வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் ஒருபோதும் மேன்மை அடைவது இல்லை. மாற்றங்கள் நாம் விரும்பியபடி ஏற்படுபவை அல்ல. அதற்காக நாம் எப்போதும் பாதுகாப்பு வளையம் ஒன்றுக்குள்ளாகவே வசிக்க முடியாது இல்லையா?
மாற்றங்களை எதிர்கொள்ள துணிவற்றவர்கள் முடங்கி விடுகிறார்கள். மாற்றங்களைத் தேடிப் போகிறவர்கள், மாற்றங்களைக் கண்டு அஞ்சாதவர்கள், மாற்றங்களுக்கு ஏற்ப தன் திறமைகளை வளர்த்துக் கொள்கிறவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் துயரங்களும் துரதிர்ஷ்டங்களும் வந்து போகவே செய்கின்றன. ஆனாலும் நம்பிக்கையே வாழ்க்கையை முன்னெடுத்துப் போகிறது. வெறும் நம்பிக்கை மட்டும் வாழ்க்கை இல்லை. மாற்றங்களைப் புரிந்து கொண்டு எதைக் கைவிடுவது? எதை தக்க வைத்துக்கொள்வது? எப்படி மாற்றிக் கொள்வது? என்பதை முடிவு செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்ட மனிதனின் கடமை!
உலகில் எதுவும் மாறவே கூடாது என நினைத்தால் வாழ்க்கை நம் கையை விட்டுப் போய்விடும். ஆகவே மாற்றங்களைக் கண்டு பயங்கொள்ள வேண்டாம். நாம் எவ்வளவு சீக்கிரம் மாற்றங்களைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நன்மை பயக்கும்!
-கடவுளின் நாக்கு.
எஸ்.ராமகிருஷ்ணன்.