10/06/2020

சு.செங்குட்டுவன்

"குறையொன்றுமில்லை

வழக்கம்போல் இம்முறையும் 
வானம் பொய்த்திருக்கும்

இருக்கும் தண்ணிக்கு 
வெச்சுள்ள கத்திரியில்
இலைச்சுருட்டு விழுந்திருக்கும்

நிலவள வங்கியின் 
நகை ஏல அறிவிப்பு 
தபால்கார்டில் வந்துசேரும்

காதுகுத்தும் பிள்ளைக்கு 
தோடு போட வேண்டுமென 
இளையதங்கை சொல்லிப் போவாள்

முகங்கண்ட மறுகணமே 
அம்மாவென குரலெழுப்பும் 
காளைகளை விற்றுவிட்டு
ஊர் திரும்புவாய்

நீ விரும்பிய பெண்
தான் விரும்பும் புருஷனுடன் 
பஸ் ஸ்டான்டில் எதிர்ப்படுவாள்

திரும்பி நிற்கும் உன்னிடத்தே 
வலியவந்து உரையாடி 
செளக்கியமா எனக் கேட்பாள்

நல்ல செளக்கியம் என்று சொல்."

- சு. வெங்குட்டுவன் கவிதைகள் ❤️