பேசிக்கொண்டே
இருந்தால் நம் பலவீனமும்
பேசாமல் இருந்தால்
அடுத்தவர் பலவீனமும்
தெரிய வரும்.
_ப.பி.
31/03/2019
28/03/2019
நா.முத்துக்குமார்
"அழுது கொண்டு இருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்துவிடுவது இல்லை..
அழுதுகொண்டு இருக்கும் அப்பாவின் முகம். "
- நா.முத்துக்குமார்
ராஜேஸ்
காணிக்கை
காணிக்கை செலுத்தியும்
வேண்டுதலை
நிறைவேற்றுவதில்லை
தெய்வங்கள்
சாக்லெட்
கொடுத்தவுடன்
முத்தம் தந்துவிடுகிறது
குழந்தை
- ராஜேஸ்
படித்தது
எறும்புகளின் மீதான வன்முறைக்கு
பெரிதாக என்ன காரணம்
இருந்துவிடப்போகிறது...
அவை எளிது என்பதன்றி.
-படித்தது
மண்குதிரை
நான்
கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி
தேம்பியழுகிறேன்
எனக்குச் சம்பந்தமில்லாதது
இந்தத் தோல்வி
ஆடிக் களைத்த மைதானத்தை
நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவுமில்லை.
-மண்குதிரை
செல்வராஜ்
இன்னும் சற்று மேம்பட்டதாக
இன்னும் சிறிது சுரத்துள்ளதாக
இன்னும் கொஞ்சம் உவப்பானதாக
இன்னும் எப்படியெல்லாமோ
இருந்திருக்கலாம் என்கிறீர்கள்
இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்
இதையும் எப்படியாவது புரிந்துகொள்ளுங்கள்
ஏனைய பிற யாவற்றையும் போல.
-செல்வராஜ்
26/03/2019
முனைவர் குமரவேல்
பக்குவபடு.
இந்த உலகை ஞானம் கொண்டு பார். அறிவை தேடு அது தரும் நல்லதொரு பாதை.
நிறைய படி விளங்காது என்றாலும் திரும்ப திரும்ப படி உள்வாங்கு.
ஆம் எனக்கும் சட்டென்று எதுவும் விளங்கிவிடாது.
ஆம் என் பெரியதந்தையார் உன் பாட்டன்
களத்துமேட்டில் நெற்குவியலை கிளிகள் கொத்தி தின்றதை பார்த்து விரட்டியபோது சொன்னார் அதற்கும் சேர்த்துதான் வெள்ளாமை.
உண்மையில் அப்போது புரியவில்லை மகளே ஆனால் காலம் உணர்த்தியது. சம்பாதிக்க தொடங்கியபோது.
வழியில் யாசகம் கேட்கிறவருக்கு பத்து ரூபாய் போடுகிறோமே யாருக்கு உதவியென்று வந்தால் பலனின்றி உதவுகிறோமே சொந்தபந்தங்களுக்கு அள்ளி தருகிறோமே.
அதற்கு சேர்த்துதான் நம்மிடம் தரப்பட்டிருக்கிறதென்று புரிந்தது. அதற்கும் சேர்த்துதான் வெள்ளாமையென்றதன் பொருள் அப்போதுதான் உணர்ந்தேன் நம்மிடம் தரப்பட்டிருப்பதில் வறியவருக்கும் சேர்த்துதான் என்பதை.
ஆம் மகளே முதியோர் சொல் கேள் ஆரம்பத்தில் எரிச்சல் தரும் பிறகு காலம் நமக்கு புரியவைக்கும்.
வாசலில் நிற்கிறவரை விரட்டாதே முடிந்ததை தந்தனுப்பு.
தாயை நேசி அவள் உன்னை என்னிலும் அதிகமாய் நேசிக்கிறாள்.
ஆனால் வெளிகாட்டாமல் உன்னை சீர்படுத்துகிறாள்.
எதையும் கேட்டு பெறு எதுவானாலும் திறந்த மனதோடு அவளோடு பேசு நீ பேசுவதை அவள் அறிவாள்.
உன் வயதை கடந்துதான் அவள் வந்திருக்கிறாள்.
நம்மை நம்மிலும் அதிகமாய் நேசிக்கிறவள்.
தாய் எல்லாவற்றிக்கும் மேல் அது உனக்கு போகபோக புரியும்..
மகளே ..
மண்ணை நேசி.
மனிதம் படி.
மகிழ்ந்து வாழ்.
நிறைய படி.
எதையும்
ஆய்ந்து அறி.
இரண்டுதான் உண்டு உலகில்
சரி ,தவறு.
உண்மை ,பொய்.
நல்லது ,கெட்டது
நீ நம்புகிற விடயம் மற்றவர் பார்வையில்
சரியல்லாததாக இருக்கலாம் ஆனாலும்
சரி என்பதை மட்டுமே செய்.
காலம் மிக சிறந்த ஆசான் நல்லது கெட்டதை போதிக்கும்,உணர்த்தும்.
நீதி தவறாது நட.
நன்மையை விரும்பு முடிந்தவரை
நல்லதை நாடு
நல்லதையே செய் .
அனைவரிடம் அன்புகொள்.
அதைவிட பேராயுதம் வேறேதுமில்லை.
முனைவர் ம.குமரவேல்
24/03/2019
பெண்
மனதை வருடிய கவிதை?
பெண் சுதந்திரம்
உணவகம் நில்லா
விரைவு பேருந்து
பொட்டல் வெளியில்
வேகம் குறைத்து நின்றது...
ஓட்டுனரும்,நடத்துனரும்
அவசரமாய் இறங்க...
(குறி)யீட்டை
புரிந்து கொண்டு
சில ஆண்களும் இறங்கினர்...
எனை ஏதும் கேட்காமலே
என் கணவரும் இறங்கினார்...
பெண்கள் ஒருவரும் இறங்கவில்லை
சிலர் புடவை தலைப்பு
கலைந்து தூங்கினர்
சில பெண்கள்
இறங்கிய ஆண்களை
வெறித்து பார்த்தனர்...
பேருந்தின் பின்புறத்தை
கட்டணமில்லா கழிவறையாக்கினர்..
இறங்கிய ஆண்கள்...
ஒரு சில ஆண்கள்
முகத்தில் தீர்வு கண்ட
பரவசத்துடன்
பேண்டில் சிந்திய
சிறுநீரைதட்டியபடி
பேருந்து
படிகளில் ஏறினர்...
ஒரு மணிநேரத்துக்கு மேலாக...
உள்பாவாடை
நனையும் பயத்தில்
சிறுநீரை
அடக்கி கொண்டு
பயணிப்பது
யாருக்கு தெரியபோகின்றது...
பேருந்து
மேடு பள்ளங்களில்
பயணிக்கும் போது
சிறுநீர் வந்து விடுமோ?என்று
மனம் முழுவதும்
பயத்தோடும்
வேதனையோடும்
பயணிப்பதை
ஆண்வர்க்கம் அறியுமா?
எல்லாவற்றிலும்
சரிபாதியாய்
என்னோடு பயணிக்கும்
என் கணவனுக்கே...
என் நிலை புரியாத போது,
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்
எப்படி புரியும்????
ஆத்திரத்தை அடக்கினாலும்
மூத்திரத்தை அடக்க முடியாது என
பொது இடத்தில்
பேசும் தைரியம்...
எந்த இடத்திலும்
ஜிப்பை அவுத்துக்கொள்ளும்
சுதந்திரம் உள்ளவர்களுக்கு
எப்போதுதான் புரிய போகின்றது...
நாங்களும்
ரத்தமும் சதையுமான
கழிவுஉறுப்புகளை கொண்ட
மனிதபிறவிகள் என்று..!
23/03/2019
ஹெலே மார்த்தி
கியூபப் தேசிய புரட்சியாளர் ஹெலே மார்த்தி திறமையாளர்கள் பற்றி இவ்வாறு கூறுவார்.
‘கையறு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதுதான் திறமையுள்ளவர்களின் கடமையாகும், இதுதான் மனிதர்களை அளவிடும் கருவி’
பகத்சிங்
புரட்சி என்றால் என்ன?
புரட்சி என்பது இரத்த வெறி கொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதையே நாங்கள் புரட்சி என்கிறோம்.
-புரட்சியாளர் பகத்சிங்
பகத்சிங்
“என்னுடைய உயிர் மிகவும் உயர்ந்தது என்று நான் கருதவில்லை. கொள்கைகளை விற்றுவிட்டு அதைக் காப்பாற்றுவதில் அர்த்தமில்லை”
-தேசத்தின் வீரமகன் பகத்சிங் .
கண்ணதாசன்
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’
- கவியரசு கண்ணதாசன்
மாயா ஆஞ்சலோ
உன் வார்த்தைகளால் என்னை நீ சுட்டுப் பொசுக்கலாம்.
உன் பார்வையால் என்னை நீ வெட்டி துண்டாக்கலாம்.
உன் வெறுப்புகளால் என்னை நீ கொலை செய்யலாம்.
ஆனால், சத்தமில்லாமல் காற்றைப் போல் நான் மேலே எழுவேன்.
- மாயா ஆஞ்சலோ
22/03/2019
ரூமி
*நீ கடலில் கலந்திருக்கும்*
*ஒரு துளி அல்ல*
*ஒரு துளிக்குள்*
*ஔிந்திருக்கும் பெருங்கடல்*
-ஜலாலுதீன் ரூமி
21/03/2019
17/03/2019
இந்திரா
மற்றவர்களை விட நீ அதிமுக்கியமானவள் என்பதை உணர்த்த ஒரு ஆணுக்கு ஏழு கடல் ஏழு மலையெல்லாம் தேவைப்படுவதில்லை. "சனியனே, காலேலர்ந்து ஏன் பேசல?" என்கிற ஒற்றைக்கோபம் போதுமாயிருக்கிறது.
-இந்திரா
15/03/2019
சு.வெ
"அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும்.
எம் மக்களை ஆளட்டும் , எம்மை ஆளட்டும்"
- வேள்பாரி சு.வெங்கடேசன்
ஸ்டீபன் ஹாக்கிங்
"எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல; என்ன மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம்."
_ஸ்டீபன் ஹாக்கிங்
ஸ்டீபன் ஹாக்கிங்
வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!"
- ஸ்டீபன் ஹாக்கிங்
14/03/2019
வைக்கம் முகமது பஷீர்
"வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும்"..
- வைக்கம் முகம்மது பஷீர்
ஜெயந்தன்
மக்கள் யாருக்கு வழிவிடுகிறார்கள் என்றால், யார் அவர்களை இடித்து இழுத்து, பின்னே தள்ளி முன்னேறிச் செல்கிறார்களோ அவர்களுக்கு என்று யாரோ சொன்னது மிகவும் சரிதான். உலகம் தன்னை அதட்டத் தெரிந்தவர்களின் ஆணைக்குத் தான் அடிப்பணிகிறது. அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது. நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது.
#ஜெயந்தன்
வெ.கிருஷ்ணவேணி
தேடல்
கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!
- வெ.கிருஷ்ணவேணி
மாரி செல்வராஜ்
ஆண் பெருமிதத்தை
பாதுகாப்பதே சாதி பெருமிதமும் மத பெருமிதமும் தான்
சாதி மத பெருமிதத்தின் குறிக்கோளே
பெண் அடிமைத்தனம் தான்
சாதி அதிகாரமோ அல்லது மத அதிகாரமோ அல்லது பாலின அதிகாரமோ
ஒரு ஆண் அதை தன் அருகிலிருக்கும் பெண்ணிடமிருந்தே தொடங்குகிறான். பெண் என்பவள் தன் சொத்து ,தன் அடிமை , தனது கெளரவம் என எல்லாவற்றையும் அவனுக்கு விதைத்தது சாதியும் மதமும் தான் அதனால்தான் ஒரு பெண்ணிடத்தில் தான் ஒரு மிருகமாக நடந்துகொள்ள எல்லா உரிமையும் இயற்கையிலேயே இருப்பதாக அவன் நம்புகிறான். எனவே மானுட அறம் என்ன என்பது தெரிந்தும் தங்கள் சுய லாபத்திற்காக சாதி மத பெருமிதங்களின் வழி ஆண் திமிரை திட்டமிட்டு வளர்க்கும் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் பொள்ளாச்சி கொடுமையில் பங்கு இருக்கிறது .
சுய சாதி மத பெருமை பேசுகிறவர்களிடமிருந்து இளைஞர்களை விடுவிப்பது தான் பாலின புரிதலுக்கும் சரியான வழியாக இருக்கும்
——-
மாரி செல்வராஜ்
பிரான்சிஸ் கிருபா
"துயருருவது பெரும் அவஸ்தை. அதை அடுத்தவரிடம் எடுத்துக் கூறுவது அதிலும் மகா அவஸ்தை.."
-பிரான்சிஸ் கிருபா
09/03/2019
ஓஷோ
யாரும் யாரையும் மாற்ற முடியாது.இது ஒரு மிகப்பெரிய அனுபவம். மிகப்பெரிய புரிந்து கொள்தலாகும்
ஆகவேதான்,வயதானவர்கள் மிகவும் பொறுமையாகவும், சகித்துக்கொண்டும் போகிறார்கள்.ஆனால் இளமையில் அவர்கள் இருவரும் மிகவும் தீவிரமாக இருந்தார்கள். ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.அவர்கள் தனக்கு பிடிக்காத எல்லாவற்றையும் மாற்ற முனைகிறார்கள். அவர்களது விருப்பப்படி, இந்த உலகம் அமையவேண்டும் என நினைக்கிறார்கள். கடுமையாகப் போராடுகிறார்கள்.ஆனால் நினைத்தது நடக்காது.ஏனெனில் இயற்கையே அப்படித்தான்
-ஓஷோ
07/03/2019
வான்கா
இயல்பாக இருத்தல் என்பது நடைபாதை போன்றது. அது மக்கள் நடந்து செல்ல வசதியானது. ஆனால், அங்கே ஒருபோதும் மலர்கள் மலர முடியாது.
-வான்கா
06/03/2019
பிரான்சிஸ் கிருபா
"பிரியத்தெரியாத ஐந்து விரல்களையுடைய
என் கரத்தை பிரியத்தோடு நீட்டும்போது
பற்றிக் குலுக்கிவிட்டுப் பிரிகிறீர்கள்."
-பிரான்சிஸ் கிருபா
பெரியார்
என்னை 'உண்மையாய்' எதிர்க்கத் துவங்குங்கள். அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும். அந்த கேள்விக்கான தேடல் நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும் -
#பெரியார்
அரூபி
நிமிடத்தில் விழுந்துடைந்து துகள் துகளாய் சிதறிப் போய்விடக்கூடியது வாழ்வு எனும் நிதர்சனத்தை எத்தனை சுலபமாக மறந்துவிடுகிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்கள் வாழ்வு மீதான ஆசையின் அளவீடு.
அரூபி
மனுஷ்ய புத்திரன்
இப்படி இறந்தவனிடம்
எங்கள் தவறு ஒன்றை சரிசெய்துகொள்வதற்கு
நாங்கள் ஒவ்வொருவருமே விரும்பினோம்
உயிருள்ள மனிதர்களை நிராகரிப்பதுபோல
இறந்தவனைக் கைவிடுவது
எங்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை
#மனுஷ்யபுத்திரன்
மகுடேசுவரன்
நல்ல கவிதையின் அடையாளம் முதல் வரியிலேயே தெரியும். அந்த முதல் வரியை எட்டிப் பார்க்க வந்தவையே பின்னுள்ள மற்ற வரிகள் !
-மகுடேசுவரன்
சி.மோகன்
மாயக் கவித்துவம்
சி. மோகன்
மலைப்பிரதேசக் கனவுக் குடிலொன்றின்
வெளியில் கிடக்கும் கட்டில் மீது
அமர்ந்திருக்கும் என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்.
ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்
உன்னைப் பார்க்காது
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்திற்காக ஆதங்கப்படுகிறாய்.
நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
(எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை" தொகுப்பு,
சுந்தரராமசாமி
சவால் முன் ஒரே ஒரு தேர்வுதான் எப்போதும் இருக்கிறது. அதை நேரடியாக எதிர்கொள்வது.
கூச்சமின்றி எதிர்கொள்வது
-சுந்தரராமசாமி
மகுடேஸ்வரன்
ஊர்வீதி எல்லாம் அத்துபடி
சந்துபொந்து குண்டுகுழி
சாக்கடைத் தேங்கலும் கூட.
நாய்களோடு நல்ல பரிச்சயம்
இது யார்வீட்டுப் பூனை என்பதும் தெரியும்.
எந்த மரநிழல் நிற்க ஏற்றது
எது பூத்துதிர்கிறது
எல்லாம் அறிவான்.
யார் இட்ட கோலம் அழகு
அவனுக்குத் தெரியும்.
முச்சந்தியில் இஸ்திரி போடுபவனிடம்
தினந்தோறும்
பீடிக்கு நெருப்பு வாங்கி
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டான்.
சித்தர் பாடல்களை
அப்படியே ஒப்பிக்கிறான்.
யாரோ தந்திருக்கிறார்கள்
பீட்டர் இங்கிலாந்து சட்டை அணிந்திருக்கிறான்.
மளிகைக்கடைக்காரருக்குச்
சில்லறை தருகிறான்.
‘ஏந்தாயி கண்ணு கலங்கியிருக்கு ?’
விசாரிக்கவும் தெரிகிறது.
கிரிக்கெட் பந்து அவன்மீது பட்டது
சிரித்தபடி எடுத்து வீசுகிறான்.
அவனுக்கு யார்மீதும் புகார் இல்லை
புகழ்ச்சி இல்லை
கேள்வி இல்லை
விமர்சனம் இல்லை.
நேற்றை மறக்க
நாளையைத் துறக்கத்
தெரிந்திருக்கிறது.
அவனைப்
பிச்சைக்காரன் என்று
எப்படிச் சொல்ல முடியும் ?
-மகுடேஸ்வரன்
சுகுமாரன்
எட்டுக்காலியும் நானும்
*******
எட்டுக்காலியும் நானும் ஒன்று
இருவரும் பிழைப்பது
வாய் வித்தையால்
எட்டுக்காலிக்கு எச்சில்
எனக்குப் பொய்
இருவரும் வலை பின்னுகிறோம்
அது எச்சிலைக் கூட்டி
நான் உண்மையைக் குறைத்து
எட்டுக்காலி வலை
ஜீவித சந்தர்ப்பம்
எனது வலை
சந்தர்ப்ப ஜீவிதம்
எட்டுக்காலிக்குத் தெரியும்
எச்சிலின் நீளமும் ஆயுளும்
எனக்கும் தெரியும்
பொய்யின் தடுமாற்றமும் அற்பமும்
எட்டுக்காலியின் நோக்கம் தக்கவைத்தல்
எனவே
வலை - ஒரு பாதுகாப்பு
எனது தேவை தப்பித்தல்
எனவே
பொய் - ஒரு பாதகம்
வாய்வித்தைக்காரர்கள் இருவரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட பாக்கியசாலி
சொந்த வலையில் ஒருபோதும்
சிக்குவதில்லை அது.
- சுகுமாரன்
மனுஷ்ய புத்திரன்
என் அன்பை
சாக்லெட் உறையில் சுற்றப்பட்ட
சிறிய இனிப்பாய்
கையடக்கமாய்
வைத்துக்கொள்ளத் தெரியவில்லை
மலையிலிருந்து
ஒரு பாறை உருண்டு வருவதுபோல
அத்தனை பெரிய சம்பவமாக
அதை நிகழவிடுகிறேன்
யாருக்குமே கொஞ்சம்
அனிச்சையாய்
ஒரு கணம்
தள்ளி நிற்கத்தானே தோன்றும்
-மனுஷ்யபுத்திரன்
ராஜா சந்திரசேகர்
மயிலிறகால் வருடுகிறவர்களிடம் கவனமாக இருங்கள்.மயிலைக் கொன்றவர்களாகக் கூட இருக்கலாம்.
-ராஜா சந்திரசேகர்
அனுராதா ஆனந்த்
மனித மனம் அன்புக்கு ஏங்குவதாக இருக்கிறது.
சில நல்ல வார்த்தைகளுக்காக உருகிப்போய் காத்துக்கொண்டிருக்கிறது.
அங்கீகாரத்திற்கு பசித்திருக்கிறது.
காதலையும்
காமத்தையும் தேடி அலைகிறது.
இவை மறுக்கப்படும்போது,துயருற்று வருத்தம் கொள்கிறது.
அதீத வருத்தத்தில் வக்கிரம் கொள்கிறது.
தனக்கு நெருக்காமானவர்களையும்
தொடர்பே அல்லாதவர்களையும் துன்புறுத்தி, தானும் துன்புற்று மடிகிறது.
எல்லா நிலைகளிலும் தன்னை ஒரு படி ஏற்றமாக காண்பிக்க முற்படுகிறது.
அதற்காக அடுத்தவனை தாழ்த்தி ஒடுக்குகிறது.
இதுதான் எல்லா மனிதர்களும் பொதுவாக செய்யும் சல்லித்தனம்.
_அனுராதா ஆனந்த்.
(விகடன் தடம்)
அனுராதா ஆனந்த்
"நாம் எல்லோரும் வார்த்தைகளால் ஆனவர்கள் தான்.
நாம் வார்த்தைகளுக்கு வெகு முன்பே தொடங்கியவர்கள்.
வார்த்தைகளை கடந்தும் தாண்டியும் முடிக்கப்போகிறவர்கள்.
நம் நாள்கள் வார்த்தைகளின் விஷமேறியவை.
நாம் உண்மையாகச் சொன்னவை.
நம்பாமல் சொன்னவை.உணர்ச்சிகளிலிருந்து விவாகரத்தானவை.காயப்படுத்தும் வார்த்தைகள்.மறைக்கும் வார்த்தைகள்.இறந்த வார்த்தைகள் என்று நாம் வார்த்தைகளால் ஆனவர்கள்."
_அனுரா ஆனந்த்.
(விகடன் தடம்)