுதுவதற்கு
என்ன இருக்கிறது
என்கிறாய்.
இருக்கிறது
என்கிறேன்.
பிறகு சட்டைப்
பைக்குள்ளிருந்து
எடுத்து
உன்னிடம் காண்பிக்கிறேன்.
சில என்கிறேன்களையும்
சில என்கிறாய்களையும்.
பொய்யாய்க் கோபித்து
நீ உருப்படமாட்டாய்
என்கிறாய்.
தெரியும்
என்கிறேன்.

எனது 'சில்லவுட் புத்தர்' கவிதைத் தொகுப்பிலிருந்து - Chitran Raghu

ராஜா சந்திரசேகர்

தடவிக் கொடுப்பதை
பாசம் என்று எடுத்துக்கொள்கின்றன
பலி ஆடுகள்
-ராஜா சந்திரசேகர்

அண்ணா

Go to the people,
Live with them
Learn from them
Love them
Start with what they know
Build on what they have
-Lao Tzu
(அண்ணா முதல்வராய் இருந்தபோது அவர் மேசையில் வைத்துக்கொண்ட வாசகங்கள்)
(மணிகண்டபிரபு)

அண்ணா

புகழுக்காக நீங்கள் போடும் தூண்டிலில்
புழுவாக எளிமை மட்டும் இருக்கட்டும்
#அண்ணா

வ.வே.சு

நாளை, நாளை என்று
நாட்களினைச் சாகடித்தேன்
நாளை ஒரு நாளில்
நான் சாவேன்;நாள் வெல்லும்!

-வ.வே.சு

உஷா

எதிர்பார்ப்பு
பெரும்பாலும்
ஏமாற்றத்தை
தந்தாலும்-அது
தரும் அற்ப சந்தோஷம்
அளப்பரியது
அழகான கனவு போல்.....

பெரியார்

கேள்வி: நீங்கள்தான் கடவுள் இல்லை என்கிறீர்களே. பிறகு ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிறீர்கள்?

#பெரியார்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிவிட்டால் பிறகு பார்ப்பானே கடவுள் இல்லை, கோயிலில் இருப்பது வெறும் சிலைதான் என்று சொல்லி விடுவான். எனக்கும் வேலை மிச்சம். அதான்!

*#HBDபெரியார்_141*

எஸ்.ரா

தனது வேதனைகளை அதற்கு உரியவர்களிடம் நினைவுபடுத்துவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதுவும் சொல்லற்றுப்போன உணர்ச்சிகளை மீண்டும் உயிர்த்தெழச் செய்வது வலி மிகுந்தது.

-எஸ்.ரா

மணிகண்டபிரபு

எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா?
நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’
-பெரியார்

(_மணிகண்ட பிரபு)

சேயோன் யாழ்வேந்தன்

நடுச்சாலையில்
நம்பர் பிளேட்
நசுங்கிக் கிடந்தது
எண் சிறிதாகவும்
“அய்யனார் துணை”
பெரிதாகவும் தெரிந்தது.

ரத்தச் சகதியில்
வண்டி உருக்குலைந்து கிடந்தது.
கழுத்தில் அய்யனாரைக்
கட்டிக்கொண்டு வந்த
வண்டிக்கே இந்த நிலையென்றால்
அது இல்லாமல் வந்த

வண்டியோட்டிக்கு என்ன ஆனதோ?
மோதிய வாகனம்
பக்கத்தில் நின்றது

“வீரமாகாளி துணை” வாசகத்தோடு.
அய்யனாருக்கும் மாகாளிக்கும்
ஏதோ பழைய பகை போலும்!

- சேயோன் யாழ்வேந்தன்

வைரமுத்து

சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை.
இந்தி மட்டும் எப்படி
இந்தியாவை இணைத்து விட முடியும்?

-வைரமுத்து

ராஜா சந்திரசேகர்

ஏறக்குறைய சரியாக இருக்கிறது என்பதில் எங்கோ தவறு இருக்கிறது

-ராஜா சந்திரசேகர்

க.வை.பழனிச்சாமி

பழகிக்கொண்டது மனம்
உன்னைத் தழுவவும்
உன்னோடு மூழ்கிக் கரையவும்
நீ எறியும் இடத்தில்
எறிந்தபடி கிடக்கவும்

-க.வை.பழனிசாமி

மனுஷ்ய புத்திரன்

பெரும் கூட்டத்தின் நடுவே
அயர்ந்து தூங்கும்
மனிதர்களை எனக்குப் பிடிக்கும்

பெரும் இரைச்சலுக்கு நடுவே
அமைதியாய்த் துயிலும்
நாய்களை எனக்குப் பிடிக்கும்

இந்த உலகத்தின்
வன்முறையை
நாம் வேறெப்படியும்
கையாள முடியாது

-மனுஷ்யபுத்திரன்

லியோ டால்ஸ்டாய்

உண்மை எப்போதும்  சுருக்கமாய் பேசப்படுகிறது;  பொய்தான் விரிவாகப் பேசப்படும்.

-லியோ டால்ஸ்டாய்

மகுடேசுவரன்

பூனையும் நாயும்
அணியிலும் ஓணானும்
குழந்தையும் கிழவியும் மட்டுமில்லை..
நகரைக்
கடக்க முயன்றால்
நதியும் அடிபட்டுச் சாகிறது..

மகுடேஸ்வரன்..

13/09/2019

ஸென்

Dont Drink-please live with the tea

-தேநீரை பருகாதீர்கள். தேநீரோடு வாழுங்கள்

-ஸென்

வேள்பாரி வரிகள்

வெங்கடேசன் அவர்கள் எழுதிய வேள்பாரி நாவலில் இருந்து சில வரிகள்..

>இயற்கையின் அதி அற்புதம் எல்லாம் எதிர் பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது..

>ஆண் பெண் என்ற இரு சக்திகள் ஒருபோதும் ஒன்றையொன்று முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது..

>நீரும் மண்ணும் போலத்தான் ஆணும் பெண்ணும்..
நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்.. மறுநொடியில் ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும்..

>யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு.. அதற்கு அடிமை ஆகாதவர்களை அது சந்தித்தது இல்லை  என்ற அகம்பாவம் தான் புகழின் ஆணிவேர்..

>வள்ளல் தன்மை என்பது நிர்வாகத் திறமை அல்ல அது குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பை போன்றது..

>கள்ளின் சுவையை விட களிப்பூட்டக் கூடியது அல்லவா காதலின் சுவை..

>காதலிக்க தொடங்கியதும் கைகூடும் ஓர் அழகு இருக்கிறதே,
மனிதரைக் கண்டு மலர்களும் மயங்கும் காலம் அது தான்..

>மனிதனால் காதலை அழைத்து வர முடியாது, காதல்தான் மனிதனை அழைத்து வரும்..

>தன் மனைவி உடன் இருந்தாலும் அழகியை நேசிக்க எந்த ஆணும் தவறுவதில்லை..

>வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை..

>பார்த்ததன் வியப்பு பார்க்காததன் மீதே படிகிறது..

>குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும் போதும், தோற்கும் போதும்தான் ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான்..

>இயற்கை வழங்குகிறது
வாழ்கிறோம்..
இடையில் விற்கவும், வாங்கவும் நாம் யார்..

>எது ஒன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம்.. வணிகத்திடம் தான் ஆசையின் திறவுகோல் உள்ளது..

>கார்காலத்து இரவுகளில் மான்கள் இணை சேரும்..
தனது தேரின் ஒலி அவற்றின் இணக்கத்தை குறைத்து விடும் என்பதால் தேரில் செல்ல மாட்டான்..

>காலம் மனிதனின் அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறிகலங்கி போவதை தவிர வேறு வழி என்ன..

>மண்ணில் கால் பாவாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும் தான்...

>ஆலா பறவை ஓய்வின்றி நாள் முழுவதும் பறந்து கொண்டிருக்கும்..
நாள் முழுவதும் வேலை செய்பவனை ஆலாய் பறக்கிறார்கள் என்ற பேச்சு எங்கும் பரவியிருக்கிறது..

>எந்த ஒன்றையும் காது கொடுத்து கேட்பது எவ்வளவு ஆபத்தானது  என்பது கேட்ட பின்பு தான் புரியும்..

>முன்னேறுவதை விட கடினமானது பின் தொடர்வது..

>வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒரு விதமான கலை தான்..

>கனவு என்பது உண்மையின் மீது அகலாத திரையை போல படிந்து கிடக்க  வேண்டும்..
காதலுக்கு தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு..
அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெரும் தண்டனையை கனவுகளே அளிக்கின்றன..

>என் உடல் எக்கனியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் என் மனமோ ஒற்றை விதையுடைய மாங்கனி..
அதில் இன்னொரு விதைக்கு இடமில்லை..

>விற்கப்படும் இடத்தில் முடிவாகும் விலை பொருளுக்கு மட்டுமல்ல, அதைப் பற்றிய அறியாமைக்கும் சேர்த்துதான்.. இதுதான் வணிகத்தின் நியதி..

>ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதைப் பொருத்துத்தான் மனித மனம் எப்படி அதை எடுத்துக் கொள்கிறது என்பது தெரிய வருகிறது..

>சிலம்பின் வேலை காலுக்கு அழகூட்டுவது, மனதை மகிழ்விப்பது அல்ல..
காதுகளுக்கு ஓசையை கடத்துவது மட்டுமே.. ஓசை தேவையில்லாத போது அதை கழற்றிவிடுகிறார்கள்..

>பெண் தன் காதலனின் அழைப்பை ஏற்று ஊர் உறங்கும் வேளையில் ஓசையின்றி அவனோடு சென்றுவிடக் கூடாது..
அதற்காகத்தான் அவள் எங்கு சென்றாலும் ஓசையோடு செல்லும் ஏற்பாட்டை செய்தார்கள்..

>மானிலும், மயிலிலும் மட்டுமே ஆண் அழகு என்றான் முருகன்.. நானும் அப்படித்தான் நம்பினேன் உன்னை காணும் வரை என்றாள் வள்ளி..,

>காதல் சற்றே தலைகீழானது..
நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேரல்ல..
வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர்..

>உதிராத பூக்களை எனது மார்பில் சூட ஏன் ஆசைப்படுகிறாள் என முருகன் நினைத்துக் கொண்டிருக்கும்போது,
வள்ளி சொன்னாள்
அசைத்தால் உதிராதது அணைத்தாலும் உதிராதல்லவா..

>சொல்லாத சொற்களைச் சுவைத்துதான் காதல் வளர்கிறது..

>உனது ஆற்றல் எனை நோக்கி கடத்தும் காதல் எதிர் கொள்ள முடியாததாக இருக்கிறது.. உள்நுழைந்த நறுமணமாய் உனக்குள் மறைகிறேன் நான்..

>நான் உன்னுள் மறைந்து கொள்கிறேன்..
என்னை நீ கண்டறியாதே..

>நீயின்றி நான் காண விண்ணேது? மண்ணேது?..

>அவ்விடம் அணையாதீர்கள்.. பின்னர் ஒருபோதும் விலகமாட்டீர்கள்..

>பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்து தான் வெளிவருகின்றன..

>எவ்வளவு ஒன்றினாலும்,
விலக வேண்டிய இடம் உண்டு என்பதை உணரும் நேரம் சற்றே கடுமையானது..

>உரையாடல்களை பெரும்பாலான நேரங்களில் உணர்வுகளே முடிவு செய்கின்றன..

>ஒரு நிலைக்குப் பின் வெற்றி ஏற்படுத்தும் சுவை பழக்கப்பட்டதாக மாறிவிடுகிறது.. அது இன்னொரு செய்தியாக தன்னைத்தானே கீழே இறக்கி கொள்கிறது..

>கணவன் மனைவிக்கான அக வாழ்வுக்கு அகன்ற படுக்கையை  போல் இடையூறான இன்னொரு பொருள் எதுவும் இல்லை..

>புதிய வரவு அறிந்து, ஏற்கனவே நிலை கொண்டவை விலக வேண்டியது விதி தானே?..

>கொடுத்த வாக்கினை மதிக்கத் தவறும் மனிதர்களிடம் பேச என்ன இருக்கிறது..

>இயற்கை ஒன்றுக்குள் ஒன்றாக தனது உண்மைகளை மறைத்து வைத்து விளையாடுகிறது.. இவற்றையெல்லாம் கண்டறிவதும் இணைப்பதும் புரிந்து கொள்வதும் எவ்வளவு சுவையூட்ட கூடிய ஒன்று..

>தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பதன் மூலம் உருவாக்கப் படும் மன ஓவியம், வார்ப்பு சிலையை விட வலிமை மிக்கது..

>மன ஈடுபாடின்றிச் சொல்லும் ஒற்றைச் சொல்கூட ஒருவரைக் காட்டிக் கொடுக்கும்..

>அளவற்ற மகிழ்வோடு இருக்கும் ஒருவனிடம் கவலையை எப்படி பகிர்ந்து கொள்வது..

>இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு..

>கண்முன் நடக்கும் உரையாடலை கண்கொண்டு மட்டும் பார்த்து விட முடியாது.. ஏனென்றால் இது காதலின் உரையாடல்..

>காதல் இப்படிதான் தேடலில் தொடங்கி, தொலைவதில் முடிவடையும்..

>பூவோ, மதுவோ நினைவை உதிரச்செய்யும் மயக்கங்களைத்தான் உருவாக்கும்.. காதல் மட்டுந்தான் மயங்க மயங்க நினைவைச் செழிக்கச் செய்யும்..

>இரையாகும் உயிரும் சுவையுணர்வது காதலில் மட்டுந்தான்.. விழுங்கும்பொழுதே  விழுங்கப்படுவதால் இந்த விசித்திர நிலை..

>காதல் கொண்டவர்களுக்கு மயங்கவும், கிறங்கவும், மூழ்கவும் இன்னொன்று தேவையா என்ன?..

>மின்னல் ஒளிக்குத் தாழம்பூ மலரும்..

>எப்பொழுதும் அடிவயிற்றில் தொங்கும் குட்டியைக் கைவிடாத குரங்குகள் இடியோசை கேட்ட கணம் கைவிடும்..

>பயணம் எப்போதும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்..

>உறங்கும் இரவுகளில் கனவுகளை நிறுத்தும் வல்லமையை மனிதன் ஒருபோதும் பெற்றுவிட முடியாது..

>கனவுகள் கலைந்த பின்னும் அவை நினைவிலிருந்து மறைவதே இல்லை..
ஏனென்றால் கனவுகள் தோன்றுவதே நினைவு குழிக்குள் இருந்து தான்..

>அறியாமைதான் பேரழகு..

>என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்..
எப்படி நடந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் தான் எல்லோரின் விருப்பமும் இருக்கும்...

>கேலி விளையாட்டில் பெண்கள் செல்லும் ஆழம் ஆண்களால் அறிய முடியாதது..

>காட்டில் எதையும் நாம் தீர்மானிக்க முடியாது..
காடு தான் தீர்மானிக்கும்..
நாம் பார்க்கப் போனது ஒன்றை பார்த்தது வேறொன்றை.. அப்படித்தான் எல்லாமும்..

>பொறாமையும் வெறுப்பும் மனித மனதை குறைந்த அளவே இயக்கும் ஆற்றல் கொண்டவை..
பகை மட்டும்தான் அளவற்று வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது..

>பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்து விடும் பகை மட்டுமே மூட்டியவனால் கூட அணைக்க முடியாத பெரும் நெருப்பு..

>பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான்..
பகை சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும்..

>நதியின் ஆழத்தை படகு அறியாது.. நீரின் போக்கில் நகர்வதே அதற்கு இன்பம் பயக்கக் கூடியது.. அதன் தேவையும் அதுதான்..

>வேட்டையின் ஒரே விதி போராடுதல் மட்டும்தான்..

>விதையை நடாதவனை கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது..

>இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்..

>நீங்கள் ஒன்றை அறிய நினைக்கும் போது உங்களின் அறியாமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளுதல் இயற்கைதானே?..

>பயனளிக்கும் இடத்தை நோக்கி பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் விதி..

>வளைய மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும் தான் இயற்கையின் அமைப்பு..

>தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணி வேரை அறுத்துக் கொள்வதற்கு நிகர்..

>உண்மை என்பது நாம் இருக்கும் இடம் சார்ந்தது..

>தனது புகழின் மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின் வழியே பார்ப்பது அளவிடமுடியாத மகிழ்வைத் தரக் கூடியது..

>மறைக்கப்படுவது தான் கவனிக்கபடுவதாக மாறும்..

>நெருப்பில் எரித்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல் கொண்டது பனம்பழம் மட்டும் தான்..

>மனங்களை வெல்ல தெரிந்தவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான்..

>காந்தள் மலர் மலரும் வரை தேனும் வண்டும் காத்திருக்காது.. கிண்டி மலரச் செய்து தேன் பருகும்..

>மனிதனுக்குள் அவமானத்தை துளையிட்டு உள்நுழைக்கிற கருவி சொற்கள் இன்றி வேறு இல்லை..

>மேகம் எப்படி காற்றுக்கு எதிராக பயணிக்கும்..

>ஒருவனின் செல்வத்தை கவர்ந்திட போரிட்டால் அந்தப் போரில் வெற்றி தோல்வி உண்டு..
ஆனால் ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிட முடியாது..

>தமக்கு வெற்றி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கும் வரை விதிகளைப் பின்பற்ற அனைவரும் பழகியுள்ளனர்.. ஆனால் அந்த நம்பிக்கை தவறும்போது விதிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை..

>போர் விதியின் அடிப்படையில் வெற்றி பெற முயல்வதை விட, வெற்றி பெறுவதற்கான முறையில் விதிகளை வடிவமைத்துக் கொள்வதே அறிவுடைமை..

>நிராகரிக்கும் ஒன்றின் மீது உணர்ச்சியை படிய விடுவது பொருளற்றது..

>ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது விதிகளை தானே முன்னோர்கள் அறம் என வகைப்படுத்தினர்..

>விதிகள் நீரை ஒழுங்குபடுத்தும் வாய்க்காலை போன்றவை..
ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் நீரில் கரையக்கூடியவை..
அதனால் தான் உருவாக்குபவனுக்கு பணியும் தன்மை விதிகளின் இயல்பாகிறது..

>போர்க்களம் எதிரியைக் கொன்றளிக்கும் உரிமையை ஒவ்வொரு வீரனுக்கும் வழங்குகிறது..
ஆனால் அந்த உரிமைக்கு சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கு முறைகளும் உண்டு.. அதையே போர் விதிகள் என்கிறோம்..

>தாக்குதல் கண்டு புறமுதுகிட்டு ஓடுகிறவனயோ, கைகூப்பி வணங்குகிறவனையோ, அவிழ்ந்த தலைப்பாகையை சரி செய்கிறவனையோ, ஆயுதம் இழந்தவனையோ தாக்கக் கூடாது..

>அதிகாரத்தின் சொல்லை மறுக்கும் ஆற்றலை இழப்பதுதான் கேடுற்ற காலத்தின் அடையாளம்..

>படைப்பிரிவில் ஒவ்வொரு வீரனும் மாவீரனாக இருக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை..
உத்தரவுகளையும் ஒழுங்கு முறைகளையும் பின்பற்றும் ஒருவனாக இருந்தால் மட்டுமே போதுமானது..

>வாரிக்கையனும் சோம கிழவனும் முதல் தலைமுறையினர்..
தேக்கனும் கூழயனும் இரண்டாம் தலைமுறையினர்..
பாரியும் முடியனும் மூன்றாம் தலைமுறையினர்..
உதிரனும் நீலனும் நான்காம் தலைமுறையினர்..

>மரணத்தை மதிப்பற்ற ஒன்றாக கைக்கொண்டால் மட்டுமே போர்க்களத்துக்கு உரியவராக மாற முடியும்..

>அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது..

>உனது வேகத்தையும் தாக்குதலையும் நீ தீர்மானி.. அவன் தீர்மானித்த ஒன்றை நோக்கி நகராதே..