இருபது வருடங்களுக்குப் பிறகு...
திண்ணைக் கிழவி செத்துவிட்டது
சாலை விரிவாக்கத்தில்
ஆலமரம் காவு வாங்கப்பட்டது.
மருது தேநீர்க்கடை இருந்த
இடத்தில் பெரிய மனிதர் ஒருவரின்
பண்ணை வந்திருக்கிறது.
இரண்டாவது தெருவுக்குச்
செல்லும் சுலபமான வழியைக்
கட்சிக்காரர் ஒருவரின் சுற்றுச்சுவர்
அடைத்துக்கொண்டது.
கிராமத்து மாமா வீட்டுக்குச்
செல்லும் பால்யத்தின்
அடையாளம் எல்லாம்
போய்விட்டதாகப் புலம்பிய
என்னிடம் மிகச் சாதாரணமாக
வழி கூறினான் மாமனின் பேரன்
``டாஸ்மாக்குக்கு ஜஸ்ட் எதுத்த வீடு மாமா...”
- கவிஜி