24/07/2020

வேள்பாரி

24.07.2020
*நூல்வழிச்சாலை*

*மைல்கல் - 157* 

வீரயுக நாயகன் வேள்பாரி*-2

எழுதியவர்-
சு. வெங்கடேசன்

*நீங்கள் யார்*?

*கபிலர்*

*அது உங்கள் பெயர்*
*நீங்கள் யார்*?

*நான் புலவன்*

*பாடல்கள் பாடும் பாணரா*?

*இல்லை. நான் கவிதைகள் எழுதும் புலவன்*

*கவிதை என்றால்*?

*ஓவியம் பார்த்திருக்கியா*?

*ஆம்! பார்த்திருக்கிறேன்*

*ஒலியை ஓவியமாக வரைவது கவிதை*

*நன்றி கபிலரே! புரிந்தது*

இப்படி கபிலரோடு நீலன் என்ற குலத்தலைவன் செய்யும் உரையாடலோடு பறம்பு மலையின் ஒரு நுழைவான "வேட்டுவன் பாறை" என்ற இடத்தில் இருந்து நம்மையும் மலை நோக்கி காட்டில் அழைத்துச் செல்வதாக இந்த அற்புதமான வரலாற்றுப் புதினம் தொடங்குகிறது. 

இந்த உரையாடல் போல நாவல் முழுவதும் ஒருவருக்கொருவர் பேசும் மொழி, கருத்துக்கள் தமிழின் சுவையை கூட்டி உணரத்தக்கதாக அமைந்துள்ளது இந்த நாவலின் தனிப்பெரும் சிறப்பு. 

சென்ற பதிவில் கண்டவாறு உண்மைக் கதைக்கு சற்றும் பங்கம் வராதவாறு பல கிளைக்கதைகள், முருகன்-வள்ளி காதல், காடுகளில் பொதிந்துள்ள ரகசியங்கள், வித்தியாசமான விலங்கினங்கள், விதவிதமான பறவைகள், அவற்றின் சிறப்புகளை கதையில் உபயோகப்படுத்திய திறமை, போர் குறித்த வழிமுறைகள், காடுகளில் வசித்த மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கை, கொற்றவை வழிபாடு என பல விடயங்கள் நம்மை கனவிலும் துரத்தும் சாகசங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கதையை மீண்டும் ஒருமுறை பதிவு செய்வதை விட சிறப்பம்சங்களை மேற்கோளிட்டு உங்கள் முன் கொண்டு நிறுத்துவது உங்களுக்கு விருந்தாக அமையும் என்பது நமது கருத்து. 
உடனே, புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

*வித்தியாசமான பார்வை*

1. ஐவகை நிலங்களில் இயற்கையோடு இயைந்த வாழ்வு, தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பும் விளைச்சலும் பொதுச்சொத்து.
 எல்லா மனிதனும் சரிநிகர்! ஆண் பெண் இரு பாலின பிரிவு மட்டுமே. கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பின் பிரதிபலிப்பு. 
வேள்பாரி காலத்தில் வாழ்ந்த ஐவகை நில மக்களின் வாழ்க்கை முறையை இப்படி முறைப்படுத்துகிறார், ஆசிரியர்.

2. மக்களுக்கு பெருஞ்செல்வம் கால்நடைகளே! என்ற வரி உண்மையை உரைக்கிறது!

3. இயல்பு தான் ஒன்றின் குணத்தை தீர்மானிக்கின்றது, எந்த உயிரினத்துக்கும் இது பொருந்துகிறது! - என்பது உளவியல் கோட்பாடாக உணர்த்துகிறது.

4.  *வணிகமே வரலாற்றின் போக்கை தீர்மானிக்கிறது* என்ற வரிகள் உண்மையை உரக்க கூறுகிறது.

5. அறியாமை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அறிந்தவன் புத்திசாலி ஆகிறான்.

6. ஒரு மனிதனின் முகத்தை மற்றும் சொல்லைக் கண்டு கணிக்க முடியாதது எதுவுமில்லை!
(Face reading ?!)

7. நாடு என்பது அரசும் அரச நியதியும் தான் என்பதை மாற்றி, நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதி நிலம் என்பதை பாரி நிலை நிறுத்தினான் என்று ஆசிரியர் தன் பார்வையை நிலை நிறுத்துகிறார்.

8. *எது ஒன்றையும் தேவையாக மாற்றுவதுதான் வணிகம்*. *வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது அதை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை*!

9. *ஆறாத் துயரை கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணை கூற சொல்லில்லை*! (தங்கள் குல மக்கள் அழிக்கப்பட்ட பின்னணியை பாடலாக்கி *கொற்றவை* விழாவில் குலமகன் ஒருவன் நடத்தும் கூத்தின் பின்புலமாக பதிவிட்ட வரிகள் மேற்கண்டவை!

10. போர் தெய்வம் *கொற்றவையாக* வணங்கப்பட்டது பழந்தமிழர் வாழ்வில்!

11. மூவேந்தர்கள் அழித்த குலங்களின் எண்ணிக்கை16.

12. *வலியையும் வேதனைகளையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒரு விதமான கலை தான்*.

13. பாண்டிய பேரரசின் 10 பெரிய அடையாளங்கள்.
மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, முரசு, கொடி, ஆணை.

14. எட்டு வகையான இன்பங்கள் இருப்பதாக ஓரிடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார் அவை
ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம்.

15. *ஆசையின் வழியே பயணப்பட கூடாது*. *அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும்*! இயற்கை ஆசைக்கான பொருளன்று!

16. ஆபத்து வரும்போது அதனை எதிர்கொள்ளும் இடத்தில் ஒருவன் இருப்பதுதான், வீரம் அவனுக்கு வழங்கும் வாய்ப்பு! அதனை வெற்றியாக முடிக்கவே ஒவ்வொருவனும் ஆசைப்படுகிறான்.

17. போர் ஒன்று நடக்கும் சமயத்தில் பாரி இயற்கையாக கிடைக்கும் முட்களை கொண்டும், விஷம் மிகுந்த பாம்பையும் கொண்டு ஆயுதம் தயாரிக்கும் ஒரு நிகழ்வு மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது.
பாரி ஒரு மிகச்சிறந்த மேனேஜ்மென்ட் குரு என கூறும் அளவிற்கான செயல்களை அந்நேரத்தில் செய்வான்.

*முள் ஒடித்து வருவதற்குள் கொம்பேறிமூக்கன் பாம்பை பிடித்து வா என்று ஆணை பிறப்பின் மூலம் இரு குழுவினரையும் துரிதப்படுத்தும் செயல் நிர்வாக பாடமாகும்*
நூலை படிக்கும் போது இந்த நிகழ்வுகள் மிகுந்த விறுவிறுப்புடன் சுவையுடன் அமைக்கப் பெற்றிருக்கும்.

18. *பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும்*. *பகை மட்டுமே மூட்டியவனால் கூட அணைக்க முடியாத பெருநெருப்பு*.

19. வலிமையை விட நுட்பமே ஆற்றல் வாய்ந்தது என்பதை காலம் மீண்டும் மீண்டும் சொல்லித்தருகிறது இன்றளவும்!

20. உயிரினங்களில் அதிக நினைவாற்றலுடன் இருப்பது யானை

21. *விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது*. 
மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அறிவுரையாக நான் இதை கருதுகிறேன்.

22. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது.

23. *இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்*.

24. *வளைய மறுக்கும் கிளை ஒடிந்து விடும்*. *வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தளைப்பதுதான்  இயற்கையின் அமைப்பு*!

25. தேவாங்கு எனும் விலங்கு வேளிர் பழங்குடியினரின் தெய்வ வாக்கு விலங்கு! கொற்றவையின் குழந்தையாக கருதப்படும் முக்கியமான உயிரினம்.

26. இந்த தேவாங்கு எனும் விலங்கு நான்கு திசைகளிலும் மெல்ல நடக்கும். ஆனால் உட்காரும்போது வடதிசை நோக்கி மட்டுமே உட்காரும் என்பது இதன் சிறப்பு. 

27. *வீரமும் வலிமையும் சிந்தனையில் தான் உள்ளது*.

28. யானை தாக்குதலில் 14 வகை இருக்கிறதாம். போரில் இவை பயன்படுத்தப்படுகிறது.

29. போரில் 20 வகை வாள்கள், எட்டு வகை வேல்கள், மூன்று வகை குறுவாள், மூன்று வகைத் தண்டங்கள், மூன்றுவகை கேடயங்கள் சங்ககாலத்தில் உபயோகப்படுத்தப்பட்டன.

30. *புதிய ஒன்று கிடைக்கிறது என்ற மகிழ்வு ஆற்றலை பல மடங்கு பெருக்கும்*.

31. குதிரைகளின் குளம்புகள் லாடம் கட்டுவது என்பது தொன்றுதொட்டு இருந்து வருவது. ஆனால் பாரி தன் காடுகளில் வளர்க்கும் குதிரைகளுக்கு அதன் குழம்புகளில் செம்பு களிமண் பூச்சு பூசி உபயோகப்படுத்தினார். இதனால் குதிரைகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் அதேசமயம் குளம்புகளுக்கு மிகுந்த ஆற்றலையும் அளிக்க வல்லது இந்த பூச்சு!

32. பறம்பு மலையின் தனித்துவமான ஆயுதம் மூவிலைவேல்.

33. போரில் ஈடுபடும் ஆண் குதிரை சிறுநீர் வரும்போது அதை கழிக்க உடனே நின்று விடும்! இது போர்க்களத்திலும் கூட நடக்குமாம். 

34. பாரி பெண் குதிரைகளை அதிகம் போரில் உபயோகிப்பார்.

35. *வீசிச் சென்ற வாள் காற்றில் தனது தடத்தை விட்டுவைப்பதில்லை*! அதேபோலத்தான் வீரனின் நினைவுகள் போர்க்களத்தில் தங்கக்கூடாது.

36. எரிந்து மறைதலும் ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு! இருளை விலக்கத்தான் முடியும், அழிக்க முடியாது.
 ஒளி கண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்!

மிகவும் பிடித்த வரிகளை வரிசைப் படுத்தினேன்.

காடுகளின் ரகசியங்களை அடுத்த பதிவில் அறிய முற்படுவோம்.

அன்புடன்
நாகா
24.07.2020

Facebook: Nagachandran