முன்முடிவு
*******
முழம்போட்ட மல்லிகையை நீளம்விட்டு நறுக்கும் பூக்காரி
நல்லவளாகத் தெரிகிறாள்
உணவு மேசையில் கேட்காமல் உபரியாய்ப் பரிமாறும் சிப்பந்தி
நல்லவனாகத் தெரிகிறான்
எதிர்ப்படுகையில் சிரிப்பவர்களும்
எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறவர்களும்
நல்லவர்களாகத் தெரிகிறார்கள்
நாமும் இன்னொருவருக்கு நல்லவராகத் தெரிய விரும்புகிறோம்
நல்லது என்பது தெரிவதில் இல்லை
தெரியாததிலும் உண்டு என்பது நமக்குத் தெரியாது.
- யுகபாரதி