நானும் சிறு வயதிலேயே அனாதை ஆனவன்.தெருவில் நிற்க வைத்து குடும்பத்தினர் பிரிந்து சென்றார்கள்.ஒரு சிறிய சஞ்சலம் கூட ஏற்படாமல் எப்படி கழன்றார்கள் எப்படி இயன்றது ? என்கிற கேள்விகள் இப்போதுவரையில் எனக்கிருக்கிறது.மோசமான எந்திரத்தில் பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்தம்.மனதிற்கு ஒவ்வாத வேலை.சாப்ளினின் மாடர்ன் டைம்ஸை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். பயிற்சிக்காக கடலூருக்குச் சென்ற போது சுந்தர ராமசாமி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.இப்போதுதான் நீங்கள் அதிகமான கவிதைகளை படிக்க வேண்டும் என்கிற வரி அந்த கடிதத்தில் இருந்தது.இப்போதுவரையில் என்னைக் காப்பவை கவிதையும் இலக்கியமும்.அனைத்து சோர்வுகளையும் தாண்டவும் நம்பிக்கை பெறவும் அவையே உதவுகின்றன.
வாழ்வில் பற்றி கொள்வதற்கென்று கலங்காத நியதிகள் தேவை. பதவி பணம் என எதிலும் கலங்காத நியதிகள். குறுகிய காலத்தில் அகன்று விடாத பற்றுகள் நமக்கு சோர்வுண்டாக்குவதில்லை. கலைகள், இலக்கியம், சேவைகள், கவிதை, காதல், காதலென்றால் எப்போதும் நிரம்பி வழியும் காதல் என உறுதியானவற்றை பற்றிக் கொள்ள தெரிய வேண்டும். மன்னித்தல் மீண்டும் மீண்டும் மன்னித்துக் கொண்டேயிருத்தல். ஏதேனும் சேவையை எதிர்பார்ப்பின்றி இயல்பாக கைக்கொண்டிருத்தல் இவையெல்லாம் காப்பாற்றும். தடுமாறி விழுந்தாலும் காப்பாற்றும்.
- லக்ஷ்மி மணிவண்ணன்