இன்று உன்னை
நீண்ட நேரம்
நினைக்காமல் இருந்து விட்டேன்
அது உன்னை
நீண்டகாலம் பிரிந்திருந்தது போல
மனம் கனத்துவிட்டது
நான் எங்கோ
கூட்டத்தில் வழி தவறிவிட்டது போல
பாதை தெரியாமல் தடுமாறுகிறேன்
நெடுவழி நடந்து
அயர்ந்து தூங்கிவிட்டார் போல
உன்னை சற்றே மறந்திருந்துவிட்டேன்
கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட
பறவைக் குஞ்சு
தன் கூட்டை நினைப்பது போல
நான் உன்னை நினைக்க வில்லை
என்பதை நினைக்கின்றேன்..
சிறுபொழுதுதான் நினைக்காமலிருந்தேன்
பெரும் பிரிவொன்றின்
பரிதவிப்பில்
கண்கள் தளும்புகின்றன
கதவை திற
திரும்ப வந்து விட்டடேன் என்று சொல்லும் போது
சற்று முன் தானே சென்றாய் என்று கேட்கிறாய் சிரித்துக்கொண்டே..
மனுஷ்யபுத்திரன்..