உன்
நினைவுகளோடு
மரணத்தின் சுவையையும்
ஒரு நாள் அருந்துவேன்...
_வெற்றி
31/05/2019
29/05/2019
கலாப்ரியா
சிலரின் சில
பிராத்தனைகள்
'ஆமென்'னுடன்
முடிகின்றன.
என்-எலாலாப் பிராத்தனைகளும்
'சசி'யுடன்
முடிகின்றன.
_கலாப்ரியா..
(மற்றாங்கே)...
நக்கீரன்
மரம் என்றால் அது இலைகள் அல்ல,பூக்கள் அல்ல, காய்கள் அல்ல.கனிகளும் அல்ல.ஏன் அது மரமே அல்ல.மரம் என்றால் அது வெறும் டாலர்,டாலர்,டாலர் மட்டுமே
-நக்கீரன்
(காடோடி)
வ.முருகன்
உயிரடங்கிய சிறு பறவை
அதிகாலை நடைப்பயிற்சியில்
நெடுஞ்சாலையோரம் காணக்கிடைத்தது
விரைந்த வாகனம் மோதி
விழுந்துகிடந்த சிறு பறவையொன்று.
இதயம் படபடக்க
இரு கைகளிலும் அதை ஏந்திக்கொண்டேன்.
அதற்காகவே காத்திருந்ததைப்போல்
அடங்கிப்போனது அதன் உயிர்.
கனத்த மனதோடு
கைவிரல்களால் மண்பறித்து
போதுமான அளவில் அகழ்ந்தெடுத்த குழிக்குள்
அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பினேன்.
செந்நிறப் பிசுபிசுப்புப் போக
கைகளை நீரால் அலசிய பின்
மென்சோகத்தையும் நுண்வலியையும்
கடந்து வரவென்று
சிவப்பு மசிப் பேனாவால்
கவிதையொன்றை எழுதி முடிக்கிறேன்.
எழுத்துகள் அத்தனையும்
அச்சிறு பறவை சிந்திய உதிரத்துளிகளாயும்
காற்றில் அலையும் காகிதத்தின் முனைகள்
உயிரடங்குகையில் துடிதுடித்த
அதன் சிறகுகளாயும் தெரிகின்றன.
-வ.முருகன்
மணிகண்டபிரபு
அம்மாவின்
வயதொத்தவர்களை
அம்மா என்றழைப்பதைப்
போல எளிதானதில்லை
காதலியின் வயதொத்தவர்களை
அப்படி அழைத்தல்..!”
ப.பி
பிரமிடுகள்
சௌக்கியம்
சாப்பிட்டேன்
விசேஷமாய் ஏதுமில்லை
அனைவரும் சுகம் - பணியும் நலம்
நேரமில்லை
அப்படியா!
சரி மற்றும் ம்
வார்த்தை அடுக்குகளில்
பொய்களைப்போல் எளிதில் கிட்டுவதில்லை
புன்னகைகள்
-படித்தது
கபிலன்
எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ?
-கபிலன்.
ராஜூமுருகன்
மாறிக்கொண்டே இருப்பது உனக்கான உலகமும் எனக்கான உலகமும்தான்.
உனக்காகவும் எனக்காகவும் அப்படியேதான் காத்துக்கொண்டிருக்கிறது நமக்கான உலகம்
-ராஜு முருகன்
28/05/2019
நா.பார்த்தசாரதி
சிந்திக்காத ஒருவன் மற்றவர்களும் சிந்தனை மனமற்றவர்களாக இருப்பதையே சுயநலத்துக்காக விரும்புவான்.சுயநலத்துக்காக அதை வளர்க்கவே விரும்புவான்
-நா.பார்த்தசாரதி
ராஜூ முருகன்
அறியாமையை விடவும் பெரிய சந்தோசம் எதுவும் இல்லை.இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது?
-ராஜூ முருகன்
27/05/2019
மு.மேத்தா
செருப்புகள் சருகுகளை மிதிக்கும்போது சப்தமிடுகின்றன, மலர்களை மிதிக்கும்போது மவுனம் சாதிக்கின்றன
-மு.மேத்தா
வெற்றி
நீ
கிடைக்காமலேயே இரு...
உன்னை தேடுவதில் தானே
சுகம் இருக்கிறது..
சொல்வதினால் உனக்கு புரியாது.
நீயும் தேடு..
புரியும்...
_வெற்றி
26/05/2019
வண்ணத்தாசன்
வாழ்வு என்பதும், மனிதர்கள் என்பதும்,மனிதரைப் புரிதலே வாழ்வினைப் புரிவது என்பதும்தானே அடிப்படையான உண்மை
-வண்ணதாசன்
கண்ணதாசன்
தவிர்க்கமுடியாத தேவையுள்ளது என்றால் மட்டுமே
கடன்வாங்கு.
கிடைக்கிறதே என்பதற்காக
கடன்வாங்காதே.
தவிர்க்கமுடியாத தேவைக்காக வாங்கிய
கடன்களை மட்டுமே
தீர்க்கவேண்டுமென்ற உணர்ச்சியிருக்கும்.
- கவியரசர் கண்ணதாசன்
ராஜூ முருகன்
ஆண் பெண் தோழமை எவ்வளவு வைராக்கியமானது. ஒரு பெண்ணின் நட்புதான் ஆணுக்கு பெருங் கொடை. எல்லா தோழிகளுக்கும்
கொஞ்சம் அம்மா சாயல் இருக்கிறது. அவர்களின் ஒரே ஒரு குறுஞ்செய்தி.. நமது நாளையே மலர்த்திவிடுகின்றன.
ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவோ நம்பிக்கைகளை அளித்துவிடுகின்றன; கனவுகளை புதுப்பிக்கின்றன. அவர்களுடன் இருந்தால் துயரங்கள் சிறியதாகி விடுகின்றன. உறவுகளாலும் பிரிவுகளாலும் மனதில் எரியும் காயங்களுக்கு இந்த விரல்கள்தான் விசிறிவிடுகின்றன
-ராஜூ முருகன்
அண்ணா
Go to the people,
Live with them
Learn from them
Love them
Start with what they know
Build on what they have
-Lao Tzu
(அண்ணா முதல்வராய் இருந்தபோது அவர் மேசையில் வைத்துக்கொண்ட வாசகங்கள்)
19/05/2019
போகன் சங்கர்
// காரணமற்ற அன்பு நிற்கிறது மழைபொழியும்போது
கடற்கரையில் தனியாக
விடப்பட்ட நாற்காலி போல.
காரணமற்ற அன்பு நிற்கிறது படித்துறையில் நீங்கள் இரவுக்குளிக்க இம்மென்று பாடிக்கொண்டு தலைமேல் கவிழ்ந்து நிற்கும் தெருவிளக்கு ப்போல.
காரணமற்ற அன்பு நிற்கிறது
ஆளற்ற பாதையில் ஊர்முனைவரைஉங்களுடன் துணைக்கு வரும் பெயரற்ற நாய்போல.
காரணமற்ற அன்பு நிற்கிறது அன்னமூட்டுகிறவள் இறந்த வீட்டில் அடுப்பு மூட்டும் அடுத்த வீட்டுப்பெண் போலவும்.//
(போகன் சங்கர்)
17/05/2019
வெற்றி
உனக்கு
பிடித்த
கடவுளை
எங்கு பார்த்தாலும்
அனிச்சையாக
உனது நினைவு
வந்துவிட்டுத்தான்
செல்கிறது....
_வெற்றி.
வெற்றி
காலம்
பிரிவின் வழியே
மௌனங்கள் வழியே
வாழ்வின் துயரத்தையும்
வாழ்வின் அர்த்தத்தையும்
தந்துவிட்டுத்தான் செல்கிறது ஒவ்வொரு முறையும்....
_வெற்றி.
சுஜாதா
தரிசனம் என்பதில் கொஞ்சம் நம் உடல் உழைப்பு வேண்டும்.அங்கே போக வேண்டும்.கூட்டத்தில் இடிபட வேண்டும்.நம் தினசரி வேஷங்களை ஒத்திப்போட்டுக் காத்திருக்க வேண்டும்.கிட்டத்தில் செல்ல தடைகள் வேண்டும்.அதன் இறுதியில் கிடைக்கும் தரிசனத்தில் அத்தனை சிரமங்களும் மேகத்தை விலக்கிவிட்டு ஜொலிக்கும் சூரியன் போல் சட்டென்று ஏற்படும் ஒரு நிமிட பரவசம் தான் தரிசனம்.
வரவேற்பரையில் உட்கார்ந்துகொண்டு டெலிபோன் பேசிக்கொண்டு சானல் மாற்றத் துடிக்கும் விரல்களுடன் பார்ப்பதல்ல.
#சுஜாதா
சுஜாதா
தரிசனம் என்பதில் கொஞ்சம் நம் உடல் உழைப்பு வேண்டும்.அங்கே போக வேண்டும்.கூட்டத்தில் இடிபட வேண்டும்.நம் தினசரி வேஷங்களை ஒத்திப்போட்டுக் காத்திருக்க வேண்டும்.கிட்டத்தில் செல்ல தடைகள் வேண்டும்.அதன் இறுதியில் கிடைக்கும் தரிசனத்தில் அத்தனை சிரமங்களும் மேகத்தை விலக்கிவிட்டு ஜொலிக்கும் சூரியன் போல் சட்டென்று ஏற்படும் ஒரு நிமிட பரவசம் தான் தரிசனம்.
வரவேற்பரையில் உட்கார்ந்துகொண்டு டெலிபோன் பேசிக்கொண்டு சானல் மாற்றத் துடிக்கும் விரல்களுடன் பார்ப்பதல்ல.
#சுஜாதா
யாத்திரி
உனக்கு மாற்றாக இட்டுநிரப்ப
காலம் யாரையாவது தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
வரும் அனைவரும் அதன்பின் வந்தவர்களுக்கு அல்லாமல் உனக்கே மாற்றாக வந்து உன் நிலைத்தன்மையை உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்
-யாத்திரி
யுகபாரதி
தேவையை நேரடியாக கேட்க தெரியாதவர்கள் தங்கள் உரையாடலை ஆரம்பிக்கிறார்கள் பாராட்டில் இருந்து
-யுகபாரதி
வெற்றி
உன்
மௌனங்களும்
உன்
விலகலும்
சில நேரங்களில்
வாழ்வின் அர்த்தத்தை
வாழ்வின் துயரத்தை
தந்துவிட்டுத்தான் செல்கிறது...
இத்துயரமும் மாறுமோ..?
_வெற்றி.
16/05/2019
செல்வராஜ்
சிற்சில
துரோகங்கள்,
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்,
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்,
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்,
நண்பனொருவனின்
நயவஞ்சகம்,
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.
-செல்வராஜ்
தமிழன்பன்
"யார் உடைத்தாலும்
யாழ் உடைந்து விடும்
ஆனால்
யார் மீட்டினாலும்
யாழ் இசை தருமா?"
- தமிழன்பன்
கல்யாண்ஜி
சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது...
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்..
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்க்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்..
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை..
கல்யாண்ஜி
அறிஞர்அண்ணா
சிலர் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்;
சிலர் பிரச்சினைகளால் உருவாகிறார்கள்;
சிலர் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்கள்;
சிலர் பிரச்சினைகளால் தீர்ந்து போகிறார்கள்.
-அறிஞர் அண்ணா
மனுஷ்
கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்
வேறொன்றும் வேண்டியதில்லை
இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம்.
- மனுஷ்.
இரா.பூபாலன்
காற்றில் அலையும் சொற்கள்!
தேவையற்ற
தேவை என்றாகிவிட்ட
அலைபேசியில்
அன்றாடம் ஏதேனும்
சங்கடம்...
பெரியப்பா செத்துப்போன
இரவில்
விவரம் தெரியாத நண்பன்
அடுத்த மாதப் பொங்கலுக்கு
இனிப்பான வாழ்த்துக்கள்
அனுப்புகிறான்.
அலுவல்களின்
மும்முரங்களிலும்
பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது
தவறான அழைப்புகளுக்கு.
கடன் தருவதாகச்
சொல்லும் முகம்
பார்க்காமல்
நட்புறவாகும்
பெண்களைச்
சபிக்க வேண்டியதாயிருக்கிறது.
மருத்துவமனை
பிணவறையிலும்
கேட்க நேரிடுகிறது
புதுப்படப் பாடலின்
ரிங்டோனை.
இத்தனைக்கு இடையிலும்...
'பத்திரமா வந்துட்டேன்ப்பா'
தனித்து வெளியூர் சென்ற
மகளின் குரல் கேட்கையில்
வரமாகிவிடுகிறது அலைபேசி
- இரா.பூபாலன்
பழநிபாரதி
உன் பெயரில்
ஒரு மரம் விரிகிறது
ஒரு நதி பெருகுகிறது
ஒரு வனாந்திரம் அடர்கிறது
வெக்கை தாங்கா பறவைகள்
உன் பெயரின் கீழ் ஒதுங்குகின்றன
– பழநிபாரதி
மனுஷ்ய புத்திரன்
பயமற்ற வாழ்வு
*******
கொசுக்கள்
எல்லா இடங்களுக்குள்ளும்
எப்படியோ நுழைந்து விடுகின்றன
எறும்புகள்
எந்தப் பாதுகாப்பிலிருந்தும்
எதையாவது கொண்டு வந்து விடுகின்றன
மின்மினிகளுக்கு
இந்த இருளைக் கடப்பதில்
எந்தக் குழப்பமும் இல்லை
சில்வண்டுகள் கலைத்து விடுகின்றன
ஊரடங்கு உத்தரவுகளின்
பயங்கர மௌனங்களை
எவ்வளவுக்கெவ்வளவு
சிறியதாக இருக்கிறோமோ
அவ்வளவுக்கு
பயமில்லாமல் இருக்கலாம்.
- மனுஷ்யபுத்திரன்
மகுடேசுவரன்
எல்லாரும்
நிலா காணமாட்டார் !
யாருமில்லாத வெறுமை
ஏதுமில்லாத மனம்
முன்னிரவுத் தனிமை
முகிலற்ற வானம்
முள்குத்திய நெஞ்சம்
அடக்க வேண்டிய அழுகை
உதிர்க்க வேண்டிய நினைவு
கழிக்க வேண்டிய காதல் என
என்னென்னவோ
வாய்க்க வேண்டும்
அதற்கு.
-மகுடேசுவரன்
அ.வெண்ணிலா
யுத்தம் பற்றி எனக்குத்
தெரிந்திருக்க
நியாமில்லைதான்.
ஆண்டுகளின்
புள்ளி விவரங்களாக்கப்பட்டு
பாட புத்தகங்களில்
யுத்தங்கள் வந்த பிறகே
பிறந்துள்ளேன் நான்.
விமானம் பறப்பதை
அருகில் பார்க்கவே
25 வருடங்கள் பிடித்த எனக்கு
வெடிகுண்டு வீசும்
விமானங்கள் பற்றிக்
கற்பனை செய்ய முடியவில்லை.
எட்டுக்கு எட்டடி
இருட்டரையில் வாழ்ந்து
பழகியுள்ள என்னால்
ஓரளவுக்கு
பதுங்கு குழிகளின்
அனுபவம் உணர முடிகிறது.
தெரிந்ததெல்லாம்
யுத்தம் ரத்தம் சம்பந்தமானது என்பதும்
வெல்பவர்களையும்
தோற்பவர்களையும் விட்டு
வாழ்பவர்களையே
அழிக்கிறது என்பதும் மட்டுமே.
- அ. வெண்ணிலா
சரவணன் சந்திரன்
எப்போதாவது நம்முடைய அறவுணர்வு மெய்சிலிர்க்கும்படி விழித்துக் கொள்ளும்.அது இயற்கையானதுதான்.ஆனால் அந்த உணர்வு அடங்கிய பிறகு அது மீண்டும் பழைய உறைநிலைக்கு சென்றுவிடும்
-சரவணன் சந்திரன்
எம்.ஜி.சுரேஷ்
படிப்பது ஒரு தெரபி மாதிரி. ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தபின் ஆன்மா என்கிற சிறிய ஒளிச்சுடர் சன்னமாக எரிந்துகொண்டிருப்பதை நீங்கள் உணரலாம்"
- எம்.ஜி.சுரேஷ்
மு.மேத்தா
மனக்கதவு
*******
யார் தட்டிய போதும் திறந்ததே இல்லை…
இப்போது ஒவ்வொரு கதவையும் ஓங்கி ஓங்கித் தட்டி ஓய்கிறபோது தெரிகிறது…
தட்டும் கையின் வலியும்
திறக்காத கையின் திமிரும்.
- மு. மேத்தா
08/05/2019
ஆல்பெர் காம்யூ.
மனிதர்கள் மரணத்திற்கு அஞ்சுகின்றனர். வாழ்வின் துயரமே உண்மையில் உச்சமான தண்டனையாகும்.
- ஆல்பெர் காம்யூ.
விநாயகமுருகன்
*கலைஞன்*
இறைச்சிக்கடையொன்றில்
உதவியாளனாக பணியாற்றும் சிறுவனுக்கு
உண்மையில் அதுதான் முதல் நாள்
அதுநாள் வரை
அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை
வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது
மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது
வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது
மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது
முதல் கொலைக்கான
உத்தரவு வந்தக் கணம்
அவன் திகைக்கிறான்
கோழிகளையும், ஆடுகளையும்
மலங்க மலங்க பார்க்கிறான்
பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்
மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்
நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்
முன்பு இந்த உலகத்தில் தோன்றி
மறைந்துபோன இறைத்தூதர்களெல்லாம்
மனக்கண்ணில் வந்து மறைகிறார்கள்
ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்
கண்களை மூடிக்கொள்கிறான்
எதையோ தீவிரமாக யோசிக்கிறான்.
அந்தக்கோழியை விட்டுவிட்டு
இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்
அதன் கழுத்தை திருக
அவனுக்கு தயக்கமாக இருக்கிறது
கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்
கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்
கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்
கடவுளை தொழுகிறான்
இறைச்சிக் கடை உரிமையாளர்
அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்
தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்
ஆற்றுப்படுத்துகிறார்
கொலைக்கு பிறகு அவனுக்கு அடையும்
சமூக அந்தஸ்துகளை பட்டியலிடுகிறார்
கொலை செய்வது அவன் கடமை யென்கிறார்
கொலை செய்யவே அவன் அவதாரமெடுத்தவன் யென்கிறார்
அவன் கொலை செய்யும் உயிர்கள்
துர்தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் சொல்கிறார்
பருவத்துக்கு வந்துவிட்ட
போர்வீரனாய் கர்வம் கொள்ளும்
அந்த சிறுவன்
செய்யும் முதல் கொலை
மிகுந்த கொடூரமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் எடுத்துக்கொண்ட கால அளவு
மிகுந்த நீளமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் மனதில் விவாதித்தது
மிகுந்த தத்துவார்த்தமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் வாழ்ந்த வாழ்க்கை
மிகுந்த சிக்கலானது
அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்
மிகுந்த எண்ணிக்கையிலானது
அந்த சிறுவனது
மரத்திலிருந்து உதிர்ந்த
இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன
இப்போதெல்லாம்
அவன் விரல்கள்
ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்
ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்
ஒரு மிருதங்க கலைஞனாய்
இறைச்சியை வெட்டுவதற்கு
பழக்கமாகியிருந்தது
- விநாயக முருகன்
ஜெயகாந்தன்
பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆணின் வர்க்கமும்,ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்
-ஜெயகாந்தன்
மகுடேசுவரன்
காட்சி என்பது
நம் கண்ணுக்கு
நிலவிலிருந்து வரும் ஒளி!
பார்வை என்பது
நம் கண்ணிலிருந்து
நிலவுக்குச் செல்லும் வழி!
-மகுடேசுவரன்
அப்துல் ரகுமான்
உங்கள் இதயங்களைக்
காயங்களால்
அலங்கரியுங்கள்
காயங்களால்தான்
நீங்கள்
பிரகாசிப்பீர்கள்.
காயம்படும் ஓலைதான்
சுவடியாகிறது
காயம்படும் கல்தான்
சிலையாகிறது
காயம்படும் மூங்கில்தான்
கானம் பாடுகிறது.
வாய்பேசும்
மொழியை விடக்
காயம் பேசும்மொழி
கனமானது
ஆறும் காயம்
காயமல்ல.
- அப்துல் ரகுமான்
சுந்தர ராமசாமி
காலத்தின் கதியில் மிக மோசமான கட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறேன். இயந்திரங்களால் பிழியப்பட்டு , கனவுகள் வெளியே வழிந்து போனதில் இறுகிப்போன சக்கை மனங்கள். என்னால் இவர்களுடன் உறவாட முடியாது. புழுதிப் பாய்ச்சல் மூளைகள். எனக்கு அளக்கத் தெரியவில்லை. பின்தொடரத் தெரியவில்லை. ஒத்துப்போக முடியவில்லை. கொஞ்சம் கனவுகள், கொஞ்சம் அசட்டுத்தனம், ஏதோ கொஞ்சம் புத்தி. இப்படி இருந்தால் தான் என்னால் சமாளித்துக்கொண்டு போக முடியும்.
-சுந்தர ராமசாமி
பாவண்ணன்
ஞாபகத்தின் முடிவற்ற வெளியில்
ஒளிர்ந்திருக்கும் ஒற்றைச் சொல்லை
கண்டுப்பிடிக்க இயலாமல்
களைத்துத் திரும்பியது மனப்பறவை
-பாவண்ணன்
06/05/2019
ஜெயகாந்தன்
பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆணின் வர்க்கமும்,ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்
-ஜெயகாந்தன்
தஸ்தயெவ்ஸ்கி
கடைசியாக மிச்சமிருப்பது
இது ஒன்றுதான்.
நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்தோடு மோதிவிடுவது மட்டும் தான்.
-தஸ்தயெவ்ஸ்கி
02/05/2019
படித்தது
பக்கத்து வீட்டில் 'யாரோ' இறந்து விட்டார்...'யாரோ' பக்கத்து வீட்டில் வசிக்கிறார் என்று தான் இறந்து போனவரும் என்னைப் பற்றி அறிந்திருப்பார்!
-படித்தது
எஸ் ரா
"நல்ல எழுத்து எல்லா நேரங்களிலும்
தாமதமாகவே உலகின் கண்களில்
அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது.
-எஸ்.ராமகிருஷ்ணன்.
யீட்ஸ்
கனவுகளைத் தவிர்த்து
எதுவுமில்லாத ஏழை நான்
உன் பாதங்களுக்கு அடியில்
என் கனவுகளைப் பரப்பி வைக்கிறேன்
மென்மையாக அடியெடுத்து வை
ஏனென்றால்
நீ நடப்பது என் கனவுகளின் மீது.
_யீட்ஸ்
ஆத்மாநாம்
இந்த செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்த கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்த சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு
-ஆத்மாநாம்
#MayDay
ஆத்மார்த்தி
எல்லாத் தகவல்களை
அழித்த பின்னர்
முன் திரையில்
கொள்ளை
அழகுகாட்டிச்
சிரிக்கிற
குழந்தையின் புகைப்படத்தை
என்னசெய்வதென்று
விழிக்கிறான்
செல்பேசியைக் களவாடியவன்
-ஆத்மார்த்தி
ராஜேஷ்வர் கே
இழக்க அதிகமில்லாதவனுக்கு அதிக பயமி்ல்லை; இழக்க அதிகமுள்ளவனுக்கு பயத்தைத் தவிர வேறேதும் அதிகமில்லை
-
ராஜேஷ்வர் கே
சரவணன் சந்திரன்
தேவைக்கு அதிகமான விஷயங்களை நீ யாரிடமும் கேட்காதே. தேவைக்கு அதிகமான விஷயங்களை நீ யாரிடமும் சொல்லாதே
- சரவணன் சந்திரன்
அகிலா
அலைபேசியில் விட்டுவிட்டுக்
கேட்கிறது உன் குரல்
விடாமல் பரிதவித்து வந்து விழுகிறது
என் பதில்..
இப்படித்தான் அனுமானத்தில்
சரிசெய்யப்படுகிறது
காதல் அலைவரிசை
-அகிலா
சுஜாதா
கே: இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்?
ப: பெட்ரோல், கூட்டுக் குடும்பம், கல்யாணம், தாய்ப் பாசம், வி. பயணம், ப.பயணம், டெலிபோன், பிலிம் ரோல் சினிமா, சில பெரிய வியாதிகள், பக்தி, கதை, கவிதை, ரூபாய் நோட்டு என பெரிய பட்டியலே இருக்கிறது. தற்கொலை மட்டும் பாக்கி இருக்கும்.
#சுஜாதா
கல்யாண்ஜி
எனக்கு இருக்கும் இறந்த காலம் போல,
பறவைக்கும் இருக்கும் அல்லவா
ஒரு பறந்த காலம்!!
-கல்யாண்ஜி