(செருப்ப மறந்ததுக்குக் கூட எப்படி சாமி இம்புட்டு ஆழ அகலமா உறைய வைக்கிற கவித எழுதுறீங்க )
அணிய மறந்த செருப்புக்காக
ஐந்தாம் தளத்திற்கு யார் மீள்வார்கள்?
கால்களில் ஏது வெற்றுக் கால்கள்?
காலத்தில் உண்டா வெற்றுக் காலம்?
தன்னைத் தழுவி நடக்கும் பாதம்
தரைக்குப் பிடிக்காது எப்படிப் போகும்?
பாதம் புழுதியில் பதியப் பதிய,
மேலே வந்து வேர்கள் தொட்டன.
நீர் மோதிற்று, தீ ஓதிற்று.
நெடிது உறங்கிய தொன்ம விதைகள்
பார் பார் என்று நிலத்தைக் கீறி
பசிய முதலிலை இரண்டையும் விரித்தன.
மண் புழு எல்லாம் துளைத்துச் சாடி
மழை மழை என்று பாடி வந்தன.
புதைக்கப்பட்டவர், அழிக்கப்பட்டவர்,
பூவைப் போலத் தானாய் உதிர்ந்தவர்
எலும்புகள் எல்லாம் தன் வரலாற்றை
எழுந்துவந்து சொல்லத் தொடங்கின.
செப்படி வித்தை போல் நிகழும் இவற்றின்
சிலிர்ப்பை உணர்ந்த செருப்பறு கால்கள்
முப்பது நிமிட நடையை எப்படி
முடிப்பது என்று தெரியா நின்றன.
-வண்ணதாசன்