*இன்று செப்டம்பர் 11*
*_பாரதி நினைவேந்தல்_*
திருவல்லிக்கேணியில் வசித்த பாரதி தினமும் பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வார். போகும்போது கையில் தேங்காயும் பழமும் கொண்டு செல்வார். நைவேத்தியத்திற்கு அல்ல.
அங்கே இருந்த யானைக்கு கொடுக்க.
நாள்தோறும் கொண்ட பழக்கத்தின் காரணமாக நெருங்கி யானையுடன் பழகி வந்த காலத்தில் தான் 1921 ஜூன் மாதத்தில் மதம் பிடித்து கட்டி வைக்கப்பட்டிருந்த யானைக்கு பழம் கொடுக்கச்சென்ற பாரதி யானையின் தும்பிக்கை பட்டு கீழே விழுந்தார்.
விழுந்த பாரதி மூர்ச்சையடைய திருவல்லிக்கேனியை சேர்ந்த குவளைக் கண்ணன் அவரை யானை காலடியிலிருந்து மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தார்.
ஏற்கனவே பூஞ்சை தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்த பாரதி குணமாகி மித்திரனில் எழுதிய கட்டுரையில், தன்னை இன்னாரென அறியாமல் யானை தள்ளியதாகவும், கொல்லாமல் விட்டதற்கு காரணம் தன் மீதிருந்த அன்பே காரணம் என்றும் எழுதினார்.
யானை வழியாக உயிர் கொல்ல முடியாத காலன் வேறு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்.
1921 செப்டம்பரில் பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை.
இரத்தக்கடுப்பான நோவினால் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து விடுப்பில் இருந்த பாரதி, தன்னை விசாரிக்க வந்த மித்ரன் பத்திரிக்கை ஊழியரிடம் செப்டம்பர் 12 அன்று வருவதாக சொல்லி அனுப்பினான். ( அன்றுதான் அவன் பூத உடல் எரிகாடு சென்றது).
உடல்நலமற்ற பாரதியை வ.வே.சு ஐயர் சிறைச்சாலையிலிருந்து போலீசு காவலுடன் வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றார்.
அதன் பின்னர் பரலி சு. நெல்லையப்பர், நீலகண்ட பிரமச்சாரி, லக்ஷ்மன ஐயர் ஆகியோர் ஆந்திர கேசரி டி. பிரகாசத்தின் தம்பியான ஹோமியோபதி மருத்துவர் டி ஜானகிராமை அழைத்து வந்து மருத்துவம் பார்க்க முயன்றதை பாரதி மறுத்தார்.
பின் தொடர்ந்து நண்பர்களின் உடல்நலம் குறித்த அறிவுரைகளை மறுத்தார் பாரதி.
செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு பாரதியின் உடல்நிலை கருதி இரவு தங்குவதென நீலகண்டன், நெல்லையப்பர், லக்ஷ்மண ஐயர் ஆகியோர் பாரதி வீட்டிலேயே தங்க பாரதியின் இளைய மகள், மருந்து என கொடுத்த பார்லி கஞ்சியை மங்கலான விளக்கு வெளிச்சத்தில் குடித்துவிட்டு தன் மகளிடம் கொடுத்தது மருந்தல்ல பார்லி கஞ்சி எனச் சொன்ன பாரதி தன் நண்பர்களிடம் ஆப்கான் மன்னர் அமானுல்லாகான்பற்றி ஒரு வியாசம் எழுத வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
முன்னிரவில் பெரும்பாலும் மயக்கத்தில் இருந்த பாரதி இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக கடைசியாக சொன்ன வார்த்தைகள் இதுதான்.
இரவு 1-30 மணிக்கு பாரதி இறந்து போக மறுநாள் காலையில் நண்பர்களுக்கு சொல்லி அனுப்பினார்கள்.
காலை எட்டுமணிக்கு துவங்கிய பாரதியின் இறுதி ஊர்வலத்தில் இருபதுக்கும் குறைவானவர்களே பங்கேற்க, உடலை எரியூட்டும் முன் அவரின் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா இரங்கலுரை நிகழ்த்த பாரதியின் தூரத்து உறவினர் வி. ஹரிஹர சர்மா காரியங்களை செய்தார்.
இந்திய விடுதலை வரலாற்றில் தவிர்க முடியாத மனிதனாக வாழ்ந்த பாரதி மறைந்த போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை.
38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தது.
தன் அற்ப ஆயுள் காலத்தில் ஆண்டாண்டு காலம் நம்மை பேசும்படி செய்த கவியின் நினைவை போற்றுவோம்.
~
*மு. வீரகடம்ப கோபு,*
திண்டுக்கல்.