03/05/2018

சுஜாதா

பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது,

அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது, உயிர் இருந்தது அதனால்தான் நிலைத்தன, வரவேற்பு பெற்றன‌

அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை

நான் ஒரு எழுத்து சுரங்கம், யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது

சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், விஞஞானம், மருத்துவம்,கணிணி முதல் விண்வெளி வரை எல்லா துறையிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது மகா ஆச்சரியம்.

அவரின் தேடல் அப்படி இருந்திருக்கின்றது..

பணத்திற்கு எழுதுவதை விட , மனதில் ஊறும் விஷயங்களை ஆத்ம திருப்திக்கு எழுதுவதே எழுத்தாளன் வாழ்வின் சுதர்மம் என சொல்லி சென்ற அந்த சுஜாதாவின் பிறந்த நாள் இன்று

ஜனரஞ்சகமான, யாரையும் நோகடிக்காத, பூக்களை தூவி மயிலராகால் வருடிவிட்ட சுகத்தை அந்த எழுத்துக்கள் கொடுத்தன‌

செய்யுளோ இலக்கியமோ விஞ்ஞானமோ வரலாறோ அவர் விளக்கியது போல் இன்னொருவர் விளக்க முடியாது

ஒரு தமிழறிஞன் பெரும் விஞ்ஞானி ஆன விந்தை அவர் ஒருவரில்தான் நடந்தது.

மனதிருப்தி கொடுக்கும் எழுத்துக்களின் விலையினை எந்த தொகையும் நிர்ணயிக்காது என்பதே அவரின் வாழ்வு தத்துவம்

மாபெரும் ஆற்றல் இருந்தும் எந்த சர்ச்சையிலும் சிக்காமல், எந்த அரசியல்வாதியிடமும் எலும்புக்கு கையேந்தாமல், அரசியல் ஆதாயத்திற்காக பச்சை பொய்களை எழுதாமல் வாழ்ந்தவர் அவர்

தன்மானமிக்க பிரபல‌ எழுத்தாளன் தமிழகத்தில் காட்டகூடிய மிக சிலரில் அவரும் ஒருவர்.

புரட்சி, முற்போக்கு, பிற்போக்கு,  வயிற்றுபோக்கு, முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், பொறம்போக்கு தத்துவம் என அவர் முகமூடி போட்டு எழுதவில்லை

எது யதார்த்தமோ, எது அறிவுடமையோ அதை எழுதினார்

பத்து தலை ராவணன் எழுத வந்தால் எப்படி இருக்கு? தசாவாதரம் எடுத்து பரம்பொருள் தமிழில் எழுத வந்தால் எப்படி இருக்கும் என காட்டிவிட்டவர் சுஜாதா

எப்பொழுதாவது அபூர்வமாக தமிழகத்தில் பிறக்கும் அறிவாளிகளில் ஒருவரான அவரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறலாம்

சாட்சாத் அந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதன், எழுதவே அவதரித்த நாள் இன்று...

எழுத்தாளர் சுஜாதாவின் சுவையான பதில்கள்

மீண்டும் எல்லோரும் கூட்டுக் குடும்ப முறையை விரும்புவது போல் தோன்றுகிறதே?

= யார் சொன்னது? மெகா தொடர்களை நம்பாதீர்கள். எல்லாமே பொய். கூட்டுக் குடும்ப அமைப்பை ஃப்ளாட்டுக்கள் வந்தபோதே தாரை வார்த்து விட்டோம்!

* உலகில் நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் எது? சந்தோஷப்படும் விஷயம் எது?
= நம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!

* இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து ஜாதி, மதங்கள் இருக்குமா?
= ஆயிரம் ஆண்டுகளில் ஜாதி மதங்கள் வேறு வேஷத்தில் இருக்கும்!

* திடீரென்று ஒரு நாள் இப்போதிருக்கும் இமெயில் கம்பெனிகள் எல்லாம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?
= சம்பிரதாய மெயிலுக்குத் திரும்புவோம். அவர்களும் வேலையை நிறுத்தினால் ஷெர்ஷா காலத்து குதிரை தபாலுக்குச் செல்வோம்!

* கவிதை எழுத பெண்கள் அவசியமா?
= இல்லை. எழுதாமலிருக்க!

* ஒரு வெற்றிகரமான சினிமா எடுக்க என்ன ஃபார்முலா என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?
= ‌தெரிந்து கொண்டேன்- ஃபார்முலா எதுவும் இல்லை என்பதை!

* ஹைக்கூ முதல் ‘யாப்பு’ வரை தெரிந்த நீங்கள் ஏன் கவிதை எழுதுவதில்லை?
= ரசிப்பது, படைப்பது - இரண்டும் ‌வெவ்வேறு விஷயங்கள். நல்ல சமையலை எல்லோரும் ரசிக்கலாம்!

* பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?
= எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்!

* நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்கள் அறிவுரை என்ன?
= ‌இப்போதே பேச விரும்புவதையெல்லாம் பேசி விடுங்கள்!

* உலகில் மிகவும் அத்தியாவசியமான மொழி ஆங்கிலம் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
= அந்தப் பட்டியலில் மெளனம், பார்வை, கணினி மொழிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

* வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?
= நழுவிப் போனதும் தெரிந்து விடும்!

* யார் அழகு? ஆண்களா? பெண்களா?
= ஆண்களுக்கு பெண்கள். பெண்களுக்கு பெண்கள். முக்கியமாக கண்ணாடியில் தெரியும் பெண்!

* எந்த மொழியிலும் இல்லாத சில சொற்கள் தமிழில் புகுந்து வருவது தமிழுக்கு பின்னாளில் பிரச்சனையாகாதா? (உதாரணம்: அசால்ட்)
= உடான்ஸ் கதைகளையெல்லாம் நம்பாதீர்கள். இவ்விஷயத்தில் அசால்டா இருந்தா தப்பில்லை. மனதில் உள்ளதை தெளிவாக கடத்தினால் போதும்!

* ஆண்கள், பெண்கள் - பொய் பேசுவதில் யார் கில்லாடி?
= பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள். அதை சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள்.

* வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பதால் பலன் கிடைக்குமா?
= கிடைக்கும்- விரத சாமான்கள் விற்பவருக்கு!

* கவிஞர்களுக்கு மட்டும் எப்படி கற்பனைகள் விதவிதமாய் வருகின்றன? எவ்வளவு யோசித்தாலும் எனக்கு எந்தக் கற்பனையும் வரமாட்டேன் என்கிறதே, இதை எப்படி வளர்த்துக் கொள்வது?
= கல்யாணராமன், நீங்கள் பாக்கியம் செய்தவர். கற்பனை இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலாக நிம்மதி கிடைக்கும்!

* எந்த நம்பிக்கையில் நாம் இன்னும் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறோம்?
= வேதாளத்தை மரமிறக்கிய விக்ரமாதித்தன் கதையைப் படித்த நம்பிக்கையில்தான்!

* லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
= வழக்‌கொழியும் அபாயத்தில் உள்ள, பாதுகாக்க வேண்டிய உயிரினம்!

* வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்?
= கற்றது போதாது என்பதை!

* கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?
= கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை!

* தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?
= சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது!

* காதலுக்கும் தாடி வளர்ப்பதற்கும் என்ன தொடர்பு?
= காதலைத்தான் வளர்க்க முடியவில்லை, தாடியையாவது வளர்க்கலாமே என்கிற எண்ணம்தான்

இந்த கேள்வி பதில்கள் 'அம்பலம் இணைய இதழ் தொகுப்பு’ நூலிலிருந்து...

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள் இதோ....

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு ‘நைலான் ரதங்கள்’!

* முதல் சிறுகதை 1958-ல் ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. ‘கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்’ என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை ‘இடது ஓரத்தில்’ 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண்பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் பரபரப்பு பெற்றது!

* இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, ‘அம்மாவைப் பார்த்துக்கோ’ என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

* அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

* பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

* பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

* கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

* சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கிக் ஜோக் அது!

இன்று அவரின் பிறந்தநாளன்று பெருமையுடன் நினைவு கூறுவோம் சுஜாதா அவர்களின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று....

நன்றி...
வாழ்க வளமுடன்.