31/05/2021

எஸ்.ரா

ஊர் சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா, இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா?

நான் சுற்றுலாபயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலைக்கூட யமுனையின் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல் வெளிகளின் பின்னிருந்துதான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்கக் கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. இன்னும் சொல்வதானால் குறிப்பாக எந்த ஊருக்குப் போகப் போகிறேன் என்ற திட்டம் கூடக் கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகை ஓவியங்களைக் கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்படத் தயராகத்தானிருக்கிறது. ஒரேயொறு வேறுபாடு, பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர் சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டு விட்டிருக்கிறது.

பேட்டி: எஸ்.ராமகிருஷ்ணன் 

நன்றி: தீராநதி