29/10/2018

சுஜாதா செல்வராஜ்

முதல் முத்தம்

அது அத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை
முன்னறிவிப்பின்றி நிகழ்ந்து முடிந்த முயற்சி

மீனை கவ்விக்கொண்டு பறக்கும்
பறவையின் துரிதக்கணம் அது

கன்னத்தின்
இதழ் சித்திரம் மட்டுமே
அது முத்தம் நிகழ்ந்த இடமென்று
அறிவித்துக்கொண்டிருந்தது

நினைவைக் கலைத்துக் கலைத்து அடுக்கிப்பார்க்கிறேன்
ஒரு முழு முத்தக்காட்சியை
கண்டுணரவே முடியவில்லை

ஆனால்
அதிர்வு அடங்கா நரம்புகளும்
கொதித்து ஓடும் குருதியும்
சொல்லும்
இது போன்றதொரு முத்தம்
இனி சாத்தியமே இல்லை என்று

- சுஜாதா செல்வராஜ்

சு.வெ

காதலுக்குள் தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்துகிடக்கிறது.ஆண் பெண் என்ற இரு சக்திகள் ஒருபோதும் ஒன்றையொன்று புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தன்னுள்கொண்டுள்ளது. நீரும் மண்ணும்போல் தான் ஆணும் பெண்ணும்
நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்.மறுநொடியில் ஒன்றைவிட்டு ஒன்று கழலவும் முடியும்.அதுவே அதன் இயல்பு.

_வேள்பாரி.
சு.வெங்கடேசன்.

சு.வெ

இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது.
_வேள் பாரி.சு.வெ.

பிரிவு

நமக்கு பொதுவானது தான் நம் பிரிவு

அதை
இறகு உதிர்வதாய் நீயும்
இறக்கை உதிர்ந்ததாய் நானும்
உணர்ந்து கொள்வதில் தான் வித்தி யாசம்.

28/10/2018

ஓஷோ

சமூகம் முட்டாள்களை விரும்புகிறது, முட்டாள்களை எளிதாய் நிர்வகிக்க முடியும். அவர்களுக்கு உத்தரவிடுவதும், அவர்களை கையாள்வதும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதும் எளிது. முட்டாள்கள் கீழ்படிகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

கீழ்படிவது குற்றம் என்றால்கூட அவர்களால் கீழ்படியாமல் இருக்க முடியாது. அவர்களை கட்டாயப்படுத்தி எந்திரமாக்கிவிட முடியும்.

சமூகத்துக்கு தேவை எந்திரங்களேயன்றி மனிதர்களல்லர். மனிதனை மேலும் மேலும் முட்டாளாக்கினால் அவன் எந்திரமாகிவிடுவான். பணியாளாக,அதிகாரியாக,நிர்வாகியாக இருப்பான்- ஆனால் அறிவற்றவனாக.

-ஓஷோ

25/10/2018

கலாப்ரியா

கடலின்
உப்புக்குள்
பத்திரமாயிருக்கிறது
நதி

*****

தேவைப்பட்டால்
கண்களைக்
கரும்புள்ளி என்றும்
அழைக்கும்
கவிதை

*****

வழியனுப்ப வந்தவர்கள்
விடை பெற்றவர்கள்
இருவரும்
பயணிக்கிறார்கள்
ஓரே ஊமை வெளிக்குள்

******

நீ
திருப்பி வைக்காத
மணற் கடிகாரம்
எப்படி நேரம் சொல்லும்

                                     -கலாப்ரியா

புத்தம்: தூண்டில் மிதவையில் குற்ற உணர்ச்சி

பவா செல்லத்துரை

நவீன அச்சு இயந்திரத்தின் அகோர பசிக்கு, என்னை மாதிரி ஒரு எளிய எழுத்தாளன் இரையாகி விட முடியாது
                          - பவா செல்லதுரை

23/10/2018

நல்ல தமிழ் சொற்கள்

மகுடேசுவரன்

இன்றைய தமிழில் ஆங்கிலச்சொற்கள் மிகுதியாகக் கலந்துவிட்டன. ஆங்கில வழிக்கல்வி தலையெடுக்கத் தொடங்கிய பிறகு ஆங்கிலக் கலப்பு கட்டுக்கு அகப்படாதவாறு பெருகிவிட்டது. நம் மொழியில் ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள் கலப்பது ஏதோ தற்கால நிலவரம் என்று கருதிக்கொண்டிருக்கிறோம். பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வடமொழி, அரபி, உருது, பாரசீகம், இந்தி முதலிய பல்வேறு மொழிச்சொற்கள் தொடர்ந்து கலந்தவாறே இருந்தன. வடமொழிக்கலப்பு மிகுதியாகித் தோன்றியதுதான் `மலையாளம்' என்பது நாமறிந்ததே.

ஆங்கிலத்திற்கும் வடமொழிக்கும் எதிராக நாம் தனித்தமிழ்ச் சொற்களை ஆக்குகிறோமே தவிர, இன்னும் அசையாமல் நிலைத்திருக்கும் உருது, பாரசீகம், இந்தி மொழிச்சொற்களைப் பற்றி நாம் நினைத்தே பார்க்கவில்லை. அச்சொற்கள் எவை என்கின்ற அறிதலும் நமக்கு இல்லை. எடுத்துக்காட்டாக நாம் அடிக்கடி பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தும் சொல் ‘பரவாயில்லை’. இந்தப் பரவாயில்லை என்பதில் உள்ள ‘பரவா’ தமிழில்லை. ‘பர்வாநஹி’ என்ற உருதுச்சொல்தான் ‘பரவாயில்லை’ ஆயிற்று என்கிறார் தமிழண்ணல். அதனைத் தமிழில் நாம் ‘தேவலை’ என்கிறோம். ‘தேய்வு இல்லை’ என்பதுதான் பேச்சு வழக்கில் தேவலை ஆகிவிட்டது. குறையொன்றுமில்லை என்பதுதான் அதன் செம்பொருள். அதனைத்தான் உருதுத் தொடராக ‘பரவாயில்லை’ என்று இன்னும் கூறிக்கொண்டிருக்கிறோம்.

அலமாரி, கிராம்பு, சாவி, சன்னல், பாதிரி ஆகியவை போர்த்துக்கீசியச் சொற்கள் என்றால் நம்புவீர்களா. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசியர்கள் நம் துறைமுகங்களைக் கைப்பற்றி வாணிகம் செய்தபோது அவர்களுடைய மொழிச்சொற்கள் தென்மொழிகளில் பரவின. அலமாரி என்பதற்கு ‘நிலைப்பேழை’ என்றும், கிராம்பு என்பதற்கு ‘இலவங்கம்’ என்றும், சாவி என்பதற்குத் ‘திறவுகோல்’ என்றும், சன்னல் என்பதற்கு `காலதர்’ என்றும், `பாதிரி’ என்பதற்குக் ‘கிறித்தவ இறையடியார்’ என்றும் நாம் தமிழில் ஆள வேண்டும். ஆனால், சன்னல் தமிழ்ச்சொல் போலவும், காலதர் பிறமொழிச் சொல்போலவும் தோன்றுமாறு நாம் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறோம். கால் என்றால் காற்று, அதர் என்றால் வழி. காற்று வரும் வழி என்பதால்தான் காலதர்.

தமிழ்த் திரைப்படத்துறையில் அதன் முதலாளிக்கு இன்னமும் ‘தயாரிப்பாளர்’ என்ற பெயர்தான். படத்தினை வாங்கி விற்பவர்க்கு 'விநியோகஸ்தர்’ என்பது பெயர். விநியோகம் வடமொழி என்பது தெரிகிறது. தயார், தயாரி ஆகியவை தமிழல்ல என்பதை நாம் அறிவோமா? சங்கீதத்தை ‘இசை’ என்றும் போட்டோகிராபியை ‘ஒளிப்பதிவு’ என்றும் தமிழாக்கிய நாம் தயாரிப்பாளரையும் விநியோகஸ்தரையும் மறந்துவிட்டோம். தயார் என்பதற்கு ‘அணியம்’ என்ற தமிழ்ச்சொல் உண்டு. ‘விநியோகம்’ என்பதற்குச் 'சேர்ப்பனை' என்ற சொல்லை நான் முன்மொழிந்தேன். கொண்டு சேர்க்கும் பணியைச் செய்பவர். விநியோகஸ்தர் என்பவர் ‘சேர்ப்பனையாளர்’. தயாரிப்பவரை என்னென்று சொல்வது? அவரே படத்தினை முதலிட்டு ஆக்குபவர். கறுப்பு வெள்ளைக் காலத்தில் படத்தயாரிப்பாளரை ‘முதலாளி’ என்றே அழைத்தார்கள். முதல் இடும் ஆள் முதலாளிதானே! அச்சொல்லாலேயே ஒரு தயாரிப்பாளரை அழைத்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்?

இன்றைக்கு வரைக்கும் ஆட்சி மட்டத்தில் எண்ணற்ற அரபி, உருது, இந்துஸ்தானிச் சொற்கள் பயில்கின்றன. கைது, கைதி ஆகியன தமிழ்ச்சொற்களா என்று இன்றைக்கு ஆராய்ந்துகொண்டிருந்தேன். கை என்ற சொல் வருவதால் கைதாகுபவர் கைக்கட்டிய நிலையில் விலங்கிடப்படுவதால் ஏதேனும் பொருள் தொடர்பு இருக்குமா என்ற அடிவிருப்பம். ஆனால், அவை அரபியிலிருந்து இந்திக்கு வந்த சொற்களாம். கைதுக்குச் சிறைப்பிடி என்றும் கைதிக்குச் சிறையாள் என்றும் தமிழில் ஆள வேண்டும்.

அரசு மட்டத்தில் இன்றைக்குள்ள எண்ணற்ற உருது, இந்திச் சொற்களை இன்னும் நாம் கைவிடவில்லை. பஞ்சாயத்து என்பது பிறமொழிச்சொல் என்றால் அதற்கு மாற்றானது என்று ‘கிராமசபை’ என்னும் வடமொழிச் சொற்களாலான ஒரு தொடரைத்தான் உருவாக்கித் தருகிறார்கள். கிராமமும் சபையும் வடமொழிச்சொற்கள் என்கையில் பஞ்சாயத்துக்குக் ‘கிராமசபை’ என்பது எப்படித் தமிழாகும்? பஞ்சாயத்து என்பது ஐவர்குழு என்னும் பொருளுடையது. நாம் அதனை  ‘ஐம்பேராயம், ஐம்பெருங்குழு’ என்று தமிழாக்கலாமே.

கீழுள்ளவை அனைத்தும் அரசு ஆட்சி மட்டத்தில் பயன்படுத்தப்படும் தமிழல்லாத பிறமொழிச்சொற்கள். அடைப்புக்குறிக்குள் அவற்றுக்குரிய தமிழ்ச்சொற்களைக் காணலாம்.  சர்க்கார் (அரசு), தாலூக்கா (வட்டம்), தாசில்தார் (வட்டாட்சியர்), ஜில்லா (மாவட்டம்), மனுதாரர் (வேண்டுவோர்), மராமத்து (இடைச்சீர்திருத்தம்), மாகாணம் (மாநிலம்), மாஜி (முன்னாள்), முகாம் (இடைத்தங்கலிடம்), மேஜை (நிலைப்பலகை), இரசீது (பெறுகை உறுதி), இராஜினாமா (விலகல்), வக்கீல் (வழக்கறிஞர்), வக்காலத்து (வழக்கேற்புறுதி), வகையறா (முதலானோர்), வசூல் (பெறல்), வாய்தா (கெடு), வாபஸ் (மீளப்பெறல்), வாரிசு (உரிமையர்), தஸ்தாவேஜு (ஆவணங்கள்), தாவா (வழக்கு), திவால் (நொடிப்பு), பந்தோபஸ்து (காப்பொழுங்கு).

எது கெடும்

எது கெடும்?

பாராத பயிரும் கெடும்
பாசத்தினால் பிள்ளை கெடும்
கேளாத கடனும் கெடும்
கேட்கும்போது உறவு கெடும்
தேடாத செல்வம் கெடும்
தெகிட்டினால் விருந்து கெடும்

ஓதாத கல்வி கெடும்
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
சேராத உறவும் கெடும்
சிற்றின்பன் பெயரும் கெடும்
நாடாத நட்பும் கெடும்
நயமில்லா சொல்லும் கெடும்

கண்டிக்காத பிள்ளை கெடும்
கடன்பட்டால் வாழ்வு கெடும்
பிரிவால் இன்பம் கெடும்
பணத்தால் அமைதி கெடும்
சினமிகுந்தால் அறமும் கெடும்
சிந்திக்காத செயலும் கெடும்

சோம்பினால் வளர்ச்சி கெடும்
சுயமில்லா வேலை கெடும்
மோகித்தால் முறைமை கெடும்
முறையற்ற உறவும் கெடும்
அச்சத்தால் வீரம் கெடும்
அறியாமையால் முடிவு கெடும்

உழுவாத நிலமும் கெடும்
உழைக்காத உடலும்  கெடும்
இறைக்காத கிணறும் கெடும்
இயற்கையழிக்கும் நாடும் கெடும்
இல்லாலில்லா வம்சம் கெடும்
இரக்கமில்லா மனிதம் கெடும்

தோகையினால் துறவு கெடும்
துணையில்லா வாழ்வு கெடும்
ஓய்வில்லா முதுமை கெடும்
ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
அளவில்லா ஆசை கெடும்
அச்சப்படும் கோழை கெடும்

இலக்கில்லா பயணம் கெடும்
இச்சையினால் உள்ளம் கெடும்
உண்மையில்லா காதல் கெடும்
உணர்வில்லாத இனமும் கெடும்
செல்வம்போனால் சிறப்பு கெடும்
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்

தூண்டாத திரியும் கெடும்
தூற்றிப்பேசும் உரையும் கெடும்
காய்க்காத மரமும் கெடும்
காடழிந்தால் மழையும் கெடும்
குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்
குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்

வசிக்காத வீடும் கெடும்
வறுமைவந்தால் எல்லாம் கெடும்
குளிக்காத மேனி கெடும்
குளிர்ந்துபோனால் உணவு கெடும்
பொய்யான அழகும் கெடும்
பொய்யுரைத்தால் புகழும் கெடும்

துடிப்பில்லா இளமை கெடும்
துவண்டிட்டால் வெற்றி கெடும்
தூங்காத இரவு கெடும்
தூங்கினால் பகலும் கெடும்
கவனமில்லா செயலும் கெடும்
கருத்தில்லா எழுத்தும் கெடும்.

18/10/2018

பழநிபாரதி

ஊளையும் குரைப்பும்
கேட்கின்றன...
உறுமலும் பிளிறலும்
காணவில்லை
எச்சில் தின்று பழகிவிட்டோம்
கரைதல் போதும் நமக்கெல்லாம்
- பழநிபாரதி

ச.மணி

ஒரு
சாக்லேட்டை நிராகரிப்பதற்கென்று
இருப்பவை
இரண்டேயிரண்டு காரணங்கள்தாம்
ஒன்று
நீங்களொரு குழந்தையாக
இல்லாமலிருத்தல்
மற்னொன்று 
உங்களிடம் குழந்தைத்தனமே 
இல்லாமலிருத்தல்

- ச. மணி

ஜெயகாந்தன்

*தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள். அந்த இன்பமே உயர்வானது.*

-ஜெயகாந்தன்

16/10/2018

வெற்றி

என்னை அறிவாளி என்கிறாய்.....
ஆனால் உன்னை புரிந்துகொள்ள முடியாமல்
நான் அறிவாளியாக இருந்து என்ன பயன்...?!

#கி_வி.

ஜி.நாகராஜன்

ஒரு மனிதனுக்கு இன்றைய நாளைக்காட்டிலும் மிஞ்சுவது வேறெதுவும் இல்லை
-ஜி.நாகராஜன்

பாரதி ஜிப்ரான்

எல்லாரும் காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில் வருத்தப்படுகிறார்கள்
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக
- பாரதி ஜிப்ரான்

11/10/2018

யாத்திரி

உனக்கு முன்னும் எனக்கொரு வாழ்விருந்தது
உனக்குப் பின்னும் இருக்கத்தான் செய்யும்
ஆனால் எதற்கு
என்ற கேள்வியோடு

-யாத்திரி

ஜெயகாந்தன்

படிப்பு என்பதே வயிற்றுச்சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச்சம்பளத்துக்கு
வழி தேடிக்கொள்ளும் முயற்சி
-ஜெயகாந்தன்

படித்தது

“ஒன்றை சந்தேகப்படுவதற்கு முன்னால் அதை நம்பிப் பார்க்க வேண்டும்.”

-படித்தது

ஷான்

தொடுவாரில்லை
கொள்வாரில்லை
சலனமற்றுக் கிடக்கிறது
ஒற்றைச் செருப்பைப்
போன்றதொரு வாழ்க்கை.

#ஷான்

10/10/2018

எல்பர்ட் ஹப்பர்ட்

உங்கள் அமைதியை புரிந்துகொள்ளமுடியாத ஒருவரால், அனேகமாக உங்கள் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளமுடியாது.

-எல்பர்ட் ஹப்பர்ட்

ராணி திலக்

அவன் மலை மீது அமர்ந்திருந்தான்
ஒரேயொரு கணம்
அவன் தோளுக்கும் வலிக்காமல்
ஒரு பறவையின் நிழல்
சற்றே
அமர்ந்து
கடந்துவிட்டது.

-ராணி திலக்

மனுஷ்ய புத்திரன்

*மீதி மழை*

நீ நனையும் மழை
நான் நனையும் மழை
அவர் நனையும் மழை
இவர் நனையும் மழை
பெருமழையில்
எவ்வளவு நனைந்தாலும்
நாம் நனைய முடியாத
எவ்வளவு மழை
மீந்து பெய்கிறது

-மனுஷ்ய புத்திரன்.

பாவண்ணன்

பாவண்ணன் கட்டுரையிலிருந்து :

ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கேள்வியை உருவாக்கியபடி நீள்கிறது.கேள்விச் சங்கிலியும் விடைச்சங்கிலியும் பின்னிப் பிணைந்துள்ளன.
ஒவ்வொரு விடையும் ஒரு புதிய புரிதலை தருகிறது.

ஒவ்வொரு புதிய புரிதலும் அடுத்து நிகழ்ப்போகும் தற்செயலை மேலும் கூடுதலான வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கிறது

ரியோகான்

எதற்கும் ஆசைப்படாமல் சோம்பலுற்றிருக்கிறேன்

உலகம் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டுமென

விட்டுவிட்டேன்

என் பையில் பத்துநாளுக்கான அரிசியிருக்கிறது

கணப்பு அடுப்பருகே ஒரு கட்டுச் சுள்ளியிருக்கிறது

எதற்கினி மாயத்தையும் ஞானத்தையும் பற்றிய

புலம்பல்,

கூரையில் பெய்யும்

இரவு மழையைக் கேட்டபடி

சாவகாசமாக அமர்ந்திருக்கிறேன்

கால்இரண்டையும் வசதியாக நீட்டிக் கொண்டு.

-ரியோகான்

ஷங்கர ராமசுப்பிரமணியன்

காந்திமதி அம்மன் தேர் இப்போது
கண்ணாடிக் கூண்டுக்குள்.

பேராச்சி அம்மன் படித்துறைக் கல்
பெயர்ந்து கிடக்கிறது.

நாற்கரச் சாலை நடுவில் நகர் நீங்கிய
செவ்வரளிக் குலுங்கல்.

இடைநில்லாப் பேருந்து இருக்கையில்
கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்

' நான்கு சகோதரிகளு'க்குள் மூத்தவள்.

*~ ஷங்கர ராமசுப்ரமணியன்*

வண்ணதாசன்

உத்திரத்துத் தொங்கலில் இருந்து
இறக்கிப் போட்டிருந்த ராசம்மா அத்தையின்
நுனியுடைந்த முன்பல்லோடு பிளந்த வாயில்,
அகன்று நிலைகுத்திய கண்களில்,
கைக்குட்டை வைத்திருக்கும் பாவனையில் விரல்கள்  திருகிய இடக் கையில்
துப்பப் பட்டு
வாசிக்கப்பட்டு
நழுவவிடப்பட்டு இருந்தது
தடயம் ஏதும் விடாத,
உச்சரிப்புக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு
உப்புக் கரித்த சொல்.

*~வண்ணதாசன்*

சுந்தர ராமசாமி

துக்கத்தை கூடுதலாக கற்பனை செய்து கொண்டு,பரிதாபப்பட்டு கொள்வதிலும் உள்ளூர ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது
-சுந்தர ராமசாமி

படித்தது

இருக்கப்போவது
ஒரு நொடியோ அல்லது
இரண்டோ
இருக்கும் வரை முழுமையாய் வாழ்ந்து விட்டு மூச்சை விடுகிறது
       -நீர்க்குமிழ்.

07/10/2018

நகரவாழ்க்கை

சாலையில் அடிபட்டவன் இருக்கிறானா,இறந்தானா என்று தெரிந்து கொள்வதற்குள் எனக்கான பேருந்து வந்து விட்டது
#நகரவாழ்க்கை

கோசின்ரா

எனக்கு நாயுடன் பழக்கமில்லை
நாயும் என்னோடு பழகியதில்லை.
நாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை
நாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை
நாயைக் கண்டதும் பயப்படுகிறேன்.
நாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது.
நான் அறையில் உறங்குகிறேன். நாய் தரையில் உறங்குகிறது.
நாய் கனவு காண்கிறது. நானும் கனவு காண்கிறேன்.
நாய் தேர்தலில் நிற்பதில்லை. நானும் தேர்தலில் நிற்பதில்லை.
நாய் இப்போதும் நாயாக இருக்கிறது. மனிதன் நான்
எல்லாவற்றுக்கும் நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.

கோசின்ரா

மகுடேசுவரன்

மகுடேசுவரன்.

மாமிசக் கொட்டாவி விட்டபடி
களைத்துப் படுத்திருந்தது புலி.

பதுங்கிப் பம்மி
அதனருகில் சென்றேன்.

ஏறிட்டு உறுமிய புலி
எங்கே வந்தாய் என்றது.

என் பசிக்கு உன்னுடல் கரும்புதான்
மிகையூண் கொள்வதில்லை நான்...
தப்பித்தாய்...’ என்றது.

எதிரி நம்மிடம் பேசினாலே
பாதி வெற்றி.

எனக்கு
ஓர் உதவி வேண்டும்’ என்றேன்.

என்ன உதவி’ என்றது.

புலிநகம் கோத்த
பொற்சரம் அணிய விருப்பம்...
உன் விரலொன்றை நீட்டு
வெடுக்கென்று பிடுங்கிக்கொள்கிறேன்’ என்றேன்.

வேட்டை மனம் மறந்து
கர்ண மனத்திலிருந்த
காட்டுப் புலி
வேண்டியதைப் பிடுங்கிக்கொள்’ என்று
விட்டுக்கொடுத்தது.

இருபது நகங்களையும்
வகிர்ந்துகொண்டேன்.

புவியில் நீயே
போற்றத் தகுந்த புலி’ என்று
புகழ்ந்தடுக்கினேன்.

என் புகழ்ச்சியில்
புலிக்குத் தூக்கம் வந்துவிட்டது.

கிறங்கிய விழிகளோடு
‘இன்னும் என்ன வேண்டும்...’ என்றது.

புலிப்பல் வேண்டுமென்றேன்.
ஆடும் ஒரு பல்லைப் பிடுங்கிக்கொள்’ என்று
வாயைத் திறந்தபடி தூங்கியது.

குறடுகொண்டு
எல்லாப் பற்களையும் பிடுங்கிக்கொண்டேன்.

போகாமல்
அருகேயே நின்றேன்.

இன்னும் என்ன...?’ என்றது.

அதை உச்சரிக்கும்போதுதான்
தன்வாய் அதிகம் ஒடுங்குவதை
உணர்ந்திருக்க வேண்டும்.

அச்சம் நீங்கியிருந்தது எனக்கு.

அது கீறினால்
மெத்தென்றிருக்கும்

கடித்தால்
பிடித்துவிடுவதுபோல் இருக்கும்.

‘புலித்தோல் வேண்டும்’ என்றேன்.

மகுடேசுவரன்

தண்ணீருக்குள்
மூழ்கி எழுகையில்
நீர்த்தாய் செய்தனுப்பும்
சிகையலங்காரத்தை
ஏன் கலைக்கிறீர்கள்?

-மகுடேசுவரன்

கோசின்ரா

மௌனம் எப்போதும் காதலல்ல
*******
உனக்கும் எனக்கும்
காதலென்று சொன்னது
வார்த்தையல்ல
உன் மௌனம்.

கண்ணிலிருந்து பரவும்
உன் மௌனக் கீற்றுகள்
என் மீது பரவும்
இழைகளால் பின்னப்பட்டக் கூடு.

உன்னை விடவும் உன் மௌனம்
என்னைக் கண்காணிக்கிறது
எப்பொழுதும்.

உன் வரவை
சப்தங்களைவிட
மௌனங்களே சொல்லுகின்றன
வலிமையாக.

நீயில்லாத போதும்
வந்து நிரம்பும்
உன் மௌனத்தின் நதி.

அது காற்றை எதிர்க்கிறது
மழையை எதிர்கொள்கிறது
தனிமையோடு விளையாடுகிறது.

போதும்
எடுத்துக்கொண்டு போய்விடு
உன் மௌனத்தை

அது எப்போதும்
சரியான அர்த்தத்தை
பிரதிபலிப்பதில்லை.

- கோசின்ரா

பேயோன்

தேங்கிய சாக்கடை
நீரின் புகழைத்
தெருவெல்லாம்
பரப்புகிறது மழைநீர்

-பேயோன்

06/10/2018

கவிஜி

இருபது வருடங்களுக்குப் பிறகு...

திண்ணைக் கிழவி செத்துவிட்டது
சாலை விரிவாக்கத்தில் 
ஆலமரம் காவு வாங்கப்பட்டது.
மருது தேநீர்க்கடை இருந்த
இடத்தில் பெரிய மனிதர் ஒருவரின்
பண்ணை வந்திருக்கிறது.
இரண்டாவது தெருவுக்குச்
செல்லும் சுலபமான வழியைக்
கட்சிக்காரர் ஒருவரின் சுற்றுச்சுவர்
அடைத்துக்கொண்டது.
கிராமத்து மாமா வீட்டுக்குச்
செல்லும் பால்யத்தின்
அடையாளம் எல்லாம்
போய்விட்டதாகப் புலம்பிய
என்னிடம் மிகச் சாதாரணமாக
வழி கூறினான் மாமனின் பேரன்
``டாஸ்மாக்குக்கு ஜஸ்ட் எதுத்த வீடு மாமா...”

- கவிஜி

சாமி கிரிஷ்

வலி...

எனக்கு நினைவுதெரிந்த
நாள்களுக்கு முன்பிருந்தே
குடும்ப பாரத்தைத்
தூக்கிச் சுமக்கும் அம்மா
ஒருவழியாய்
வாழ்வின் கவலைகள்
வடியத் தொடங்கிய நாளொன்றில்
காலில் முள் குத்திவிட்டதென
எடுத்துவிடச் சொன்னாள்.
அவளின் தேய்ந்து வெடித்த பாதங்களில்
இதற்குமுன்  எத்தனையோ முட்கள்
ஆணியாகியிருந்தன...
ஒரு சிறுமுள்ளின்
வலியை உணரவே
அம்மாவுக்கு
அரை நூற்றாண்டு வாழ்க்கை முடிந்துவிட்டிருந்தது...

- சாமி கிரிஷ்