31/12/2017

வெற்றி

உன் நினைவுகள் தந்த மூச்சு காற்றினாலே உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்.உன் நினைவுகள் எப்போது வராமல் போகிறதோ அப்போது மரணித்திருப்பேன்
இவ்வுலகிலிருந்தும்...
_வெற்றி...

28/12/2017

பாரதிவாசன்

உடைபடுகிற
மௌனத் துகள்களின்
ஏதோவொரு மூலையில்
ஒட்டியிருக்கலாம்
வார்த்தைகளுக்கான
மையப்புள்ளி
_பாரதிவாசன்

27/12/2017

பாரதிவாசன்

விசம் போல
என்னுள் இறங்கி
பரவிக்கொண்டிருக்கிறாய்
நீ
வா..மரணம் நோக்கி
பயணிப்போம்....
எல்லாம் கடந்து..
_பாரதிவாசன்.
இடைவெளி நிரப்பும் வானம்.

பாரதி

மெய்மை கொண்ட நூல்களை அன்போடு
வேதமென்று போற்றுவாய்
_பாரதி

தென்பாண்டியன்

பறவை ஒன்றை வரையத்துவங்கினேன்.
வரைந்து முடித்ததும்
அது பறந்து விட்டது.

மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன்
அதுவும் பறந்து விட்டது.

நான் வரைந்து கொண்டேயிருந்தேன்
அவைகள் பறந்து கொண்டேயிருந்தன

கடைசியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்

பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.
_தென்பாண்டியன்.

இன்குலாப்

இன்றின் கடைசி நொடியிலும்
உலராது இருக்கிறது
ஒரு கண்ணீர்த்துளி
அதனுள் புகையும்
ஒரு தீப்பொறி.
_இன்குலாப்.
காந்தள் நாட்கள்.

இன்குலாப்

பெறுத்தாட்ட ஒரு கையுமில்லை
பாலூட்ட ஒரு மார்பும் இல்லை
அடைகாக்க ஒரு கூடும் இல்லை
முளைவிடுகிறது
விதை.
_இன்குலாப்.
காந்தள் நாட்கள்

அறிவுமதி

#மௌனம் கொண்டு ஓடி வந்தேன்
வார்த்தை வரம் கேட்டாய்...

#படகாய் மிதக்கும்
சிறகு!
மனம்
இது
போல்
இருத்தல்
அழகு!

அறிவுமதி
27.12.17

வெண்ணிலா

பேருந்து பயணத்தில்
தினம் பார்க்கமுடிகிறது
அந்த வீட்டை

சாலையோர தூசிகளை தாங்கி தாழ்வாரம்
ஈரமற்ற கிணற்றோரம்
காக்காயோ நாயோ
ஈரம் தேடி ஏமாந்து உருட்டிய வாளி
அதே நிலையிலேயே நின்றுருந்த கார்
நிரந்தரமாய் தாளிடப்பட்ட கதவு

ஒருநாள் கூட
மனித முகங்களையே வெளிக்காட்டாத அந்த வீட்டில்

வெறுமையை மறைக்க
விதம் விதமாய்
பூத்துக் குலுங்குகின்றன பூக்கள்
எல்லா நாட்களிலும்.!!

-அ.வெண்ணிலா

எழுத்தாளன்

எழுத்தாளன்

நான் ஏன் எழுத்தாளனாக மாறினேன். தனிமை மிக மோசமானது. மனதில் வார்த்தைகள் மட்டும் இல்லாமல் போய் விட்டால் மனிதர்களால் வாழமுடியாமல் போய் விடும்.

- தஸ்தாயேவ்ஸ்கி

கலைகள் மீதான ரசனை என்கிற மென்மையான பரவசத்தை விட்டுவிட்டு, வேறு எதனையும் முழுமையாக அனுபவித்து வாழ்கிறதொரு வாழ்க்கை எப்படி சாத்தியம்?

- ஜூலியன் பார்ன்ஸ்

கலைஞன் மன நோயிலிருந்து தப்பிக்கவே தனது கலையை உபயோகிக்கிறான்.

- சிக்மண்ட் ஃப்ரெய்ட்

எழுத்து எனக்கு ஒரு வடிகால். என் ஜீவியத்தின் ஆதாரம்.

- நிக்கி கியோவன்னி

எழுத்தாளனாக இருப்பதைத் தவிர வேறு எதுவுமாக என்னால் இருக்க முடியாதென்பதால் எழுதுகிறேன்.

- எம்.டி.வாசுதேவன் நாயர்

எழுதுவதற்கான எந்தத் திறமையும் என்னிடம் இல்லையென்பதைக் கண்டுகொள்ள எனக்குப் பதினைந்து வருடங்கள் ஆயின. அதன்பிறகும் என்னால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. ஏனெனில் நான் எழுத்தாளனென்று பெரும் புகழடைந்துவிட்டேன்.

- றொபேட் பெஞ்ச்லி

26/12/2017

வெற்றி

நீ ஏதாவது பதிவிடுவாய் என்று நானும்
நான் ஏதாவது பதிவிடுவேன் என்று
நீயும்
நிமிடங்களை கடத்துகிறோம்
எதுவும் பதிவிடாமலேயே...
_வெற்றி.

புதன்

இப்போது தான்
அழகாய் தெரிகிறது
குப்பை தொட்டியில்
என் கவிதைகள்..
நீ கிழித்து போட்ட பின்...
_புதன்.

கல்யாண்ஜி

இடுக்கில் பிள்ளையை இடுக்கிக்கொண்டே
மீன் மார்க்கெட்டில்
புஷ்பலீலா கேட்கிறாள்
கல்யாணம் செய்து கொள்ளும்
உத்தேசமே இல்லாயா என்று.
தாடி எல்லாம் பெரிதாக இருக்கிறதாம்.
என்ன விஷயம் என்று சிரிக்கிறாள்.
மீன் வாங்க வந்தால்
மீன் வாங்கிவிட்டுப் போனால் என்ன
எதற்கு இப்படி உயிரை வாங்குகிறாள்
இந்த பஷ்ப லீலா?
_கல்யாண்ஜி

எஸ் ரா

இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன்
-எஸ்.ரா

கல்யாண்ஜி

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு என்று நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி.
_கல்யாண்ஜி.

திவ்யா

உலகம் சுருங்கிவிட்டது
எனக்கு...
உனக்குள்....

வெற்றி

உன்னையும்
என்னையும்
ஏதோ ஒரு புள்ளியில்
கவிதை
இணைத்துவிடுகிறது...

திவ்யா

யார் பெரியவர் என்று யார் யாருக்கோ
நடந்த போட்டியில்
ஜெயித்தது யாரோ???? ஆனால்
தோற்றது
நான் தான்.....

ஆத்மாநாம்

அந்த விடுபட்ட உணர்விலிருந்துதான்,
இந்தச் செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு..

-ஆத்மாநாம்

சுந்தரராமசாமி

உன் நிறம் என்னைக் கவர்ந்தபின்தான்
உன் முகத்தைக்
கவனிக்கத் தொடங்கினேன்
-சுந்தரராமசாமி

மணி

தொலைபேசியில் துண்டிக்கும் கடைசி சொல்லில் அமைந்துவிடுகிறது
பேசுபவர் மீதான விருப்பும்,வெறுப்பும்"!

லிங்குசாமி

மயானக் கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப் போகிறார்கள்
-லிங்குசாமி

மகுடேஸ்வரன்

உலகத்தை அழகுபடுத்த மிச்சமிருப்பவை இன்னும் பிறவா குழந்தைகள்.
#மகுடேசுவரன்

யுகபாரதி

பெருமை பொங்க பிறரிடம் பேசுவதற்கேனும்
ஒவ்வொருவரிடமும்
ஒளிந்திருக்கும் காதல்
-யுகபாரதி

25/12/2017

கற்றதும் பெற்றதும்(மணி)

பிணமும்,பேருந்தும் ஒன்று.இரண்டையும் எடுக்கும்வரை சலிப்புடன் காத்திருக்க வேண்டும்..

ஒரு புகைப்படம் உயிர்கொள்வது
நம் நினைவுகளால் மட்டும்தான்..

ஒலிக்காமலேயே அலைபேசியை
எடுத்துப் பார்ப்பது
இணையம் வந்த பிறகுதான்"!

ஆர்டர் செய்யாமலே விரைவாய் வந்தது
"வாழை இலை"!

ஜெயகாந்தன்

படிப்பு என்பதே வயிற்றுச்சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச்சம்பளத்துக்கு
வழி தேடிக்கொள்ளும் முயற்சி
-ஜெயகாந்தன்

நா.முத்துக்குமார்

பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
முடி வெட்டுகின்றன
ஆடுகள்!

# பிரபலமானவர்களின் வீடு
வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
எதுவும் ஓடவில்லை!

# காலியான தைல புட்டி
நிரம்பியிருக்கிறது
வாசனையால்!

# காற்று பறித்து போட்டது
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
வேப்பம் பூக்கள்!

# யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்!

# இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன!

# பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்று திரும்பின
வறண்டு போனது நதி!

# கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது
வாழ்க்கையை மீன்!

# குழந்தைகள் நிறைந்த வீடு
சத்தமாக ஒலியெழுப்புகிறது
ஐஸ் வண்டி!

-நா.முத்துக்குமாரின் குழந்தைகள் நிறைந்த வீடு புத்தகத்திலிருந்து..

இன்குலாப்

வெறுமையற்ற கூண்டின்
கவலை உனக்கு
மகிழ்ச்சி கிளிக்கு.
_இன்குலாப்.
காந்தள் நாட்கள்.

இன்குலாப்

பன்னீரில் இல்லை
ரோஜாவின் அழகு.
_இன்குலாப்.
காந்தள நாட்கள்

24/12/2017

பாரதிதாசன்

நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம்தமிழர்
நாம்தமிழர்
என்றுமுர சறைவாய்.
_பாரதிதாசன்.

பெரியார்

“தொண்டு செய்து பழுத்த பழம்,
            தூய தாடி மார்பில் விழும்,
            மண்டைச் சுரப்பை
            உலகு தொழும்
            மனக்குகையில்
           சிறுத்தை எழும்
            அவர்தாம் பெரியார்,
            யார்? அவர்தாம் பெரியார்”
_பாரதிதாசன்.
இன்று தந்தைப் பெரியார் நினைவுநாள்..டிசம்பர் 24 ,1973.