வேண்டுதல்
மேற்கூரையில் அமர்ந்து
விடியலைக் கூவியெழுப்பும் சேவல்
குப்பைமேடு கிளறி
ஒழுங்கீனம் செய்கிறது
குடிசைக்குள் ஊடுருவும்
ஊர்வன ஜந்துக்களை
விரட்டிக் கொல்கிறது
மும்மாரி பொழிந்து
பட்டி பெருக
அம்மனுக்குத் தாத்தா நேர்ந்துவிட்ட
சேவல் அது.
மழை இல்லாமல்
விளைநிலங்கள் வெடிப்பதைக்
காணச் சகிக்காமல்
மாரடைப்பில் உயிர்நீத்தார் தாத்தா
வீட்டின் தாழ்வாரத்தில் செருகிய
சேவல் இறகு மட்டும் மிச்சமாய்...
- முகில் முருகேசன்