ஒரு தகிக்கும் பகலைக் கடப்பது போலில்லை
ஒரு கைவிடப்பட்ட இரவைக் கடப்பது
ஒரு கசந்த அனுபவத்தைக் கடப்பது போலில்லை
ஒரு பச்சைத் துரோகத்தைக் கடப்பது
ஒரு குளிர்ந்த புன்னகையைக் கடப்பது போலில்லை
ஒரு நிராதரவின் கண்ணீரைக் கடப்பது.
பிழைப்புக்காக புலம்பெயர்ந்த ஒருவனின்
தாபத்தைக் கடப்பது போலில்லை
சுருதி சேர்த்துவிட்டு வாசிக்க இயலாமல் உறங்கும்
துணையைச் சிலாகித்து
நீ எழுதும் வறட்சிமிகு கவிதையைக் கடப்பது.
சுயநலம் மிகைத்த ஒரு வணிகப்பேச்சைக்
கேட்பது போலில்லை
அறவிழுமியங்களின் அரிதாரத்துடன்
கபடநாடகச்சூது மலிந்த உன் உரையைக் கேட்பது.
எல்லோரும் அயோக்கியர்கள்
எவரையும் நம்பாதே என்கிறது வணிகச்சூத்திரம்
மனிதமே புகலிடம், நம்பிக்கையின் மீது
ஒருபோதும் நம்பிக்கை இழக்காதிருங்கள்
என்கிறது ஞானசாஸ்திரம்.
ஒரு ஓநாய்ப்பொழுதில் சாட்சியாகவும்
ஒரு ஸிஹ்ர் மிகையிரவில் கெட்ட ஜின்னாகவும்
ஒரு கார்மேகப்பொழுதில் மீட்சியாகவும்
யாமே இருக்கிறோம் என்கிறான் வழிப்போக்கன்.
- நிஷா மன்சூர்