13/09/2019

மலையாள சினிமா

திரைக்கதைதான் சூப்பர் ஸ்டார்!

*மலையாள சினிமா*

ஆம், இது மலையாள சினிமாவுக்கு ஆகச் சிறந்த காலம். ஆனால், ஏதோ இரண்டு, மூன்று ஆண்டுகளில் இது நிகழ்ந்து விடவில்லை; கடந்த பத்தாண்டுக்கால கடின உழைப்புக்குக் கிடைத்த பலன்தான் இது. திரைக்கதை எழுத்தாளர்கள் - படைப்பாளிகளின் கூட்டு முயற்சியால்தான் எல்லாம் சாத்தியமானது.”

இப்படிச் சொன்னவர், மலையாளத் திரைக்கதை எழுத்தாளர் ஸ்யாம் புஷ்கரன். ‘மகேஷிண்டெ பிரதிகாரம்’ (2016) படத்துக்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது வென்றவர். இந்த ஆண்டு சினிமா ஆர்வலர்களுக்குத் தீனிபோட்ட ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படமும் இவரது எழுத்துதான்.

 

ஸ்யாம் புஷ்கரன் சொல்வது உண்மைதான். மலையாள சினிமா நிறையவே மாறியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மலையாள சினிமா மொத்தமும் மாஸ் மசாலாப் படங்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது. இது ஒரே நாளில் மாறிவிடவில்லை. 2010-களின் தொடக்கத்தில் தொடங்கிய இந்தச் சீர்திருத்த முயற்சியின் பலனை இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறது மலையாள சினிமா.

2019-ல் மட்டுமே இதுவரை சிறிதும் பெரிதுமாக செஞ்சுரியைத் தொட்டுவிட்டது மலையாளப் படங்களின் எண்ணிக்கை. தமிழுக்கு சற்றும் சளைக்காத வகையில் எண்ணிக்கையில் படங்களைக் கொடுக்கும் அதேவேளை, நல்ல ‘கன்டென்ட்’ உள்ள சினிமாவைத் தருவதிலும் முனைப்பு காட்டுகிறது கேரளா.

`கும்பளங்கி நைட்ஸி’லிருந்தே தொடங்கலாம். ‘வீடு என்பது வெறும் கல், மண்ணால் மட்டும் அல்ல, அன்பால் நிறைந்ததும்தான்’ என்பதை அழகான காட்சிகளின் வழி புரியவைத்த ‘கும்பளங்கி நைட்ஸ்’ கேரளாவையும் தாண்டி மொழி பேதமின்றிக் கொண்டாடப்படுகிறது. காட்சிகள், கதாபாத்திரங்கள் வழியே உணர்வைக் கடத்துவதை அறிமுக இயக்குநர் மது சி.நாராணயனும், எழுத்தாளர் ஸ்யாம் புஷ்கரனும் கச்சிதமாகச் செய்திருப்பார்கள்.

அதே காதல்கதைதான். ஆனால் அதிலும் ஏராளமாக வித்தியாசம் காட்டியிருந்தது ‘இஷ்க்.’ சொற்பமான எண்ணிக்கையில் கதாபாத்திரங்கள், நான்கைந்து லொக்கேஷன்களை மட்டுமே கொண்டு த்ரில்லிங் அனுபவத்தைத் தந்து மிரட்டியிருந்தது ‘இஷ்க்’ (Ishq). சமகாலச் சமூகத்தின் போக்கைப் பதிவு செய்து கலாசாரக் காவலர்களின் முகத்திரையைக் கிழிப்பது மட்டுமன்றி, இன்றைய இளைஞர்களிடம் காணப்படும் பிற்போக்குத்தனங்களையும் பதிவு செய்ததில் ‘இஷ்க்’, காலத்தைப் பிரதிபலிக்கும் அபாரமான சினிமா.

காதலிமீது பொசசிவ் ஆகி வெறுப்பாகும் காதலன், அவள் முகத்தில் ஆசிட் வீசிச் சிதைக்கிறான். பைலட் ஆகும் கனவுகளோடு இருக்கும் பெண்ணின் வாழ்க்கையே தடம் புரள்கிறது. பறக்க விரும்பியவள் இப்போது சிறகொடிந்து கிடக்கிறாள். அவளை அருவருப்புடன் நோக்கும் சமூகத்தின் பார்வையை இயல்புநிலைக்கு மாற்றும் படைப்பு ‘உயரே’ (Uyare).

ஒருபெண் தன் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இளைஞர்களைக் காதலிக்கிற கதைதான். சேரனின் `ஆட்டோகிராஃப்’ போல. ஆனால், அறிமுக இயக்குநர் அஹமது கபீர் அதை வேறுவிதமாக, பெண்ணின் அகவுலகத்தை யதார்த்தத்துக்கு நெருக்கமாகப் பதிவு செய்திருப்பார். லிபின் வர்கீஸ், அகமத் கபீர், ஜீவன் பேபி மேத்யூ என மூன்று திரைக்கதை ஆசிரியர்கள் பணியாற்றிய படம் இது.

வழுக்கைத் தலையோடு வாழும் ஒருவர், தன் வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ய முனைகிறார். அந்தப் பயணத்தில் அவருக்கு ஏற்படும் தயக்கம், அவமானம், தோல்வி, பயம், ஏக்கம் என உருவகேலிக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் பார்வையிலிருந்து விரிகிறது ‘தமாஷா’ (Thamaasha). சமூகம் திருமணத்துக்கான அளவுகோலாகத் தோற்றத்தை முன்வைக்கிறது. அந்த அளவுகோலைக் கேள்விகேட்கிறது, அறிமுக இயக்குநர் அஷ்ரஃப் அம்ஸாவின் இந்த சிம்பிளான சினிமா.

‘இல்லாமல் ஆகப்போகிறோம்’ என்பது எத்தனை கொடுமையானது. கூடவே அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டால் வாழ்வின் மீதான பிடிப்பு கரையத்தொடங்கிவிடும். இப்படிப்பட்டதொரு உணர்வைப் பிசிர் தட்டாமல் அப்படியே நமக்குக் கடத்திய படம்தான் ‘லூகா’ (Luca). அறிமுக இயக்குநர் அருண் போஸ் அப்படி ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

கேரளாவைத் தாக்கிய நிபா வைரஸை மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட தாக்குதலை கேரளாவும் அதன் மக்களும் அங்கிருக்கிற மருத்துவர்களும் அரசும் எதிர்கொண்ட விதத்தை ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தது ஆசிக் அபு இயக்கிய `வைரஸ்.’

மக்களவைத் தேர்தல் பணிக்காக, மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கரின் வாக்குச்சாவடி ஒன்றுக்கு, கேரளத்திலிருந்து புறப்படுகிறது ஒரு காவலர் டீம். ஓர் இரவில் மாவோயிஸ்டுகள் தாக்குவதாகக் கருதி, கன்னாபின்னாவென்று இருட்டை நோக்கிச் சுட்டுத்தள்ளுகிறது. வெறும் எட்டு புல்லட்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. உள்ளூர் போலீஸும் கைவிரிக்க, கேரளத்தில் இருந்து புல்லட்டுகளைக் கொண்டுவரும் முயற்சியும் வேறு திசை நோக்கிப் போகிறது. மம்மூட்டி தலைமையிலான ஒரு சின்ன போலீஸ் குழு எப்படித் தேர்தல் நாள்களை எதிர்கொள்கிறது என்பதுதான் ‘உண்டா’ (Unda). இயக்குநர் காலித் ரஹ்மான் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்த திரைப்படைப்பு.

2019-ல் மட்டுமல்ல, 2018-ல் வெளியான பயானகம், ஞான் பிரகாஷன், சுடானி ஃப்ரம் நைஜீரியா, பூமரம், ஜோசப், ஈ.மா.யாவூ, கார்பன், ஃப்ரீடம் அட் மிட்நைட் என மிகச்சிறந்த இரண்டு டஜன் படங்களை இப்படிப் பட்டியலிட முடியும்.

நாம் குறிப்பிட்டுள்ள படங்களில் பலவும் அறிமுக இயக்குநர்களின் படைப்புகள். அனைத்துமே விதவிதமான திரைக்கதை எழுத்தாளர்களின் தனிப்பங்களிப்பு கொண்டவை. ஒவ்வொன்றும் கேரளாவின் வெவ்வேறு ஊர்களை, அதன் மக்களை, மொழியை உள்ளபடியே பதிவு செய்த படங்கள். உன்னி.ஆர், ரத்திஷ் ரவி, ஹர்ஷத், சஞ்சீவ் பளூர், ஷாகி கபீர், அபிலாஷ்.என்.சந்திரன் என ஏகப்பட்ட திரைக்கதை எழுத்தாளர்கள் மலையாள சினிமாவின் முகத்தையே தங்களுடைய நேர்மையான எழுத்துகளால் மாற்றத்தொடங்கிவிட்டனர். மலையாள சினிமாவும் இந்த எழுத்தாளர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. இயக்குநருக்கு இணையாக எழுத்தாளர்கள் கொண்டாடப் படுகிறார்கள்.

‘‘திரைக்கதைதான் இன்றைய மலையாள சினிமாவின் நட்சத்திரம். அதுதான் தயாரிப்பாளர்களை வாழவைக்கிற ஒன்றாக மாறியிருக்கிறது’’ என்கிறார், `ஒட்டாள்’, `பயானகம்’ ஆகிய படங்களின் இயக்குநர் ஜெயராஜ்.

மகேஷிண்டெ பிரதிகாரத்தில் இடுக்கி, ஈடாவில் கன்னூர், சுடானி ஃப்ரம் நைஜீரியாவில் மலப்புரம், கும்பளங்கி நைட்ஸில் கொச்சிக்கு அருகில் உள்ள சிறிய தீவான கும்பளங்கி என அதிகமும் பதிவு செய்யப்படாத இடங்களின், மண்ணின் கதைகளை இந்த எழுத்தாளர்கள் பதிவு செய்கிறார்கள். கேரளம் தவிர்த்த வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு பார்வையாளர் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ள படங்களைக் காணநேர்ந்தால், அவரால் கேரளத்தின் சமகால சமூக - அரசியல் - வாழ்வியல் சூழலை நிச்சயம் உள்வாங்கிக்கொள்ள முடியும்.

எழுத்தாளர்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்ட மலையாள சினிமாவின் இந்த மாற்றங்கள் மலையாளத் திரைப்படங்களுக்குக் கேரளாவைத் தாண்டிய அங்கீகாரத்தையும் பெற்றுத்தர ஆரம்பித்திருக்கின்றன. உயரே, உண்டா, வைரஸ், கும்பளங்கி நைட்ஸ் மாதிரி படங்கள் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெறுவதோடு, தியேட்டரிலும் வசூலைக் குவிக்கின்றன.

அடுத்து `மூத்தோன்’, ‘ஜல்லிக்கட்டு’, `வெயில்மரங்கள்’ என அடுத்த செட் படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. எல்லாமே ஏற்கெனவே திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெறத்தொடங்கியவை. ஆனால் எல்லாமே எல்லோருக்குமான ஜனரஞ்சகப்படங்கள்!

கலிலுல்லா ச