31/05/2021

வேள்பாரி

வேள்பாரி

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவேள் அருவி கல்கலைத் தொழுகும்
பறம்பிற் கோமான் பாரியும்;

-பெருஞ்சித்திரனார் (புறநானூறு 158; 1-4)


மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது.

-வேள்பாரி

எங்களின் பாதங்கள் மண்ணைப் பிடித்து நடந்து பழகியவை. சமவெளியில் வாழும் உங்களின் பாதங்கள் மண்ணில் தேய்த்து நடந்து பழகியவை. பாதடியைக் கழட்டிவிட்டுப் பாதத்தை முன்னெடுத்து வையுங்கள். பற்களைப்போல விரல்களுக்கும் கவ்விப்பிடிக்கத் தெரியும்.

-வேள்பாரி

“பாரி அரசன் அல்ல… வேளீர் குலத் தலைவன். நாட்டை ஆள்வதைப்போல காடும் ஆளப்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள். காட்டை யாராலும் ஆளமுடியாது. சின்னஞ்சிறு மனிதனால் என்ன செய்ய முடியும்? பகை, துரோகம், வீரம், சாவு, அவ்வளவுதான்.

-வேள்பாரி

இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது.

-வேள்பாரி

எல்லோரும் அதிகம் புகழப்படும் ஓர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும். யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர்.

-வேள்பாரி

*தேங்கள்*

தேனில் இருந்து தயாரித்து, மூங்கில் குழாயில் இட்டு நன்கு புளிக்கவைத்த முற்றிய கள்.

ஒரு குப்பி கள் பல நேரம் வரலாற்றையே மாற்றியிருக்கிறது.

-வேள்பாரி

வள்ளல் தன்மை என்பது நிர்வாகத்திறமை  அல்ல. அது குழந்தையின் அழுகுரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.

-வேள்பாரி

காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்.

மனிதனால் காதலை அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதரை அழைத்துவரும்.

-வேள்பாரி

ஊரின் மூத்த ஆண் 'பழையன்'
மூத்த பெண் 'பழைச்சி'

பழையனிடம் உன் வயது என்ன? என்ற கேள்வியை கபிலர் கேட்டார்...

97 வயது என பழையன் கூறினார்.

கபிலர் 'எப்படி துள்ளியமாக சொல்கிறீர்'

பழையன் "மேல்மலையில் இருக்கும் குறிஞ்சிச் செடியில் இரண்டாவது கணுவில் பூப்பூத்திருக்கும் போது, நான் பிறந்ததாக என் தாய் சொன்னாள். கடந்த ஆண்டு அந்தச் செடியில் பத்தாவது கணுவில் பூப்பூத்திருந்தது" என்றார்.

-வேள்பாரி

தீமையை கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு  உண்டு. வார்த்தை தரும் ஆற்றலை வேறு எதுவும் தருவதில்லை. மனிதன் முதிரும் போதுதான் மனங்களை கையாளக் கற்றுக்கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழவைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்து கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் மிக முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்ய முடியும்.

-வேள்பாரி

வார்த்தைகள் முதுகுத்தண்டை முறுக்கேற்றும் வல்லமை கொண்டவை.

-வேள்பாரி

அறியாமை ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகள்; அறிந்தவர்களுக்கு கிடைக்காது.

-வேள்பாரி

நம்பிய பிறகு ஒருவனை ஐயங்கொள்வது எளிதல்ல.

-வேள்பாரி

நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்.

அதிகாரம் உயிர் பெறாத இடத்தில் அன்பு மட்டுமே தழைத்திருக்கும்.

-வேள்பாரி

குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும் போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.

-வேள்பாரி

ஆறாத் துயரைக் கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணை கூறச் சொல்லில்லை.

-வேள்பாரி

பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது.

-வேள்பாரி

எதுவொன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம். வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது.

-வேள்பாரி

தாழை மலர்

தாழை மலரில் பெண் பூ, ஆண் பூவென இருவகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஆண் பூவின் இதழ்களை ஆடைகளுக்குள் போட்டுவைத்தால், சிறு பூச்சிகள் ஆடைக்குள் நுழையாது. அது மட்டுமல்ல; நல்ல மணமூட்டியாகவும் அது இருக்கும்.

-வேள்பாரி

சொல் சுடும் போது சொல்லைச் சுடுவான் புலவன்.

-வேள்பாரி

ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.

-வேள்பாரி

ஒரே நேரத்தில் மண்ணுக்குள் வேர்விடவும் மேல்நோக்கி முளைவிடவும் தாவரங்களால் முடிவதைப் போல...

-வேள்பாரி

உரத்துச் சொல்லப்படுவதைவிடக் காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம்.

-வேள்பாரி

காதல் சொல்லால்தான் மலர்கிறது.

ஆணின் கண்கள் காதல் கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல.

தொடுதலின் மூலம் ஆயிரம் விழிகள் உள்ளுக்குள் விழித்து அடங்குகின்றன.

-வேள்பாரி

பெருங்காட்டைச் சிறு பூவொன்று காதல் கொள்வதைப் போல...

-வேள்பாரி

நிலத்தை உழவேண்டும். அதற்குமுன் உழும் நிலத்தை உணர வேண்டும்.

-வேள்பாரி

தீயவர்களின் வீழ்ச்சி மகிழ்வை கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சியோ துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும்.

-வேள்பாரி

நாடோடி நாகரிகம் எல்லா உயிர்களையும் தனதாக்கி நேசித்தது.

-வேள்பாரி

காதலின் கூர்மிகு ஆயுதம் நீர்சுரக்கும் நுனிநாக்கு.

-வேள்பாரி

உரசி நகரும் கிடை வாழ்க்கை எந்நேரமும் காதலைப் பற்றவைத்த படியே இருந்தது. கடையப்பட்ட தயிர் மத்தின் விளிம்புகளுக்கு இடையில் விரல் தேய்த்து வெண்ணெய் எடுப்பதைப்போல, திரளத் திரளக் காதலை எடுத்துக்கொண்டே நடந்தனர் செம்பாவும் கோவனும்.

-வேள்பாரி

வாசலில் கோலம் மலர்ந்துவிட்டால், கவலைக் எல்லாம் காற்றாகப் பறந்துபோகும்.

-வேள்பாரி

கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பதைப் போல் மனிதர்களுக்கு கதை.

-வேள்பாரி

ஈட்டியை விசைகொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமை கொண்டிருப்பது சதையால் அன்று கதையால்.

-வேள்பாரி

மனிதன் பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது.

-வேள்பாரி

எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள். ஆளுக்கு ஒன்றாக இருக்கும்.

-வேள்பாரி

கதை சொல்லும் போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.

-வேள்பாரி

செல்வத்தை விஞ்சும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. செல்வத்தின் திளைப்பில் மிதக்கும் கண்களை, அதைவிட அதிகமான செல்வத்தைக் கொட்டுவதன் மூலம் கவனம் பெறவைக்க முடியாது. ஆனால், கலையின் நுணுக்கம் கண்களை அசைவற்று நிறுத்தும்.

-வேள்பாரி

மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.

-வேள்பாரி

அனுபவம் அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது.

-வேள்பாரி

காமத்துக்கு காட்சி வடிவம் கொடுக்க முடியுமா? அது காட்சி வயப்பட்டதன்று, கனவு வயப்பட்டது. பூவின் மலர்தலில் உருவாகும் மணம்போல, மனித மலர்தலில் உள்ளுருகும் நிகழ்வு. கனவைக் கண்கொண்டு பார்க்க நினைப்பது அறியாமை. அது கண்ணுள் பார்க்க வேண்டியது.

-வேள்பாரி

காமம் ஔியால் அல்ல... ஔி ஏற்படுத்தித்தரும் இருளுக்குள்தான் மலரத் தொடங்கும்.

-வேள்பாரி

காண்பவரின் கண்ணுக்குள் கனவை நிகழ்த்துவதுதான் கலை.

-வேள்பாரி

முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.

-வேள்பாரி

மரத்தைத் தெரிந்துகொள்ள மரத்தைப் பார்த்தால் போதும். ஆனால், மரத்தை அறிந்துகொள்ள அதன் வேரைப் பார்க்க வேண்டும்.

-வேள்பாரி

கபிலர், அந்தக் கிளையை நோக்கிச் சென்றார். மயில், கிளையிலிருந்து தாவி மண்ணில் கால் பதித்த இடத்தில் அதன் காலடி படிந்திருந்தது. அதைப்பார்த்தபடி சொன்னார், "மயிலின் காலடியை நொச்சி இலைக்கு உவமை சொல்வர். வெண்ணொச்சி ஐந்து இலைகளை உடையது. மயிலுக்கு முன்பக்கம் மூன்று விரல்கள்தானே, அதனால் கருநொச்சியைத் தான் உவமை சொல்லியிருக்க வேண்டும். அதற்குத்தான் மூன்று இலை."

-வேள்பாரி

விழா என்றால், அறுவகைத் தராசும் தரை தட்டும் ஓசை நிற்காமல் கேட்க வேண்டும். அதுவே திருவிழா என்றால், இந்த அறுவகையோடு சேர்ந்து எழுவகை அளவையும் நில்லாமல் நீள வேண்டும். அதனினும் பெருவிழா என்றால், இந்த இரண்டோடு சேர்த்து எண்வகை இன்பத்தில் நகரம் திளைக்க வேண்டும். இதுவே விழாக்களுக்கு இலக்கணம் கண்டோர் சொன்ன சொல்.

(மாணிக்ககற்களை நிறுத்தும் சிறிய வகை மணித்தராசு, தங்கநகைகளை நிறுத்தும் பொற்தராசு, உலோகங்களை நிறுத்தும் உலோகத்தராசு, பண்டத்தராசு, மரத்தராசு, தூக்குத்தராசு...)
(ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம் என இன்பம் எண்வகை...)

-வேள்பாரி

நெருஞ்சிப் பூவுக்கு இன்னொரு பெயர் ஞாயிறு திரும்பி. கதிரவன் எழுவதிலிருந்து மறைவது வரை அதைப் பார்த்தபடித் திரும்பக்கூடிய விந்தையான மலர். அதனால், இதைக் கதிரவன் மேல் காமம் கொண்ட மலர் என்று சொல்வார்கள்.

-வேள்பாரி

அறிவாலும் குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்க வேண்டிய முடிவைச் சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்.

கையில் எடுப்பவனுக்குத் தகுந்த கையுறைகள்தான் சட்டவிதிகள்.

-வேள்பாரி

முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப்படுத்தி விளையவைக்கவும் முடியாது; பதப்படுத்தி கனியவைக்கவும் முடியாது. அதுதான் இயற்கை.

-வேள்பாரி

இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத்தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி.

-வேள்பாரி

தவறுகளை சிறப்பு என்று நீங்கள் பாராட்டுவதன் காரணம், சிறப்பானவற்றைத் தவறானதாக மாற்றிவைத்திருக்கும் உங்களின் அதிகாரம்தான்.

-வேள்பாரி

காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லாக் கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.

-வேள்பாரி

கூடு என்பது பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்.

-வேள்பாரி


*சென்றிக்கொடி*

காட்டுக்குள் இருக்கும் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், சென்றிக் கொடியைப் பறித்துத் தீக்கற்களால் தீ மூட்டுவார்கள். அந்தக் கொடியில் தீப்பற்றி எரியாது; புகை மட்டுமே வரும். உச்சி நோக்கி விடாமல் மேலெழும் ஊசிப்புகையைப் பார்த்து அவருக்கு உதவி செய்ய மக்கள் போய்விடுவார்கள்.

அருகில் மற்றொரு புகை மேலெழுந்தால், உதவிக்கு ஆள்கள் போய்விட்டார்கள். வேறுயாரும் வரவேண்டியதில்லை என்று பொருள்.

-வேள்பாரி

பசி கண்ணை மறைக்கலாம். ஆனால், கண்ணைக் கெடுத்துவிடக் கூடாது.

-வேள்பாரி

*வெற்றிலை*

வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை. மேலே இருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால் அது பெண் வெற்றிலை.

-வேள்பாரி

கதைகள் ஒருபோதும் முடிவதில்லை.

வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வதுகூட ஒருவிதமான கலைதான்.

-வேள்பாரி


எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால், எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப் போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.

-வேள்பாரி

சனிக்கோள் நிலவுடனும் பிற விண்மீன் கூட்டங்களுடனும் ஒரே அமைப்புக்கு மீண்டும் வந்து சேர முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதனால்தான் நமது முன்னோர்கள் பகலை முப்பது நாழிகையாகவும், இரவை முப்பது நாழிகையாகவும் பகுத்தனர். அதனடிப்படையில் ஒரு நாளை அறுபது நாழிகையாகவும், காலச்சுழற்சியை அறுபது ஆண்டுகளெனவும் வரையறுத்தனர்.

யவணர்கள் வியாழன் கோளை அடிப்படையாக கொண்டு வரையறுத்திருக்கலாம். வியாழன் ஒரு சுழற்சியை முழுமைகொள்ள பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதையே சுழற்சி வட்டமாக கொண்டு பகலை பன்னிரண்டு பகுதிகளாவும், இரவை பன்னிரண்டு பகுதிகளாகவும் பிரித்திருக்கலாம்.

-வேள்பாரி


கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப் போலப் படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத்தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டணையைக் கனவுகளே அளிக்கின்றன.

-வேள்பாரி

எது இலக்கியம், எது காதல், என்பதைப் பிரித்தறிய முடியாது. ஒன்றின் நிழலாக இன்னொன்று இருக்கும். ஆனால், எது நிழல் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

-வேள்பாரி