17/01/2018

பெருஞ்சித்திரன்

அவளின் வார்த்தைகள்
என் இரகசியத்திற்கு  உரியது...

நீண்ட நாட்களுக்குப் பின்
அன்று தான் சந்தித்துக் கொண்டோம்
காட்டாற்றின் பேரிரைச்சல்
வலம் வரும் பெருவனத்தில்.

இம்முறை எங்களுக்குள்
ஒரே ஒரு ஒப்பந்தம் தான்;
ஒருவரை ஒருவர் தீண்டாது
காதலை நிகழ்த்திக் காட்டுதல் மட்டுமே,
எங்கள் முன்
காதல் மீறிய காமமும்,
காமம் மீறிய காதலும்
எல்லைகளாய்...

நிச்சயமாக
வனத்தின் நடைபாதை
ஒரு பாம்பினைப் போல நெளிந்திடும் வரை
வார்த்தைகளின் ஒலிகளுக்குள் தான்
அகப்பட்டுக் கிடந்தோம்
இருவரும்.

கண்களுக்குள் கிடந்த
காதலின் கண்ணிமைகளை
நூலாக்கித் தைத்திடும் வித்தையை
கற்றுக் கொடுத்தேன்
அவளுக்கு.

ஈடாக
இதுவரை
நம்மை வலம் வந்தது
காட்டாறு அல்ல
மாறாக
வனக்காற்றென்ற உண்மையை
கண்டெடுத்துத் தந்தாள்.

இமைகள் தைக்கப்பட்ட கண்கள்
எங்கள் காதலுக்கு
அறிமுகப்படுத்தியது
வனக்காற்றின் அனைத்துப் பாதைகளையும்;
அக்காற்றின் பெருங்காமத்தையும்...

முதலில் துளியும் நம்பிக்கை இல்லை தான்
எங்களுக்கு,
பார்வையற்ற வியர்வை பூத்த
எங்கள்
உப்பு உடலில்
உட்புகுந்து வெளியேறிய போது தான்
உணர்ந்து கொள்ள முடிந்தது
பால் பேதமற்று
புணர்ந்திடும் அதன்
பெருங்காமத்தை...

அவ்வனுபவம்
எங்களுக்கு
உணர்த்தியதெல்லாம்
ஒரு விளையாட்டை
ஒத்ததாகத் தான் இருந்தது நண்பர்களே!
ஆம், நண்பர்களே!
அது ஒரு அற்புதமான விளையாட்டு...

பார்வையற்ற எங்கள் காதல்
காற்றின் கால் தடங்களை
எளிதில் பார்க்க முடிந்ததால்
காற்றின் திசைகளும், நுட்பங்களும்
வெகு எளிதாக...

இப்போது வனக்காற்றற்ற வெளியில்
காற்றாக நான்;
நானற்ற வனத்திற்குள்
ஒளிந்திட முனையும் அவள்...

விதம் விதமாய் மணல் துண்டங்கள்;
வகை வகையாய் மரம்,செடிகள்;
பலவகையாய் பறவையொலிகள்;
பசியெடுத்த விலங்கினங்கள்;
தவ நிலையில் குன்றுகள்
இவை கடந்து நானவளை...
எனக்குப் பின் அவளென்னை...

வனக் காற்றின் நிகழ்த்துதலை
மாற்றி மாற்றி நிகழ்த்தியதால்
வனமெங்கும்
மலர்ந்திருந்தன
பெருங்காதலின் வெட்பப்பூக்கள்...

பயணத்தின் பாதைகள் முற்றுப்பெற
பார்வையற்ற பெருங்காமம்
எண்ணிக் கொண்டிருந்தது
எண்ணிலடங்கா புணர்வுகளை...
பின்
வனக்காற்று
விளையாட்டின் எல்லைகள்
முடிந்து விட்டதாய்;
பிரித்து விட ஆரம்பித்தது
எங்களின் இமை முடிச்சை.

விதிகள் மீறா காமத்தின் வெற்றியதில்
காதல் பிரிந்து செல்ல
எந்நாளும்
வனக்காற்றாய் சுழன்று கொண்டிருக்கும்
என் காதில்
அவளின் வார்த்தைகள்...
                              
                        ...பெருஞ்சித்திரன்...