பரவாயில்லை
செரிப்பற்று இடறும் என் அன்பை
மறைவில் சென்று வாந்தியெடுத்துப்போ
-யூமா வாசுகி
தனிமனித வழிபாடு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது
-படித்தது
நிராகரிக்கப்பட்டவர்களால்தான்
உலகம் இயல்பாக
இயங்கிக்கொண்டிருக்கிறது
ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் அல்ல
-சௌவி
>என் மனைவியும் ஒரு காலத்தில் நாணமுற்றவள் தான்
என்று என்னும் கணவன் அறியாமல்
சிரித்து விடுகிறான்..
>இப்போதுதான்
தோன்றியதா என்பதற்கும்
இப்போதாவது
தோன்றியதே என்பதற்கும்
நடுவில் உள்ள கடலில்
யாரோ தத்தளிக்கிறார்கள்..
>காற்றைத் தடுத்து
கதிர் வெம்மை ஏற்கும் கண்ணாடி சாளரமா அவள்?
நேர்காணத் தவிர்த்து
நினைவூறி வாழ்கிறாள்..
>பாழடைந்த கோவிலை வணங்குவதில்லை..
அதனுள் சென்று வழிபடுவதும் இல்லை..
அங்கே தெய்வம் இல்லை என்பதா காரணம்?
அதில் மனிதர் இல்லை என்பதே காரணம்..
தெய்வம் நீ என்றுணர்..
>புல் பூண்டு அற்று
அழிந்தது உலகு..
ஓர் உயிர் பிழைக்கவில்லை எல்லாம் முடிந்தது..
குற்றுயிராய் கிடந்த
கடைசி மனிதன்
தன் முகநூல் பக்கத்தில்
இறுதி செய்தியை பதிந்தான்..
புரியாத எழுத்துருவில்
அதற்கு
ஒரு லைக் விழுந்தது..
>ஒற்றையடிப்பாதைக்கு
ஒருபோதும் இல்லை
நான்கு முனை சந்திப்பு..
>குடி அகன்ற வாடகை வீடு
குழந்தையின் சுவர்க் கிறுக்கல்..
வளர்ந்த குழந்தை
தன் முதல் எழுத்தை தேடி
வந்தால் என் செய்ய?..
>உன்னருகில் நான் ஓர்
உவமைபோல்
நிற்கவேண்டும்..
மகுடேஸ்வரன்...
அன்புக்காக
இவ்வளவு நடிக்க வேண்டுமா?
வெறுப்பைப் பாருங்கள்
பாசாங்கில்லாமல்
எவ்வளவு தூய்மையாக இருக்கிறதென்று
18.8.2019
மாலை 5.15
மனுஷ்ய புத்திரன்
நெடுங்குகை இருளுக்குள்
முடிவற்றுப் போய்க் கொண்டிருக்கிறான்
ஓடும் ரயிலில்
புல்லாங்குழல் வாசிக்கும்
கண் தெரியாத இசைஞன்
-கலாப்ரியா
சில சமயம் இரவில் கண்விழிக்கும்போது,
அதிசயமாய்ப் போதை தெளிந்து,மிகத் துல்லியமான ஒரு மனநிலை ஏற்படும். முன்னும் பின்னும் மனம் பெண்டுலம் போல அசையும்.அந்தக் கணம் வரை செய்துவந்தவை முழுக்க எப்பேற்பட்ட அற்பத்தனங்கள் என்று மனம் திடுக்கிடும்.அந்த அற்பத்தனங்களுக்காய் உள்ளூறத் தன் மனம் வெட்கிச் சுருண்டு கொள்வது தெளிவாய் தெரியும்
-ஜெயமோகன்
நமக்குள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவது போல் இருக்கவேண்டும். பூனை எலியைக் கடித்துக் குதறுகிற மாதிரி இருக்கக்கூடாது
-ஜீவா
ஒருவனின் எதார்த்த உலகம் வெளியில் தென்படும் உலகம் அல்ல.
அவனுக்குள் இருப்பதும்
முடிவற்றதுமான உலகம் அது.
தன்னிடமிருந்து பயணிக்க ஆயத்தமாகும் ஒருவனுக்குத் தான் தெரியும்,
தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைக்கு முடிவில்லையென்று.
~
கமலா தாஸ் (என் கதை)
கவிதையோ எழுதுகின்றாய்
எனக்கேதும் விளங்கவில்லை
சொல்லெனும் தெருச்சரக்கை
உருமாற்றி ஜாலம் செய்தாய்!
புதுமையைத் தருவேன் என்று
புதிர்களை அடுக்கி விட்டாய்!
-ந.பிச்சமூர்த்தி
*அவதாரம்*
வேலு நாச்சியாராய்
குதிரை மீது வந்தேன்
இராணி மங்கம்மாளாய்
வாளைச் சுழற்றினேன்
ஜான்சிராணியாய்
எதிரிகளைப் பந்தாடினேன்
குக்கர் சத்தம் கேட்டது
சமையலறைக்குள் ஓடினேன்.
- தோழர். திண்டுக்கல் பாலபாரதி
கவனிக்காமல்
கடந்து விடுகிறோம்
கவனித்தாலும்
நின்று விடுகிறோமா
என்ன
- ராஜா சந்திரசேகர்
அழகாய் தலைசீவி பூ முடித்து புத்தாடை போட்டு
கண்களில் ஆர்வத்துடன்
நிற்கும் சிறுமிக்கு
நகரும் பேருந்தில் இருந்து
நான் செய்ய முடிந்ததெல்லாம்
இரண்டாம் முறை அவளை
திரும்பி பார்ப்பது தான்
நாக்கை நீட்டி உதட்டை சுழித்து வரும்
அவள் சிரிப்புக்கு
இன்னும் முடிந்தால்
ஒரு சிறிய கையசைப்பு..
இன்னும் என்ன..
ப்ரியவதா...
எல்லாப் பாடல்களையும்
உன் ஐ-பாடில்
வைத்திருக்கிறாய்
என்னை உனக்குப் பிடிக்குமா
என்பதை மட்டும் இன்னும்
ஐயப்பாட்டிலேயே
வைத்திருக்கிறாய்.
-நர்சிம்
*சாமக்கொடை*
பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.
- வித்யாஷங்கர்
குப்பைகளின் அன்பு
# ராணிதிலக்
எனக்கு அன்பு காட்டத் தெரியவில்லை
மதிய வேளையில்
யாருமற்ற சாலையின் மையத்தில்
சுட்டெரிக்கும்
வெயிலில்
வெப்பக் காற்றில் அலைந்தபடி
நிழல்தேடித் திரிகிறது
கசங்கிய ஒரு காகிதக் குப்பை
நான் அதைக் குனிந்து எடுத்து
சாலையோரத்தில் வாழும்
அதன்
வட்டவடிவ வீட்டில் சேர்த்தேன்
எல்லாக் குப்பைகளின்
முகத்திலும் ஒரே சந்தோஷம்
அவை
அதைக் கட்டி அணைத்துக்கொள்கின்றன
எனக்கு அன்பு காட்ட யாரும் இல்லை.
யாருமறியாமல்
பிரசாதத்தை
பயந்தபடி
எடுத்துண்ட குழந்தையை.,
“ ஐயோ மன்னிச்சிரு செல்லம்
நாளையிலிருந்து உனக்குதான் முதல்ல”
எனத் தூக்கிச் சிரித்தவளை...
யாருமறியாமல்
அம்மா என்றழைத்தான்
கடவுள்.
(Ram Vasant)
தெரியாது
ரயிலில்
தடவித் தடவி நகர்ந்துவரும்
அந்தப் பார்வையற்ற முதியவனுக்கு
சில்லறைச் சத்தத்தைத் தவிர
வேறொன்றும் தெரியாது.
அவனுக்குத் தூரமாக
ஜன்னலோரத்திலிருக்கும் ஒருத்தி
பசியை நிறுத்தி வைத்துவிட்டு
இடக்கையால் துழாவித் துழாவி
பற்களால் பர்ஸைத் திறந்து
பாதி எழுந்து
உடலை நீட்டி வளைத்து எட்டி இடுகிறாள்
ஒரு நாணயத்தை.
இப்படித்தான்
எனக்கு
யாரோ எதையோ இடுகிறார்கள்.
- இசை
சரி பண்ண முடியாத அளவுக்கு
அந்த வீடு சிதிலமடைந்திருந்தது.
அது பற்றிய
எந்தப் புகாரும் இல்லாத
இரண்டு அணில்கள்
உள்ளே போய் வந்து கொண்டிருந்தன.
அருகிலிருந்த மரம்
அந்த வீட்டை நோக்கி நடக்கத் துவங்கி இருந்தது.
ஒரு ஓடை தன் திசையை மாற்றிக்கொண்டு
வீட்டின் முற்றத்தில் உலாத்திக் கொண்டிருந்தது.
‘இந்த வீட்டில் சரிபண்ண வேண்டிய எதுவுமில்லை’ என்ற படி
நான் விலகி நடந்தேன்
- போகன்
வழியோர பெரு விருட்சங்களை வெட்டுக..
பாளம் பாளமாக அறுத்தெறிக..
அந்த மரம் அசோகரால்
நடப்பட்டதாக இருக்கலாம்..
அம்மரத்து விதையை இராஜேந்திரசோழன் ஊன்றியிருக்கலாம்..
கிருஷ்ணதேவராயரின் படைகள் அதன் நிழலில் போர்க்களைப்பாறியிருக்கலாம்..
சினத்தில் மதுரையை எரித்தவள் சேரநாடு செல்லும் வழியில் மரத்தடியில் ஒரு பாட்டம் அழுது தேம்பி இருக்கலாம்..
புத்தர் போதிசத்துவரில் ஒருவர் அங்கு உபதேசம் ஆற்றியிருக்கலாம்..
இரு வேறு குலத்தவர் அடிமர நிழலில் சந்தித்துப் பழகி இருக்கலாம்..
மானஸ்தர் அநேகர்
கிளை தொங்கி
உயிர் துறந்திருக்கலாம்..
ஆயிரக்கணக்கான வழிப்போக்கர் அம்மரநிழலில் நனைந்திருக்கலாம்..
அது வெளியிடும் உயிர் காற்றில் ஒரு ஊரே சுவாசிக்கலாம்..
அம்மரம்
நமது பாரம்பரியமாக
நமது உயிரோடு இருக்கும் வரலாறாக
உற்ற தோழனாக
உயிர் நிலையாக
இருந்திருக்கலாம்..
அதனாலென்ன
இவையாவும்
உமக்கு முக்கியமா என்ன..
வெட்டுக..
வீழ்த்துக..
மகுடேஸ்வரன்...
தூங்கும் குழந்தை முகம் சுளிக்கிறது.சிறிய பறவை போலக் கொட்டாவி விடுகிறது.அந்தச் சின்னஞ்சிறு உடலுக்குள் என்ன இருக்கிறது எனும் பெரும் வியப்பு ஏற்படும்.
'சித்தினியே இத்தினியே இத்தனை நாள் எங்கிருந்தாய் எனும் தாலாட்டே நினைவுக்கு வருகிறது
-ஜெயமோகன்
வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே
-அப்துல்ரகுமான்
நல்லவர்களை அடையாளம் காண ஒரு வழி?
"மாசக்கடைசியில் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்
-மதன்
முதலில் கம்யூனிஸ்டுகளை பிடித்துக்கொண்டு போக வந்தனர்
நான் வாயைத் திறக்கவில்லை
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பிறகு அவர்கள் யூதர்களைப் பிடித்துக்கொண்டு போக வந்தனர்
நான் ஏதும் பேசவில்லை
ஏனெனில் நான் யூதன் அல்ல.
பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஏதும் பேசவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.
பிறகு அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஒரு புரொட்டஸ்டன்ட்
எனவே நான் ஏதும் பேசவில்லை.
பிறகு அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்
அப்போது எனக்காகப் பேசுவதற்கு யாருமே இல்லை.
- மார்ட்டின் நீய்மொல்லர்
மூடி வைத்த இனிப்புப்பண்டத்தின் மீது
ஊரும் எறும்பைப் போல் ஊறுகிறது
நினைவு உன்மீது..
வாசனை தீண்டி விட முடியாத பாத்திரத்தில் வீற்று இருக்கிறாய் நீ..
அதோ எட்டமுடியாத எறும்பின் துயரமாய் சுற்றி வருகிறதே அதுதான் என் காதல்..
ப்ரியம்வதா..
இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் இருந்தால்
இந்த ஞாயிற்றுக்கிழமை இன்னும் இனிமையாக இருந்திருக்கக் கூடும்.
oOo
இந்த உலகம் காலந்தோறும் குழந்தையைப் போன்ற வெகுளித்தனம் கொண்ட மனிதர்களால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.
ஓஷோ
எங்கள் ஊர் யானைகள்
பத்து பைசாவுக்காக
எவரெவர் காலிலோ விழுகின்றன
- மு. சுயம்புலிங்கம்
(யானைகள் தினம்)
உண்மையான நண்பன் என்பவன் யார் தெரியுமா?
உங்கள் சொந்த வாழ்க்கையோடு எந்தச் சம்பந்தமும் இல்லாதவனே
-ஜெயகாந்தன்
நடந்த தடங்களில் பின்னோக்கி நடப்பதற்கும்..
பாதையோரத்தை அன்போடு பார்ப்பதற்கும்..
தொடங்கிய இடத்திற்கு நன்றி சொல்வதற்கும்..
குரைக்க எழுந்த குரலை அமர்த்துவதற்கும்..
எதிர்ப்பட்டவர்களின் இன்முகம் காண்பதற்கும்..
ஒரு காலம்
வாய்க்கும்..
அதை
முதுமை என்கிறோம்..
மகுடேஸ்வரன்..
பழங்காலத்தில் சொல்லத் தெரியாதவன் பாமரன்..
பிற்காலத்தில் படிக்கத் தெரியாதவன் பாமரன்..
முற்காலத்தில் தாய்மொழி தெரிந்து இருந்தாலும் ஆங்கிலம் தெரியாதவன் பாமரன்..
தற்காலத்தில் ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும் கணினி தெரியாதவன் பாமரன்..
காலம் புதுப்புது பாமரர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது..
நம்மை பாமரனாக்கும் உலகைத் தான் நாமும் உருவாக்குகிறோம்..
மகுடேஸ்வரன்...
பேருந்து பயணம்பற்றி
-லா.ச.ரா வின் காட்சி
இந்தக்காலத்தில் பஸ்ஸில் போவதென்றால் என்ன என்று தெரியுமா..
ஒவ்வொரு வண்டியும் ஒரு மகாமக உற்சவம்-சினிமாக் கொட்டகையின் புதுப்படத்தின் முதல்நாள் கூட்டம். உள்ளே புகுவதே பிரயாசை-புகுந்து தோல்வாரைப் பிடித்துத் தொங்க இடம் கிடைப்பதே துர்லபம். உட்கார இடம் கிடைத்தால்.. அடேயப்பா!
முறைத்துப் பார்க்கும் எண்ணத்துடனேயே,ஓர் ஆளை உன்னிப்பாய் பார்ப்பார்கள்.
ஒவ்வொருவர் மனதிலும் எத்தனையோ குருட்டு யோசனைகள்.
ஆகாதது ஆகிறது..
ஆனது ஆகாமல் போகிறது..
இல்லாதது இருக்கிறது
இருந்தது இல்லாது ஒழிகிறது..
வெறுத்தது விரும்புகிறது
விரும்பியது வெறுக்கிறது..
இனித்தது கசக்கிறது
கசந்தது இனிக்கிறது..
நம்பியது தோற்கிறது
தோற்றது வெல்கிறது..
ஆனால் நீளுகிறது
போனால் காணலாகிறது..
கால மாற்றங்களை
சூழல் போக்குகளை
கண்முன் காணும் நாம்
இதற்கு மேலும்
தாங்கமாட்டோம் என்னுமிடத்தில்
ஆயுளை வைத்து இருக்கிறான்..
மகுடேஸ்வரன்..
புதிய மகிழுந்தை ஓட்டி பார்த்துவிட்டு சக்கரங்கள் மாற்றப்படவேண்டிய உங்கள் பழைய வண்டிக்குள் வந்து அமர்ந்தீர்களா?..
புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு வண்ணமிழந்த உங்கள் பழைய வீட்டுக்கு மீண்டும் வந்து சேர்ந்தீர்களா?..
மடிக்கணினி ஒன்றை பழகி பார்த்துவிட்டு உங்கள் பழைய கணினியை திறந்தீர்களா?..
நான்கு முறை உடுத்திய பட்டை நீங்கள் உடுத்துச் சென்ற விழாவில் அனைவரும் புதுப்பட்டு அணிந்துவர கண்டீர்களா?..
நினைவுக்கு வருகிறதா அந்த மனநிலை?
உங்கள் உடைமை தந்த நிறைவு உன் கண் முன்னேயே வீழ்வதை என்னவென்று கொண்டீர்கள்?
எல்லாம் பொருள் இழக்கும் இந்த பால் வெளியில் யார் வேண்டுமானாலும் எந்த நொடியிலும் தள்ளிவிட முடியும் என்ற ஞானத்தை அடைந்தார்களா இல்லையா?..
மகுடேஸ்வரன்..🐅
பக்குவம் என்பது நாமே இறங்கி, அனுபவித்து,அடிபட்டு கற்றுக்கொள்வதல்ல.. ஒவ்வொரு விசயத்திலும் மற்றவர்கள் என்னென்ன அனுபவிக்கிறார்கள்,அடிபடுகிறார்கள் என வெளியிலிருந்தே கண்டுணர்ந்து அதில் நாம் இறங்காமலே கற்றுக்கொள்வது.
கு. விநாயக மூர்த்தி.
அறாத செருப்புகள் வந்துவிட்டன எப்போதும் போல் தெரு முக்கில் ஊசி உளிகளை பரப்பி அமர்கிறார் செருப்பு தைப்பவர்..
காடு உழும் காளைகள் காணாமல் போய்விட்டன எப்போதும் போல் மூக்கணாங்கயிறு கடையை திறந்து அமர்கிறார் அந்தப் பெரியவர்..
எல்லாரும் ரெடிமேட் சட்டைகள் வாங்க பழகிவிட்டனர் எப்போதும் போல் எந்திரங்களுக்கு எண்ணெய் விட்டு அமர்கிறார் தையற்காரர்..
உலகோர்க்கு இனி வேண்டாத ஒன்றை ஆக்கும் பணியில் பிடிவாதமாக ஈடுபட்டிருக்கிறார்கள் அவர்கள்..
மகுடேஸ்வரன்..🐅
இந்த காலம் நன்றாக இல்லை..
காய்கறி வாங்குவதற்கு கட்டுப்பணத்தை உடைக்க வேண்டியிருக்கிறது..
முடிவெட்டும் கட்டணத்தைவிட முருகனுக்கு முடி இறக்கி விட்டு வருவது செலவு குறைவு..
ஆள் இல்லாத கண்ணாடி அறை குழல் விளக்கு ஒளி
குளிர்பதன வசதி
அதற்கு குருதியும் சதையுமாய் மனித காவல்
தானியங்கு பணமெடுப்பு நிலையம்..
நகர் மையத்திலிருந்து நகரமைந்தன் வெளியேற்றப்பட்டு வருகிறான்..
கடைத்தெருக்களில் யாருக்கும் தேவையில்லாதது எப்போதும் விற்கிறது..
யார் யாரோ நாயகர்கள் எல்லாரும் இயக்குனர்கள்..
காக்கைக்கு முன்பு எழுந்து ஓடுவோர் தொகை பெருகி விட்டது..
பல்குட்சியைத் தவிர எல்லாமே செல்பேசியில் இருக்கிறதாம்..
ஐபோனாம் அறுபதாயிரமாம்..
முதல் மரியாதையை இன்று வெளியிட்டால் முதல் மூன்று நாள் தான் மரியாதை..
மிதிவண்டி வைத்திருந்தால் பஞ்சர் ஓட்ட ஆளில்லை..
திருவிழாவுக்கு பாட்டு வைத்தால் கேட்பதை விடுத்து கடுப்பாகிறார்கள்..
அரிசி மண்ணில் விளைவதை பிள்ளைகள் அறியாது இருக்கிறார்கள்..
கல்விக்கூடங்களில் சாலை பயணங்களில் வண்டி நிறுத்தங்களில் கொட்டகைகளில் எங்கும் எங்கும் கட்டணக் கொள்ளை கட்டுபாடில்லை கணக்கு வழக்கில்லை..
ஆசிரியர் பயிற்சிக்கு ஆள் சேர்வதில்லை..
வாகனப்பெருக்கம் சாலைகளை தின்றுவிட்டன..
எல்லா பெண்களும் எக்கச்சக்கமாக படித்திருக்கிறார்கள் எப்படி பெண் கேட்பது என்றே தெரியவில்லை..
வெஸ்ட் இண்டீஸ் அப்படி என்றால் என்ன என்று பாப்பா கேட்கிறாள்..
குடிமக்களை குடியுங்கள் மக்களே என்னும் அரசன் நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை..
உண்மையாகவே இந்த காலம் நன்றாக இல்லை..
மகுடேஸ்வரன்...
ஊர் பிரிதல்
===========
கடைசியாய் ஒரு முறை
அம்மனுக்கு விளக்கேற்றி வருவதாக
அம்மா ஓடுகிறாள் .
கடைசியாய் நம் கேணித்தண்ணீரை
பருகி வருகிறேனே.?
தங்கை சைகையால் யாசிக்கிறாள்.
கடைசியாய் பால்ய சிநேகிதனை
பார்த்து வர நான் திருபுகிறேன்
எல்லோரும் போய்விட்டார்கள் என நினைத்த தகப்பன்
மெதுவாய் குனிந்து
கொஞ்சம் மண்ணைக் கையிலெடுத்து
ஆவேசமாய் வாயில் போட்டுக் கொள்கிறான் .
செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தது ..
பால் கட்டிக் கொண்ட அம்மையாய் எங்களூர் .
(Ram Vasant)
மூவேந்தர் கொடி தொடங்கி,
மூவர்ணக் கொடி வரையில்
எல்லாக் கொடிகளும் பறப்பது'
எந்த நூலில்?
பூணூலில்!
-இன்குலாப்
கடல் பார்க்க
போயிருந்த சிறுமி கரையில் அமர்ந்து
கைகளால் மணலை அளைந்த பொழுது
விரல்களில் சிக்கிய
பழுப்புநிற
அரைவட்ட கிளிஞ்சல் ஒன்றை வெகுநேரம்
உள்ளங்கையில் வைத்து
அழகு பாரத்த பின்
ஏதோ நினைத்தவளாய்
கடலில் வீசியெறிந்து
திரும்பினாள்,
தேடும் அலைகளின்
தேவையை தீர்த்துவைத்த
நிம்மதியில்.
-சிவசங்கரி
வாழ்க்கையை கஷ்டமாகப் பார்க்காதே
என்றபடி நுழைந்தவன்
வாசலில் இருந்த மஞ்சள் நிற ரோஜாவை
பறித்துக்கொண்டான்
அவசரமாக வந்து
செடியைச் சுற்றி வட்டமடித்து
ஏமாற்றத்துடன் பறந்துவிட்ட
தேன்சிட்டுவின் அழுகையைப்பற்றி
நான் அவனிடம்
சொல்வதா வேண்டாமா?
(நவீன்)
மேற்பரப்பினைக் கண்டு
மெய்ம்மறப்போர்க்கு
ஒரு கடல்
அதன் ஆழத்தால் ஆனது
என்பது தெரியாது
-மகுடேசுவரன்
"என் அறைக்கதவுகள்
திறந்தேதான் இருக்கின்றன
நீங்கள் எப்பொழுது
வேண்டுமானாலும்
நுழையலாம்
என்னுடன் தேநீர் பருகலாம்
என் அலமாரிப் புத்தகங்களைப்
புரட்டிப் பார்க்கலாம்
சுவற்றில் தொங்கும்
ஓவியங்கள் குறித்துக் கருத்துக்கள் கூறலாம்
சில்லிடும் மெல்லிசை அதிர்வுகளில்
மூழ்கிக் கிடக்கலாம்
மேலும்
உங்களுக்கு விருப்பமிருந்தால்
நான் வருடிப்பார்ப்பதற்கென
கொஞ்சம் எதார்த்தங்களை
விட்டுச் செல்ல முயற்சிக்கலாம்
அவ்வாறின்றி என் அறை
உங்களுக்கு சலிப்பேற்படுத்தும் பட்சத்தில்
அறைக்கதவுகள்
திறந்தேதான் இருக்கின்றன."
- ச.பிரியா
அதிகம் பேசாதவர்களின் வார்த்தைகளுக்கான
அர்த்தம் அடர்த்தியானது.
சமயங்களில் அமிலமாகவோ சர்க்கரை பாகாகவோ ....
நீங்கள் முழு நிறைவான, தவறே செய்யாத ஒரு நண்பனை தேடிக் கொண்டிருந்தால், நண்பன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு யாருமே இருக்க மாட்டார்கள்
ரூமி
மீண்டும் மீண்டும் அதே கிளையில்
அமர்கிறது பறவை
அப்படி என்ன செய்துவிட்டது மரம்?
தாங்கத் தெரிந்திருக்கிறது
-நேசமித்ரன்
No man has a good enough memory to be a successful lier
"யார் ஒருவரும் வெற்றிகரமாகப் பொய் சொல்லுகிற அளவுக்கு மிகத் தேர்ந்த நினைவாற்றல் உடையவராக இருக்க முடியாது
-லிங்கன்
ஆண் தெய்வங்கள் கோயில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியும், பெண் தெய்வங்கள் கோயில்கள் வடக்கு நோக்கியும் இருக்கும்.
*பெண்களே அக்காலத்தில் போருக்கு தலைமை தாங்கியதால் வடக்கு நோக்கி ஆயுதமேந்தியபடி நிற்கின்றன.மூன்று திசையில் கடல் இருப்பதால் வடக்கில் இருந்துதான் பகை வந்திருக்கக்கூடும்.
அதனால் வடக்கு நோக்கி நிற்கின்றன.
காளி போன்ற தெய்வங்கள் ஆவேசமுடன் நிற்பதை காண முடிகிறது.
-தொ.பரமசிவன்
அன்பு அமுதமானது என்றாய்
அதை உணர்ந்த தருணம்
அழுதுவிட்டேன் என்றாய்
அன்பின் ஓயாத அலையோசை
உறங்கவிடவில்லை என்கிறாய்
கூட்டுக்கும் ஆகாயத்துக்குமிடையில்
பறந்துகொண்டே இருப்பது
பரவசம் என்கிறாய்
பறந்துகொண்டிருக்கும் போதே
இறந்துவிட வேண்டும் என்கிறாய்
அன்பே
அது அப்படித்தான்
அன்பு
இருத்தலுக்கும்
இல்லாமைக்குமிடையில்
அலையும்
ஒரு மாசற்ற சுடர்
#பழநிபாரதி
விளையாடிக்களைத்த
பொம்மைகளாக
ஓய்ந்து கிடக்கின்றன
உன் சொற்கள்
குழந்தையுறங்கும்
ஒரு தனிமையையும்
மெளனத்தையும்
தந்துவிட்டுப் போகிறாய்
புரண்டு படுக்கையில்
அசையும் அதன் கொலுசுச் சத்தமே
அதை எழுப்பிவிடக் கூடாதென்பதாக
இப்படியே இருக்கட்டும்
இந்த இரவு
#பழநிபாரதி
வேறு ஏதோர் கலக்கத்தில்,
வேறு ஏதோர் மனவருத்தத்தில் இருப்பார்கள்.
ஆனாலும்
நம்மால் காயப்பட்டுவிடவில்லை என்பதை
உறுதிசெய்து கொள்ளப் பிரயாசை கொள்கிறது-
அன்பாலே ஆகிப்போன மனம் ஒவ்வொன்றும்.
-யாத்திரி
"நானொரு பறவை; இவ்வுடல் எனது கூண்டு.
அதை அடையாளமாக வைத்துவிட்டு நான் பறந்து செல்கிறேன்..."
-
ரூமி
முதுமை
முதுமை
நிமிஷக் கறையான்
அரித்த ஏடு
இறந்தகாலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு
ஞாபகங்களின்
குப்பைக் கூடை
வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்
காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆகிவிட்ட
மாமிச ஓவியம்
-அப்துல்ரகுமான்