மௌனம் எப்போதும் காதலல்ல
*******
உனக்கும் எனக்கும்
காதலென்று சொன்னது
வார்த்தையல்ல
உன் மௌனம்.
கண்ணிலிருந்து பரவும்
உன் மௌனக் கீற்றுகள்
என் மீது பரவும்
இழைகளால் பின்னப்பட்டக் கூடு.
உன்னை விடவும் உன் மௌனம்
என்னைக் கண்காணிக்கிறது
எப்பொழுதும்.
உன் வரவை
சப்தங்களைவிட
மௌனங்களே சொல்லுகின்றன
வலிமையாக.
நீயில்லாத போதும்
வந்து நிரம்பும்
உன் மௌனத்தின் நதி.
அது காற்றை எதிர்க்கிறது
மழையை எதிர்கொள்கிறது
தனிமையோடு விளையாடுகிறது.
போதும்
எடுத்துக்கொண்டு போய்விடு
உன் மௌனத்தை
அது எப்போதும்
சரியான அர்த்தத்தை
பிரதிபலிப்பதில்லை.
- கோசின்ரா