27/01/2019

மனுஷ்ய புத்திரன்

#அன்பின்_சிறிய_நிமிடங்கள்.

கடற்கரையில்
தோளோடு தோளாகச்
சாய்ந்துகொள்வதில் அப்படி
என்ன கிடைத்துவிடும்?

இருசக்கர வாகனப் பயணத்தில்
தோளைப் பிடித்துக்கொள்வதில்
என்ன நிறைந்துவிடும்.?

அவ்வளவு அவசரமாக
பத்து விநாடிகள்
கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில்
எதை நாம் கடந்துவிடுவோம்.?

எல்லா கதவுகளும்
திறந்துகிடக்கும் முற்றத்தில்
மின்னலென அணைத்து விலகும் பொழுதில்
அப்படியென்ன சாகசம் இருக்கிறது.?

லிஃப்ட்டின் ஒரு தளத்திலிருந்து
இன்னொரு தளத்திற்கு
முத்தமிட்டுக்கொள்வதில்
என்னதான் நிகழ்ந்துவிடும்.?

அன்பின் சிறிய நிமிடங்கள்
நம்மை ஆட்கொள்கின்றன.
அவை நிகழ்கிறபோது
அப்படியொன்றும் அவை
அவ்வளவு சிறிய நிமிடங்களாக இல்லை.

_மனுஷ்ய புத்திரன்.

#கி_வி...

26/01/2019

வே.பாபு

உலகின் ஆகச்சிறந்த சுதந்திரவாதியென
குடும்பம் இல்லாதவன்
பெருமை கொள்கிறான்

அவன்
இஷ்டப்படி
விழிக்கிறான்
உண்கிறான்
வயிறுமுட்டக் குடிக்கிறான்

உங்களோடு யாரும் வரலையா
எனும்
டாக்டரின் கேள்வியை
யாரிடம்
சொல்வதென
எண்களைத் துழாவுகிறான்

-வே.பாபு

மனுஷ்ய புத்திரன்

எவ்வளவு பழகிய வீட்டிலும்
ஏதோ ஒரு அறை
நம்மை பயப்பட வைக்கிறது.

-மனுஷ்யபுத்திரன்

மனுஷ்ய புத்திரன்

வேண்டும் என்பதை
வேண்டும் எனச் சொல்லத் தெரியாமல்
வேண்டாம் என்பதை
வேண்டாம் என மறுக்க முடியாமல்
அழிகிறது
இன்னும் ஒரு நாள்
இன்னும் ஒரு வயது
இன்னும் ஒரு சொல்

-மனுஷ்யபுத்திரன்

மனுஷ்ய புத்திரன்

ஒரு போகியிலாவது இந்தப் பாழாய்போன மனதை எரித்துவிட முடியாதா?

-மனுஷ்யபுத்திரன்

பிரமிள்

கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!

-பிரமிள்

பிரமிள்

எந்த ஒன்றையும் மீற, அதனைப்பற்றிய புரிதலின் அடிப்படையிலிருந்து தான் அம்மீறல் தொடங்கப்பட்டாக வேண்டும்...

-பிரமிள்

திஜா

இவளும் ஒரு கணத்தில்,
ஒளி மங்கிய முக்கால் இருளில்
தனிமையின் கைமறையும் அந்திமங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும்...!
                
-திஜா

23/01/2019

ஜெ.கே

*மானுடத்தின் தேடல்கள்..*

"மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்காகப் போராடிக் கொண்டே இருக்கிறான்..
இருந்தபோதிலும், அவன் பல நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் அடிமையாகிறான்..
அதன் பின்னர், அவைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மீண்டும் போராடுகிறான்..
வாழ்வதற்கான மனிதனின் போராட்டங்கள் என்றென்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.."

- ஜே. கே..

ந.முருகேச பாண்டியன்

கடவுளை வழிபட பூக்கள் அவசியம்."பூசை" என்ற சொல்லே 'பூ செய்' என்பதிலிருந்து வந்ததுதான்.

பூ என்றால் மல்லிகை,பிச்சி போன்ற சிறியவை என்றும் மலர் என்றால் தாமரை போன்று பெரியவை என அர்த்தம்

கல்யாண முருங்கை மரத்தின் சிவந்த நிறமுடைய பெரிய மலரில் காகம் தேனைக்குடிக்குமாம்

-தமிழர் வாழ்க்கையில் பூக்கள் நூலில்
ந.முருகேச பாண்டியன்

நகுலன்

எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது.
ஆனால்
"எல்லாம்" என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை..

-நகுலன்
.

வண்ணதாசன்

பஸ் ஜன்னல் வழியாகப் பார்க்கிற தற்செயலான தண்டவாளங்களில் இருந்து, எப்போதோ போன ரயில்களின் பெட்டிகள் நம்முடன் நகரத் துவங்குகின்றன.

-வண்ணதாசன்.

சமயவேல்

..நடைபாதையில் குளிரில் நடுங்கியபடி படுத்திருக்கும் அவரது கனவுகளை யாரும் பறித்துவிட முடியாதபடி கண்களை மட்டும் மூடிக்கொள்கிறார்...

-சமயவேல்

22/01/2019

நகுலன்

எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது.
ஆனால்
"எல்லாம்" என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை..

-நகுலன்
.

முகுந்த் நாகராஜன்

விளையாட்டுப் பிள்ளைகள்
*******
இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்.
ஒன்று
ஊஞ்சலில் நின்றும், உட்கார்ந்தும்,
ஒற்றைக்காலைத் தூக்கியும்,
வேகமாக வீசி ஆடியும்,
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக்கொண்டும்
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?

- முகுந்த் நாகராஜன்

ஜெயமோகன்

மெய்யான மகிழ்ச்சி என்பது மூளையும் மனமும் முழுவிழிப்பில் இருக்கும் போது மட்டுமே அடையப்படுவது. எந்தவகையான மயக்கமும் மகிழ்ச்சிக்கு எதிரானதே. அறிவார்ந்த மகிழ்ச்சி என்பது எப்போதும் தர்க்கத்தை கடந்து செல்லுதலே.

-ஜெயமோகன்

சுஜாதா

வரிகளை உடைத்துப் போட்டால் கவிதையா?

இல்லை. வாசிப்பில் மனதையும் உடைக்க வேண்டும்.

-சுஜாதா

பேயோன்

வீட்டிற்குள் நுழையுமுன்
கழற்றி விடப்படுவது
பழக்கமாகிவிட்டது
செருப்புகளுக்கு.
மூளைக்கும்தான்.

-பேயோன்

இறையன்பு

சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட..கொட்டாவி வருவதற்காக காத்திருப்பது.!
-இறையன்பு

ஜெயமோகன்

காலை விடியலில் காதொலிக்கும் அல்லது கண் பார்வைக்கும் ஒரு சொல்லோ, ஒருவரியோ அன்றைய தினத்தின் மனநிலையை உருக்கொள்கிறது

-ஜெயமோகன்

வண்ணதாசன்

புகையப் புகைய அடுப்புக் குழலை
ஊதிக்கொண்டு இருக்கும்போது,
குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே,
அந்தத் தீயை கடைசியாக எப்போது பார்த்தேன்!

-வண்ணதாசன்

வண்ணதாசன்

பண்டம் சுடுகிற அடுக்களை மண் அடுப்பின்
உட்பக்கத்து தணலும்,தணலின் சிவப்பில் ஜொலிக்கிற அம்மா முகமும் எவ்வளவு ஜீவன் நிரம்பியது
-வண்ணதாசன்

வாலி

சினிமாவை பாத்து எல்லாம் காதலிக்க முடியாது. சினிமால சட்டை அலங்காம கசங்காம எல்லாம் காதலிப்பாங்க. நிஜம் அந்த மாதிரி இருக்காது.

-வாலி

நகுலன்

அவன் அதிகம் பேசமாட்டான்
ஏனென்றால்
தான் பேசினால் எங்கேயாவது
அகப்பட்டு கொண்டுவிட்டாலோ
என்ற எச்சரிக்கையான வாழ்வு

-நகுலன்

நகுலன்

அவனைப்பற்றி
நாலுந் தெரிந்தவர் சொல்லுவது;
அவன் நல்லவன்;
ஆனால் அவனிடம்
போகாமல் இருப்பது
நமக்கு நல்லது!

-நகுலன்

நகுலன்

ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு சாதாரணமானவர்கள் அவன் மீது ஆத்திரப்படுகிறார்கள்.

-நகுலன்

ஞானக்கூத்தன்

எல்லா மொழியும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில் ஒன்று.

-ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்

பிரிவுக்கு ஆயிரம்
பெயர்கள் உண்டு...
மறதி என்பதும்
அவற்றில் ஒன்று.

-ஞானக்கூத்தன்

பிரமிள்

நட்சத்திரங்களை விட
நிறையவே பேசுவது
அவற்றின் இடையுள்ள
இருள்.!

-பிரமிள்

பிரபஞ்சன்

எல்லோருக்குள்ளும்
ஓர் வாழ்க்கை இருக்கும் .
அந்த வாழ்க்கையை
எழுதுங்கள்,

எழுதுவதால் நீங்கள்
சமூகத்தின் மனசாட்சியை
தொடலாம்.

சக மனிதனுக்கு நம்மால்
நம் அன்பை எழுத்தின்
வழியே கடத்துவோம்...,

அதை விட வேறு
என்ன செய்து விட
முடியும் நம்மால்..?

-பிரபஞ்சன்

பிரபஞ்சன்

தான் ஒருவரால்
நேசிக்கப்படுகிறோம் என்பதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்கப்போகிறது?

-பிரபஞ்சன்

பிரபஞ்சன்

பயணம் என்பது பயணத்துக்காக என்பது நம்மிடம் இல்லை. திருமணமும் இறப்புமே நமக்குப் பயணங்களின் நோக்கமாக இருக்கின்றன.

-பிரபஞ்சன்

பிரபஞ்சன்

பிறக்கும்போதே இறக்கைகளுடன் பிறந்த பறவை போன்றது மனது. அதைப் பறக்கக் கூடாது என்று எப்படி சொல்வது?

-பிரபஞ்சன்

பிரபஞ்சன்

சமையல், வாஸ்து, அழகுக்குறிப்பு, ஆண்மை விருத்தி, 10 நாளில் பணக்காரர் ஆகும் வழி முதலானவைகூட இங்கு புத்தகம் என்றே அழைக்கப்படுகின்றன.

-பிரபஞ்சன்

க.மோகனரங்கன்

அன்புடைமை
# க. மோகனரங்கன்

அன்பு
என்பது வேறொன்றுமில்லை
மதுரம்தான்.
நான்
ஒவ்வொரு முறையும்
உங்களுக்குப் பருகத்தரும்
தேநீரில்
அது
ஒரு சிட்டிகை
கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோ
அமைந்து விடுகிறது.
அரிதாக
அன்றொரு நாள்
அளவாகக்
கலந்து வைத்துக்
காத்திருந்தபோது
நீங்கள்
தாமதித்து வந்ததால்
ஆறிப்போய் விட்டிருந்தது.
அன்பு
என்பது
பருக முடியாத
துயரமும் தான்.

o
("மீகாமம்"தொகுப்பு, தமிழினி வெளியீடு)

க நா சு

என்னோடு ஒத்துப்போகின்றவர்கள் மட்டும் வாழ்கின்ற உலகில் என்னால் மூச்சுவிட முடியாது. அதனால்தான் எனக்குக் குருத்வம் வேண்டாம் என்கிற நினைப்பு எனக்கு எப்போதுமே உண்டு. சிஷ்யனாக இருக்க விரும்பி வருகிறவன் மூளை காலியாகத்தான் இருக்கும் என்பதும் என் நினைப்பு.

- க.நா.சு.

அசோகமித்திரன்

இராணுவ அணிவகுப்பு போல எல்லோரும் ஒரேவிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற உலகில் எப்படி வாழ முடியும்? வேறுபட்ட மனிதர்கள், மாறுபட்ட மொழிகள், பண்பாடுகள் கொண்ட வாழ்க்கைக்கு நாம் இன்னும் நம்மை பழக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி வண்ண வேறுபாடுகள் அழகுக்குரியதாகிறதோ அதுபோலவே கருத்து வேற்றுமைகளும் நம் மனங்களின் அழகுதான்.

- அசோகமித்திரன்

அம்பேத்கர்

புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவை பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும்

-அம்பேத்கர்
(அம்பேத்கர் அன்றும் என்றும்)

வண்ணதாசன்

"மிருகமோ,மனுஷியோ
பால் கொடுக்கிற,
பால் குடிக்கிற கணத்தில் நிகழ்கிற மெய்மறதி தனி..!"
- *வண்ணதாசன்

சஹாரா

நான் அமைதி காக்கையில் அமைதி என்னை காக்கிறது.

-சஹாரா

கவிஞர் இன்குலாப்

எழுதமாட்டேன் ஒரு வரிகூட
நீ ஒப்பும் படி
எழுத்திலும் அதிரும் என் பறையொலி!
- கவிஞர் இன்குலாப்

பாபிலோ நெரூதா

"என் அன்பு            உன் கைகளை விட்டிறங்க மனமில்லாத ஒரு குழந்தை             அதை என்றைக்குமாக உன்னிடம் ஒப்படைக்கிறேன் " 
  - பாபிலோ நெரூதா

தாரா கணேசன்

தூக்கம்     
உன் நினைவின்
மதுக்கோப்பைகளை
கவிழ்த்து வைக்கிறது

கனவு
மறுபடியும் அதனை
நிறைத்து வைக்கிறது... 

-தாரா கணேசன்

தமிழச்சி தங்கபாண்டியன்

[22/01, 7:52 am] TNPTF MANI: புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவை பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும்

-அம்பேத்கர்
(அம்பேத்கர் அன்றும் என்றும்)
[22/01, 1:05 pm] ‪+91 99941 42850‬: கூதலும் கூதல் நிமித்தமும்

கூதலுக்கென்று ஒரு சுகமிருப்பதாய்க்
கெஞ்சும் என்  போர்வையை மடித்து வைக்கும்படி மன்றாடுகிறது
விடிகாலை வீதி கூட்டுபவளது இருமல்.

குப்பை அள்ளுபவர்களை
வேடிக்கை பார்த்தபடி சுவைக்கப்படும் தேநீர்க் கோப்பை
ஒவ்வொன்றின் அடியிலும் குற்றவுணர்வின் கசடு
கூதலின் சோம்பல் ருசி கொண்டையுள்ள சீமாட்டிகளுக்குத்  தான்.
-தமிழச்சி தங்கபாண்டியன்

20/01/2019

எஸ்.ரா

ஒவ்வொரு நகரமும் மற்றவர்களுக்குத் தான் மிக அழகாக இருக்கிறது. அங்கேயே வாழ்பவர்களுக்கு அது ஒரு வாழ்விடம்

- எஸ்.ரா.
தேசாந்திரி

பாலைநிலவன்

ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்துகொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவை சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்

- பாலைநிலவன்

மு.சுயம்புலிங்கம்

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை

-மு.சுயம்புலிங்கம்

யாத்திரி

''அப்பறம்'' என்று கேட்பவளிடம் அதுவரைக்கும் நிகழ்ந்தது உரையாடல் அதற்குப்பின் நேரவிரயம்.

-யாத்திரி

நாஞ்சில் நாடன்

மழையை,அதன் அசெளகரியங்களோடு அனுபவித்துப் பார்த்தேன்.

-நாஞ்சில் நாடன்

கலாப்ரியா

எரிச்சல் வந்தால் எழுதினதைக் கிழித்துப் போடுகிற சுகமோ வசதியோ மடிக்கணினிக்கு உண்டா?
- கலாப்ரியா

யுகபாரதி

தேவையை நேரடியாகக்
கேட்கத் தெரியாதவர்கள்
தங்கள் உரையாடலை
ஆரம்பிக்கிறார்கள்
பாராட்டிலிருந்து
-யுகபாரதி

படித்தது

குளத்தில்
கல் எறிந்து
விளையாடுகிறேன் நான்

குளத்தில் தன்னையே எறிந்து விளையாடுகிறது நிலா.

குளத்தையே
எறிந்து விளையாடுகிறான்
கதிரவன்.

17/01/2019

சுஜாதா

அந்தக் காரின் வெளிச்சம்
சாலையை பெருக்கிக் கொண்டே வந்தது..
-சுஜாதா

கல்யாண்ஜி

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே!"
-கல்யாண்ஜி

15/01/2019

ஜே.கிருஷ்ணமூர்த்தி

“தன்னைத் தானே அவதானிக்கும்
விழிப்பு நிலை தான் ஆத்மார்த்தத்தின் முதலும் முடிவுமான செயல் வழி”.

ஜே.கிருஷ்ணமூர்த்தி

ஆனந்த் நீலகண்டன்

நீங்கள்தான் கடவுள் என்று கூறுங்கள். அப்போது நீங்கள் செய்யும்  அதர்மம் தெய்வீக நாடகம் என்று ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனந்த் நீலகண்டன்

ப்ராங்ளின் குமார்

பேனா எடுக்கும்
மகள்கள்
தகப்பனின்
உள்ளங்கை
முழுதும்
எழுதுகிறார்கள்
அடுத்த
பக்கமென
வலது கையையும்
விரிக்கிறாரார்கள்!

#ப்ராங்ளின் குமார்

போர்ஹே

காலத்தை அளப்பதற்கு என்னிடமிருக்கும் ஒரேயொரு வழி
உன்னுடன் இருப்பதும்;
உன்னுடன் இல்லாதிருப்பதும்.

போர்ஹே

ரூமி

நம்மைப் பற்றி ஒரு மதிப்பீட்டை வைத்திருப்போம்.  அதுவே ஆணவம்.

ரூமி

லா.ச.ரா

"மனம் என்பது எப்பொழுதும் ஒரு நிலையில் இருப்பதில்லை.
அது எண்ணுவதையெல்லாம் எண்ணியேத் தீரும்"

-லா.ச.ரா...

13/01/2019

ராஜா சந்திரசேகர்

இறந்து போக
எத்தனையோ தருணங்கள்
இருக்கின்றன
உயிர்த்தெழ
ஒரு வரி போதும்

-ராஜா சந்திரசேகர்

06/01/2019

எஸ் ரா

வீடு, புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம்படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இடத்தை அடைத்துக்கொண்டு ஏன் இந்தப் புத்தகங்களை வீட்டில் வைத்திருக்கிறாய்? எனச் சண்டையிடாத குடும்பமே இல்லை.
உடைந்துபோன நாற்காலிகள், பழைய பாய், தலையணைகள், நசுங்கிய பாத்திரங்களைக் கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் குடும்பங்கள் புத்தகங்களை வெறுப்பது என்பது பண்பாட்டின் வீழ்ச்சியே.

- எஸ்.ரா

முகுந்த் நாகராஜன்

வெந்துவிட்டதா என்று
திருப்பித் திருப்பிப் பார்க்கிறாள்
கணவனுக்குக் கொடுத்து அனுப்பப்போகும்
வெங்காய தோசையை;
சாயந்திரம் அவன் வந்துவிட்டானா என்று கதவைத் திறந்து திறந்து
பார்ப்பதைப் போல

-முகுந்த் நாகராஜன்

சபரிநாதன்

அதிகாலையில் ஒருரவுண்டானா

கிழக்கு கடற்கரை சாலை வடகிழக்காகக் கிளை பிரியும்
ரவுண்டானாவில் சிக்னல் செயல்படவில்லை தொப்பிவாசி யாருமில்லை.
எதையோ அசைவெட்டியபடி சந்தியில் நிற்பது ஓர் எருமை மாடு.
காதுகளால் துடுப்பிடும் பழக்கத்தைக் கைவிடமுடியாதது
திடிரெனத் தும்முகிறது திடீர் திடீரென கோளை வடியக் கத்துகிறது.
அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது
மெதுநகர்வில் கொம்பசைத்து இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்க
இருசக்கர வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும்
தாவா ஏதுமின்றி தத்தமது வழியில் போகின்றன.
சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?

***

சபரிநாதன்

05/01/2019

படித்தது

சிலநேரம் சிலருக்கு
அனைத்தயும் நிரூபிக்கத்
தேவையில்லை...
சிரித்துவிட்டு கடந்து
சென்றாலும் போதும்..!

ராபர்டோ ஜூரெரோஸ்

இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலுள்ள நிசப்தம் ஒன்றுபோல் இருப்பதில்லை

-ராபர்டோ ஜுரெரோஸ்

அ.வெண்ணிலா

கருத்த தோலுக்கருகில் சிவந்தது போலவும்,
சிவந்த தோலுக்கருகில் கொஞ்சம் கருப்புதானோ எனவும் கண்ணாமூஞ்சி காட்டுகிறது என் மாநிறக் கை
-அ.வெண்ணிலா

03/01/2019

படித்தது

*இன்றைய சிந்தனை:*

*உன்னை குறை சொல்லுகிறவனை கடந்து சென்று திரும்பிப்பார். அவன் அங்கேயே நின்று கொண்டு வேறொருவரை குறை சொல்லிக் கொண்டிருப்பான்.*

லியோனார்டோ டாவின்சி

எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது நான் எப்படி சாகவேண்டும் என்பதைத் தான் இத்தனை காலமும் கற்று வந்திருக்கிறேன்

-லியோனார்டோ டாவின்சி

பூமா ஈஸ்வரமூர்த்தி

விலகி நின்று பார்த்தால் தான் முழு உருவம் தெரிகிறது. தள்ளிப்போவதற்கு ஒரு மனசு வேண்டும்

-பூமா ஈஸ்வரமூர்த்தி

பிரபஞ்சன்

பெரியமனிதர்கள் என்று யாருமில்லாத உலகத்தில் எப்படி வாழ்வது?

பெரிய மனிதர்களே இல்லாத உலகத்தில் … தேடி சலிப்பதை விட …. நீதான்  பெரியமனிதனாக வாழ்ந்து காட்டி விட்டு போயேன்

-பிரபஞ்சன்

02/01/2019

படித்தது

வாய் வரைக்கும் வந்துவிட்ட ஒரு எதிர்வினை பதிலை, சொன்னால் பிரியமானவர்கள் காயப்படுவார்களென மௌனமாக நீங்கள் இருந்துவிடுகிற நொடிகளிலெல்லாம் அன்பின் அழகியல் ததும்பும் பொழுதுகள்..:-

-படித்தது

ரூமி

எதனையும் தாமதப்படுத்திச் செய்வதில் பயனில்லை ..

அது, மன்னிப்புக்காக மரணித்தவரின் நெற்றியில் இடும் முத்தம் போல!

-ரூமி

ஷான்

மௌனத்தை விடவும்
சிறந்த பதிலைத்
தேடும் முயற்சியில்
நான் இருக்கையில்தான்
என் மௌனத்தை
பதிலாக எண்ணிக் கொண்டு
அடுத்த கேள்வியைக் கேட்கிறீர்கள்.

– ஷான்

வனயட்சி

கவனத்துடன் கேட்கும் காதுகள் கிடைத்துவிட்டால் சொல்வதற்குத் தான் எவ்வளவு இருக்கின்றன இந்த மனிதர்களிடம்.

-வனயட்சி

மிர்தாத்

மனிதரால்வழங்கப்பட்ட மரியாதைகள்
மனிதராலேயே எளிதில்
எடுத்துக்கொள்ளப்பட்டு விடும் !!
                                                       
-மிர்தாத்

மிர்தாத்

மேலே ஏறுகிற அளவுக்கு இறங்கி வாருங்கள்.இல்லாவிடில் சமநிலையை இழக்க நேரிடும்

-மிர்தாத்

தனசேகர்

விடுமுறை நாட்களில்
வகுப்பறையில்
நிசப்தத்தின் ஈரம் தங்கிக்கொள்கிறது

சிதறிக்கிடக்கும் துண்டுத்தாள்கள்
காற்றில் படபடத்துச் சொல்கின்றன
எங்களின் வாசனைகளை
எங்களுக்கான அடையாளங்களுடன்.

எழுதி அழிக்காது விட்டுப்போன
கரும்பலகையின் எழுத்துகள்
வாசலை நோக்கியபடி
ஊர்ந்துகொண்டிருக்கின்றன.

துளைவிழுந்த பானையென
தனக்குள் வெறுமையை நிரப்பியபடி
சலனமற்றிருக்கிறது வகுப்பறை.

- தனசேகர்

சரவண கார்த்திகேயன்

நல்ல விவாதத்தின் பயன் அதில் பங்கேற்பவர்களை விட மெளனமாய் அதை உற்று கவனிக்கும் மூன்றாம் நபர்களுக்கே அதிகம்."

-சரவண கார்த்திகேயன்

லாசரா

நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு, இல்லையேல் சந்தேகம் உங்களுடையது, உண்மை என்னுடையது,அவ்வளவுதான்.
  - லாசரா