நீங்கள் மட்டும்தானா
உங்கள் அறையில்?
நான் சொல்கிறேன் என்பதற்காகவேனும்
முயன்று பாருங்கள்.
மழைக்காலங்களில் அறை ஜன்னல்களைத்
திறந்துவைத்துவிட்டுப் புறப்படுங்கள்.
உங்கள் தினத்தின் ரொட்டியைச் சம்பாதிக்க,
நான் திரும்பிய ஒரு பின்னிரவில்
ஜன்னல் வழியே அடித்த சாரலில்
தரையில் ஒரு தகடு போல
தண்ணீர் பரவியிருந்தது.
எந்தச் சலனமும் இன்றி நடுவில் அமர்ந்திருந்ததது
மழைக்காற்று உட்புறம் வீசியிருந்த
ஒரு நந்தியாவட்டைப் பூ.
யாரோ அருகிருப்பது போல
அன்று நான் குளிரற்று உறங்கினேன்.
_கல்யாண்ஜி.