01/08/2019

சுஜய்ரகு

கனிவுள்ள கொலையாளி

வழமைபோலத்தான் காத்திருக்கிறேன்
கழுத்தில் வெண் வளைவுள்ள அழகிய பருந்திற்கு
இன்றை இரையாக்கும் பொருட்டு
தெள்ளிய அன்பும்,திக்கற்ற காதலும்
அதீத நம்பிக்கையும்
முன் நிற்கும் போதெல்லாம் இரைப்பை
குளிர்ந்துபோவதாகச் சொல்லும் -அது
கண்களில் கனிவுள்ள கொலையாளி
என் உயிர்க்கிளர்ந்தெழும் சொற்களை
நேர்த்தியாக அதன் கூரலகில் கிழித்துண்ணும்
கருணை வேண்டி மெலிந்த எனதுடலை
வலியின்றிக் காயப்படுத்தும்படியான 
பிரத்யேக வடிவமைப்பிலுள்ளது
அதன் கால்நகக் கூர்
நான் அடையாளம் கண்டேன்
ஒரு பருந்தைபோலுள்ள பல பருந்துகளை
அதனதன் தேவைகள் பசியாறும் வரையில்தான்
ஆயினும் இந்த வாழ்வில் சபிக்கப்பட்ட உயிர்கள்தாம்
இரட்சியிக்கப்பட்ட உணவுகள்

-சுஜய் ரகு-