02/06/2019

வனநீலி

ஆம்பள தன்னை எவ்வளவு தான் சண்டியரா காட்டிக்கிட்டாலும்...

சங்கிலிக்கருப்பனா....
சைக்கிள் செயினோட சுத்தினாலும்....

அவனுக்குள்ளயும் ஒரு குழந்தைப்பருவம் இருக்கும்!

ஆத்தா தாலிக்யித்த பிடிச்சிக்கிட்டே பால்குடிச்ச போது.....

பல்லுமுளைச்ச பின்னும் பால்குடியான்னு ,பச்சிலை தடவி பறிக்கப்பட்ட  ஏக்கமோ...!

ஆம்பள அழக்கூடாதுன்னு பத்து வயசிலயே பதுக்கி வச்ச சோகமோ...!

அப்படியே ஆழ்மனதில் தூங்கிக்கிடக்கும்.

ஆளாச்சுருவமா ஆனபின்பு.

பொண்ணு  கல்யாணம்...
புள்ளபடிப்பு..
பொண்டாட்டி சீக்கு...
வட்டிவாசி ...
வயோதிகம் என ஏதேதோ அழுத்த

அவனுக்கும் ஒரு மடியோ...
மார்போ..
தோளோ...
தேவைப்படும்.

அந்த சமயத்தில ,ஆண்பாலைப் பெண்பாலாக்கி...

என்னம்மா..ஏன்டி?

தங்கம்...
செல்லம்...
அப்பு...
பெத்தாரு...என அவரவர் வயதுக்கு ஏதோ ஒன்றை உதிர்க்க...

அந்தச்சொல்லை..
அந்த நேரம் சொன்னவதான் அவன் கோயில் குலசாமி...
ஆத்தா..
அம்பிகை எல்லாம்!

அந்த உறவ,  இந்த ஊரு உலகம் எது என்ன பேருவச்சி அழைச்சாலும்...

வச்சிருக்கான்..
சேத்திக்கிட்டான்...
தோஸ்த்து..
தொடுப்பு..
தோழி...எந்தப்பேரில் யார்  குறைகூறினாலும்...
கண்டுக்காம காத்தில மெதப்பான்!

அது ஒரு போதை!.
மோனநிலை.!

அது காமமல்ல...
காதலல்ல...
கலவியல்ல....
களவும் அல்ல.

இறைநிலை!

இத்தகைய பாசமான விளித்தல்களும்
அனுசரனைகளும் பெண்களுக்குமட்டுமே கிடைக்கின்றது!

எந்த வயதானாலும்.

எந்தக்காதலிலும்!

குழந்தையைப்போல் கொஞ்ச வேண்டும் ,
பார்க்கவேண்டும்,
நடத்தவேண்டும் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் என்றோ ஒரு முறையேனும் ஒருசூழலிலேனும் தோன்றவே தோன்றும்.

அத்தகைய அன்பான அனுசரனையான வார்த்தைகளோ....
அனைப்போ...
தலைகோதலோ...

அவன் வீட்டிலோ...
தோழியரிடமோ...

ஏன் ?

கூடாநட்பில் கூட ஆணுக்கு மறுக்கப்படும்  சின்னஞ்சிறு ஏக்கம்.