28/06/2018

இளங்கோவன்

கைக்குழந்தைகளுக்கு
சோறூட்டுகையில்
பூச்சாண்டியாகவும்,

குட்டிகளை வைத்து
ரவுண்டடிக்கும்போது
சைக்கிள் தாத்தாவாகவும்,

இரண்டு மகள்களைப்
படிக்க வைத்து, பின்
கட்டிக்கொடுத்த
பொறுப்பான தகப்பன் சாமியாகவும்,

மெதுவாகத் தோள்தொட்டு
நல்லாயிருக்கீங்களா தம்பி
எனும்போது மதிப்பிற்குரிய பெரியவராகவும்,

யாருடைய பிள்ளைகளுக்கோ
கல்விக் கட்டணம் செலுத்த,
யார் வீட்டு வாசலிலோ
தவங்கிடக்கையில் கடவுளாகவும்,

ஓடாத மில்லின் சக
தொழிலாளர்களுக்கு
நீதி கேட்டுப் போராடும்
மாதாந்திரச் சடங்கில்
தோழர் பாத்திரத்திலும்,

அழகாகப் பொருத்திவிட முடியும்
அருணகிரி அய்யாவை...

இடுப்பில் நிற்காத கால்சட்டையை
பெல்ட் போட்டு இறுக்கி,
ஒரு பக்கமாய்ச் சரியும்
தொப்பியைப் பதறியபடி சரிசெய்து,
அப்பார்ட்மெண்ட் செகரெட்டரிக்கு
வளைந்து, வலிந்து வணக்கம்
வைக்கும்போது மட்டும்,
ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை
ஆஃபீஸ் செக்யூரிட்டியாக மட்டும்.  (இளங்கோவன்)