16/02/2021

ஈரோடு கதிர்

ஒரு தவறான புரிதலுக்கு விநாடிப் பொழுது போதும். விளக்கம் பெற / தர ஒரு யுகம் தேவைப்படுகிறது!
-ஈரோடு கதிர்

யுகபாரதி

நைந்து மக்கிய 
புடைவையைத் திரியாகத் திரித்தே
விளக்கேற்றுவாள் அம்மா 
சிம்னி வாங்கவும் வக்கற்ற வீட்டில் காதலென்பது காஸ்ட்லி குத்துவிளக்கு..
_யுக பாரதி

போர்ஹே

காலத்தை அளப்பதற்கு என்னிடமிருக்கும் ஒரேயொரு வழி
உன்னுடன் இருப்பதும்;
உன்னுடன் இல்லாதிருப்பதும்.

போர்ஹே

யுகபாரதி

இந்தத் தொன்மையான மொழியின் முதல் காதல் கடிதம் இப்போது எங்கே இருக்கும்?

 காலத்தால் அழியாது போகவே பெண்களின் கண்களிலும் ஆண்களின் இதயத்திலும் அது மடித்துவைக்கப்பட்டிருக்கும்

-யுகபாரதி

நா.பார்த்தசாரதி

"மனித வாழ்க்கையின்
மிகப்பெரிய ஆச்சர்யம்
அன்புக்கு உரியவர்களை
எந்த இடத்தில்
எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதும்
எங்கே
எப்போது
எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்
முன்கூட்டியே
தெரியாமல் இருப்பதுதான்""

-நா.பார்த்தசாரதி

வேள்பாரி

எவ்வளவு ஒன்றினாலும் விலகவேண்டிய இடமுண்டு என்பதை உணரும் நேரம் சற்றே கடுமையானது.

-வேள்பாரி

படித்தது

மெளனமாயிருந்தால் முட்டாளென்று சந்தேகித்தார்கள்
பேச ஆரம்பித்தேன் – இப்போது
யாருக்கும் சந்தேகமில்லை

-படித்தது

யுகபாரதி

ஒவ்வோர் அதிகாலையிலும்
வீடு வீடாக பாலூற்றும்
அந்த முதியவருக்கு
கஞ்சி ஊற்றத் தவறிய பிள்ளைகள் கடைசியில் அவருக்கு ஊற்றும் பால்
திரிந்திருக்கும் அல்லது பிரிந்திருக்கும்

-யுகபாரதி

லதாமகன்

கவனம் தவறி
புத்தகத்தில் சிறைபட்ட
ஈயொன்று
எத்தனை பக்கங்கள் படித்திருக்கும்?

- லதாமகன்

க.சீ.சிவகுமார்

பல பேர் திருடுகிறார்கள்.மாட்டிக்கொண்டவர்கள் திருடர்கள் என அறியப்படுகிறார்கள்‍‍‍‍‍‍‍

-க.சீ.சிவகுமார்

இளந்தென்றல் திரவியம்

பத்து பேர் கொண்ட நண்பர் குழுவில் நமக்கு மட்டும் ஒருவன் ரகசியம் பகிரும் போது 

நமக்கு ஒரு கிரீடம் கிடைக்கிறது 

குழுவுக்கு ஒரு கிரீடம் குறைகிறது.

இளந்தென்றல் திரவியம்

தாஸ்தாயெவ்ஸ்கி

நூறு சந்தேகங்கள் ஒரு ஆதாரத்தை உருவாக்கிட முடியாது

-தஸ்தாயெவ்ஸ்கி

வேள்பாரி

மனதுதான் பெரும்பாலும் மகிழ்வை உணர்கிறது. உடல் தேவையை மட்டுமே உணர்கிறது.

-வேள்பாரி

கம்பன்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

*யாரோடும் பகை இல்லை என்ற பின் போர் இல்லாது போகும்; ஆனால் புகழ் இல்லாது போகாது

-கம்பன்

படித்தது

பருக்கையோடு சேர்த்து
கனவையும் ஊட்டுகிறார்கள்.
எதை,மென்று விழுங்குவதென திணறுகிறார்கள் குழந்தைகள்...:-

-படித்தது

தயாளன்

கூடவே பிறந்தது காலதாமதம்
வாட்ச் - ல்
பத்து நிமிடம் கூட்டி வைத்தும்
பிரயோசனமில்லை

மணிப் பார்க்கும் போதெல்லாம்
அந்த பத்து நிமிடம்
ஞாபகம் வந்து விடுகிறது

-தயாளன்

ராஜா சந்திரசேகர்

ஒரு மகத்தான 
தொலைதலுக்கு 
நிறைய தொலைதல்கள் தேவைப்படுகின்றன

-ராஜா சந்திரசேகர்

வேள்பாரி

ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.

-வேள்பாரி

வேள்பாரி

மனம் உண்மையைப் பற்றி நிற்கும் விலங்கு. அதைச் சூழலுக்குப் பழக்குதல் எளிதல்ல.

-வேள்பாரி

வைரமுத்து

நீங்கள் எதிர்பார்க்கும் பாசம் இங்கே இருக்கும்.அதை காட்டுவதற்குதான் நேரம் இருக்காது
-வைரமுத்து

முகுந்த் நாகராஜன்

கார்ட்டூன் சேனலை
கண் விரித்துப் பார்க்க
பூனைக்குப் பயந்து ஓடிய
எலியைத் தேடுகிறாள்
பிடிபடாமல்
ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்

பாவம் பெரியவர்கள்
அழுகிற தொடர்களைப் பார்க்க
ஆவலாய் இருக்கிறார்கள்.

-முகுந்த் நாகராஜன்

கண்மணி குணசேகரன்

உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.
கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது.

-கண்மணி குணசேகரன்

வேள்பாரி

அரசர்கள் நாட்டை ஆள்கிறார்கள். வணிகர்கள் அரசர்களை ஆள்கிறார்கள்.

-வேள்பாரி

முகுந்த் நாகராஜன்

கை, கால், முகத்தை எல்லாம்
ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.
இந்த நாக்கை என்ன செய்வது.

-முகுந்த் நாகராஜன்

மகுடேசுவரன்

‘உங்கள் திருமணத்தன்று 
நான் எங்கிருந்தேன் ?’
மகளின் கேள்விக்கு 
விடைகூற முயன்றேன்.
“அந்தத் தீயின் 
நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்.
எம் தலைமீது தூவப்பட்ட 
அட்சதையில் 
ஒரு மணியாக இருந்தாய்.
சூடிய மாலை நறுமணத்தில் 
இருந்ததும் நீதான்.
தாத்தா பாட்டியரின் 
கண்களில் 
நீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.
உன் தாயைக் கரம்பற்றிய 
என் உள்ளங்கைக்குள் 
வெப்பமாக இருந்ததும் 
நீயே...!”

-மகுடேசுவரன்

அறிவுமதி

சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே
வா

அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே

-அறிவுமதி

ஓஷோ

ஒவ்வொருவரும் ஜனாதிபதியாகி அதிகாரம் செலுத்த முடியாது.ஆனால் கணவனாகி மனைவி மீதும், மனைவி தாயாகி குழந்தை மீதும், குழந்தை விளையாட்டு பொம்மை மீதும் அதிகாரம் செலுத்தலாம்.பாவம் பொம்மைக்கு தான் கீழே ஒருவரும் இல்லை.இது ஒரு அதிகாரத்துவம் மிகுந்த சமூகம்.

-ஓஷோ

ராஜாராம்

எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.

-ராஜாராம்

கவிதைகள்

1. "என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"
- கனிமொழி

2. "பறிக்க முடியாத
பட்டுப்பூச்சியை மறக்க
பறக்க முடியாத பூக்களை
வெடுக்கெனெக் கிள்ளி
வீசின விரல்கள்"
3. "சிலைகளை விட
மலைகளை விட
பாறைகள் அழகானவை
கூழாங்கற்களும் கூட"
- கல்யாண்ஜி

4." கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு"
- தேவதேவன்

5. "அதை அவ்வளவுதான்
புரிந்துகொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே! உன் கைகளை
முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும்
அதை நீ புரிந்து கொண்டதற்கு!"
- மனுஷ்யபுத்திரன்


6. "அநேகமாய்
பார்க்க மறந்தாலும்
தலைக்கு மேல் வானம்
என் நினைவுக்குள்
நீயும்!"
- இரா. சேதுபதி

7. "கவிதைக்குள் வராத
எந்தவொன்றும் உலகில் இல்லை
உன்னை நான்
முத்தமிட்டு உயிர் பெற்ற
எனது காலத்தின்
முதற்கணத்தைத் தவிர"
-ரமேஷ் - ப்ரேம்

8. "எனக்கு யாருமில்லை
நான் கூட"
- நகுலன்

9. "எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"
- தபூ சங்கர்

10. "விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"
- இரா. பார்த்திபன்


11. "இன்னும் உடையாத
ஒரு நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு கடலாய்
இதழ்விரிய உடைகிறது
மலர் மொக்கு"
-பிரமிள்

12. "கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே
தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி"
- ஆத்மாநாம்

13. "இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"
-அறிவுமதி


14."..... ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."
-பசுவய்யா (சு.ரா)


15. "கூந்தலின்
ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்..."
- சல்மா

16. "....ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன. "

- குட்டி ரேவதி


17. "பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு உண்டேன்
இன்றை"


- தேவதச்சன்

18. "அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை."


- கலாப்ரியா


19. "உன் பெயர்
இந்த இரவில்
காலி அறையில்
மாட்டிய கடிகாரம்"

-சுகுமாரன்


20. "சுற்றிலும் இருட்டைவீசி
தயாராக நிற்கிறது இரவு
மனிதர்கள் சுவர்களுக்குள் ஒடுங்க
அனாதைகளாக அழும் தெருக்கள்"

- சமயவேல்

தவோ

தாழ்மையாக இரு;
அப்போது நீ முழுமையாக இருப்பாய்

வளைந்திரு;
அப்போது நீ நேராக இருப்பாய்
காலியாக இரு;
அப்போது நீ நிரம்பி இருப்பாய்
தேய்ந்துபோய் இரு;
அப்போது நீ புதிதாக இருப்பாய்’

-தாவோ

பாவண்ணன்

ஒரு எழுத்தாளனுக்கு தொடர்ச்சியாக புதிய விஷயங்கள் கிடைத்தபடியே இருக்க வேண்டும்.பேங்க் பேலன்ஸ் மாதிரி அவன் மனம் புத்தம் புது விஷயங்களால் நிறைந்திருக்க வேண்டியது முக்கியமான தகுதி

-பாவண்ணன்

ரூமி

"உன் வாழ்வில் தீப்பிடிக்க வை
உன் தழல்களுக்கு ஊதி விடுவோரைத் தேடு"

ரூமி

வேள்பாரி

கதைகள் ஒருபோதும் முடிவதில்லை.

வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வதுகூட ஒருவிதமான கலைதான்.

-வேள்பாரி

இளந்தென்றல் திரவியம்

அப்படி ஒன்றும் 
கனம் இல்லை தான்...

இருந்தாலும் அவ்வப்போது 
பறந்து பறந்து
பூமியின் எடையை
குறைத்துக்கொடுக்கிறது
பட்டாம்பூச்சி.

இளந்தென்றல் திரவியம்

வெற்றிலை

*வெற்றிலை*

வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை. மேலே இருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால் அது பெண் வெற்றிலை.

-வேள்பாரி

மகுடேசுவரன்

யானையை 
என்றாவது 
ஆழ்ந்து ஊன்றிப் 
பார்த்திருக்கிறாயா ? 

அது 
எத்துணை அரிய 
மெல்லுயிர் என்று  
உணர்ந்திருக்கிறாயா ?

ஒற்றடங் கொடுக்கும் 
மெத்துதுணி போன்ற 
அதன் காலடி மொழுமொழுப்பு 
சிறுமுள் குத்தலைக்கூடத் 
தாங்காது, தெரியுமா ?

ஓர் எறும்பு 
அதன் காதிற்குள் புகுந்து
உட்சந்துகளில் ஊர்ந்தால் 
அதன் நிற்சமநிலை குலைந்து 
வலிபொறுக்க முடியாமல் 
இறந்தேவிடும் என்று 
அறிவாயா ? 

உயிரினங்களில் 
உயர்வான கழிவுடையது  
யானையே என்று 
கேள்விப்பட்டதுண்டா ? 

நூறு வகை
இலைதழைகளைத் தின்று 
வயிற்றுள் செறிவாய்த் தொகுத்து
இடும் எச்சத்தை 
நம் மக்கள் கால்குளிர மிதிப்பார்கள்,  
தெரியுமா ? 

அந்தச் சாணத் தேய்ப்பில் 
தொடைமுதல் 
காலடிவரையிலான 
அனைத்துத் தொந்தரவுகளும் 
நீங்குவதை நினைத்ததுண்டா ? 

அவ்வளவு ஏன், 
யானை இட்ட சாணத்தில் 
பட்டுப்பூச்சி மொய்ப்பதைப்  
பார்த்திருக்கிறாயா ? 

யானை என்பது 
ஒற்றை உயிரா ? 
அதன் தோற்பரப்பு  
நூற்றுக்கணக்கான 
நுண்ணுயிர்கள் 
தொற்றி வாழ்கின்ற
தோப்பு என்பதையேனும் 
அறிவாயா ?  

உன்னுடைய வரலாறெங்கும் 
நிகழ்ந்த 
ஆயிரக்கணக்கான போர்களில்
தலைவனைத் தூக்கிச் சுமந்தபடி 
களங்களில் ஓடிய 
களிறு யானைதானே ?  

கைவேற் செருநர்
கடிதோச்சி எறிந்த  
நெய்வேல் முனைகள் 
மெய்மேல் புக
பிளிறிச் செத்ததும் அதுதானே ? 

போர்நடுக்களத்தில் 
படுகாயமுற்று 
உயிர்க்கு இறைஞ்சுவோரைப்  
படைகிழித்துப் 
பாய்ந்தோடித் 
தன் தும்பிக்கையால் தூக்கி வந்து
மருத்துவக் கூடாரத்தில் 
சேர்த்ததும் யானையடா ! 

நீ பழக்கிய 
யானையைச் சுற்றி 
வட்டமொன்று வரைந்து 
“வரும்வரைக்கும் 
அப்படியே நில்” என்றால் 
அங்கேயே 
ஆடாது அசையாது நிற்குமடா !

அவர் கொடுக்கும் 
காசை வாங்காதே என்றால் 
வாங்காதடா !
கரும்புத் துண்டைத் தொடாதே 
என்றால் தின்னாதடா !
அன்பே உருவான பெண்போல் 
அளப்பரிய நேயம் காட்டுமடா ! 

அதன் காடு எங்கே ? 
அதன் நீர்வளம் எங்கே ? 
ஒரு வாழையிலையை 
முறித்துத் தின்றுவிடும் 
என்றுதானே 
மின்வேலியிட்டு 
வைத்திருக்கிறாய் ?  

காட்டின் 
நீர்ச்சுனைகள் அனைத்தையும் 
முன்னேற்ற மாசுபெருக்கித் 
தூர்த்துவிட்ட நீ
நீர்விடாய் பொறாது 
நிலமிறங்கி வந்த  
யானைமீது 
நெருப்பள்ளிப் போட்டாயே, 
உயிரினமாடா நீ ? 

உனக்குப் பயன்படாவிட்டல் 
உன் பண்ணை வளர்ப்புக்குள் வராவிட்டால் 
நீ அறுத்துத் தின்ன முடியாவிட்டால் 
உன் எதிரே வந்து நின்றால்கூட 
இவ்வுலகில் 
ஓர் அஃறிணை 
உயிர் வாழக் கூடாதாடா ? 

மனிதனாடா நீ ...

_கவிஞர் மகுடேசுவரன்

மார்ட்டின் நீம்லர்

"முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்

நான் குரல் கொடுக்கவில்லை 

ஏனென்றால் நான் யூதனல்ல.


பிறகு கம்யூனிஸ்ட்களை தேடி வந்தார்கள்.

நான் குரல் கொடுக்கவில்லை 

ஏனென்றால் நான் ஓர் கம்யூனிஸ்ட் அல்ல.


பின்னர் அவர்கள் தொழற்சங்கத்தினரை தேடி வந்தார்கள்.

 நான் குரல் கொடுக்கவில்லை.

 ஏனென்றால் நான் தொழிற் சங்கத்தினன் அல்ல.


பின்னர் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள். 

அப்போது....

அங்கு ஒருவரும் மிஞ்சியிருக்கவில்லை 

எனக்காக குரல் கொடுக்க. "


-மார்ட்டின் நீம்லர்

அகராதி

நரியிடம் தின்னக்கொடுத்த வடையோடு
சிறகிலிருந்து சிறிது வானத்தையும்
பரிசளித்தது காகம்
நரி பாடிக்கொண்டிருக்கிறது
நீங்கள் ஊளை என்கிறீர்கள்

-அகராதி

பேயோன்

நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது
அது அரசாங்கம் தான்,
கவலை வேண்டாம்.

-பேயோன்

அம்பேத்கர்

புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவை பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும்

-அம்பேத்கர்
(அம்பேத்கர் அன்றும் என்றும்)

அசோகமித்திரன்

மொழியும் சொற்களும் பயன்படாத போது அழுகைதான் மொழியாக இருக்கிறது.அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது

-அசோகமித்திரன்

சுந்தர ராமசாமி

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் தூரத்தின் இடைவெளி, சிலசமயம் காலத்தின் இடைவெளி. 
     
-சுந்தர ராமசாமி

சுஜாதா

எவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பு உண்டு. 'டொங்க்' என்று டம்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசிபலனை தெரிந்து கொண்டு விடலாம்!

-சுஜாதா

வனவை தூரிகா

கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!

-  வனவை தூரிகா

ராஜாராம்

யாருமில்லை என்பதால்
பேசிக்கொண்டு இருந்தேன்.
வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.

-ராஜாராம்

வேள்பாரி

காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லாக் கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.

-வேள்பாரி

சச்சிதானந்தன்

நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்
அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.

அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன. அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.
அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.
நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.
என் நினைவில் காடுகள் உள்ளன"

-சச்சிதானந்தன்

வேள்பாரி

கூடு என்பது பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்.

-வேள்பாரி

ராஜாராம்

போதும் என்பதை
சொல்லத் தெரிவதில்லை.
வேணும் என்பதும்
அது போலவே.

-ராஜாராம்

தொ.ப

சமூகத்தின் 90 விழுக்காடு மக்கள் தெய்வ நம்பிக்கையில் இருக்கும்போது..பெரியார் எந்த கடவுளை எதிர்த்தார் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை அவர் எதிர்த்ததில்லை.

ராமரை செருப்பால் அடித்தார், விநாகர் சிலை உடைத்தாரே தவிர சிறு தெய்வங்களான அய்யனார் சிலையோ, அம்மன் வழிபாட்டையோ பெரியார் எப்போதும் எதிர்க்கவில்லை

-தொ.ப

கோ.வசந்தகுமாரன்

உதிர்ந்து கிடக்கும் பறவையின் இறகை மிதித்து விடாதீர்
ஒரு காலத்தில் அது உயரத்தில் இருந்தது

-கோ.வசந்தகுமாரன்

ராஜ கௌதமன்

தப்புகளை தராதரம் பிரிப்பதில் அறிவைவிட மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது

-ராஜ் கெளதமன்
(சிலுவைராஜ் சரித்திரம்)

ஆல்பர்ட் கோல்ஹா

எதிலும் நம்பிக்கையின்றி
சும்மா அமர்ந்திருக்கிறேன்,
என் சுவாசத்தைக் கவனித்தவாறு.
முப்பது வருடங்களுக்கு பிறகும்
அது
வெளியில் போகவும்
உள்ளே வரவுமாக
இருக்கிறது
0

ஆல்பர்ட் கோல்ஹோ
(ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு)

வேள்பாரி

இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத்தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி.

-வேள்பாரி

ஜெயகாந்தன்

அழகின் அளவுகோல்

அந்த அளவுகோல் பெண்ணை பெற்றவர்க்கு ஒருவிதமும்,
பெண் தேடுவோர்க்கு ஒரு விதமாகவும் மாறுகிறது
-ஜெயகாந்தன்

வேள்பாரி

முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப்படுத்தி விளையவைக்கவும் முடியாது; பதப்படுத்தி கனியவைக்கவும் முடியாது. அதுதான் இயற்கை.

-வேள்பாரி

மார்ட்டின் லூதர் கிங்

” வாழ்க்கையில் தொடர்ந்து ஒலிப்பதும் , மிக அவசரமானதுமான  ஒரு கேள்வி :
நீ மற்றவர்களுக்காக என்ன செய்கிறாய்? “ 

-மார்ட்டின் லூதர் கிங்

அ.முத்துலிங்கம்

வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்"

- அ.முத்துலிங்கம்

கபிலன்

கூவிப் பூவிற்க முடியாமல்
முந்தானைத் தொட்டிலில்
தூங்கும் குழந்தை

-கபிலன்

ராஜாராம்

குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

-ராஜாராம்

சுஜாதா

வரலாற்றுநாவல் என்பது ‘கச்சணிந்த பெண்களும், திமிறும் குதிரைகளும், உறைவாள்களும், உறையூர் ஒற்றர்களும் அல்ல’. வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான்.

-சுஜாதா

02/02/2021

ராஜராம்

குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

-ராஜாராம்