16/05/2019

அ.வெண்ணிலா

யுத்தம் பற்றி எனக்குத்
தெரிந்திருக்க
நியாமில்லைதான்.
ஆண்டுகளின்
புள்ளி விவரங்களாக்கப்பட்டு
பாட புத்தகங்களில்
யுத்தங்கள் வந்த பிறகே
பிறந்துள்ளேன் நான்.


விமானம் பறப்பதை
அருகில் பார்க்கவே
25 வருடங்கள் பிடித்த எனக்கு
வெடிகுண்டு வீசும்
விமானங்கள் பற்றிக்
கற்பனை செய்ய முடியவில்லை.


எட்டுக்கு எட்டடி
இருட்டரையில் வாழ்ந்து
பழகியுள்ள என்னால்
ஓரளவுக்கு
பதுங்கு குழிகளின்
அனுபவம் உணர முடிகிறது.

தெரிந்ததெல்லாம்
யுத்தம் ரத்தம் சம்பந்தமானது என்பதும்
வெல்பவர்களையும்
தோற்பவர்களையும் விட்டு
வாழ்பவர்களையே
அழிக்கிறது என்பதும் மட்டுமே.

- அ. வெண்ணிலா