17/01/2018

வசந்தகுமாரன்

G.வசந்தகுமாரன் கவிதைகள்...

#சாவதென
முடிவெடுத்த பிறகுதான்
நான் உன்னைக்
காதலிக்கத் தொடங்கினேனோ?

#கொன்றபின்
எனக்காக  அழுவாயெனில்
என்னைக் கொன்றுவிடு.

#நீதான் வேண்டும்
என்னைக்
கொல்வதானாலும்.

#நீ என்னை
எறிந்த இடத்தில்
முளைப்பேன்
உன் கூந்தலுக்கு
ரோஜாவாக!

#நீ என்னை
வெறுத்தாலும் எனக்கு
விரக்தியில்லை.
வெறுப்பதற்காகவேணும்
என்னை நினைப்பாய்
இல்லையா!

#கனவுகள்
தொடமுடியாத
தூக்கம்
மரணம்!

#என் கல்லறையில்
இப்படி
எழுதி வையுங்கள்:
வாழ நினைத்து
தோற்றவன் இங்கே
தூங்குகிறான்.

#நான் இறந்தபிறகும்
உன் ஞாபகம் வந்தால்
எழுந்து உன்னை நினைப்பேன்...

#நான் நானாக இல்லாதபோது
நீ என்னை நேசித்தாய்.
நீ நீயாக இல்லாதபோது
நான் உன்னை நேசித்தேன்.
நான் நானாகவும்
நீ நீயாகவும் ஆனபோது
முகவரியற்ற அனாதையாகிவிட்டது
நம் காதல்.

#நீ
பறவையாக
இருந்தபோது நான்
சிறகாக இருந்தேன்
என்னைத் தெரிகிறதா?

#மரணம் வழங்காதீர்
உயிரோடு விட்டுவைப்பதும்
தண்டணைதான்.

#மறுபடியும் பிறந்து
மீண்டும் உன்னைக்
காதலித்து
தோற்கவேண்டும் நான்!

#யாரிடமும் இல்லை
நான்
என்னிடமும்கூட!

#தயவு செய்து
என்னைச் சாகவிடு
உன் மடியில்!

#என்னை வெறுத்தேன்
புத்தன் சிரித்தான்
வெறுப்பதும் ஆசைதானே?..

பகிர்வு....கி.வி...