27/10/2020

மகுடேசுவரன்

சாலையோரத்தில் 
கரும்புச் சாற்றுக் கடை 
போட்டிருக்கிறார் 
பள்ளி ஆசிரியர். 

பத்து ஏக்கர் 
புன்செய் இருந்தும் பயனின்றி 
மண்வெட்டியாளாகக் 
கட்டுமானப் பணிக்குச் 
செல்கிறார் 
புளியம்பட்டிக்காரர். 

சொந்த வீட்டை 
விற்றுவிட்டு 
ஒற்றிக்கு 
வீடு பார்க்கிறார் 
நண்பர்.

தொடர்ந்து 
வேலை கிடைக்காததால் 
கறிக்கடைக்குப் போகும் அவர் 
நல்ல தையற்காரர். 

தவணைக்கு வாங்கிய 
நிலைப்பேழையைத் 
திருப்பி எடுத்துக்கொள்ளச்  
சொல்கிறார் 
அண்டைவீட்டார். 

“எல்லாவற்றையும் 
பரப்பி வைத்திருக்கிறேன். 
எப்படி எப்போது மீளுமென்று  
தெரியவில்லை” என்கிறார் 
தொழில்வல்லார். 

பலரும் தத்தம் 
வாழ்க்கைத் தகுதிகளிலிருந்து 
பல படிகள் 
இறங்கி நிற்கிறார்கள். 

இப்போதைக்கு 
மூச்சு விட்டுக்கொண்டிருந்தாலாவது 
பின்னொருநாள் 
மீண்டுவிடலாம் என்ற 
நம்பிக்கையைத் தவிர 
அவர்களிடம் வேறில்லை..

மகுடேஸ்வரன்..