30/08/2020

ராஜா சந்திரசேகர்

மழையில் நனைந்து
தூறலில் தலைதுவட்டிக் கொள்வான்

-ராஜா சந்திரசேகர்

பழனித்துரை

*பொருளாதார வளர்ச்சிக்கு அரசு தேடுவது சந்தையைத்தான். சமுதாயத்தை அல்ல.*

-டாக்டர்.க.பழனித்துரை

முகுந்த் நாகராஜன்

விடாமல் விழும் அருவியை
ஆச்சர்யமாகப் பார்க்கிறாள்
ஒருநாள் விட்டு ஒருநாள்
குழாயில் தண்ணீர் வரும்
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி

-முகுந்த் நாகராஜன்

நறுமுகைதேவி

இருட்டில் தனியே
அமர்ந்திருந்த
கடவுளுக்குக்
கொஞ்சம் பயமாய்த் தான் இருந்தது.. நல்லவேளையாகத்
தீபம் ஏற்ற ஒரு பெண் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள்..

நறுமுகை தேவி...

குற்றப்பரம்பறை

குற்றப்பரம்பரை..🐅

எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய நூல்..

1957 முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்னால் கள்ளர் இனத்திற்கும் தலித் சாதியினருக்குப் நிலவிய இரண்டு பக்கங்களுக்கு இடையேயான அன்பு பாசம் அவர்களுக்கிடையே உள்ள இணக்கம் இது எல்லாவற்றையும் பற்றி நாவல் விரிவாகப் பேசுகிறது..

வேல ராமமூர்த்தி அவர்கள் தனது நாவல் முன்னுரையிலேயே நெருப்பாக வெடிக்கிறார் அதன் ஒரு சிறு பகுதி..

இந்த' இரண்டு சாதிக்காரன்களின் அரைஞாண் கயிறுகளை அறுத்து எறிந்து விட்டு, அம்மணமாய் நிறுத்தினால், 'எவன் எந்தச் சாதிக்காரன்? என அடையாளம் காண முடியாது. இருவருக்கும்
அப்படி ஓர் உருவ ஒற்றுமை இவர்களுக்குள் இப்போதிருக்கும் 'சாதிப் பகை', எப்போதும் இருந்ததா? இருந்ததில்லை..

ஒருவனுக்காக ஒருவன், உயிர் கொடுத்திருக்கிறான்; உணவளித்து இருக்கிறான்; ரத்தம் சிந்தி இருக்கிறான். இந்தப் பெண்ணின் மானத்தை, அவன் காப்பாற்றி இருக்கிறான்; அந்த தாயின் முலைப் பாலுண்டு இவன் வளர்ந்திருக்கிறார்.

தலைமுறைகளைச் சாகடிக்கும் இன்றைய பகையை, எப்படி எவன் மூட்டியது..
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது எவன் கை,
வழியும் ரத்தத்தை நக்கிக் குடிப்பவர், இங்கு எவர் வரலாற்றைக் கறையாக்கி, வாக்குச் சேகரித்துக் கொழுப்பவன் எந்த அரசியல்வாதி..

பூர்வீகக் குடி இரண்டின் சாவுக் கணக்கு இங்கு சில சாதிக்காரர்களின் உண்டியலையும் சில சாதிக்காரர்களின் மனசையும் 
நிரப்புகிறது...

 பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு' என்றும், இந்த இரு சாதியினர் மோதினால், இனப்பெயரையும் குறித்து, சாதிக் கலவரம் என்றும் அக்னி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா..  இவ்வாறு இன்னும் விரிவாக அந்த முன்னுரையில் கொந்தளிக்கிறார்..

நாவலில் முக்கியமான கட்டத்தில் வருகின்ற உரையாடல் ஒன்று🐅 மனுசனுக்கு மனுசன் என்னடா தீட்டு? உங்க புஞ்சையை .. அவன் மிதிக்கிறான்.. உங்க கலப்பையைப் புடிச்சு அவன் உழுகுறான். அவன் காலாலே மிதிச்சு கசக்குற கதிரிலே தான், நீங்க வாயாலே திங்கிற நெல்லும் தவசமும் ஒட்டி இருக்கு ? அதிலே எல்லாம் தீட்டு இல்லே.. தரையிலே ஊறும் தண்ணிக்கு மட்டும் எங்கிருந்து வந்தது தீடடு..

நாவலில் புதிதாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது அவற்றுள் சில..🐅

>அய்யாமார், முதலாளிமார் வீடுகள் நெறஞ்ச ஊர், வீட்டுக்கொரு “பாடுகாப்பான்" உண்டு. பாடுகாப்பானெல்லாம் சேரிக்காரர்கள் தான். காட்டு வேலை, களத்து வேலை கல்யாணம் சடங்கு வேலையிலிருந்து இழவு சொல்லிப் போய், எரியூட்டி திரும்புவது வரை எடுபிடி வேலையெல்லாம் 'பாடுகாப்பான்' பொறுப்பு..

>கள்ளர்கள் திருடச் செல்லும் பொழுது ஆட்காட்டி குருவி என்ற ஒருவகை குருவியே பயன்படுத்துவார்கள்..
சின்ன துளையிட்டு அதில் குருவியை அனுப்பி உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா என்று அறிவார்கள்.. உள்ளே ஆட்கள் இருந்தால் குருவி கீச் கீச் என்ற சத்தம் கொடுக்கும் அதை வைத்து கண்டு கொள்வார்கள்..

>கல்லிலே மாவு ஊத்தி, மாவுக்கு மேலே முட்டை ஊத்தி, முட்டைக்கு மேலே மாவு ஊத்தி, வேக வேக புரட்டிப்போட்டு சுடுகிற அங்காடித் தோசை..

>அந்தகாலத்தில் ஒவ்வொரு சமஸ்தானத்திலேயும் கட்டுப்பாடு உண்டு.. எட்டயபுரம் விசேஷமான ஒரு சமஸ்தானத்திலே ஒரு தடை இருந்தது. சமஸ்தானத்துக்குட்பட்ட குடியான சனங்கள், ஒன்னு.. ரெண்டு.. மூனுன்னு எண்ணுகிற போது 'எட்டு' என்கிற எண்ணை மட்டும் உச்சரிக்கக் கூடாது.. ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, ராசா ஒன்பது, பத்துனு தான் எண்ணிப் போகணும் என்ன காரணம்னா... ராசா பேரு எட்டப்பராசா. எட்டுன்னு குடியான சனங்க வாயால சொல்றது ராசாவுக்கு அவமரியாதை..

>அந்த காலத்துல நல்ல தண்ணி கிடைக்கிற இடத்தில் தலித் சாதியினரை குடியேற விடல..
இதுபோல அங்கங்கு இன்னும் பல புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்..

கள்ளர்களை பற்றி கூறும் பொழுது 

>அவர்கள் நம்பியவர்களுக்கு உயிரை கொடுக்கிறார்கள், நம்பிக்கை துரோகியை கொலை செய்கிறார்கள், வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இவர்கள்..

>ஒரு வீரன் கையில் வெட்டுப்பட்டு சாகலாம் ஆனா ஒரு சதிகாரன் பறிக்கிற குழியிலே சறுக்கி கூட விழக்கூடாது..

>சோற்றைக் கூட நுனி விரலில் நாம் இப்போது சாப்பிடும் முறையை (அவர்கள் கை முழுவதும் அள்ளி சாப்பிடுபவர்கள்)அதிசயமாகப் பார்க்கிறார்கள்.. 

நாவலில் வரும் சில உவமைகள்..🐅

>பொறுமை இல்லாதவன் தவமும், பொலி காளையின் அவசரமும் ஒன்று..

>பரிக்கும் கைகள் இன்றி, சூடும் தலையின்றி, கானகத்தில் தானே முளைத்து மொட்டு விட்டு மலர்ந்து உதிரப் போகும் காட்டுப் பூ போல் இருந்தாள்..

>தான் விரும்பியவனையே கைபிடித்த குமரியின் உற்சாகத்தோடு மலை அடிவார மேடு பள்ளங்களில் குதிரை காற்றாய் பறந்து போனது..

>வீணையின் வடிவழகு, மலர்ந்து படுத்திருக்கும் ஒரு பேரழகி போல் இருந்தது..

>தோல் உரித்த நுங்கு நேரத்தில் பொழுது விடிந்து கொண்டிருந்தது..

>மண் சட்டியில் கவன் கல்லாய் உறைந்து போயிருக்கும் ஆட்டு ரத்தம்..

>நிறைந்த குமரி போல இந்த வருஷத்து முளைப்பாரி நல்ல வளர்த்தி..

>சூரியனுக்கு காட்டிக் கொடுக்கும் புத்தி உண்டு.. இருட்டுதான் பாதுகாப்பு..

ரெண்டு சாதிகளையும் மோத விட நடக்கிற சதிக்கு யாரும் எப்போதும் பலியாகக் கூடாது என்ற கருத்தோடு கதை நிறைவடைகிறது..

பிரகாஷ் செல்வராஜ்...🐅

வண்ணதாசன்

முன்னைப் போல யாரிடமாவது எதையாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே, கால்களைச் செருப்புக்குள் நுழைத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு உறுப்புக்கும் வயதாகிறது. குனிந்து செருப்பை வலதா இடதா என்று பார்க்க வேண்டும். சுவரில் கைகளை ஊன்றிக்கொள்ளாமல் அதைச் செய்ய முடிகிறதில்லை.

-வண்ணதாசன்

அம்பை

தன் மகிழ்ச்சியை அடைய பொங்கி எழாமல். தன்னையே பொசுக்கிக் கொள்ளும், தன்னைப் பெரிய தியாகியாக பாவித்துக் கொண்டு தன்னையே ஏய்த்துக்கொள்ளும் ஆத்ம துரோகம்தான் எல்லோர் கண்களுக்கும் பெண்மையின் பெருமையாகப் படுகிறது.

-அம்பை

முத்துவேல்

விட்டுப்போனவளை எழுத 
எந்தச் சொல்லை எடுத்தாலும் உப்புக்கரிக்கிறது...

முத்துவேல்..🐅

ஜான்சிராணி

வலியின் 
மகுடிக்கு
ஆடும்
வார்த்தை 
சர்ப்பத்தின்
நடனம் 
கவிதை..

ஜான்சிராணி..

ஆதவன்

எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
எல்லாவற்றையும் அல்ல, பூரணமாக அல்ல

-ஆதவன்

முத்துவேல்

இன்றேனும்
ஒரு குழந்தை வந்து
கூட்டிப் போய்விடாதா- என நினைத்தபடியே நின்றிருக்கிறது
சாலையோரக் கடையொன்றில் சாயம் போய்கொண்டிருக்கும் பொம்மையொன்று..

முத்துவேல்..🐅

பாதசாரி

தீக் கங்கு புகைகிறது..
பனிக்கட்டி புகைகிறது..
இரண்டின் புகை நடனமும் 
ஒரே மாதிரித் தான்  
காற்றில்..

-பாதசாரி

பாலகுமாரன்

ஜெயித்தலோடு எந்தயுத்தமும் முடிவதே இல்லை
வெற்றிக்குப்பிறகே யுத்தம் கடுமையாகிறது
எதிரி மூர்க்கமாகிறான்
கூர்மையாகிறான்
யுத்தம் முடிந்துபோய் பழிவாங்குதல் வந்துவிடுகிறது
வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது
தோல்வியைவிட வெற்றிதான் பெரியவேதனை என்பது பலருக்கு புரியவில்லை...

-பாலகுமாரன்

ஆதவன்

ஆண்களின் பொறுமையை சோதிப்பவர்கள் இல்லை பெண்கள்.ஆனாலும் சகித்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள்

-ஆதவன்

இளந்தென்றல் திரவியம்

நெருக்கமாய் வந்து 
அனிச்சையாய் தொடுவது போல் 
தொட்டுக்கொள்ளும் 
கள்ளக் காமம் தான்
கள்ளக்காதலை விட
விஷமமானது!!

கோடிட்ட இடங்களை 
நிரப்பி விட்டு,
கோடிடாத பல இடங்களை 
வெறுமையாக்கி,  விட்டுப் போகிறது 
காமம்!!

இளந்தென்றல் திரவியம்

தேவதச்சன்

~ ஒரு கூழாங்கல் ~

மனம் 
நீராய் ஓட 
கீழே, 
சூரியனைப் பார்த்துக் கொண்டு 
ஒரு கூழாங்கல்.

- தேவதச்சன்

சௌம்யா

வாட்ச் கட்ற இடத்துக்கு 'மணி'க்கட்டுனு பேர் வச்சவன் தீர்க்கதரசி

-செளம்யா

ஆதவன்

காலேஜ் முடித்துவிட்டு இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்?

உங்களுடைய விளம்பரத்துக்கு காத்துக் கொண்டிருந்தேன்

-ஆதவன்
(இண்டர்வியூ)

மனுஷ்ய புத்திரன்

இப்படியும் யோசிப்பவர்கள்
இருக்கக் கூடும்
அடுத்த பண்டிகைக்கு இருப்போமா என்று
அடுத்த திருவிழாவிற்கு இருப்போமா என்று
அடுத்த புத்தாண்டிற்கு இருப்போமா என்று
அடுத்த தேர்தலுக்கு இருப்போமா என்று
அடுத்த மழைக்காலத்திற்கு இருப்போமா என்று

நான் ஒரு காதலர் தினத்தன்று நினைத்ததுண்டு
அடுத்த காதலர் தினத்தில்
இந்தக் காதல் இருக்குமா என்று

மனிதர்கள் காலத்தைக்கண்டு
அவ்வளவு அஞ்சுகிறோம்
எந்த ஒன்றையும் பிரிகிறபோது
மறுபடி காண்போமா என்பதில்
எவ்வளவோ சஞ்சலங்கள் வந்துவிடுகின்றன

ஒவ்வொன்றையும்
கடைசியாகக் காண்பதற்குத்தானே
இந்தக் கண்கள் இருக்கின்றன
இந்தக் கண்ணீர் இருக்கிறது

-மனுஷ்ய புத்திரன்

23/08/2020

ராஜா சந்திரசேகர்

நான் நிராயுதபானிதான் ஆனாலும் யுத்தங்களுடன்...

-ராஜா சந்திரசேகர்

இளந்தென்றல் திரவியம்

பொம்மைக்கு
விலையை நிரணயிக்கிறார்
கடைக்காரர்.

அதற்கு ஓர் உறவை தீர்மானிக்கிறது
குழந்தை.

_இளந்தென்றல் திரவியம்.

மனுஷ்ய புத்திரன்

நான் அன்பின் புல்வெளிகளில் இளம் வெயிலில் ஒரு ஆட்டினைப்போல நிதானமாக ஒரு புல்லைக் கடித்துக்கொண்டிருக்க விரும்புபவன். ஆனால், வாழ்க்கை ஒரு நாள் நம்மை வேட்டை மிருகமாகவோ வேட்டையாடப்படும் மிருகமாகவோ மாற்றிவிடுகிறது.

-மனுஷ்யபுத்திரன்

நம் பிரியங்கள் நம்மை அவ்வளவு எளிதாகச் சாகவிடுவதில்லை.

-மனுஷ்யபுத்திரன்

ராஜா சந்திரசேகர்

நான் நிராயுதபானிதான் ஆனாலும் யுத்தங்களுடன்...

-ராஜா சந்திரசேகர்

கல்யாண்ஜி

யாருங்க என்று
வீட்டிற்குள் இருந்து கேட்கும் குரலின் கனிவு
பேறுகாலத் தொட்டில் துணி
போன்று இருந்தது

-கல்யாண்ஜி

கல்யாண்ஜி

எதையும் சொல்லவில்லை
எதையும் கேட்கவில்லை
சும்மாதான் வந்தேன்
என்றுவிட்டுப் போனான்
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு

-கல்யாண்ஜி

கல்யாண்ஜி

கைப்பிள்ளையுடன் பேசிக் கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்

-கல்யாண்ஜி

யாழிசை மணிவண்ணன்

கொம்பில் 
வண்ணம் பூசிய பிறகும் 
வண்டி இழுக்கத்தான் போகும் மாடுகள்
வந்து போகும்
நம் தேர்தலைப்போல..

-யாழிசை மணிவண்ணன்

ஜீவா

நமக்குள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவது போல் இருக்கவேண்டும். பூனை எலியைக் கடித்துக் குதறுகிற மாதிரி இருக்கக்கூடாது

-ஜீவா

மீரா

ஊமை இருட்டின்  
மௌன அழகை 
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறேன். 

#மீரா

தபூ.சங்கர்

நீ நரகத்துக்குச் செல்ல வேண்டும்
உன்னை விட்டால் வேறு யாரால் முடியும்
அதை சொர்க்கமாக்க

-தபூசங்கர்

மு.முருகேஷ்

எல்லா மூங்கில்களும்
புல்லாங்குழல் விற்பவன்
கைகளில் சங்கீதமாகிறது

பல புல்லாங்குழல்
வாங்கிப் போகிறவர்களின்
கைகளில் மூங்கிலாகின்றன

-மு.முருகேஷ்

மு.முருகேஷ்

டிக்கெட்டுக்காய்
கொடுத்த சில்லறையில்
இருப்பதைஞ்சு காசு
குறைகிறதென
அந்த கிழவியைத் திட்டிக்கொண்டே
நகர்கின்ற கண்டக்டர்

இன்னமும் தரவேயில்லை
எனக்கான எழுபத்தைந்து காசு
சில்லரைப் பாக்கியை

-மு.முருகேஷ்

தங்கம் மூர்த்தி

பட்டாம்பூச்சி பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது
மகளுக்கு

-தங்கம் மூர்த்தி

வைரமுத்து

தூக்கம் என்பது தூக்கணாங்குருவிக் கூடு போல,
கட்டுவது கடினம்
கலைப்பது எளிது
_கவிப்பேரரசு வைரமுத்து

கந்தர்வன்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை நிறத்தையே பார்க்க முடியல.ஜனம் எதைத்தின்று வாழ்கிறது என நினைத்துப்பார்த்தா அதிசயமா இருக்கு
-கந்தர்வன்

ஆத்மார்த்தி

அந்தப் பிரிதல்
அத்தனை அழகு.
அத்தனை புரிதல்
அதைவிட அழகு.

-ஆத்மார்த்தி

பெஞ்சமின் பிராங்களின்

அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து காத்திருப்பவனை அதிர்ஷ்டம் நெருங்குவதில்லை.
  - பெஞ்சமின் பிராங்கிளின்

15/08/2020

நா.முத்துக்குமார்

மரணம் என்பது
ஒரு *கறுப்பு ஆடு...*
சில சமயங்களில்
அது நமக்கு
பிடித்தமான
*ரோஜாக்களை*🌹
தின்றுவிடுகிறது.

- *நா. முத்துக்குமார்* -

நா முத்துக்குமார்

கணக்குப் புத்தகத்தில்
வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை
முட்டை போட்டது.

-நா.முத்துக்குமார்.

மார்ட்டின் லூதர் கிங்ஜூனியர்

மாற்றம், தவிர்க்க இயலாமையின் சக்கரங்களின் மீதேறி வந்துசேரும் வண்டியல்ல; தொடர்ச்சியான போராட்டத்தினூடாக வந்து நிற்பது. 
-மார்ட்டின்லூதர்கிங் ஜூனியர்

கலாப்ரியா

ஒரு பிணம் 
எரிகையில்
உயிர் வருகிறது
சுடுகாட்டுக்கு..!

#கலாப்பிரியா

ஜார்ஜ் ஆர்வெல்

அதிகாரம் என்பது மனித மனங்களை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப்போட்டுவிட்டு, நமக்கு ஏற்ற வடிவத்தில் அதை மீண்டும் ஒட்டவைத்துக் கொள்வதுதான்
-ஜார்ஜ் ஆர்வெல்

மகுடேசுவரன்

முட்டாள்

முட்டாள்- முட்டுகின்ற ஆள். முட்டு என்றால் மோதுவது. முட்டிக்கொள்வது.தெளிவான பார்வையில்லாமல் தனக்குத் தெரிந்ததை நம்பி மேற்சென்று
முட்டி நிற்கும் ஆள்களை முட்டாள்கள் என்கிறோம். மடத்தனமாக முட்டி நிற்பது. முட்டுகிற ஆள் முட்டாள்.

-மகுடேசுவரன்

13/08/2020

மு.சுயம்புலிங்கம்

எங்கள் ஊர் யானைகள்
பத்து பைசாவுக்காக
எவரெவர் காலிலோ விழுகின்றன

- மு. சுயம்புலிங்கம்

நா முத்துக்குமார்

*இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம்*

எல்லா பள்ளிக்கூட வாசலிலும்
கைகள் நடுங்கும் ஒரு பாட்டி
வேர்கடலை விற்கிறாள்.

எல்லா தாலுகாபீஸ்
ஆலமரத்தடியிலும்
நாற்பது வயது கடந்த ஒருத்தர்
யாரிடமோ கையெழுத்து வாங்க
மஞ்சள் பையுடன் நிற்கிறார்.

எல்லா அடகுக் கடைக்
கம்மலிலும்
உலர்ந்துகொண்டிருக்கிறது
ப்ரியமில்லாமல் கழட்டிக்
கொடுத்த
ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி.

எல்லா மெல்லிசைக் கச்சேரியிலும்
வெள்ளை பேண்ட் 
வெள்ளை சட்டை அணிந்து
நெற்றி முழுக்க
விபூதி பூசிய ஒருவர்
'பச்சைக்கிளி... முத்துச்சரம்' என்று
டி.எம்.எஸ். குரலில் பாடுகிறார்.

எல்லா ரயில் நிலையத்திலும்
பறவை எச்சம் படிந்தபடி
வரவேற்கிறது
பூவரச மரத்தடியில்
ஒரு சிமெண்ட் பெஞ்ச்.

எல்லா மருத்துவர்களுக்கும்
வாய்த்துவிடுகிறது
புரியாத கையெழுத்து.

எல்லா வீடுகளிலும்
செல்லமாய் திட்டுகிறார்கள்
சாப்பிடும்போது
புத்தகம் படிக்காதே
ருசி தெரியாதென்று.

எனவேதான் பெரும்பாலும்
சாப்பிடும்போது
புத்தகம் படிக்கிறா்கள்
ருசி தெரியாதென்று.

எல்லா பொது நூலகத்திலும்
கடைசிப் பக்கம் கிழிந்த
பழைய புத்தகங்கள் 
பெரும் படைப்புகளுக்கு 
முடிவில்லை என்று
சவால் விடுகின்றன.

எல்லா மரண வீட்டிலும்
யாரோ ஒருவர்
யாருக்கும் சொல்லாமல்
சாப்பாட்டுக் கடை நோக்கி
மெல்ல நழுவுகிறார்.

எல்லா பேருந்து
நிலையத்திலும்
அகாலத்தில்
கணவனிடம்
கோபித்துக்கொண்டு
கைக்குழந்தையுடன்
கடைசிப் பேருந்திற்காய்
காத்திருக்கிறாள்
ஒரு இளம் தாய்.

-நா.முத்துக்குமார்

ஆதவன் தீட்சன்யா

இங்கு பலவந்தமாக தத்தெடுக்கும் வேலை நடைபெறுகிறது; 
பாதுகாப்பாக சாமிகள் மாற்றுப்பாதையில் செல்லவும்.
_ஆதவன் தீட்சன்யா

மகுடேசுவரன்

நாம் காணும் மலர்கள்
மலர்ந்துகொண்டிருப்பவையல்ல
வாடிக்கொண்டிருப்பவை.

-மகுடேசுவரன்

சுப.உதயகுமாரன்

அதிகமாகப் பாருங்கள், அளவோடு பேசுங்கள், ஆர்வத்தோடு  கேட்பீர்கள்' என்பதுதான் அந்தக் கவிதை சொல்லும் செய்தி.

சரி, எப்படித்தான் செவிமடுக்கும் திறனை உயர்த்திக் கொள்வது?

உங்களைச் சமநிலையில் வைத்திருப்பது முதற்படி. அதாவது, உங்கள் மனக்கோப்பை காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு இருங்கள். உங்களிடம் பேசுகிறவரை நீதித்தராசில் வைத்து நிறுக்கவோ அல்லது உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவரை எடை போடவோ செய்யாதீர்கள்.

கவனச் சிதறலின்றி  கேளுங்கள். பேசுபவரின் நடை, உடை, பாவனைகளில் கவனம் செலுத்தாது, அவர் பேசும் வார்த்தைகளின் உள்ளடக்கத்தில் மனதைச் செலுத்துங்கள். பேசப்படும் பொருள், பேசுபவரின் எண்ணவோட்டம் மற்றும் உணர்வுகளில் மனதைக் குவித்துக் கேளுங்கள்.

நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள் என்பதைப் பேசுகிறவர் புரிந்துகொள்ளும் வகையில், அவரது கண்களைப் பாருங்கள்; தலையை அசையுங்கள், முக பாவனையை, குரலைப் பயன்படுத்துங்கள்.

உங்களை அவருடைய இடத்தில் நிறுத்தி, அவருடைய வாழ்வுலகுக்குள் நுழைந்து, அவருடைய விழுமியங்கள், பார்வைகள், அனுமானங்களைப் புரிந்து, கவனமாகக் கேளுங்கள்.

பேசுகிறவர் விவரிப்பது போன்ற உங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர வேண்டாம். அவர் கொட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு, பிரச்னைக்கு விடையோ, தீர்வோ சொல்ல வேண்டாம். வெறுமனே  கேளுங்கள். மனம்திறந்து கேளுங்கள்.

பேசுகிறவர் நிறுத்தினால், தயங்கினால், அமைதி காத்தால், குழம்பினால், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தையை, சொற்றொடரை அல்லது பகிர்ந்துகொண்டிருந்த உணர்வை அவருக்கு நினைவூட்டி அவர் தொடர்ந்து பேசுவதற்கு உதவுங்கள். பேசுபவரை ஊக்குவித்து இன்னும் தெளிவாக, விளக்கமாகப் பேசவைக்க சில குறிப்பிட்ட உத்திகளைக் கையாளலாம்.

ஊக்குவித்தல்: பேசுபவரோடு உடன்படவோ அல்லது மாறுபடவோ  செய்யாமல், நடுநிலைமையான வார்த்தைகளுடன், உங்கள் ஈடுபாட்டைத் தெரிவிக்கலாம். "இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்?' எனக் கேட்டு, தொடர்ந்து பேச உதவலாம். 

தெளிவுபடுத்துதல்: கேள்விகள் கேட்டு, பேசுபவர் கூடுதல் விவரங்கள், விளக்கங்கள் அளிக்க உதவி செய்யலாம். "இது எப்போது நடந்தது?' "அப்படி யார் சொன்னது?' போன்ற கேள்விகளைக் கேட்டு இன்னும் தெளிவாகப் பேச வழிகோலலாம். 

திரும்பச் சொல்லுதல்: பேசுபவர் சொல்கிற அடிப்படைத் தகவல்களை, கருத்துகளை மீண்டும் ஒருமுறை உங்கள் வார்த்தைகளில் திரும்பச் சொல்லி, பேசுகிறவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள், புரிந்திருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரிவிக்கலாம். உங்களுடைய  புரிதல் சரிதானா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளலாம். "உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பவேண்டும் என்று விரும்புகிறீர்கள், அப்படித்தானே?' என்பன போன்ற கேள்விகள் மிகவும் உதவும். 

பிரதிபலித்தல்: பேசுபவரின் அடிப்படை உணர்வுகளைச் சுட்டிக்காட்டி, அவர் எப்படி உணர்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதை எடுத்துரைக்கவும். அவர் தனது உணர்வுகளை மதிப்பீடு செய்வதற்கும் உதவலாம். "அந்த வார்த்தைகள் உங்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கின்றனவா, இல்லையா?' போன்ற கேள்விகள் பயனளிக்கும். 

சுருக்கிக் கூறுதல்: பேச்சில் முன்னேற்றத்தைப் பரிசீலிக்கவும், முக்கியமான கருத்துகள், தகவல்கள், உணர்வுகளை ஒருங்கிணைக்கவும், தொடர் கருத்துப்பரிமாற்றத்துக்கு வழிகோலவும், அவர் பேசுவதைச் சுருக்கிக் கூறுவது மிகவும் உதவும். 

உறுதி செய்தல்: பேசுபவரின் பிரச்னைகள், உணர்வுகளை ஆமோதிக்கவும், அவரது முயற்சியைப் பாராட்டி அங்கீகரிக்கவும், அவரது நன்மதிப்பை எடுத்துரைக்கவும் இது உதவும். 

கூர்மையாகக் கேட்க வேண்டுமென்றால், நீங்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் பேசும்போது கேட்க முடியாது. அதே போல, ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்கள் மனதில் அவருக்கு எதிராக வாதிடுவதை நிறுத்திவிட்டு, பொறுமையாக, நிதானமாக இருங்கள். அவர் பேசும் வார்த்தைகள், கருத்துகள், உணர்வுகளின்மீது கவனம் செலுத்துங்கள்.

பேசுபவரோடு வாதிடாதீர்கள்; விமர்சனம் செய்யாதீர்கள்; அவரைப் பகைமையோடு நடத்தாதீர்கள். பேசுகிறவரின் கலாசாரப் பின்புலத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் அவரைப் புரிந்துகொள்ளுங்கள். பேசுகிறவரை வகைப்படுத்திப் புறக்கணிக்காதீர்கள். பேசுகிறவர், பேசப்படும் பொருள், இடம், பொருள், ஏவல் போன்றவை பற்றிய உங்களின் பாரபட்ச உணர்வுகளை இனம்கண்டு, அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

காது பற்றியும், கேட்பது குறித்தும், கேட்கும் தகவல்களை ரகசியமாகப் பாதுகாப்பது தொடர்பாகவும், நமது தமிழ்ச் சமூகத்தில் புழங்கும் கதை ஒன்று மிக முக்கியமானது.

ஒரு ராஜாவுக்கு ஒட்டுக் கேட்பதில் அலாதிப் பிரியம் ஏற்படவே, தன் காதுகளைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருந்தைக் குடிப்பார். அவரது காது கழுதைக் காது போல வளர்ந்துவிடும். இந்த ரகசியம் ஊருக்குத் தெரியாமலிருக்க ராஜா தலைப்பாகை அணிந்துகொண்டார். ஒரு முறை ராஜாவுக்கு முடிவெட்ட வந்தவர் இந்த ரகசியத்தை அறிந்துவிட்டார். இதை வெளியே  சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அவரை மிரட்டி அனுப்பி வைத்தார் ராஜா. 

மேற்படியாருக்கு இந்த ரகசியத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால், தலை வெடித்துவிடும் போல இருந்தது. எனவே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று ஒரு குழி தோண்டி, அதற்குள் "ராஜா காது கழுதைக் காது' என்று மூன்று முறை உரக்கச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அந்த ராஜ ரகசியம் எப்படி ஊர்முழுக்கப் பரவியது, பின்னர் என்னென்ன விடயங்கள் நடந்தேறின என்று பல்வேறு வடிவங்களில் அந்தக் கதை சொல்லப்படுகிறது.

கதையின் மையக் கருத்துகள் இவைதான்: கூர்மையாகக் கேட்பதற்கு காதுகள் பெரிதாக இருக்க வேண்டிய  தேவையில்லை. பிறர் உங்களிடம் சொல்ல விரும்பாத விடயங்களைத் தெரிந்துகொள்ள, ஒட்டுக் கேட்காதீர்கள். அதேபோல, நீங்கள் கேட்டவற்றைப் பிறரிடம் பகிர்ந்தே ஆகவேண்டும் என்கிற அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். இவற்றை நீங்கள் செய்தால், கேவலப்படுவீர்கள் என்பதுதான் கதையின் பாடம். 

கேட்பதிலுள்ள சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள ஓரிரு செய்முறைப் பயிற்சிகள் உங்களுக்கு உதவலாம்:

(1)  நான்கைந்து நண்பர்களை அமர்த்திக்கொண்டு, பத்து வார்த்தைகளை வேகமாகச் சொல்லிவிட்டு, எத்தனை வார்த்தைகளை அவர்கள் உள்வாங்கி, நினைவில் நிறுத்தி, திருப்பிச் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். பெரும்பாலானவர்களால் மூன்று முதல் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் சொல்ல முடியாது.

(2) நண்பர்கள் பத்து பேர் ஒரு வட்டமாக அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு வாக்கியத்தை உங்களுக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லுங்கள். அவரும் இதேபோல தனக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை அதைச் சொல்லட்டும். இப்படியே அந்த வாக்கியம் அந்த வட்டத்தைச் சுற்றி உங்களிடம் வந்து சேரும்போது, எப்படி உருமாற்றம் பெற்றிருக்கிறது என்று பாருங்கள். நமது கேட்கும் திறன் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புரியும்.

-சுப.உதயகுமாரன்

கலீல் ஜிப்ரான்

என் கதவில் எழுதி வைத்தேன்

"நயவஞ்சக குணத்தை வெளியே விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்"

யாரும் என்னை சந்திக்கவேயில்லை

-கலீல்ஜிப்ரான்

சுய ஒழுக்கம்

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் *மற்றவர்களுக்கும்* பயன்தரும் என்றால் நன்றி

#Self #Discipline

பாப்லோ நெரூடா

பூமி நமக்குக் கற்பிக்கக் கூடும் 
எல்லாமே மரித்து விட்டதாய்த் தோன்றுகையில்
துளிர்த்தலும் உயிர்த்தலுமான வாழ்வை.

-பாப்லோ நெரூடா

கலைஞர்

கோழி முதலா, முட்டை முதலா?_
*கலைஞர் :* _முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல் (capital)

-கலைஞர்

அப்துல் ரகுமான்

நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது
-அப்துல் ரகுமான்

கலைஞர்

ஒரு நிருபரின் கேள்வி...

"பார் வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்காவிட்டால் மதுபானக் கடைகளை மூடிவிடப் போவதாக மதுக்கடை உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்களே...?

கலைஞரின் பதில்: நல்லதுதானே. அவர்கள் கடைகளை மூடிவிட்டால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தானாகவே வந்துவிடும்தானே...

-கலைஞர்

ராஜா சந்திரசேகர்

தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் கிடைப்பதே இல்லை. தொடர்பு எல்லைக்கு  உள்ளே இருப்பவர்கள் பேசுவதே இல்லை.

   - ராஜா சந்திரசேகர்

ஜென் கதை

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை ஒன்றின் மேல் சவாரி செய்பவனை பார்த்து சாலை ஓரமாக நிற்பவன் கேட்கிறான்..
எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்? குதிரை ஓட்டியோ எனக்குத் தெரியாது. 'குதிரையைக் கேள்' என்கிறான்.நம் நிலையும் அதுதான்.

-ஜென் கதை

கவிஞர் கண்ணதாசன்

வாழ்க்கையில் ஒருவனுக்குத் திட்டமில்லாமல் போனால், 
அவனது எல்லா அனுபவங்களும் கசப்பாக இருக்கும் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

- கவிஞர் கண்ணதாசன்

ஈரோடு தமிழன்பன்

கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம் 

-ஈரோடுதமிழன்பன்

நா.முத்துக்குமார்

நீ அலை
நான் கரை
இணைந்தால் கடற்கரை

-நா.முத்துக்குமார்

லிங்கன்

No man has a good enough memory to be a successful lier

"யார் ஒருவரும் வெற்றிகரமாகப் பொய் சொல்லுகிற அளவுக்கு மிகத் தேர்ந்த நினைவாற்றல் உடையவராக இருக்க முடியாது

-லிங்கன்

தொ.பரமசிவன்

ஆண் தெய்வங்கள் கோயில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியும், பெண் தெய்வங்கள் கோயில்கள் வடக்கு நோக்கியும் இருக்கும்.

*பெண்களே அக்காலத்தில் போருக்கு தலைமை தாங்கியதால் வடக்கு நோக்கி ஆயுதமேந்தியபடி நிற்கின்றன.மூன்று திசையில் கடல் இருப்பதால் வடக்கில் இருந்துதான் பகை வந்திருக்கக்கூடும்.
அதனால் வடக்கு நோக்கி நிற்கின்றன.
காளி போன்ற தெய்வங்கள் ஆவேசமுடன் நிற்பதை காண முடிகிறது.

-தொ.பரமசிவன்

04/08/2020

புலமைப்பித்தன்

தேவைகளை விரிவுபடுத்திக்கொள்ளாமல் இருந்திருந்தால், அந்தத் தேவைகளுக்காகத் தேவையில்லாமல் பாடுபடுகிற வாழ்க்கை முறை வந்திருக்காது. கோட்டையைப் பிடிக்கப் போவதாக நினைத்துக்கொண்டு வந்து, வாழ்க்கையையே கோட்டை விட்டிருக்கிறேன்” 

-புலமைப்பித்தன்

ஜெயகாந்தன்

கம்பீரம் என்பது காட்டப்டுவதல்ல, காணப்படுவது 

- ஜெயகாந்தன்.

யியற்கை

இன்னுமிருக்கும் தொலைவு
வாகனங்கள் கடக்கும்போதெல்லாம்
நசுங்கிய உடலிலிருந்து எம்பிப் பார்க்கிறது
றெக்கை

-யியற்கை

நா.முத்துக்குமார்

நானறிந்த எம்ஜிஆர்கள்
 சீக்கிரம் 
செல்வந்தர்களாகிவிடும் 
சினிமா கதைகள் 
போலல்லாமல்
 சென்ற முறை பார்த்த போதும்
 அவர் ரிக்சாதான் 
ஓட்டிக் கொண்டிருந்தார் 

-நா.முத்துக்குமார்

சரவண கார்த்திகேயன்

நம் இயல்பில் தான் மற்றவர் பொறாமைப்பட வேண்டும்; மெனக்கெடலில் அல்ல.

-சரவண கார்த்திகேயன்

கல்யாண்ஜி

எல்லோருக்கும் சொல்லே வேண்டுமெனில்
யாரிடம் தருவேன் என் கண்ணீரை?

-கல்யாண்ஜி

எஸ்.ரா

காகிதம் இரண்டு இடங்களில் புகழடைகிறது. ஒன்று பணமாகும்போது,மற்றொன்று புத்தகமாகும்போது
-எஸ்.ரா
(இன்று காகித தினம்)

காந்தி

என் ஆதிக்கத்துக்கு எதிராக என் மனைவி செயல்படும் வழிமுறையிலிருந்தே சத்தியாகிரகத்தை நான் கற்றுக்கொண்டேன்

-காந்தி

லா.ச.ரா

நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு, இல்லையேல் சந்தேகம் உங்களுடையது, உண்மை என்னுடையது,அவ்வளவுதான். 
  - லாசரா,

செல்வராஜ் ஜெகதீசன்

அழைத்துப் போய் வந்த
   ஆசிரியரின் அத்தனை
   கெடுபிடிகளுக்குப் பின்னும்
   இன்னமும் நினைவில்
   அந்த ஸ்கூல் பயணம்
   இன்பச் சுற்றுலா என்றே..!”

 -செல்வராஜ் ஜெகதீசன்.