13/04/2021

சு.வெங்குட்டவன்

கையில் புல்லாங்குழல் இல்லை. தலைமீது தங்கக்கிரீடம் இல்லை. அதன் மீதிலே மயிற்பீலியுமில்லை. பதிலாக, விரலிடுக்கினில்  பத்தாம்நம்பர் பீடி புகைந்துகொண்டிருந்தது.  கை பற்றும் சமீபத்தில் ஒன்யூஸ் டம்ளரும் உள்நிறைந்த மானிட்டர் பிராந்தியும் இருந்தது.

ஆனாலும் அவனொரு கிருஷ்ணன். பிறகு என் கிருஷ்ணன் கூறினான். 'உனக்கு வேண்டுமானால் இந்த வாழ்வு சலித்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த உலகம் வெறுத்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த இருப்பு அர்த்தமற்றுப் போயிருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் எனக்கொன்றுமில்லை. 

நான் வரும் வழியில் ஒரு மாடு கன்று ஈன்றுகொண்டிருந்தது. ஒரு பன்றிக்குட்டி அதன் தாய்மடியில் அவ்வளவு ஆனந்தமாக பாலூட்டியபடியிருந்தது. வேலிக்காத்தானின் விதையொன்று அவ்வளவு பச்சையாக முளைத்திருந்தது. 

அந்த மாடும் கன்றும் இயற்கையின் படைப்பு. அந்தப் பன்றிக்குட்டியும் அதன் தாய்மடியும் இயற்கையின் படைப்பு. வேலிக்காத்தான் விதையும்,  அதன் முளைப்பும் பச்சையும் இயற்கையின் படைப்பு. 

ஏ... வெறுத்துப் போனவனே... ஏ.. சலித்துப் போனவனே.. உனக்கு வேண்டுமானால் இந்த இருப்பு வெறுத்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த வாழ்வு சலித்துப் போயிருக்கலாம். ஆனால், உனைப் படைத்த இயற்கைக்கு  சலிப்பில்லை. சலிப்பென்பதேயில்லை. உனைப் படைத்த இயற்கைக்கு வெறுப்பில்லை. வெறுப்பென்பதேயில்லை. அது தொடர்ந்து படைத்துக்கொண்டுதான் இருக்கிறது... மாட்டுக்கன்றை. பன்றிக்குட்டியை... வேலிக்காத்தானை... மேலும்மேலும் படைத்தபடியேதான் இருக்கவும்போகிறது மாட்டுக்கன்றை... பன்றிக்குட்டியை... வேலிக்காத்தானை...

ஓ.. உதறிவிடத் துடிப்பவனே... ஓ.. விலகிச்செல்லத் துடிப்பவனே...   உண்மையை உணர்ந்துகொள். உதறிவிட்டால் விலகிவிடும் என்பதைப் போன்ற அறியாமை வேறெதுவுமில்லை.

மேலுமொரு உண்மையையும் உணர்ந்துகொள். இதுவே ஞானம். இதுவே மோட்சம். இதுவே  வழி. இதுவே தடம். இதுவே பாதை.

சந்தோசமாயிருப்பதை தவிர வேறு வழியில்லை.'

_சு.வெங்குட்டவன்