மெளனத்தின் மீது சாய்ந்து கொண்டு என் இறந்த காலத்தை நான் விசாரிக்கிறபோது என் மூலமுகம் தெரிகிறது!
-வைரமுத்து
மெளனத்தின் மீது சாய்ந்து கொண்டு என் இறந்த காலத்தை நான் விசாரிக்கிறபோது என் மூலமுகம் தெரிகிறது!
-வைரமுத்து
மலையாள கவிஞர் கல்பற்றா நாராயணனால் எழுதப்பட்ட கவிதை
"அம்மா"
.
அம்மா இறந்தபோது
ஆசுவாசமாயிற்று
இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்
எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்
.
இனி என்னால்
காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்
முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை
.
இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து
தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்
ஓடிவரும் அலறல்
என்னை திடுக்கிடச்செய்யாது
.
இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது
கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை
பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த
பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து
தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்
நேற்றோடு இல்லாமலாயிற்று
.
இனி நான்
சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்
நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு
நேற்று அணைந்தது
.
தன் தவறால்தான்
நான் துன்பப்படுகிறேன் என்ற
கர்ப்பகால பிரமைகளிலிருந்து
அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.
ஒருவழியாக அவள் என்னை
பெற்று முடித்தாள்
வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் ஒருபோதும் மேன்மை அடைவது இல்லை. மாற்றங்கள் நாம் விரும்பியபடி ஏற்படுபவை அல்ல. அதற்காக நாம் எப்போதும் பாதுகாப்பு வளையம் ஒன்றுக்குள்ளாகவே வசிக்க முடியாது இல்லையா?
மாற்றங்களை எதிர்கொள்ள துணிவற்றவர்கள் முடங்கி விடுகிறார்கள். மாற்றங்களைத் தேடிப் போகிறவர்கள், மாற்றங்களைக் கண்டு அஞ்சாதவர்கள், மாற்றங்களுக்கு ஏற்ப தன் திறமைகளை வளர்த்துக் கொள்கிறவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் துயரங்களும் துரதிர்ஷ்டங்களும் வந்து போகவே செய்கின்றன. ஆனாலும் நம்பிக்கையே வாழ்க்கையை முன்னெடுத்துப் போகிறது. வெறும் நம்பிக்கை மட்டும் வாழ்க்கை இல்லை. மாற்றங்களைப் புரிந்து கொண்டு எதைக் கைவிடுவது? எதை தக்க வைத்துக்கொள்வது? எப்படி மாற்றிக் கொள்வது? என்பதை முடிவு செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்ட மனிதனின் கடமை!
உலகில் எதுவும் மாறவே கூடாது என நினைத்தால் வாழ்க்கை நம் கையை விட்டுப் போய்விடும். ஆகவே மாற்றங்களைக் கண்டு பயங்கொள்ள வேண்டாம். நாம் எவ்வளவு சீக்கிரம் மாற்றங்களைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நன்மை பயக்கும்!
-கடவுளின் நாக்கு.
எஸ்.ராமகிருஷ்ணன்.
ஒரு கணம் முன்பு.!
"எப்போது நிராகரிப்பாய் என்னை ?"
எனக் கேட்டாய்.
"எப்போது வெறுப்பாய் என்னை ?"
எனக் கேட்டாய்.
சற்றும் யோசிக்காமல் சொன்னேன்,
"நீ என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு.
நீ என்னை வெறுப்பதற்கு ஒரு கணம் முன்பு."
- மனுஷி.
கூட்டில்
முட்டையிட்டு
இரை தேடச்சென்ற
தாய்ப்பறவையின்
பதைபதைப்போல்
சற்றும் குறைவில்லாதது
மகப்பேறிற்காக
காத்திருக்கும்
தாயின்
பதைபதைப்பு....
_வெற்றி...
ஆன்மாவுக்குள் இருப்பதாக
அடிக்கடி சொல்வாய்..
சாந்தி அடையாமல் திரிகிறேன்....
எல்லாப் புரிதல்களும்
என் வசம் என்பாய்...
உனைப் புரியவில்லையே தோழி...
விட்டுப் போகாதே என்பது
உனதேக்கம்..
பார் பெண்ணே... விட்டுப் போனது
உன்கால் தடங்களே...
எனக்கான உயரம் நீ
என்று சொல்லி நாக்கு கடிப்பாய்..
தாழப் பறந்து அடிபடும்
சிறகுகளே இப்போதெனக்கு...
ஜீவ எழுத்தென்று
பாராட்டுவாய்..
ஜீவன் போன பின்னும்
காதல் சொல்லுதென் உயிரெழுத்து...
நீ இன்றி ஏதோ இழக்கிறேன்
என்றது நீதான்..
நீ இன்றி இழந்ததென்னவோ
என்னை நான்தான்...
இத்தனை கோபம் எதற்கென்று
தோள் சாய்த்துக் கொண்டவள் நீ..
இத்தனை சாபம் எதற்கென்று
கவியேந்தி கேட்கிறேன்...
நீ சொல்லும் 'என்னங்க' இன்னும்
இருக்கிறது என்னிடம்...
நான் தந்த 'அம்மு' எப்போதாவது
இருக்கிறதா உன்னிடம்...?
- கவிஜி
பின்னிரவில் உன்னை மட்டுமே
முன்னிருத்தி வந்த கனாவிலும்,
வனாந்திரத்தின் தனிமையிலும்,
எதிர்வரும் பிம்பங்கள்
உன் சாயலில் கடக்கையிலும்,
மார்கழி நாளில் சன்னலோர வரம்
கிடைக்கும் நிமிடங்களிலும்,
திரைப்படமொன்றில் பால்ய பருவ
காதல் காட்சிகள் காண நேரிடுகையிலும்,
உன் பெயர் தாங்கிய கடையொன்றின்
பெயர் பலகையில் தற்செயலாய்
கண்கள் நிலைகுத்தி நிற்பதிலும்,
சில கணங்கள் வாழ்ந்துவிட்டுத் தான் போகிறது.
அந்த "முதல் காதல்"....
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொன்றுக்கும் போட்டி
கறவைமாடும், கன்றும் எனக்கு
காளையும் கிடாரியும் எனக்குன்னு
அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும்
அத்தனை அடிதடி.
பாயில் சுருண்டு கிடக்கும்
பாட்டியை
எனக்கு எனக்குன்னு
யாரும் சொல்லக் காணோம்!
-விஜிலா தேரிராஜன்
கோணம்
நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்
-சல்மா
சொந்தக்
காலில்தான்
நிற்கிறான்...
பொய்க்கால்
குதிரையின்
உழைப்பாளி..!
-தஞ்சை நெப்போலியன்.
எறும்பு
செத்துப்போன
வண்ணத்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்...
பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை
விருந்தைச் சுமக்கும்
கர்வமும் இல்லை
அவைகளுக்குள்..!
-வசந்தகுமாரன்
அவனை ஒரு வியாழக்கிழமை மதியத்தில்
மளிகைக் கடையில் சந்தித்தேன்
அவனை அப்படியே அச்சில் வார்த்தது போல் இருந்தால் அவனுடைய மகள்..
வகுப்பறையை விட்டு எல்லோரும் வெளியேறுவதற்கு காத்திருந்தவனாய்
திடுமென ஓடி வந்து கட்டிப்பிடித்துக்
கண்மண் தெரியாமல் முத்தம் தந்தவனா இவன்..
ஓடி போயிடலாம் வா என பள்ளி சீருடையுடன் ரயிலேற்றியவன்
எந்த நிலையத்தில் என்னை தவற விட்டான்..
செத்துப் போவதற்கு
சில மணித்துளிகளுக்கு முன்பாவது வாழ்ந்து விடலாம் என அவன் சொன்னதும்
சேர்ந்து வாழ்வதற்காக சாகத்தான் வேண்டும் என்றால் தனித்தனியாக வாழ்ந்து விடலாமே என நான் சொன்னதும் நேற்று போலிருக்கிறது..
இதோ நலமாய் இருக்கிறாயா என கேட்கக் கூட தோன்றாமல்
அவன் எதிரில்
நின்று கொண்டிருக்கும் என்னை அவனுடைய மகள் பார்க்கிறாள் பாம்பை பிடிப்பதைப் போல
நாங்கள் வாழ்க்கையைப் பிடித்து விளையாடியது தெரிந்தது போல சிரிக்கும் அவள் கால தேவதையாக தான் இருக்க முடியும்..
லீனா மணிமேகலை..
நான் ஒரு சக்ரவர்த்தியாக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. எவரையும் ஆட்சி செய்யவோ, கீழடக்கவோ விரும்பவில்லை. நான் எல்லோருக்கும் உதவவே விரும்புகிறேன்.
ஒவ்வொருவரின் மகிழ்ச்சியில்தான் நாம் விரும்புகிறோம், ஒவ்வொருவரின் துயரத்தின் மூலம் அல்ல.
வீரர்களே.. அடிமைத்தனத்துக்காகப் போராடக்கூடாது. சுதந்திரத்துக்காக மட்டும் போராடுங்கள்.
நாம் வேகம் பெற்றிருக்கிறோம்...ஆனால் நமது கதவுகளை நாமே இழுத்துச் சாத்தியிருக்கிறோம்.
வளமை வழங்கிய இயந்திரங்கள், நம்மை வறுமைக்கு ஆளாக்கியுள்ளன.
அறிவு நம்மை வக்கிர புத்தியுள்ளவர்களாக மாற்றியிருக்கிறது.
கெட்டிக்காரத்தனம், நம்மைக் கடின இதயம் கொண்டவர்களாகவும் கருணையற்றவர்களாகவும் ஆக்கியிருக்கிறது.
நாம் அளவுக்கு அதிகமாக யோசித்து, மிகவும் குறைவாக உணர்ச்சி வசப்படுகிறோம்.
இயந்திரங்களைவிட மனிதநேயம்தான் நமக்குத் தேவை. கெட்டிக்காரத்தனத்தை விட, கருணையும் நட்புறவும் தான் தேவை.
நமக்கு நிகழ்ந்துள்ள துயரங்களுக்குக்
காரணம் பேராசையின் தாக்குதல்தான். மனித குல வளர்ச்சியைக் கண்டு பயப்படும் மனிதர்களின் குரூரங்கள்தான்.
வீரர்களே! இந்தக் கொடியவர்களுக்கு நீங்கள் அடிபணியக்கூடாது.
உங்களை இளக்காரமாக கேலி செய்பவர்களுக்கு...
உங்களை அடிமைகளாக்குபவர்களுக்கு...
நீங்கள் இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்டளையிடுபவர்களுக்கு...
போரின் இரையாக மட்டுமே உங்களை நினைப்பவர்களுக்கு ...நீங்கள் அடிபணியக்கூடாது.
இயந்திர மனமும் இயந்திர இதயமும் உள்ள இயந்திர மனிதர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டியதில்லை....
- சார்லி சாப்ளின்
தி கிரேட் டிக்டேட்டர்
தமிழில் : சிவன்
அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை. பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வாழ்வியல், அறம் எனப்படும். இந்த அறம் எப்போதெல்லாம் அழிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஊழி நிகழ்த்தப்படும். மனிதர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை எச்சரித்து வைக்கவும் கூறப்பட்ட நீதிக்கதை அல்ல இது, மாறாத உண்மை. ஊழியில் தப்புவதும் வாழ்வுக்கு மீண்டு செல்வதும் இப்போதைய தேவையாக உருவாகியுள்ளது.!
-ம.செந்தமிழன்
சிறந்த அனுபவம் என்பது நீங்கள் விரும்பும் போதெல்லாம் கிடைப்பதல்ல..
நீங்களே , சற்றும் எதிர்பாராத நேரத்தில் மற்றவர்களால் உங்களுக்கு வழங்கப்படுவது.
-தமிழன்பன்
பிறப்பொக்கும்...
ஆண் என்று சொல்லி
பெருமைப்பட
எதுமிருப்பதாய் தெரியவில்லை.
சாவு வீடுகளில்
மாரடித்து கதறியழும்
பெண்களை கவனியாதது போல்,
கதறவும் முடியாமல்
அழவும் தெரியாமல்
திண்ணையில் வாய்ப்பொத்தி
வெறுமனே உட்கார்ந்திருக்கும்
ஆண்களைப் பார்க்கும் போதெல்லாம்.
-மு.முருகேஷ்.
வியாதி வயோதிபம்
மகளுக்குக் கல்யாணம்
தொலைந்த உடைமைகள்
ஆயிரம் சொல்லி
பரிதாபம் விற்றுக் காசு பார்க்காமல்
நீண்ட அலுமினியக் குச்சி
கறுப்புக் கண்ணாடியுடன்
ஓடும் ரயிலிலும்
தடுமாறாமல்
பிளாஸ்டிக் கவர், பேனா ரீபில் விற்கும்
அந்த மனிதனைப் பார்க்கும்போதெல்லாம்
ஏதேனும் வாங்குங்கள்
நீங்களும்.
-இந்திய ராஜா.
சுருதி
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
- நகுலன்.
இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.
- கல்யாண்ஜி
பேச்சில் பச்சை
எழுத்தில் மஞ்சள்
காட்சியில் நீலம்
படுக்கையில் சிவப்பு
வண்ண வண்ணமாய்
வாழ்கிறது காமம்...
சி.மோகன்..
துண்டிப்பு
மழெ இல்லெ தண்ணி இல்லெ.
ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்தும் இல்லெ
அடைக்கலாங் குருவிக்கு
கூடு கட்ட
என் வீடு சரிப்படலே
நான் ஒண்டியாதான் இருக்கேன்
இப்பவும்.
-ராஜ சுந்தரராஜன்.
தூக்கங்களைக் களவு கொள்ளும் கனவு
இல்லையென்று பதிலளிக்கும்
எல்லோர் வீட்டின் வாசலிலும்
தூக்கங்களைக் களவு கொள்ளும்
கனவொன்றை
விட்டுச் செல்கிறார்
தொலைந்துபோன மகனை
நள்ளிரவில்
தேடியலையும் அப்பா .
-கே.ஸ்டாலின்
மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்
காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.
-பூமா ஈஸ்வரமூர்த்தி.
பிரிய மழை
பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்
அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்
வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை.
- யுகபாரதி.
ஞாபகச் சிறுவாடு
ஊறுகாய் சுமந்த மண் ஜாடி
தாத்தாவின் வெற்றிலைப் பெட்டி
கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
படித்துச் சிலாகித்த பாரதி கவிதை
பயந்தபடி நிற்கும் பள்ளிப் புகைப்படம்
ஆசையாய்ச் சொல்ல ஐந்தாறு கதை
சொந்த வீட்டுத் தோட்டத்து மண்
பால்ய கால நண்பரின் புது வீட்டு முகவரி
திருமணத்திற்குப் பிறகு பார்த்த படம்
இவைகளோடு...
பரம்பரைக்காய் சேமியுங்கள்
கடைசியாய் வந்த கடிதத்தையும்...
-கவிதா.
வாரா மழையும்;வறளும் ஆறும்
கடவுள் வணக்கம்
தமிழ் வணக்கம் சொல்லி
கூட்டம் போட்டது போதும்
செடி வணக்கம்
பூ வணக்கம் சொல்லி
கூட்டம் போட சொல்கின்றன
வாரா மழையும்
வறளும் ஆறும்
-பாலா.
ஆத்தா அடிச்சி
அஞ்சாறு மணி நேரமாச்சு
அதென்னமோ
சாயந்தரம்
அப்பனக் கண்டதும் தான்
விபரம் சொல்லி வலிக்குது
குழந்தைக்கு !
-சக்திகா.
முடியுமா மிஸ்?
தாமதமாக வந்ததற்கு
மன்னிக்க வேண்டும் மிஸ்
நடந்ததை கேளுங்கள் - பிறகு
தண்டனை தாருங்கள்
புத்தகப்பை சுமையுடன்
ஊர்ந்து வந்தேன் மிஸ்
பனியில் குளித்த புற்களில்
தூக்கம் கலைந்த பட்டுப்பூச்சிகள்
ஓட்டப்பந்தயம் நடத்தின மிஸ்
அசிங்கமாய் புத்தகத்தில் வரைந்திருந்த
அழகான வண்ணத்துப்பூச்சி
கையில் வந்தமர்ந்து
கண்ணை உருட்டி உருட்டி
கூடப் பறக்க அழைத்தது என்னை மிஸ்
புத்தகப்பை நசுக்கிக் கீழே
விழுந்து காயமாச்சு மிஸ்
குட்டி அணில் எட்டி நின்று
கண்ணாமூச்சி ஆடியது
சிட்டுக்குருவியும் என்னைப் பார்த்து
வாய்ப்பாட்டு பாடியது மிஸ்
காக்கா கூட கரைந்து கரைந்து
கதைகள் சொன்னது மிஸ்
உங்கள் தண்டனைக்குப் பயந்து
ஊர்ந்த என்னை எழுந்து நடக்க
எறும்புகள் சொன்னது மிஸ்
இவற்றையெல்லாம்
படித்தது எந்த பள்ளிக்கூடம்
என்று கேட்டேன் மிஸ்
பார்த்து கைகொட்டிச் சிரித்தன
பள்ளிக்கூடம் கேள்வி பதில்
பரீட்சை அடி உதை கூட
இல்லாமல் படிக்க முடியுமா மிஸ்?
-உதயசங்கர்
பூத்திருக்கும் பூக்கள் பற்றியோ…
ரோஜா செடியில் பூத்திருக்கும்
ரோஜாக்களைப் பற்றியோ..
முருங்கை மரத்தில் வால் வாலாய்
தொங்கும் முருங்கை காய் பற்றியோ..
நெல்லி மரத்தில் கொத்துக் கொத்தாய்
ஒட்டியிருக்கும் நெல்லிக்கனிகள் பற்றியோ..
கொய்யா மரத்தில் பூக்கள்
விட்டிருப்பது பற்றியோ…
உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது?
அதைப் பற்றியெல்லாம் நம்
திருமணத்திற்கு பிற்பாடு ஆற அமர
பேசிக் கொள்ளலாம்….
முதலாக என்னை காதல் செய்!
-வா.மு.கோமு .
உன் மனது
எத்தனை பெரிய மலர்
உன் மனது
எத்தனை பெரிய அகல்
உன் மனது
எத்தனை பெரிய கோட்டை
உன் மனது
எத்தனை பெரிய புதிர்
எல்லாம் சொல்கிறது
நீயிடும் மாக்கோலம் !
-மகுடேஸ்வரன்.
அவர்நிஜமாய் இருக்கும்
வரை தான்..
அது நிழற்படம்..
அவர் இல்லாத காலத்தில்
அதுதான் அவர் படம்.
-புகழ்
பழமை என்பது
வயதாகிப்போன புதுமைதான்
புதுமை என்பது
மறுபிறப்பெடுத்த பழமைதான்
-அப்துல்ரகுமான்
நிராகரிக்கப்பட்டவர்களால்தான்
உலகம் இயல்பாக
இயங்கிக்கொண்டிருக்கிறது
ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் அல்ல
-சௌவி
அசையும் தும்பிக்கை,நிமிர்ந்த நடை
பிறை நெற்றி,கோபப்பார்வை
அகல அடி,பெரிய கழுத்து
கலைக்கப்பட்ட கூடுபோல்
தேனீக்கள் மொய்க்கும் மதநீர்
கட்டப்பட்ட இடத்திலேயே
அசையும் இளம் யானை
-புறநானூறு
நீ இப்போது வரவில்லை
என்றால்
எப்போதேனும் வரக்கூடும்
என்று நினைத்துக்கொள்வதைத்தவிர
கடந்துசெல்ல ஒரு பொழுதோ
சாத்திக்கொள்ள ஒரு கதவோ
எனக்கில்லை...
-மனுஷ்யபுத்திரன்