தங்கம் வாங்கும்போது
சின்னத் தோடுதான் அழகு என்பாய்.
புடவைக்கடைகளில்
ஐநூறு தந்தால்
“ காட்டன்தான் கம்ஃபர்ட்..”
இருநூறை என்னிடமே கொடுத்து விடுவாய்.
உணவகங்களில் திடீரென இருமுவாய்,
ஐஸ்கீரிம் வேண்டாம் என மறுத்து.
இப்படியேதான் எல்லாமே உனக்கு ..!
கோயிலுக்கு செல்ல
பஸ்தான் வசதி.
துணி துவைக்க
பாத்திரங்கள் தேய்க்க
இளையாராஜாவும் கிணற்றடியும்.
மதிய வெக்கைக்கு
பழைய சோறு.
சாயங்காலங்களில்
டிவியே போதும்.
மல்லிப்பூ பிடிக்காது
அழகு சாதனங்கள் பிடிக்காது
அசைவமே பிடிக்காது
காபி தேநீரும் பிடிக்காது.
" எப்போதிலிருந்து .? ..." கேட்பேன்.
" பிறந்ததிலிருந்து..." சிரிப்பாய்.
அச்சிரிப்பு மட்டும்...
நட்சத்திரங்களின் ஜொலிப்பைப் பழிக்கும்
ஒரு பட்டுப்புடவையணிந்து
பெருந் தோடுகள்
சூரிய சந்திரராய் ஆட
நெடுமல்லிச்சரம் மண்தொட...
உன் பரிவாரங்களோடு
மாதிரி ரதம் ஒத்த வாகனத்திலிருந்து
இறங்கிய தினம் கண்டது போலவே.!
என் பணி உயர்வுக்காக
இப்போது சுற்றுகிறாயே...
அதே கோயிலில்.
(Ram Vasanth)