09/06/2019

மனுஷ்ய புத்திரன்

எப்போதும்
யாராவது இருக்கிறார்கள்
எல்லா இடத்திலும்
யாராவது இருக்கிறார்கள் எப்போது உறங்கினாலும்
யாராவது இருக்கிறார்கள்
எப்போது விழித்தாலும்
யாராவது இருக்கிறார்கள்

நான்
யாராக இருக்கிறேன் என்பது
எனக்கு மறந்து விட்டது

நான் யாராக இருந்தேன்
என்பது எனக்கு மறந்து விட்டது

எங்கும் யாராவது இருக்கிறார்கள்
உற்றுப் பார்த்தபடி
உற்று கேட்டபடி
தனி அறைகளில் பொதுவிடங்களில்..

என் உடலின் பாகங்களை விட கனக்கின்றன
என் மேல் விழும் நிழலின் பாரங்கள்
யாருமே இல்லாத போது பயப்படுவதை விட
அதிகம் அஞ்சுகிறேன்
எப்போதும் யாராவது இருக்கும் இடங்களில்..

நான் என்னைப் பற்றி சிந்திப்பதில்லை
என் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதில்லை
என் ஆசாபாசங்களையும் கனவுகளையும் சிந்திப்பதில்லை
அருகில் யார் இருக்கிறார்களோ
அவர்களே சிந்திக்கிறேன்
அவர்களுக்கு இணக்கமாகி கொள்கிறேன்
அவர்கள் ஜோக்குகளுக்கு சிரிக்கிறேன்
அவர்களின் அபத்தங்களுக்கு தலையாட்டுகிறேன்
எல்லாவற்றையும்
அன்பென்றும்
நட்பென்றும்
சகவாழ்வு என்றும்
சமாதானப்படுத்திக் கொள்கிறேன்..

ஒரு நாளில் ஒரே ஒருமுறை
நான் கேட்பதெல்லாம்
நான் ஆடை மாற்றிக் கொள்கிறேன்
அல்லது
கொஞ்சம் கண்ணீர் சிந்திக் கொள்கிறேன்
சற்றே வெளியே இருக்கிறீர்களா?..

மனுஸ்யபுத்திரன்...