07/10/2018

மகுடேசுவரன்

மகுடேசுவரன்.

மாமிசக் கொட்டாவி விட்டபடி
களைத்துப் படுத்திருந்தது புலி.

பதுங்கிப் பம்மி
அதனருகில் சென்றேன்.

ஏறிட்டு உறுமிய புலி
எங்கே வந்தாய் என்றது.

என் பசிக்கு உன்னுடல் கரும்புதான்
மிகையூண் கொள்வதில்லை நான்...
தப்பித்தாய்...’ என்றது.

எதிரி நம்மிடம் பேசினாலே
பாதி வெற்றி.

எனக்கு
ஓர் உதவி வேண்டும்’ என்றேன்.

என்ன உதவி’ என்றது.

புலிநகம் கோத்த
பொற்சரம் அணிய விருப்பம்...
உன் விரலொன்றை நீட்டு
வெடுக்கென்று பிடுங்கிக்கொள்கிறேன்’ என்றேன்.

வேட்டை மனம் மறந்து
கர்ண மனத்திலிருந்த
காட்டுப் புலி
வேண்டியதைப் பிடுங்கிக்கொள்’ என்று
விட்டுக்கொடுத்தது.

இருபது நகங்களையும்
வகிர்ந்துகொண்டேன்.

புவியில் நீயே
போற்றத் தகுந்த புலி’ என்று
புகழ்ந்தடுக்கினேன்.

என் புகழ்ச்சியில்
புலிக்குத் தூக்கம் வந்துவிட்டது.

கிறங்கிய விழிகளோடு
‘இன்னும் என்ன வேண்டும்...’ என்றது.

புலிப்பல் வேண்டுமென்றேன்.
ஆடும் ஒரு பல்லைப் பிடுங்கிக்கொள்’ என்று
வாயைத் திறந்தபடி தூங்கியது.

குறடுகொண்டு
எல்லாப் பற்களையும் பிடுங்கிக்கொண்டேன்.

போகாமல்
அருகேயே நின்றேன்.

இன்னும் என்ன...?’ என்றது.

அதை உச்சரிக்கும்போதுதான்
தன்வாய் அதிகம் ஒடுங்குவதை
உணர்ந்திருக்க வேண்டும்.

அச்சம் நீங்கியிருந்தது எனக்கு.

அது கீறினால்
மெத்தென்றிருக்கும்

கடித்தால்
பிடித்துவிடுவதுபோல் இருக்கும்.

‘புலித்தோல் வேண்டும்’ என்றேன்.