நீ என்னோடு பேசவில்லை என்றால் என்ன...?.
உனது கட்செவிகளின் வழியே என்னோடு இருக்கும் உன்னோடு நீலக்குறியீடுகள் வழியே பேசிக்கொண்டுதானே
இருக்கிறேன் தினமும்....
_வெற்றி...
31/01/2018
வெற்றி
30/01/2018
பாரதிவாசன்
தீராப்பகையுடன்
திரிந்தலைந்து கொண்டிருக்கிறது
உனக்குமெனக்குமான
மௌனங்களும் ஏக்கங்களும்
இந்த அறையின்
வெளியெங்கும..
_பாரதிவாசன்.
நகுலன்
நான் ஒரு நிழலானேன்.
நான் ஒரு ரோகியானேன்.
அதன்பின்
நினைவே பாதையாக
அதன் மேல் ஓடும்
ஒரு நாயானேன்.
_நகுலன்.
29/01/2018
மேத்தா
"அற்பர்களின் சந்தையில்
அன்பு மலர் விற்றவன்,
அன்பு மலர் விற்றதினால்
துன்ப விலை பெற்றவன் "
_மேத்தா
கலாப்ரியா
செத்துப்போனாள்
ஒப்பாரிச் சொந்தத்தை
சத்தமிட்டு விலக்கி
அவசரமாய் பிணக்
கையை மடித்துக் கட்டினான்-
சவப்பெட்டிக்கு அவனால் சங்கடம்
வரக்கூடாதென்று.
_கலாப்ரியா.
குஷ்வந்த்சிங்
💥“உங்கள் வியர்வையால் விளைந்தவை அனைத்தும் உங்களின் முறையான சொத்து;
வாரிசு என்ற முறையில் அடுத்தவர் சம்பாதித்த சொத்து உங்களை வந்தடைந்தாலோ, குருட்டு அதிர்ஷ்டத்தில் தற்செயலாக காசு கிடைத்தாலோ அது முறையற்றது.
இதைத்தானே ஹலால், ஹராம் என்று வகைப்படுத்துகிறார்கள்?
இதை இக்பால் சொன்னால் என்ன கீதை சொன்னால் என்ன?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் நோக்கம் உயர்வானது, தர்மத்திற்குக் கட்டுப்பட்டது என்ற உறுதியான எண்ணம் உங்களுக்கு ஏற்படுமாயின், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அஞ்சாமல் அப்பணியைத் தொடருங்கள்.
இதில் கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, நேரத்தை வீணடிக்காமல் போய் வேலையைப் பாருங்கள்.”
-குஷ்வந்த் சிங்.
-கடவுள்களும் குருமார்களும்
‘Gods and Godmen of India'
அப்துல்ரகுமான்
என் தோல்வியே! நீ வாழ்க..
நீ என் பத்தினி
உன்னைச் சொந்தம் கொண்டாட
வேறு யாரும்
வரமாட்டார்கள் அல்லவா?.. _அப்துல்ரகுமான்..
வண்ணநிலவன்
💥எதையேனும் சார்ந்திரு!
கவித்துவம்
தத்துவம், காதல்
இங்கிதம், சங்கீதமிப்படி.
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய் விடும்.
- வண்ணநிலவன்
படித்தது
இந்த போர்வைக்குள் கொஞ்சம் இரவை சேமித்து வைத்துள்ளேன் விடியலில் இரவு தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ளலாமென..
-படித்தது
28/01/2018
வெற்றி
நாம் சந்தித்த இடங்களை
கடந்து செல்லும் போது அனிச்சையாக
உன் நினைவுகளும்
முகமும்
வந்து செல்கின்றது..
_வெற்றி.
மு.மேத்தா
எழுதிக்கொண்டிருந்தான் விமர்சனங்கள் வந்தன...
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன.
_மு.மேத்தா.
குமார் ஷா
ம்.....ம்....ம்......ம்....
நான் எனக்கு நானே விமர்சனம் செய்கிறேன்.
என்னை ஒவ்வொரு முறையும் நிர்வாணமாக்கி மீண்டும் பிறக்கிறேன்.வலியில் புழுவாய் துடித்து வண்ணத்துப்பூச்சியாக பறக்கிறேன்.கனவுகளை விதையாக தூவி விட்டு, மேகமாய் கடந்து செல்லுகிறேன்.நான் காத்திருந்து அதை சொந்தமாக்க விரும்பவில்லை. அது என் வேலையில்லை .அந்த விதை எனக்கு சொந்தமும் இல்லை.நான் அந்த விதை நேசிக்கிறன்.எனக்குள் ,நான் ஒவ்வொரு முறையும் தொலைந்தும் போகிறேன் .
மனிதர்களை நான் குறைசொல்லவில்லை .அவர்கள் ஒவ்வொரு வண்ணம்.ஒவ்வொரு வண்ணமும் ஒரு கதை.
ம்....ம்....ம்....
உங்களுக்கு தெரியுமா ! மௌனம் கூட கதை சொல்லும்..
நீங்கள் சித்திரம் பார்த்து கதை பேசுறீர்கள்.நான் சித்திரம் வரைந்து கொண்டே கதை சொல்லுகிறேன்.
ம்...ம்...
இப்போது கூட இந்த வார்த்தைகளில் என் அகங்காரத்தை உணர்கிறேன். அகங்காரம் இன்னும் எனக்குள் இதோ ஒரு ஒரத்தில் இருக்கிறது...நான் போகிறேன் .எனக்கு நானே விமர்சனம் செய்துகொண்டு......
........ம்.......
Kumar Shaw
27/01/2018
கருப்பையா
என்ன சொல்லி என்னவாகிப்போகிறது? வெறும் உப்புதானே என்பதில் உடைந்து போகின்றது கடலின் அத்தனை பிரம்மாண்டமும்"
-கருப்பையா
மனுஷ்ய புத்திரன்.
#அன்பின்_சிறிய_நிமிடங்கள்.
கடற்கரையில்
தோளோடு தோளாகச்
சாய்ந்துகொள்வதில் அப்படி
என்ன கிடைத்துவிடும்?
இருசக்கர வாகனப் பயணத்தில்
தோளைப் பிடித்துக்கொள்வதில்
என்ன நிறைந்துவிடும்.?
அவ்வளவு அவசரமாக
பத்து விநாடிகள்
கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில்
எதை நாம் கடந்துவிடுவோம்.?
எல்லா கதவுகளும்
திறந்துகிடக்கும் முற்றத்தில்
மின்னலென அணைத்து விலகும் பொழுதில்
அப்படியென்ன சாகசம் இருக்கிறது.?
லிஃப்ட்டின் ஒரு தளத்திலிருந்து
இன்னொரு தளத்திற்கு
முத்தமிட்டுக்கொள்வதில்
என்னதான் நிகழ்ந்துவிடும்.?
அன்பின் சிறிய நிமிடங்கள்
நம்மை ஆட்கொள்கின்றன.
அவை நிகழ்கிறபோது
அப்படியொன்றும் அவை
அவ்வளவு சிறிய நிமிடங்களாக இல்லை.
_மனுஷ்ய புத்திரன்.
25/01/2018
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.!
இன்குலாப்
இன்றின் கடைசி நொடியிலும்
உலராது இருக்கிறது
ஒரு கண்ணீர்த்துளி
அதனுள் புகையும்
ஒரு தீப்பொறி..
_இன்குலாப்.
கல்யான்ஜி
அடைக்கப்படும் கதவின்
விருப்பமான சத்தத்திற்காக
உள் அறையில் காத்திருக்கிறேன்.
மிகுந்த கவனத்துடன்
சத்தமே கேட்காமல்
சாத்திவிட்டுப் போகிறார்கள்.
இப்படித்தான் ஒரு காரணமுமின்றி
இழந்துவிட நேர்கிறது
இன்னும் சிலவற்றை.
_கல்யான்ஜி.
கல்யாண்ஜி
பறவையையும் சேர்த்து
இந்தக் கிளையில்
அந்த பறவை அமர்ந்திருந்ததை
இந்தக் கிளையில் அமர்ந்து
அந்தப்பறவை பறந்து சென்ற பின்னரும்
இந்தக் கிளை சொல்லிக்கொண்டிருக்கிறது.
மரம் தன் கிளையை,
அந்தப்பறவையையும் சேர்த்து
நம்புகிறது பூரணமாக.
சுபா
நடுரோட்டில் செருப்பு அறுந்துவிட்டதும் உணர்ந்தேன், இதுவரை நான் கடந்து வந்த கரடுமுரடான பாதையை.
-சுபா
23/01/2018
மணிகண்டபிரபு
நிதானம்
எவ்வளவு பரபரப்பான
சாலையிலும் மிதிவண்டி
ஓட்டும் ஒருவன்
உலகத்தை வைத்திருக்கிறான்
நிதானமாக"!
-மணிகண்டபிரபு
ஜெயகாந்தன்
நான் ஒருபோதும் எதையும் அவமானமாக கருதியதில்லை.
ஏனென்றால் வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்!
#ஜெயகாந்தன்
மணிகண்டபிரபு
சாலையில் அடிபட்டவன் இருக்கிறானா,இறந்தானா என்று தெரிந்து கொள்வதற்குள் எனக்கான பேருந்து வந்து விட்டது
#நகரவாழ்க்கை
-மணிகண்டபிரபு
விக்கிரமாதித்யன்
சராசரி இந்தியர்களின்
சகிப்புத் தன்மையால் மட்டுமே
தேசம்
தீப்பற்றி யெறியாமல் இருக்கிறது
-விக்ரமாதித்யன்
21/01/2018
19/01/2018
ராஜா சந்திரசேகர்
நன்றி சொல்ல நினைக்கும்போதெல்லாம் கண் கலங்கிவிடுகிறது.முதல் நன்றியை
கண்ணீர்த்துளி சொல்லிவிடுகிறது.
- ராஜா சந்திரசேகர்
எஸ் ரா
எந்த ஒன்றையும் யாரோ சுயமாக முயற்சிக்கும் போது இந்த உலகம் அனுமதிக்காது.. அதில் வெற்றி கிடைக்கிறது என்று தெரிந்த பிறகே அதை அனுமதிக்கும்... எஸ்.ரா..
18/01/2018
பாரதிவாசன்
நீயற்ற நீயும்
நீயற்ற நானும்
நீயற்ற பொழுதும்
நீயற்ற கணமும்
நீயற்ற மௌனமும்
நீயற்ற வார்த்தைகளும்
நீயற்ற கொண்டாட்டங்களும்
நீயற்ற எதுவும்....
நானற்றுக் கிடக்கிறது-
வனாந்தரத்தில்
தனித்து விடப்பட்ட
ஒரு ஆட்டுக்குட்டியைப்போல.
_பாரதிவாசன்
(இடைவெளி நிரப்பும் வானம்)
மணிகண்டன்
தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை...
-வா.மணிகண்டன்
யுகபாரதி
பிழைக்க
கரைபெருக ஓடிய
காவிரியில் நீச்சலிடித்தவர்கள்
தங்கள் மகன்களை
பழக்கிக் கொண்டிருக்கிறார்கள்
வாட்டர்கேன் தொழிலுக்கு
-யுகபாரதி
ரா.பிரசன்னா
பக்கத்தில் கடவுள்!
வேறு வேலையாக வந்ததால்
கோயிலுக்குள் செல்லாமல்
வாசலில் நின்று
முகப்புச் சிற்பங்களை
பார்த்துக்கொண்டிருந்தேன்
பக்கத்தில் நிழலாட திரும்பினால்
அங்கே கடவுள்
நான் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால்
அவர் அதன் விரிசல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்
ஆசி பெறலாம் எனக் கால்களைத் தேடினேன்
“இங்கேயே இருந்து
செருப்புகளைப் பார்த்துக்கொள்’’
என உள்ளே சென்றுவிட்டார்
மெல்ல எட்டிப்பார்த்தேன்
“ஹலோ, இலவச தரிசனம் அந்தப் பக்கம்’’
என யாரோ வழிகாட்டினார்கள் கடவுளுக்கு
-ரா.பிரசன்னா
ராஜா சந்திரசேகர்
பட்டம் விற்கும்
சிறுவனிடம் கேட்டேன்
நீ எப்போது
பட்டம் விடுவாய்
சிரித்தபடி சொன்னான்
அதோ பட்டம் விட்ற
பசங்கள எல்லாம்
பாருங்க சார்
அது நான்தான்
- ராஜா சந்திரசேகர்
17/01/2018
அறிவுமதி
#முருகன்...
நான் மருதமலை மயில் பேசறேன் ...
-பாவலர். அறிவுமதி
மயிலாக மாறிய மக்கள் கவிஞரின் சொற்கள் ...
துயில் கொள்ள செய்ய வருடும் தோகையல்ல இ ஃ து துயில் கொள்ளும் தமிழரை எழுப்ப முயலுகிறது ...
இன்றைய சூழலில் இதுவோர் இன்றியமையாத பதிவு அறிவாலும் ஆதாரங்களாலும் நம்மால் வெல்ல முடியும் என்று சொல்லும் அறிவுமதி அவர்களின் பதிவு....
நான் மருதமலை மயில் பேசறேன்
தமிழர்களே!!!
உங்களிடம்தான் பேசறேன்!
பகுத்தறிவுல பேச வரல
பக்தியிலயே பேச வரேன்
முருகன் யாருன்னு கேட்டா
தமிழ்க் கடவுள்ங்கற
அழகா!
அப்புறம் ஏன் மருத மல
அருகிலே
தியான லிங்கம் சிவன் தலை?
சிவன் முருகன் அப்பன்தானே
நீ கேக்குற...
நான் கேக்கறேன் முருகனுக்கு
அப்பன் சிவன்னு
புறநானூறு அகநானூறு
குறுந்தொகை போன்ற
பழந்தமிழ் நூல்ல
சொல்லப் பட்டிருக்கா? இல்லையே!
தாய் கொற்றவையின்
மகன் என்றுதானே
சொல்லப் பட்டிருக்கு!..
30000ஆண்டுகளுக்கும்
முந்தைய
முருகன் தாத்தனுக்கு
7ம் நூற்றாண்டுக்குப் பிறகு
அறிமுகமாகிற ஒரு புராணச்சிலை
எப்படி அண்ணனாகிறது!
இத மறுக்க எவராவது ஆதாரங்கள்
வச்சிருந்தா வாங்க
என்னோட மருத மலைக்கே!
வாதாட காத்திருக்கேன்
ஆதாரங்களோட...
இது மாமல்லை புலிக்குகை
அருகில் புதைந்திருந்து
ஆழிப் பேரலை வந்தபோது
கண்டெடுக்கப்பட்ட
முருகன் கோயில் கல் வேல்!
முழுமுதற்கடவுள் உனக்கு
முருகன் தானே தமிழா!
மலைகள் பார்க்கும்
இடமெல்லாம்
முருகன் கோயில்கள்
கட்டி அழகு பார்த்தத் தமிழன்தானே!
மலேசியாவில் என்ன அழகான
முருகன் சிலை!
சிங்கப்பூர் மொரிசியசு என
உலகமெல்லாம்
போன தமிழர்கள் என் முருகனை
அப்படிப் போற்றிப்
பாதுகாக்கிறார்கள்!
தமிழர்கள் மட்டுமா
இதோ
தன் ஆங்கிலப்பெயரை
வடிவேல் என்றும்
தன் துணைவியின் பெயரை
வள்ளி என்றும்
அதிகார பூர்வமாய்
மாற்றிக் கொண்டு
தைப்பூச காவடி தூக்கி நிற்கும் இந்த
ஆசுத்திரேலியா
மனிதரைப் பார்!
இதோ பால் காவடிகள் எடுக்கும்
சீனப் பெண்களைப்
பார்!
எந்தெந்த நாட்டினரோ நம்
முருகனைப்
போற்றித்
தலைமேல் வைத்துக் கொண்டாடும்
போது
தமிழா தமிழா தமிழா
நீ
முருகனை மறந்து விட்டு
கண்ட
புராணப் பொய்களின் பின்
செல்வாயா?
இது அழகா?
குமரி முனை தமிழ்முனை
தென்புலத்தார் பெருந்தொகையாய்க்
கடல் விழுங்க
எஞ்சிப் பெருகியவர்கள்தாம்
இன்றைய நீங்கள்!
அந்தக் குமரி முனையையும்
வள்ளுவ அடையாளத்தைப்
பின்னுக்குத் தள்ளி
வடவர் அடையாளங்களை
மதவெறி சூழ்ச்சியில்
குவிக்கிறார்கள்!
சிவன் பார்வதி் ஆஞ்சநேயர்
சிலைகள்
இராமயண கண்காட்சி்
விரைவில்
திருப்பதி கிளை!
தமிழர்களே நீங்கள் என்ன
இளித்த வாயர்களா!
உங்கள் வழிபாட்டுக்குரியவர்
யாரென்று கூட
புரியாதவர்களா?..
உங்களை ஏமாற்றி்
முருகனுக்குரிய
தமிழ்நாட்டைக் கைப்பற்ற
ஒரு
சூழ்ச்சிக் கூட்டம்
நுழைய வருகிறது.
என்ன செய்யப் போகிறீர்கள்
தமிழர்களே??????
நான் என்ன செய்யப் போகிறேனா?
அற வழியில் போராடத்
தொடங்கி விட்டேன்.
மருதமலை மயில் நான்
எப்படிப் போராடுகிறேனா??
இதோ
இப்படித்தான்
மழை வருகிறது என்று நான்
தோகை
விரிக்கவில்லை!
தமிழ் முருகனுக்கு
எதிராக
வருகிறவர்களுக்காக
மட்டுமல்ல
தமிழர்களே!...
நீங்கள் வந்தாலும்
தடுப்பதற்காகத்தான் இந்தத்
தோகைக்
கேடயம்
விரித்துள்ளேன்!!!!!
எல்லாத் திசைகளில் இருந்தும் தமிழ்நாட்டைக் கைப்பற்ற பகைவர்கள் முனைகிற தவிப்பில் இந்தப் பதிவின் நீளம் தவிர்க்க முடியவில்லை பொறுத்தருளுங்கள் முருகன் கற்பிக்கப்பட்ட கடவுள் இல்லை அது குறித்து விரைவில் நூல் வெளியிடுகிறேன் நன்றி்!!!...
-பாவலர் . அறிவுமதி
கல்யாண்ஜி
நீங்கள் மட்டும்தானா
உங்கள் அறையில்?
நான் சொல்கிறேன் என்பதற்காகவேனும்
முயன்று பாருங்கள்.
மழைக்காலங்களில் அறை ஜன்னல்களைத்
திறந்துவைத்துவிட்டுப் புறப்படுங்கள்.
உங்கள் தினத்தின் ரொட்டியைச் சம்பாதிக்க,
நான் திரும்பிய ஒரு பின்னிரவில்
ஜன்னல் வழியே அடித்த சாரலில்
தரையில் ஒரு தகடு போல
தண்ணீர் பரவியிருந்தது.
எந்தச் சலனமும் இன்றி நடுவில் அமர்ந்திருந்ததது
மழைக்காற்று உட்புறம் வீசியிருந்த
ஒரு நந்தியாவட்டைப் பூ.
யாரோ அருகிருப்பது போல
அன்று நான் குளிரற்று உறங்கினேன்.
_கல்யாண்ஜி.
தபு சங்கர்
இந்தா என் இதயம்
இந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத் தூக்கிப் போட்டுவிடு.
அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது.
_தபு ஷங்கர்
பாரதிவாசன்
விசம் போல
என்னுள் இறங்கி
பரவிக்கொண்டிருக்கிறாய்
நீ
வா..மரணம் நோக்கி
பயணிப்போம்....
எல்லாம் கடந்து..
_பாரதிவாசன்.
இடைவெளி நிரப்பும் வானம்.
வெற்றி
என்னுடன் நீ வரவில்லை என்று யார் சொன்னது...
நான் செல்லும் இடங்களில் எல்லாம் உன்னை சுமந்து செல்கிறேன்..
என் இதயத்தில் நினைவுகளாய்..
_வெற்றி...
தபூ சங்கர்
நீ என் தேவதை
உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !
_தபூ ஷங்கர் கவிதைகள்...
வசந்தகுமாரன்
என்னோடு நீ
பேசாவிட்டால் என்ன-
எனக்குள்ளிருக்கும்
உன்னோடு நான்
பேசிக்கொண்டிருப்பேன்!
்்்்்்்்்்்்்்்்்்்
🌹கோ.வசந்தகுமாரன்்்
கவிஜி
ஆன்மாவுக்குள் இருப்பதாக
அடிக்கடி சொல்வாய்..
சாந்தி அடையாமல் திரிகிறேன்....
எல்லாப் புரிதல்களும்
என் வசம் என்பாய்...
உனைப் புரியவில்லையே தோழி...
விட்டுப் போகாதே என்பது
உனதேக்கம்..
பார் பெண்ணே... விட்டுப் போனது
உன்கால் தடங்களே...
எனக்கான உயரம் நீ
என்று சொல்லி நாக்கு கடிப்பாய்..
தாழப் பறந்து அடிபடும்
சிறகுகளே இப்போதெனக்கு...
ஜீவ எழுத்தென்று
பாராட்டுவாய்..
ஜீவன் போன பின்னும்
காதல் சொல்லுதென் உயிரெழுத்து...
நீ இன்றி ஏதோ இழக்கிறேன்
என்றது நீதான்..
நீ இன்றி இழந்ததென்னவோ
என்னை நான்தான்...
இத்தனை கோபம் எதற்கென்று
தோள் சாய்த்துக் கொண்டவள் நீ..
இத்தனை சாபம் எதற்கென்று
கவியேந்தி கேட்கிறேன்...
நீ சொல்லும் 'என்னங்க' இன்னும்
இருக்கிறது என்னிடம்...
நான் தந்த 'அம்மு' எப்போதாவது
இருக்கிறதா உன்னிடம்...?
- கவிஜி
பெருஞ்சித்திரன்
அவளின் வார்த்தைகள்
என் இரகசியத்திற்கு உரியது...
நீண்ட நாட்களுக்குப் பின்
அன்று தான் சந்தித்துக் கொண்டோம்
காட்டாற்றின் பேரிரைச்சல்
வலம் வரும் பெருவனத்தில்.
இம்முறை எங்களுக்குள்
ஒரே ஒரு ஒப்பந்தம் தான்;
ஒருவரை ஒருவர் தீண்டாது
காதலை நிகழ்த்திக் காட்டுதல் மட்டுமே,
எங்கள் முன்
காதல் மீறிய காமமும்,
காமம் மீறிய காதலும்
எல்லைகளாய்...
நிச்சயமாக
வனத்தின் நடைபாதை
ஒரு பாம்பினைப் போல நெளிந்திடும் வரை
வார்த்தைகளின் ஒலிகளுக்குள் தான்
அகப்பட்டுக் கிடந்தோம்
இருவரும்.
கண்களுக்குள் கிடந்த
காதலின் கண்ணிமைகளை
நூலாக்கித் தைத்திடும் வித்தையை
கற்றுக் கொடுத்தேன்
அவளுக்கு.
ஈடாக
இதுவரை
நம்மை வலம் வந்தது
காட்டாறு அல்ல
மாறாக
வனக்காற்றென்ற உண்மையை
கண்டெடுத்துத் தந்தாள்.
இமைகள் தைக்கப்பட்ட கண்கள்
எங்கள் காதலுக்கு
அறிமுகப்படுத்தியது
வனக்காற்றின் அனைத்துப் பாதைகளையும்;
அக்காற்றின் பெருங்காமத்தையும்...
முதலில் துளியும் நம்பிக்கை இல்லை தான்
எங்களுக்கு,
பார்வையற்ற வியர்வை பூத்த
எங்கள்
உப்பு உடலில்
உட்புகுந்து வெளியேறிய போது தான்
உணர்ந்து கொள்ள முடிந்தது
பால் பேதமற்று
புணர்ந்திடும் அதன்
பெருங்காமத்தை...
அவ்வனுபவம்
எங்களுக்கு
உணர்த்தியதெல்லாம்
ஒரு விளையாட்டை
ஒத்ததாகத் தான் இருந்தது நண்பர்களே!
ஆம், நண்பர்களே!
அது ஒரு அற்புதமான விளையாட்டு...
பார்வையற்ற எங்கள் காதல்
காற்றின் கால் தடங்களை
எளிதில் பார்க்க முடிந்ததால்
காற்றின் திசைகளும், நுட்பங்களும்
வெகு எளிதாக...
இப்போது வனக்காற்றற்ற வெளியில்
காற்றாக நான்;
நானற்ற வனத்திற்குள்
ஒளிந்திட முனையும் அவள்...
விதம் விதமாய் மணல் துண்டங்கள்;
வகை வகையாய் மரம்,செடிகள்;
பலவகையாய் பறவையொலிகள்;
பசியெடுத்த விலங்கினங்கள்;
தவ நிலையில் குன்றுகள்
இவை கடந்து நானவளை...
எனக்குப் பின் அவளென்னை...
வனக் காற்றின் நிகழ்த்துதலை
மாற்றி மாற்றி நிகழ்த்தியதால்
வனமெங்கும்
மலர்ந்திருந்தன
பெருங்காதலின் வெட்பப்பூக்கள்...
பயணத்தின் பாதைகள் முற்றுப்பெற
பார்வையற்ற பெருங்காமம்
எண்ணிக் கொண்டிருந்தது
எண்ணிலடங்கா புணர்வுகளை...
பின்
வனக்காற்று
விளையாட்டின் எல்லைகள்
முடிந்து விட்டதாய்;
பிரித்து விட ஆரம்பித்தது
எங்களின் இமை முடிச்சை.
விதிகள் மீறா காமத்தின் வெற்றியதில்
காதல் பிரிந்து செல்ல
எந்நாளும்
வனக்காற்றாய் சுழன்று கொண்டிருக்கும்
என் காதில்
அவளின் வார்த்தைகள்...
...பெருஞ்சித்திரன்...
கவிக்கோ
கவிக்கோவிற்கு அஞ்சலி :
கவிக்கோ கவிதைகள்:
கஜல்
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.
யுகபாரதி
பெருமை பொங்க பிறரிடம் பேசுவதற்கேனும்
ஒவ்வொருவரிடமும்
ஒளிந்திருக்கும் காதல்
-யுகபாரதி.
(மணிகண்டபிரபு)
மு மேத்தா
விதைக்கத்தான் தெரிகிறது உங்கள் விழிகளுக்கு!
காதல் பயிர் எங்கெங்கே விளைகிறது என கவனிக்கத் தெரியவில்லை!
-மு.மேத்தா.
பழனிபாரதி
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப்பூ
என் காதல்.
நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா
-பழனிபாரதி.
மணிகண்ட பிரபு
வெற்றி
#நீயும்_ஏழிலைப்பாலையும்..
காதல் மிகுந்த ஒரு பெண்ணின்
அன்புத் தழுவலினால்
ஸ்பரிசத்தினால்
பூத்து குலுங்கி
காய்த்து தன் வாழ்வை முடித்துவிடும் ஏழிலைபாலைபோல்
உன்நினைவுகள் என்னை
தழுவும் போது
நான்
உன்னை
காதலித்து திருமணம் செய்து
காமம்புரிந்து
மடிகிறேன்
ஒவ்வொரு
முறையும்
சங்க கால
ஏழிலைப்பாலை
மரம் போல்....
_வெற்றி....