அழகிரி சாமி குறித்து ச.தமிழ்ச்செல்வன்
வர்க்கப் போராட்டத்தை அழகியல் குறையாமல் கலையுணர்ச்சி ததும்பத் தமிழில் எழுதிய முதல் படைப்பாளியும் அழகிரிசாமிதான். அவரது `வெறும் நாய்’ என்கிற கதையே அது. ஒரு பணக்கார டாக்டர் வீட்டில் ஒரு நல்ல ஜாதி நாயை வளர்த்தார். அந்த நாய்க்கும் தெருவில் போகும் ஒரு பேரும் இல்லாத நல்ல ஜாதி நாயாகவும் இல்லாத `வெறும் நாய்’க்கும் பகை. அந்த வெறும் நாய் டாக்டர் வீட்டுக் கேட்டுக்கு முன்னால் ரோட்டில் போனாலே இந்தப் பணக்கார நாய் பாய்ந்து பாய்ந்து குரைக்கும். எத்தனை நாள்தான் நம்ம வெறும் நாயும் பொறுமை காக்கும்? ஒருநாள் வசம்மாகப் பணக்கார நாயைக் கடித்துக் குதறி விட்ட்து. டாக்டருக்குக் கோபம் வந்து ஒரு கல்லை எடுத்து எறிந்தார். வெறும் நாயிடம் நடக்குமா? அது தப்பி ஓடி விட்டது.
டாக்டர் வீட்டுக்குப் பின்புறம் கூலித்தொழிலாளி முனியசாமியும், அவன் மனைவியும் வசித்து வந்தார்கள். அவர்களின் குடிசைக்குத்தான் வெறும் நாய் சோத்துக்காகப் போய் நிற்கும். மிஞ்சின அன்றைக்கு நாய்க்குச் சோறு கிடைக்கும். முனியனைக் கூப்பிட்டு டாக்டர் `ஒழுங்கா உன் நாயை அடக்கி வை இல்லேன்னா சுட்டுவிடுவேன்’ என்று மிரட்டிக்கொண்டே இருந்தார். அவன் எவ்வளவோ சமாதானமாகப் பேசியும் டாக்டரின் கோபம் அடங்கவில்லை. இந்தப்பகை முற்றி ஒருநாள் டாக்டரும் வெறும் நாயும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. முனியனைப்போல சமாதானம் பேச அது என்ன மனுசனா, நாயல்லவா? டாக்டரை முழங்காலுக்குக் கீழே கடித்துக் குதறி இழுத்து விட்டது.
அன்று இரவு முனியனின் மனைவி வெறும் நாய்க்கு வயிறாரச் சோறு போடுவாள். மனைவி தூங்கியபிறகு முனியன் எழுந்து போய் நாயை வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பான்..
``மனுஷனுக்குத்தான் ஜாதிப்புத்தி போகுமென்றால் நாய்க்கும் போய் விடுமா?”
என்ற வரியுடன் கதை முடியும். ஒரு தெளிவான அறிக்கை அது, அல்லவா?