16/02/2021

மகுடேசுவரன்

யானையை 
என்றாவது 
ஆழ்ந்து ஊன்றிப் 
பார்த்திருக்கிறாயா ? 

அது 
எத்துணை அரிய 
மெல்லுயிர் என்று  
உணர்ந்திருக்கிறாயா ?

ஒற்றடங் கொடுக்கும் 
மெத்துதுணி போன்ற 
அதன் காலடி மொழுமொழுப்பு 
சிறுமுள் குத்தலைக்கூடத் 
தாங்காது, தெரியுமா ?

ஓர் எறும்பு 
அதன் காதிற்குள் புகுந்து
உட்சந்துகளில் ஊர்ந்தால் 
அதன் நிற்சமநிலை குலைந்து 
வலிபொறுக்க முடியாமல் 
இறந்தேவிடும் என்று 
அறிவாயா ? 

உயிரினங்களில் 
உயர்வான கழிவுடையது  
யானையே என்று 
கேள்விப்பட்டதுண்டா ? 

நூறு வகை
இலைதழைகளைத் தின்று 
வயிற்றுள் செறிவாய்த் தொகுத்து
இடும் எச்சத்தை 
நம் மக்கள் கால்குளிர மிதிப்பார்கள்,  
தெரியுமா ? 

அந்தச் சாணத் தேய்ப்பில் 
தொடைமுதல் 
காலடிவரையிலான 
அனைத்துத் தொந்தரவுகளும் 
நீங்குவதை நினைத்ததுண்டா ? 

அவ்வளவு ஏன், 
யானை இட்ட சாணத்தில் 
பட்டுப்பூச்சி மொய்ப்பதைப்  
பார்த்திருக்கிறாயா ? 

யானை என்பது 
ஒற்றை உயிரா ? 
அதன் தோற்பரப்பு  
நூற்றுக்கணக்கான 
நுண்ணுயிர்கள் 
தொற்றி வாழ்கின்ற
தோப்பு என்பதையேனும் 
அறிவாயா ?  

உன்னுடைய வரலாறெங்கும் 
நிகழ்ந்த 
ஆயிரக்கணக்கான போர்களில்
தலைவனைத் தூக்கிச் சுமந்தபடி 
களங்களில் ஓடிய 
களிறு யானைதானே ?  

கைவேற் செருநர்
கடிதோச்சி எறிந்த  
நெய்வேல் முனைகள் 
மெய்மேல் புக
பிளிறிச் செத்ததும் அதுதானே ? 

போர்நடுக்களத்தில் 
படுகாயமுற்று 
உயிர்க்கு இறைஞ்சுவோரைப்  
படைகிழித்துப் 
பாய்ந்தோடித் 
தன் தும்பிக்கையால் தூக்கி வந்து
மருத்துவக் கூடாரத்தில் 
சேர்த்ததும் யானையடா ! 

நீ பழக்கிய 
யானையைச் சுற்றி 
வட்டமொன்று வரைந்து 
“வரும்வரைக்கும் 
அப்படியே நில்” என்றால் 
அங்கேயே 
ஆடாது அசையாது நிற்குமடா !

அவர் கொடுக்கும் 
காசை வாங்காதே என்றால் 
வாங்காதடா !
கரும்புத் துண்டைத் தொடாதே 
என்றால் தின்னாதடா !
அன்பே உருவான பெண்போல் 
அளப்பரிய நேயம் காட்டுமடா ! 

அதன் காடு எங்கே ? 
அதன் நீர்வளம் எங்கே ? 
ஒரு வாழையிலையை 
முறித்துத் தின்றுவிடும் 
என்றுதானே 
மின்வேலியிட்டு 
வைத்திருக்கிறாய் ?  

காட்டின் 
நீர்ச்சுனைகள் அனைத்தையும் 
முன்னேற்ற மாசுபெருக்கித் 
தூர்த்துவிட்ட நீ
நீர்விடாய் பொறாது 
நிலமிறங்கி வந்த  
யானைமீது 
நெருப்பள்ளிப் போட்டாயே, 
உயிரினமாடா நீ ? 

உனக்குப் பயன்படாவிட்டல் 
உன் பண்ணை வளர்ப்புக்குள் வராவிட்டால் 
நீ அறுத்துத் தின்ன முடியாவிட்டால் 
உன் எதிரே வந்து நின்றால்கூட 
இவ்வுலகில் 
ஓர் அஃறிணை 
உயிர் வாழக் கூடாதாடா ? 

மனிதனாடா நீ ...

_கவிஞர் மகுடேசுவரன்