04/12/2018

அ.வெண்ணிலா

எட்டாம் வகுப்பு படிக்கையிலேயே
சுமதிக்குக் கல்யாணம் நடந்துடுச்சு

படித்துக்கொண்டே
கோவிலில் குறி சொன்ன
பச்சையம்மா அக்காவுக்கு
பத்தாம் வகுப்பிலேயே கல்யாணம்

இறுதி வகுப்பு முடிந்து
மேல்படிப்புக்குப் போனதே
நாங்க நாலஞ்சி பேர் தான்

அப்பவே சுமதியோட பையன்
எல்.கே. ஜி யில் சேர்ந்துட்டான்

வேலைக்குப் போயும்
இன்னும் ஏன் இப்படியே

பார்வையிலேயே கழுத்தைத்
துழாவுகிறார்கள் தோழிகள்

எனக்கும் ஆகிபோகலாம்
இன்னும் சீக்கிரத்தில்

கணக்குத் தீர்த்துக்
கடந்து போகும் வாழ்க்கை

அடுத்த சந்திப்பில்
அவரவர் முகங்களை
அவரவர் குழந்தைகளில்
தேடிக்கொண்டிருப்போம்.

-அ.வெண்ணிலா